“யப்பா…. செம சாப்பாடு…. “என கூறியவாறு சாப்பிட்டு கைகழுவினாள் மகி.
மகி கூறுவதை புன்னகையுடன் பார்த்திருந்தார் கருப்பாயி. “நல்லா தின்னியா? எங்கம்மா சமைச்சது… வேற எப்பிடி இருக்கும்? வீட்டுக்கு நடந்து போயிருவியா? இல்ல… உன்னைய உருட்டிட்டு போகனுமா? “என மகியை கிண்டலடித்தான் தீரன்.
“ம்ம்… மவனே உனக்கு இருக்குடா… “என மனதினுள் நினைத்து கொண்டு வெளியே, “ஈஈஈஈ… ஜோக் சூப்பரா இருந்துச்சு ஃபயர்… பட் சிரிப்பு வரல… “என்றாள் மகி.
“என்னயவாடி அடிச்ச… இரு… வீட்ட விட்டு நீ போறப்ப காலு உடைஞ்சு தான் போவ…. “என உள்ளே மகியை திட்டிக்கொண்டு வெளியே ,”ஃபயரா ?”என புருவத்தை உயர்த்தினான் தீரன்.
“ஆமா …உங்க பேரு அனழேந்தி தீரன் தான? அதான் ஃபயர்… எப்படி? “மகி.
“ஓஓஓ… ஓகே ஐ… “தீரன்.
“ங்கே… அப்பிடினா? “மகி.
“உன் பேரு மகிழ்விழி தான? அதான் ஐ… “தீரன்.
“சகிக்கல… “என முனுமுனுத்துக்கொண்டாள் மகி.
“என்ன அங்க முனுமுனுப்பு? “தீரன்.
“ஒன்னுல்லையே… “என கூறியபடி முற்றத்திற்கு வந்தவள் அங்கு தொங்கி கொண்டிருந்த ஊஞ்சலை கண்டு, “அய்… ஊஞ்சல்… “என அதில் ஏறி ஆட ஆரம்பித்தாள் மகி.
“சரியான குரங்கு குட்டி…”என மகியை முறைத்தவாறே அங்கு உள்ள ஷோபா வில் அமர்ந்தான் தீரன்.
அந்நேரம் சிதம்பரம் வீட்டிற்குள் நுழைய… தன் வீட்டு நடு கூடத்தில் ஊஞ்சலில் ஆடி கொண்டிருக்கும் பெண்ணை ஆச்சரியமாக பார்த்தவர், “கருப்பாயி….”என உள் நோக்கி குரல் கொடுத்தார்.
சமையல்கட்டில் வேலையாக இருந்தவர், தன் கணவனின் குரலை கேட்டதும்… “என்னங்க? “எனக் கேட்டவாறு வெளியே வந்தார் கருப்பாயி.
“யாரு இந்த பொண்ணு? “என மகி தன்னை பார்த்துக்கொண்டிருக்கும் போதே தன் மனைவியிடம் கேட்டார்.
“மிஸ் ராங்கிக்காரி ப்பா…”என தன் தாய்க்கு முந்தி கொண்டு பதிலளித்தான் தீரன். தன் மகனின் கண்ணில் தெரியும் புதிய ஒளியை கண்டவர், “நான் அம்மா கிட்ட தான கேட்டேன்…நீ ஏன்டா இடையில வாய குடுக்குற? “என்றார் சிதம்பரம்.
“நான் சொன்னேன் லங்க….அன்னக்கி வளைகாப்பு ல ஒரு பொண்ண பாத்தேன் னு…அந்த பொண்ணு தான்… பேரு மகிழ்விழி….”என தன்னை பற்றி தான் பேசி கொள்கிறார்கள் என அறிந்தும் சற்றும் அசராமல் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும் மகியின் தலையை பாசமாக வருடிவிட்டபடி கூறினார் கருப்பாயி.
“ஓஓஓ….என் பையன அடிச்ச பொண்ணா? “என மகியை சோதிப்பதற்காக வேண்டுமென்றே வினவினார் சிதம்பரம்.
“என்னங்க நீங்க…”என சங்கடப்பட்டார் கருப்பாயி.
முகத்தில் கோபம் மின்ன மகியை பார்த்தவாறு இருந்தான் தீரன். தீரன் தன்னை கோபமாக முறைப்பதை பார்த்தவள், தொடர்ந்து அவன் கண்ணை நேராக நோக்கியவாறே…”ஆமா… நான் தான் ப்பா அடிச்சேன்… என்ன நடந்துச்சு னு விசாரிக்காம என்னைய உங்க பையன் அடிச்சாரு…அதான் ஒன்னுக்கு ரெண்டா திருப்பி குடுத்தேன்….ஒன்னு என்னைய அடிச்சதுக்கு… இன்னொன்னு அவரோட அவசர புத்திக்கு…”என்றாள் மகி.
“ராங்கிக்காரி…எவ்ளோ தைரியம் இருந்தா என் வீட்டு ஊஞ்சல்ல ஆடிட்டே என்னைய அடிச்சேன் னு திமிரா சொல்லுவா? “என நினைத்தவாறு…”யாருக்கு? எனக்கு அவசர புத்தியா? நீதான் ராங்கிக்காரி…”என சிறு பையனென மகியுடன் சண்டைக்கு நின்றான் தீரன்.
“என் கிட்ட கேட்ட கேள்விக்கு பதில் சொன்னேன்…இது தப்பா? “என தொடர்ந்து ஊஞ்சலாடியவாறே தீரனின் கருவிழியை பார்த்து பேசினாள் மகி.
மகிழ்விழியின் விழி வீச்சை தாங்க இயலாதவன் தன் விழியின் வழியை மாற்றிக்கொண்டான் தீரன்.
“பரவாயில்லையே… தைரியமான பொண்ணு தான்….என் வீட்டு நடு கூடத்துல என் வீட்டு ஊஞ்சல்ல ஆடிட்டு என் பையன நான் தான் அடிச்சேன் னு அவன் அப்பன் கிட்டயே சொல்லுற… “சிதம்பரம்.
“உண்மைய எந்த இடத்துலயும் சத்தமா சொல்லனும் ப்பா… “மகி.
“உனக்கு பயமா இல்லையா? “சிதம்பரம்.
“நான் ஏன் ப்பா பயப்படனும்? தப்பு செஞ்சா தான் பயப்படனும்… அன்னக்கி தப்ப தட்டிக்கேட்டேன்… உங்க பையன் அவசரப்பட்டு என்னைய அடிச்சாங்க… அத்தோட என்னைய மரியாதை இல்லாம பேசுனாங்க… தப்பு பண்ணாத நான் ஏன் பயப்படனும்? எப்போதும் என் மனசாட்சிக்கு மட்டும் தான் பயப்படுவேன்… ஏன்னா உலகத்துலயே அது கேக்குற கேள்வி மட்டும் தான் எந்த பாரபட்சமும் இல்லாம நியாயமா இருக்கும்…. இன்னும் சொல்லப்போனா….. நம்ம ஒவ்வொருத்தரோட மனசாட்சியும் அந்த நீதி தேவன் சனிபகவான் மாதிரி….. தப்ப சரியா நமக்கு சொல்லிரும்…. ஆனா அத மதிக்கிறதும் மிதிக்கிறதும் நம்மக்கிட்ட தான் இருக்கு…..இந்த உலகத்துல பல பேரோட மனசாட்சி செத்து புதைஞ்சு போச்சு….என் மனசாட்சிய நான் உயிரோட உயிர்ப்போட வச்சு இருக்கேன்….அவ்ளோதான் ப்பா….”என தன் நீண்ட விளக்கவுரையை சிதம்பரத்தை நேர் கொண்ட பார்வை பார்த்து கூறினாள் மகி.
மகி பேசிய பேச்சை கேட்ட தீரன் வியப்பு கலந்த சுவாரசிய புன்னகையுடன் அவளை பார்த்திருக்க …கருப்பாயி தன் வாயில் கை வைத்து ஆச்சரியமுடன் அவளை பார்த்தார்.
பெருமை பொங்கிய சிரிப்புடன் மகியை பார்த்த சிதம்பரத்தின் விழியின் ஒளி வட்டத்தில் தீரனின் சுவாரசிய பார்வை விழ… அந்த நொடியே தீரனுக்கு ஏற்றவள் இவள் தான் என தீர்மானித்துக்கொண்டார்.
சிரிப்புடன் மகியின் தலையை தடவியவர்… அவள் உச்சந்தலை மேல் பாசத்துடன் கை வைத்து, “நீ ரொம்ப நல்ல பொண்ணு மா… நல்லா இரு மா….” என ஆசிர்வதித்தார் சிதம்பரம்.
அவரை பார்த்து மழலையென புன்னகைத்தவள், ஊஞ்சலில் இருந்தபடியே அவரின் இடுப்பை கட்டிப்பிடித்தவள்… “லவ் யூ ப்பா… “என்றாள் மகி.
“அப்பா இல்ல மாமா… “என மகியின் தாடையை பிடித்து கொஞ்சியபடி கருப்பாயியை பார்த்து ரகசியமாக கண்ணடித்து மகியை தன் மருமகளாக்க மறைமுகமாக சம்மதம் தெரிவித்தார் சிதம்பரம்.
“என்ன மாமாவா? “என தீரனும் சற்று துணுக்குற்றான்.
“மாமாவா? “என சற்று யோசித்தவள்… “சரி மாமா…..நீங்க எனக்கு மாமானா….உங்க மகன் எனக்கு முறைப்பையனா? “என தீரனை பார்த்து விஷமத்துடன் கண்ணடித்தாள் மகி.
அவளின் விளையாட்டை புரிந்து கொண்ட கருப்பாயி, வேலை இருப்பதாக காட்டிக்கொண்டு சமையல்கட்டில் நுழைந்து கொண்டார். சிதம்பரமும் சிரித்துக்கொண்டு வெளியே புறப்பட்டு சென்று விட்டார். பெரியவர்கள் இருவரும் சென்றதை பார்த்தவள், “யோவ்.. மச்சான்… “என தீரனை வம்பிழுத்தாள் மகி.
அதற்கு மகியை பார்த்து முறைத்தான் தீரன். அவன் கோபப்படுவதை கண்டு குஷியான மகி, தீரன் புறம் திரும்பி ஊஞ்சாலாடி தன் காலால் தீரனை உரசினாள் மகி.
அதில் இன்னும் கோபமான தீரன், நன்றாக முறைத்தான் .பின்னாடி நன்றாக சென்று வேகமாக ஊஞ்சலில் ஆடி கொண்டு தீரனின் காலை தீண்ட வந்தவளின் காலை தீரன் தட்டி விட்டான். அதில் சற்று தடுமாறி தீரன் மேலயே விழுந்தாள் மகி.
பூங்குவியலென தன் மேல் விழுந்தவளை தாங்கிய தீரன்…மகி விழுந்த வேகத்தில் எதிர்பாராத விதமாக இருவரின் இதழ்களும் உரசி இணைந்து கொள்ள இருவரின் உடலிலும் தீப்பற்றிக்கொண்டது. அதிர்ந்து இருவரும் விழி விரிக்க…. முதன் முதலில் தன் உடலில் வீசிய பெண்மையின் வாசத்தில் மெய் மறந்தான் தீரன். ஒரு பெண்ணின் இதழ் இவ்வளவு மென்மையாக இருக்குமா? என வியந்து அதில் மெல்ல கரைந்தான் தீரன்.
தன் பெண்மையின் மென்மையை தீண்டிய ஆண்மையில் அதிர்ந்து மகியின் உடல் அதிர….மகியின் உடல் அதிர்வில் சற்று தெளிந்த தீரன், மெதுவாக தன் மீது கிடந்த மகியை தூக்கி விட்டான் தீரன்.
சற்று முன் நடந்த நிகழ்வில் அதிர்ச்சியில் உறைந்த மகி, நடந்த நிகழ்வில் தன் தவறும் உள்ளது என உணர்ந்தவள்… கருப்பாயிடம் கூட எதுவும் கூறாமல் அங்கிருந்து புறப்பட்டாள்.
சிறிது நேரத்தில் மகியை காணாது தன்னிடம் விசாரித்த தன் தாயின் குரல் கூட உணர்வில் எட்டாது….தன் உடலில் வீசிய முதல் பெண் வாசத்தில் கிறக்க அதிர்ச்சியுடன் தன் அறை நோக்கி சென்றான் தீரன்.
மந்திரித்து விட்ட கோழியென வீட்டிற்குள் நுழைந்த மகியை உலுக்கி, “என்னடி ஆச்சு? “எனக் கேட்டான் உதி.
உதியனின் உலுக்கலில் சுய நினைவிற்கு வந்தவள்…”ஆங்…என்னடா “என உறக்கத்தில் இருந்து விழித்தவள் போல் திரு திரு வென விழித்தாள் மகி.
“கிழிஞ்சது போ… ஏன்டி இப்பிடி இருக்க? என்ன ஆச்சு? உடம்பு எதுவும் சரியில்லையா? “என நண்பனாக மகியின் நிலையைக்கண்டு பதறினான் உதியன்.
தற்போது உள்ள மனநிலையில் யாரிடமும் பேச விருப்பம் இல்லாமல்… “எனக்கு ஒன்னுல்ல உதி….கொஞ்ச நேரம் தூங்குறேன்… அம்மாக்கிட்ட ஏதாவது சொல்லி சமாளிச்சுரு.. “எனக்கூறியபடி உதியனின் பதிலைக்கூட எதிர்பார்க்காமல் அறையினுள் சென்று கதவை மூடிக்கொண்டு படுக்கையில் விழுந்தாள் மகி.
மகியின் வித்தியாசமான நடவடிக்கையை பார்த்த உதி, “ஏதோ நடந்து இருக்கு… இவ இப்பிடி இருந்து நான் பார்த்ததே இல்லையே…. “என சிந்தித்தவாறு செண்பகத்திடம் சென்று, மகி வந்துவிட்டதை கூறி அவளை எழுப்ப வேண்டாம் என கூறி விட்டு சிந்தனையில் ஆழ்ந்தான் உதி.
மறுநாள் விடியலில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மகியை அவசர அவசரமாக எழுப்பினான் உதியன். உறக்கத்தில் இருந்து சற்று வெளிவந்தவள், படுக்கையில் புரண்டு கொண்டே …”என்னடா? “எனக்கேட்டாள் மகி.
“அடியேய்… தூங்குமூஞ்சி எந்திரிடி… “என பரபரப்புடன் மகியை எழுப்பினான் உதி.
“இப்ப எதுக்கு இவ்ளோ அவசரமா என்னைய எழுப்புற? “என சலித்தபடி எழுந்து அமர்ந்தாள் மகி.
“சீக்கிரம் குளிச்சுட்டு வா… உன்னைய ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போறேன்… சீக்கிரம் சீக்கிரம்… “என அவசரப்படுத்தினான் உதி.
“அய் வெளில போறோமா? “என்றபடி தன் மனநிலையை வழுக்கட்டாயமாக உற்சாகமாக மாற்றிக்கொண்டு குளித்து உதியனுடன் புறப்பட்டு சென்றாள் மகி.
உதியன் மகியை ஊர் பஞ்சாயத்து நடக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றான். ஊரில் உள்ள அனைவரும் ஒன்றாக கூடி இருந்ததை கண்ட மகி, “என்னடா நடக்குது இங்க? “என உதியனின் காதை கடித்தாள்.
“ஊர் பஞ்சாயத்து நடக்குதுடி….”என மகியின் காதில் ரகசியம் பேசினான் உதி.
“ஏன்டா நீங்க இன்னும் நாட்டாமை காலத்துல இருந்து வெளில வரவே இல்லையாடா? “என நக்கலாக கேட்டாள் மகி.
மகியை முறைத்த உதி, “நேத்து நைட் தீரன் அண்ணே ஒத்த ஆளா நாலு பேரு மண்டைய உடைச்சுட்டாங்க…அதுக்குத்தான் இந்த பஞ்சாயத்து….அங்க பாரு தீரன் அண்ணன….சும்மா ஐய்யனார் கணக்கா உக்காந்து இருக்குறத… அண்ணே எப்போதும் கெத்து தான்டி….”என்றான் உதியன்.
“என்ன? “என அதிர்ந்து அந்த பஞ்சாயத்து கூட்டத்தில் தீரனை தேடினாள் மகி.
அங்கு ரௌத்திரம் பொங்க…விழிகளில் வேங்கையின் சீற்றத்துடன் வெஞ்சினம் பொங்கி வழிய …அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் முறுக்கேறிய உடம்புடன் ராஜ தோரணையுடன் அமர்ந்திருந்தான் தீரன்.
தீரனின் இந்த புது அவதாரத்தை கண்ட மகியின் உள் நெஞ்சில் குளிர் பரவ….உதியனின் பின்னே ஒளிந்து தன் நண்பனின் முதுகில் எகிறிய தன் இதயத்துடிப்பை மறைத்துக்கொண்டாள் மகி….
(காதல் தீ பரவும்….)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.