மகி வீட்டை விட்டு புறப்பட்டது கூட தெரியாமல் பிரமை பிடித்தவன் போல் தனது அறைக்கு சென்றவன், தலையணையை கட்டிக்கொண்டு படுத்தான் தீரன்.
மீண்டும் மீண்டும் அந்த நிகழ்வே நினைவிற்கு வர… தீரனின் நெஞ்சில் ஏதோ மாற்றம் நிகழ்ந்தது. திடீரென மகியின் முகம் கண் முன்னே வர… “மகி நம்மள தப்பா நினைச்சு இருப்பாளோ? அவளும் அதிர்ச்சியில தான போன மாதிரி இருந்துச்சு… நாளைக்கி மகியை பாத்து இது ஒரு ஆக்ஸிடன்ட் னு சொல்லிறனும்… “என நினைத்துக்கொண்டிருந்தவன் அவளின் இதழின் மென்மையில் படுக்கையில் தலையணையை அணைத்துக்கொண்டு புரண்டான் தீரன்.
“அச்சோ… தீரா… இது தப்பு டா… “என தன் பின் மண்டையில் தட்டியவன் தனது ஃபோன் ஒலிக்கவும் மகியின் நினைவில் இருந்து வெளியில் வந்தான் தீரன்.
“ஹலோ….”என ஃபோனை எடுத்து பேசியவன் ஃபோனில் கூறிய செய்தியைக் கேட்டதும் அணைத்திருந்த தலையணை துள்ளி விழ… எழுந்து நின்றான் தீரன்.
“இதோ வர்றேன்… “என ஃபோனை அணைத்து விட்டு விறு விறு வென தன் பல்சரில் வெளியே புறப்பட்டான் தீரன்.
இருள் படர ஆரம்பித்த பொழுதில் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல விரைந்து வண்டியை செலுத்தினான் தீரன்.
அடர்ந்த மரங்கள் இருந்த பகுதியில் சிறிது வெளிச்சம் தெரிய.. அந்த இடம் நோக்கி சீறி பாய்ந்து சென்றவன், தனது பல்சரை நிறுத்திவிட்டு… “கூட்டமா இங்க என்னடா பண்றீங்க? “என கர்ஜித்தான் தீரன்.
தீரனின் குரலில் அங்கிருந்த நால்வரும் அரண்டு விழிக்க…. இருந்தும் தைரியமாக, “நாங்க பண்றத கேக்க நீ யாருடா? “என ஒருவன் கேட்டான்.
“ம்ம்… இந்த நாட்டோட பி. எம் ….தூ… நீங்க பண்ணுற பொறம்போக்குத்தனத்த தட்டி கேட்க யாருடா வரனும்? “என வேகமாக அவர்களை நோக்கி முன்னேறினான் தீரன்.
“நாங்க நாலு பேர் இருக்கோம் டா… நீ தனியா வந்து சிக்கிக்கிட்ட…. “என அந்த நால்வரில் ஒருவன் சிரித்தான்.
தீரன் எதுவும் பதிலுரைக்காமல் அவர்கள் செய்து கொண்டிருந்த காரியத்தை ஆராய்ந்தான். தங்கள் ஊரில் உள்ள ஆற்றின் மணலை மாட்டு வண்டியில் திருட முயன்றிருக்கினர்.
“ஆத்து மணல திருடுறீங்களே… உங்களுக்கு அறிவில்ல? ஒழுங்கா எல்லா மணலையும் கொட்டிட்டு ஓடி போயிருங்க…. இல்ல….. “தீரன்.
“இல்லனா என்னடா பண்ணுவ? “என தீரனின் நெஞ்சில் கை வைத்து தள்ளினான் ஒருவன்.
ஒரு தள்ளுக்கு ஒரு அடி பின்னே நகர்ந்த தீரன்…. அடுத்த தள்ளுக்கு அசையாமல் நின்றான் தீரன். “சொன்னா கேக்க மாட்டீங்க… “என்றபடி வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு தன்னை தள்ளியவனின் தாடையில் ஒரு அடி அடித்தான்.
ஏர் பிடித்து உரமேறிய கரத்தில் தாடையில் அடிவாங்கியவன் ரெண்டு பல் உடைந்து விழ வாயிலிருந்து இரத்தம் வடிய கீழே விழுந்தான் அவன். ஒரு அடியிலேயே சுருண்டு விழுந்தவனை கண்ட மற்ற மூவரும் சேர்ந்து ஒன்றாக தீரனை தாக்க வர…. லாவகமாக அவர்களிடம் இருந்து விலகி ஒருத்தனின் பின்னங்கால் நரம்பில் சரியாக ஓங்கி ஒரு உதை விட்டான் தீரன்.
அதில் கால் வலியில் உயிர் போக…. அங்கேயே சுருண்டு விழுந்தான். மற்ற இருவரும் தங்களை ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கொண்டு இருவரும் சேர்ந்து தீரனின் கரங்களை பிடித்துக்கொண்டு மரத்தை நோக்கி பின்னே தள்ளிக்கொண்டு சென்றனர்.
தீரன் ஒரு காலால் ஊன்றி நின்றுகொண்டு மற்றோரு காலால் இருவரில் ஒருவனின் உயிர் நாடியில் உதை விட்டான். அதில் அவன், “அய்யோ அம்மா… “என கத்தியபடி கால் மடக்கி அமர்ந்து விட்டான்..
தன்னை பின்னே தள்ளிக்கொண்டு சென்ற மரத்தடியில் ஒரு பெரிய கட்டை கிடைக்க…. அதை கையில் எடுத்து மீதம் இருந்தவனின் மண்டையை உடைத்தான் தீரன்.
அந்த கட்டையால் நால்வரையும் அடி வெளுக்க…. நால்வரும் வலி தாங்க முடியாமல் கத்தி கூப்பாடு போட்டனர். “என்ன தைரியம் இருந்தா ஆத்து மணல திருடுவீங்க ?”என பேசிக்கொண்டே அடி வெளுக்க ஆரம்பித்தான். ஒரு கட்டத்தில் அவர்கள் மயங்கி விழ…. மணலை திருட இருந்த மாட்டு வண்டியில் அந்நால்வரையும் தூக்கி போட்டு அந்த இரவு வேளையில் ஊர் நடுவே உள்ள மரத்தில் கட்டி போட்டு அங்கிருந்த திண்டில் ஏறி கால் மேல் கால் போட்டு ராஜ தோரணையுடன் அமர்ந்தான் தீரன்.
அவ்வழியே வந்த ஊர்க்காரன் ஒருவன் தீரனையும் மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த நால்வரையும் கண்டவன் ஓடி சென்று பஞ்சாயத்து தலைவரிடம் கூற…. மறுநாள் அதிகாலையிலேயே…பஞ்சாயத்து கூட்டப்பட்டது.
அடி வாங்கிய அந்நால்வரும் பெரிய அந்தஸ்து உள்ளவர்கள் என தெரிய வர… தீரனை பற்றியும் அறிந்த அவர்கள் என்ன செய்வது என தெரியாமல் விழி பிதுங்கி இருந்தனர்.
அப்பொழுது உதி, மகியை அழைத்து வந்து அவளின் காதில் ரகசியம் பேசி கொண்டிருந்ததை தீரன் கண்டும் காணாதது போல் இறுக்கத்துடன் அமர்ந்து இருந்தான்.
தீரனின் இந்த புது அவதாரத்தில் நெஞ்சில் குளிர் பரவ… உதியனின் முதுகின் புறம் மறைந்து நின்று எகிறிய தன் இதயத்துடிப்பை மறைத்துக்கொண்டாள் மகி.
உதியனின் பின்னே ஒளிந்தவளை கண்ட தீரன் புருவத்தை நெறித்தான். பிரச்சனை என்ன என உதியனிடம் கேட்டு அறிந்து கொண்ட மகி, வியப்புடன் தீரனை பார்த்தாள். “ஒரு ஆளா… தனியா நாலு பேர அடிச்சு இருக்கானே இந்த ஃபயரு… “என வியந்தவாறு பயம் நீங்கி ஆச்சரியத்துடன் தீரனை பார்த்தாள் மகி.
மகியின் விழிகளில் மாறி மாறி தோன்றிய உணர்வுகளை கவனித்துக்கொண்டே இருந்த தீரனுக்கு புன்னகை தோன்ற…அதை தன் மீசையை முறுக்கி விடுவது போல் மறைத்துக்கொண்டான். தீரனின் அசைவுகளை விடாமல் உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்த மகியின் விழிகளில் அவனின் புன்னகை தவறாமல் பட…”அட திருட்டுக்கழுதை…பண்ணுறதெல்லாம் பண்ணிட்டு சிரிப்பு வேற கேக்குதோ துரைக்கு… “என மனதினுள் நினைத்து கொண்டு உதியின் முதுகின் பின்னே இருந்து வெளிவந்து கைகளை கட்டி கொண்டு தீரனை உறுத்து விழித்தபடி நின்றாள் மகி.
மகியின் பார்வையில் தீரனுக்கு இன்னும் நன்றாக புன்னகை தோன்ற…. இருமுவது போல் அதை மறைத்தாலும் தீரனின் விழிகள் அவனின் சிரிப்பை தெள்ள தெளிவாக எடுத்துக் கூறியது.
ஊர் மொத்தமும் பரபரப்புடன் இருக்க… அப்பரபரப்புக்கு காரணமானவனோ தனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் மகியை தொடர்ந்து பார்த்தபடி இருந்தான் தீரன்.
“அவனுக ஆத்து மணல திருடுனது தப்பு தான்…. அதுக்காக தீரன் அவனுகள அடிச்சு மண்டைய உடைச்சது தப்பு… இப்ப என்ன பண்ணலாம்?” என பஞ்சாயத்தில் ஒரு பெரியவர் பேச்சை ஆரம்பித்து வைத்தார்.
“எங்க தீரன் அண்ணா பண்ணுனது என்ன தப்பு? அவனுக ஆத்து மணல திருடுவானுக… அத பாத்துட்டு சும்மா இருக்கனுமா? தீரன் அண்ணனாச்சும் மண்டைய உடைக்கிறதோட விட்டாங்க… நானா இருந்தா மண்டைய தனியா கழட்டி எடுத்து இருப்பேன்…. “என வீராவேசமாக ஊர் இளைஞன் ஒருவன் பேசினான்.
“ஹே… சும்மா இருப்பா… ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு னு சரியா நிருப்பிக்கிறீங்களே… அவனுக பண்ணுனது சரி னு நாங்க சொல்லவே இல்லையே… அதுக்கு தீரன் பண்ணுனது சரி னு சொல்ல முடியாது…. “என ஒரு பெரியவர் குரல் கொடுத்தார்.
“இப்ப நான் என்ன பண்ணி இருக்கனும் னு சொல்லுறீங்க? “என கையில் உள்ள காப்பை ஏற்றி விட்டபடி கேட்டான் தீரன்.
தீரன் கேட்ட தோரணையில் ஊர்க்காரன் எவனும் பதில் சொல்ல யாருக்கும் தைரியம் வரவில்லை. அதை கவனித்த மகியின் புருவங்கள் பாராட்டும் விதத்தில் ஏறி இறங்கியது.
“தம்பி தீரா… கொஞ்சம் பொறுமையா இரு…. அவனுக மணல் திருடுறாங்க னு தெரிஞ்சதும் யாராவது பெரியவங்கள கூட்டிட்டு போய் வளைச்சு புடிச்சு இருக்கனும்… அத விட்டுட்டு அடிச்சுட்டு வந்து கட்டி போட்டு இருக்கியே… இது நியாயமா ப்பா? “என்றார் கூட்டத்தில் இருந்த ஒருவர்.
“அவனுக பண்ணுற தப்பு தெரிஞ்சும்… அவனுக கிட்ட போய் பொறுமையா கொஞ்சிட்டு இருக்கனுமோ? என்னைய பொறுத்த வரைக்கும் நான் செஞ்சது தப்பு இல்ல…. என்னால நீங்க குடுக்குற எந்த தண்டனையையும் ஏத்துக்க முடியாது… ஆனா அவனுகளுக்கு சரியான தண்டனை குடுக்கலனா… நீங்க எல்லாரும் தீரன இல்ல… அனழேந்தி தீரன பாப்பீங்க… “என வாளேந்தி நிற்கும் ஐயனாராய் நின்றிருந்தான் தீரன்.
பஞ்சயத்தார்கள் இருதலைக் கொள்ளி எறும்பாய் திகைத்து இருந்தனர். அவர்களின் நிலையை பார்த்த மகி, “என்னடா…. உன் அண்ணே பேசுன பேச்சுல உன் ஊருக்காரங்க இப்பிடி திகைச்சு போய் இருக்காங்க… இப்ப என்னடா நடக்கும்? “என தீரனை பார்த்தபடி அருகில் இருந்த உதியனிடம் வினவினாள்.
மகி கேட்டது காதில் விழாமல் ஒரு திசையை உற்று நோக்கியபடி நின்றிருந்தான் உதியன். கேட்ட கேள்விக்கு உதியனிடம் இருந்து எவ்வித பதிலும் வராமல் போகவே…. திரும்பி உதியனை நோக்கியவள்…. உதியன் பார்த்த திசையை மகியும் பார்க்க, அங்கு ஒரு பெண் பாவாடை சட்டையில் ரெட்டை ஜடையில் நின்றிருந்தாள்.
“டேய்… மச்சான்… யார்ரா அந்த பொண்ணு? “என உதியனை பிடித்து உலுக்கியபடி கேட்டாள் மகி.
“தூரிகை….. “என மெய்மறந்த நிலையில் கனவுலகில் இருந்து பதிலளித்தான் உதியன்…
உதியனின் மெய் மறந்த நிலையை விஷமத்துடன் பார்த்தாள் மகி…..
மகி என்ன பண்ண போறாளோ????
(காதல் தீ பரவும்…)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.