காலையில் தீரன் உணவு உண்டுவிட்டு வயலுக்கு புறப்பட்டு சென்றதும் மின்னல் வேகத்தில் வீட்டு வேலையை முடித்தார் கருப்பாயி.
“என்ன கருப்பாயி… வேலைலாம் மின்னல் வேகத்துல நடக்குது… எங்க இவ்ளோ அவசரமா கிளம்புற? “என தன் மனைவியை வம்பு இழுத்தார் சிதம்பரம் .
“நல்லா கேப்பீங்களே கேள்வி… நேத்தே என்ன சொன்னேன்? இன்னக்கி போய் செண்பகத்துக்கிட்ட பேச போறேன் னு சொன்னேன் ல… அதான் கிளம்பிட்டு இருக்கேன்…. “என நின்று
கூட பதலளிக்காமல் வேலை பார்த்து கொண்டே பதலளித்தார் கருப்பாயி.
“எனக்கென்னமோ நீ அவசர படுறியோ னு தோனுது… ம்ம்… மகன் விசயத்துல நான் சொல்லி நீ எதை கேக்க போற? உன் ஆசைய ஏன் கெடுப்பானேன்… போய் விசாரிச்சு பாரு… “என கூறி விட்டு தன் வேலையை பார்க்க கிளம்பி விட்டார் சிதம்பரம்.
கருப்பாயியும் செண்பகம் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
“செண்பகம்… யத்தா… செண்பகம்… “என உதியனின் வீட்டின் வெளியே நின்று குரல் கொடுத்தார் கருப்பாயி.
“அட கருப்பாயி அக்காவா? வாங்க….வாங்க… உள்ள வாங்க….”என வரவேற்று மோர் கொடுத்தார் செண்பகம்.
“எங்க உதியனும் மகிழ்விழியும் காணோம்? “என வீட்டின் உள்ளே சுற்றும் முற்றும் பார்த்தவாறு கேட்டார் கருப்பாயி.
“அத ஏன் கேக்குறீங்க க்கா? விடியக்காலையிலேயே அம்மு அடம் புடிச்சு காட்டு மேட்டெல்லாம் பாக்க உதியன கூட்டிட்டு கிளம்பிட்டா… சாப்பிட கூட இல்ல….இப்ப வர்ற நேரம் தான்…ஏன் க்கா அம்மு கிட்ட பேசனுமா? “செண்பகம்.
“இல்ல…உன் கிட்ட தான் பேச வந்தேன்…புள்ளைங்க ரெண்டு பேரும் இருந்தா உன் கிட்ட பேச முடியாதுல….அதான் கேட்டேன்… “கருப்பாயி.
“அப்பிடி என்னக்கா என் கிட்ட பேசனும்? “செண்பகம்.
“இல்ல…அதுவந்து… மகி வீட்ல எல்லாரும் எப்பிடி? “கருப்பாயி.
“அம்முக்கு என்ன க்கா? அது தங்கம்…வீட்டுக்கு ஒரே பொண்ணு….நாங்களே இப்பத்தான் முத தடவையா பாக்குறோம்… இதுவரைக்கும் நம்ம உதி ஃபோன் ல தான் பேசுவோம்… முகத்த பாக்காமலயே எங்க மேல அம்மா அப்பா னு உசுரா இருக்கும்… நாங்க பாக்கனும் பாக்கனும் னு சொல்லிட்டே இருப்போம்….இந்த லீவுக்குத்தான் வந்து இருக்கு…பாசக்கார புள்ள க்கா….ஆனா அதே நேரம் கோபம் மூக்குக்கு மேல வரும்…யாராவது தப்பு பண்ணுனா மறைச்சு லாம் பேச தெரியாது…மூஞ்சிக்கு நேரா கேட்டுப்புடும்….அப்பிடியே நம்ம தீரன மாதிரி தான்… என்ன… அம்மு கோபத்துல கொஞ்சம் நிதானமா இருக்கும்… தீரன் பய கோபத்த காட்டுனா தான் நிதானத்துக்கு வருவான்…அவ்ளோதான் வித்தியாசம்….அன்னைக்கும் அப்பிடித்தான் தீரன் அம்முவ அடிச்சு அம்மு தீரன கை நீட்டிருச்சு… “செண்பகம்.
“அதுனால தான் மகிய தீரனுக்கு பொண்ணு கேக்கலாம் னு நினைக்கிறேன் செண்பகம்….நீ என்ன சொல்லுற? “என விசயத்தை போட்டு உடைத்தார் கருப்பாயி.
“என்னக்கா பொசுக்குனு இப்பிடி கேட்டுப்புட்ட… இதுக்கு நம்ம புள்ளைங்க ரெண்டும் ஒத்துக்கனும்… அம்மு வீட்ல ஒத்துக்கனும் ல….”என தயங்கினார் செண்பகம்.
“அதெல்லாம் பாத்துக்கலாம் செண்பகம்… எனக்கு மகியை ரொம்ப புடிச்சு இருக்கு செண்பகம்…. ரொம்ப நல்ல புள்ள…. இப்பிடி ஒரு புள்ள குடும்பத்துக்கு கிடைக்க குடுத்து வச்சு இருக்கனும்….”என கருப்பாயி செண்பகத்திடம் கூறி கொண்டிருந்ததை கேட்டு விட்டு தான் மகி உள்ளே வந்து, “ரெண்டு பேரும் அப்பிடி என்ன பேசிட்டு இருக்கீங்க? “என விசாரித்தாள்.
“நாம் பேசியதை கேட்டிருப்பாளோ? “என பயந்து இருவரும் முழிக்க…”என்ன? ஏதோ தப்பு செஞ்ச மாதிரி ரெண்டு பேரும் முழிக்கிறீங்க? “என சிரித்தவாறு மகி கேட்டாள்.
மகி சிரித்த பிறகுதான் இருவரும் நிம்மதியாக மூச்சு விட்டனர். முதலில் சுதாரித்த கருப்பாயி, “அது ஒன்னுல்ல கண்ணு…உன்னைய எங்க வீட்டுக்கு கூப்பிட்டுட்டு இருந்தேன்…”என பாதி உண்மையை மட்டும் கூற…”ஆமா ஆமா…மருமகளா ல கூப்பிட்டுச்சு அக்கா… “என தனக்குள் நினைத்து புன்னகைத்துக்கொண்டார் செண்பகம்.
“நானா? உங்க வீட்டுக்கா? என்ன விசேஷம் ம்மா? “எனக்கேட்டவாறு செண்பகத்தின் மடியில் சலுகையாக படுத்துக்கொண்டாள் மகி.
அதை பார்த்த கருப்பாயி மனதில் மகள் இல்லாத ஏக்கம் வெகுவாக தலை தூக்க…”இதே மாதிரி நம்ம கிட்டயும் உரிமையா நடந்துக்க மாட்டாளா? “என ஏங்கினார் கருப்பாயி.
கருப்பாயி யோசனையில் மூழ்கியதை கண்ட செண்பகம் ,”அது உன்னைய அவங்க வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டாங்க அக்கா… உன்னைய கருப்பாயி அக்காக்கு ரொம்ப பிடிக்கும் போச்சு… மக இல்லாத நான் உன்னைய மகளா நினைச்சு சோறூட்டுற மாதிரி அவங்களும் உனக்கு சோறூட்ட ஆசை படுறாங்க… அவ்ளோதான்…”என்றார்.
“அட ப்ளாக் பியூட்டி… சோறு போடுறேன் வா னு சொன்னா உன் பின்னாடியே நாய்க்குட்டியாட்டம் வந்துற போறேன்… இதுக்கு ஏன் இம்புட்டு பீல் பண்ற? “என கருப்பாயி யின் வாடிய முகத்தை பார்த்து அவரை உற்சாக படுத்துமாறு கூறினாள் மகி.
“நிசமா என் வீட்டுக்கு வர்றியா கண்ணு? “என கருப்பாயி வேறு அர்த்தத்தில் கேட்க… “நீ சொன்னா நம்ப மாட்ட….எந்திரி முதல்ல… கிளம்பு கிளம்பு… உன் கூடவே உன் வீட்டுக்கு வந்துர்றேன்… “என்று கூறியவாறு எழுந்து நின்றாள் மகி.
“அப்ப இங்க ஆக்கி வச்சு இருக்குற சோத்த யாரு தின்பாங்களாம்? “என விளையாட்டாக வினவினார் செண்பகம்.
“ஆங்… அத நீ பெத்த முத்து ரத்தினத்தையே கொட்டிக்க சொல்லு செண்பகம்… “என செண்பகத்தின் தாடையை பிடிச்சு கொஞ்சினாள் மகி.
“ஹே…ஆமா… கேக்க மறந்துட்டேன்…எங்க உதியன காணோம்? நீ மட்டும் வந்து இருக்க? “செண்பகம்.
“அவனா? அவன ஒரு வேலையா அனுப்பி இருக்கேன்…இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவான்… “எனக்கூறி விட்டு கருப்பாயியுடன் தீரன் வீட்டிற்கு கிளம்பினாள் மகி.
கருப்பாயி யுடன் தீரன் வீட்டிற்கு வந்த மகி, வீட்டை ரசித்து சுற்றி சுற்றி பார்த்தாள். அவள் ரசித்து பார்ப்பதை கண்ட கருப்பாயி, “என்ன கண்ணு? வீடு புடிச்சு இருக்கா? “என்றார்.
“அய்யோ ப்ளாக் பியூட்டி….வீடு சூப்பரா இருக்கு….என்னைய விட்டா என் வாழ்க்கை முழுக்க இந்த வீட்டுலயே இருந்துருவேன்… “என விளையாட்டாக கூறினாள் மகி.
“அதுக்குத்தான நானும் ஆசைப்படுறேன்…”என நினைத்துக்கொண்டு மகியின் முன் தலைவாழை இலையிட்டு அவளுக்கு பரிமாறினார் கருப்பாயி.
கருப்பாயி அருகிலேயே நிற்பதை பார்த்து விட்டு, “நீ ஏன் நிக்கிற? வா.. இப்பிடி உக்காரு….”என கருப்பாயி யின் கை பிடித்து தன் அருகில் உட்கார வைத்து விட்டு செண்பகத்திற்கு ஊட்டுவது போல் கருப்பாயிக்கும் சோறூட்டினாள் மகி.
மகி தனக்கு சோறூட்டியதும் நெகிழ்ந்த கருப்பாயி, “நீ சாப்பிடு டா… “என குரல் தழுதழுக்க கூறினார்.
“நானும் சாப்பிடுறேன்… நீயும் சாப்பிடு… ரெண்டு பேருமா சேந்து சாப்பிடுவோம்…”என்றவாறு மகியும் சாப்பிட்டாள்.
மகி சாப்பிடுவதை ஆசையாக பார்த்து ரசித்து கொண்டார் கருப்பாயி.
“யப்பா…ப்ளாக் பியூட்டி….செம சாப்பாடு….சூப்பரா இருக்கு…உன் கைப்பக்குவம் வேற லெவல் ப்ளாக் பியூட்டி… இப்பிடி ஒரு சாப்பாட்ட இன்னக்கி இந்த உதி பய மிஸ் பண்ணிட்டானே…..”எனக்கூறியவாறு கருப்பாயிக்கும் ஊட்டி விட்டாள் மகி.
மகிழ்விழி தன் தாய்க்கு சோறூட்டியபடி தன் வீட்டு நடுக்கூடத்தில் அமர்ந்தபடி உணவு உண்பதை வாசலில் நின்று ஆர்வமாக பார்த்தபடி நின்றிருந்தான் தீரன்.
எதேர்ச்சையாக திரும்பிய மகி, தீரனை பார்த்து விட்டு “வாங்க வாங்க தீரன் ஸார்… உங்க அம்மா சூப்பரா சமைக்கிறாங்க… “என சப்புக்கொட்டி சாப்பிட்டுக்கொண்டே தீரனை பார்த்து சற்றும் பயம் இல்லாமல் அவனிடம் பேசினாள் மகி.
திடீரென தன் மகனை பார்த்த கருப்பாயி, “அய்யோ… அன்னைக்கே மகி மேல கோபமா இருந்தான் இவன்… இன்னக்கி வீட்டுக்கு கூட்டிட்டு வந்ததுக்கு என்ன சொல்ல போறானோ… “என பதட்டத்துடன் எழுந்து நின்றார் கருப்பாயி.
“அட நீ ஏன் ப்ளாக் பியூட்டி எந்திரிச்சு நிக்கிற? சாப்பிடுறப்போ பாதியில எந்திரிக்க கூடாதுனு உங்க அம்மா உனக்கு சொல்லி குடுத்து வளக்கலயா? வா வா உக்காரு…”என கருப்பாயியை இழுத்து மீண்டும் அருகில் அமர வைத்து ஊட்டி விட்டாள் மகி.
“அங்க வயல்ல நம்ம கிட்ட அவ்ளோ கோபமாக பேசிட்டு இங்க வந்து நம்ம வீட்டுல நம்ம அம்மா கூட இப்பிடி கொஞ்சி பேசிக்கிட்டு அம்மாக்கு ஊட்டி வேற விட்டுட்டு இருக்கா? நாம கூட நம்ம அம்மாக்கு ஊட்டி விட்டது இல்லையே….இவளுக்கு அம்னீசியாவா இருக்குமோ? “என மகியை பார்த்து யோசித்தவாறே நின்றிருந்தான் தீரன்.
தீரனின் எண்ணவோட்டத்தை மகியின் மீது கோபமாக இருக்கிறான் என தவறாக புரிந்து கொண்ட கருப்பாயி, “யய்யா….சாப்பிடுற புள்ளைய எதுவும் சொல்லிறாதய்யா… “என தீரனிடம் கெஞ்சிக்கேட்டார் கருப்பாயி.
“இந்த அம்மா என்ன லூசா? நான் என்ன நினைக்கிறேன் இந்த அம்மா என்ன கேக்குது? ஓஓஓஓ… இவ மேல நான் கோபமா இருக்கேன் னு நினைச்சுக்கிச்சா இந்த அம்மா? சரி இப்பிடியே மெயின்டெய்ன் பண்ணுவோம்….”என நினைத்துக்கொண்டு வெளியே முறைப்பாக முகத்தை வைத்துக் கொண்டு மகியை நெருங்கினான் தீரன்.
இவர்கள் இருவரையும் துளி கூட கண்டுகொள்ளாமல் இலையில் உள்ள சாப்பாட்டை காலி பண்ணுவதில் கருத்தாக இருந்தாள் மகி.
“நீ மட்டும் இங்க நல்லா வெட்டிட்டு இருக்க….எங்க உன் பின்னாடியே உன் பாடிகார்ட் மாதிரி சுத்துவானே ஒருத்தன்…எங்க அவன்? “என மகியிடம் வினவினான் தீரன்.
வாயில் உணவை அடைத்துக்கொண்டு, “உம்….உம்…” என்றவாறு வருவான் என சைகை செய்தாள் மகி.
மகியின் அந்த குழந்தைத்தனமான கை சைகையில் சிரித்தே விட்டான் தீரன். தீரன் சிரிப்பதை பார்த்த மகி, “இவன் என்ன பைத்தியமா? நம்மள பாத்து சிரிக்கிறான்…..இந்த உதி பயல இன்னும் என்ன தான் பண்றானோ? “என தீரனை ஒரு மார்க்கமாக பார்த்தபடி யோசித்தாள்.
அங்கு உதியனோ , “சேத்துலயும் அடி வாங்கியாச்சு… சோத்துலயும் அடி வாங்கியாச்சு… “என மைண்ட் வாய்ஸில் பேசிக்கொண்டு அடி வாங்கி உதியனை உறுத்து விழித்தபடி நின்றிருக்கும் தூரிகையின் எதிரே பாவமாக நின்றிருந்தான்……
(காதல் தீ பரவும்….)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.