விடிந்து பல மணி நேரம் ஆகி இருக்க பறவைகள் தன் இரையை தேடி அவசர அவசரமாக பறந்து கொண்டிருந்தன. அந்த அவசரத்திலும் சிங்கம்புணரி கிராம பறவைகள் அனைத்தும் மழலையென கை காலை ஆட்டியபடி கிள்ளை மொழியில் தீரனை திட்டிக்கொண்டே துள்ளி ஓடும் மகியை நின்று ரசித்து விட்டே சென்றன.
தீரனை திட்டிக்கொண்டே வந்தவள் தன் நண்பன் உதியன் நின்றிருந்த நிலையை பார்த்தவள் அதிர்ச்சியாகி அப்பிடியே நின்றாள்.
சில நொடி அதிர்ச்சியில் நின்றவள்… அடுத்த நொடியே கல கல வென வாய் விட்டு கண்ணில் கண்ணீர் தழும்ப சிரித்தாள் மகி.
“ஏய்… சிரிக்காதடி பிசாசே… “என முகத்தை உர்ரென வைத்துக்கொண்டு கூறினான் உதியன்.
உதியன் பேச பேச மீண்டும் வரப்பில் அமர்ந்து விழுந்து விழுந்து சிரித்தாள் மகி.
“என்ன டா இது? எப்பிடி டா மச்சான்? “என சிரித்துக்கொண்டே கேட்டாள் மகி.
உடல் முழுக்க சேற்றை பூசிக்கொண்டு அப்பாவியென நின்றிருந்தான் உதியன்.
“சிரிக்காதடி னு சொல்லுறேன் ல….”உதி.
“டேய் மச்சான்….முடியல டா….நான் அந்த பக்கம் போய்ட்டு வர்றதுக்குள்ள எப்பிடிடா? ஸாரி மச்சான் சிரிப்ப அடக்க முடியல… “என மீண்டும் மீண்டும் சிரித்தாள் மகி.
“ஹேய்… அழுதுருவேன்டி…. வேண்டாம்… மீ பாவம் டி… “என உதட்டை பிதுக்கினான் உதி.
“சரி… சரி… சிரிக்கல… வா வந்து முகத்தல்லாம் கழுவு முதல்ல… எப்படி டா இப்பிடி ஆச்சு? “என அடக்கப்பட்ட சிரிப்புடன் அருகில் இருந்த மோட்டாரில் உதியனுக்கு முகத்தை கழுவி விட்டவாறு கேட்டாள் மகி.
“ம்ம்…. உன்னைய மாதிரியே ஒரு ராட்சசி பாத்த வேலை இது….”உதி.
“வாவ்… என்னைய மாதிரியா? அப்ப பொண்ணா டா மச்சான்? யார் அந்த பியூட்டி? ” மகி.
“வெறுப்பேத்தாதடி… “என உடல் மீது உள்ள சேற்றை கழுவிக்கொண்டு சட்டையை கழற்றி காயவைத்தான் உதி.
“சரி… பொங்காத… என்ன நடந்துச்சு னு சொல்லு…. “என ஆர்வம் மேலிட கேட்டாள் மகி.
“அதுவா…. நீ நோட்டு எடுக்க அந்த பக்கம் போனியா…. நான் அமைதியா வாய்க்கால்ல கால் நனைச்சுக்கும் உக்காந்து இருந்தேன்…… அப்போ…… “உதி.
சிறிது நேரத்திற்கு முன்….
“ஐ…. தண்ணி ஜில்லுனு இருக்கே…. “என நினைத்தவாறு வாய்க்காலில் காலை வைத்து ஆட்டிக்கொண்டு அமர்ந்து இருந்தான் உதி.
அப்போது வாய்க்காலில் ஒரு நண்டு எட்டி பார்க்க…. மகியை பயமுறுத்துவோம் என்றெண்ணி அந்நண்டை பிடிக்க முயற்சி செய்கையில் அருகில் கொலுசொலி கேட்க மகி வந்து விட்டாள் என்றெண்ணி, “மகி இங்க பாரு டி நண்டு…. “என நிமிர்ந்து பார்க்க அங்கு பாவாடை சட்டையில் ரெட்டை பின்னல் இட்டு மஞ்சள் பூசிய அப்பாவி முகத்துடன் புதிதாய் ஒரு பெண் நின்றிருந்தாள்.
“என்ன பாப்பா? “என அந்த பெண்ணை நோக்கி கேட்டான் மகி.
“எனக்கு அந்த நண்டு வேணும்… அது என் நண்டு…..நான் தான் அத அந்த வாய்க்கால்ல இருந்து தொறத்திட்டு வந்தேன்… “என முகத்தை அப்பாவியென வைத்துக்கொண்டு கூறினாள் அப்பெண்.
“எதேய்…..உன் நண்டா? நான் தான் அத முதல்ல பாத்தேன்….இத என் ப்ரண்ட் க்கு காட்டிட்டு அப்புறம் உனக்கு தாரேன்… நீ கொண்டுட்டு போ…ஆமா…உன் பேரு என்ன? யாரு மக நீ? “உதி
“ம்கூம்…அதெல்லாம் முடியாது…நான் போகனும்…எனக்கு இப்பவே வேணும்… வீட்ல அய்யன் திட்டும்…”என அழும் நிலைக்கு வந்தாள் அப்பெண்.
“ஏய்… இந்தா பொண்ணே… அழுவாத… உன் பேரு என்ன? உன் அப்பா பேரு என்ன? “என அப்பெண்ணை அதட்டினான் உதி.
“என் பேரு தூரிகை… கலியபெருமாள் மக….என் நண்ட குடுங்க…நான் போகனும்… “என கண்ணில் கண்ணீர் தழும்ப நின்றிருந்தாள் தூரிகை.
“அட பார்ரா…தூரிகையா பேரு… தூரிகா… என் தூரிகா
ஒரு வானவில் வானவில்
மழையென பெய்கிறாய்
சாரிகா… என் சாரிகா…
அடிமன வேர்களை வேர்களைக்
கொய்கிறாய்….”என பாட்டு பாடி அப்பெண்ணை கிண்டல் செய்தான் உதி.
“என்னைய கிண்டல் பண்ணாதீக…. என் நண்ட குடுங்க நான் போறேன்…. “என இரண்டு சொட்டு கண்ணீர் சிந்தினாள் தூரிகை.
“அட இந்த பொண்ணு என்ன இவ்ளோ அப்பாவியா இருக்கு… இந்த பொண்ணு கூட விளையாட ஜாலியா இருக்கே… மகி வர்ற வரைக்கும் இந்த பொண்ண வம்பு இழுத்து டைம் பாஸ் பண்ணுவோம்…”என நினைத்துக்கொண்டு, “ஏன் கிண்டல் பண்ணுனா என்ன? ஒரு வகையில நான் முறைப்பையன் தான் தெரியுமா? இப்பிடிலாம் அழுதா நண்டலாம் நான் தர மாட்டேன்… மாமன் சொல்லுறேன்… அழாம சிரிச்சுட்டே கேளு….பாப்போம்… “என்று வம்பு இழுத்தான் உதி.
“மாமாவா? அதெல்லாம் ஒன்னுமில்லை…. அப்பிடிலாம் பேசாதீங்க… “என சிறிது கோப பட்டாள் தூரிகை.
“ஏன்? மாமன் னு சொன்னா என்ன? நீ கோப பட்டா நான் பயந்துருவேனா என்ன? “என மீண்டும் வம்பு இழுத்தான் உதி.
“என் நண்ட குடுங்க…நான் போறேன்…”என முறைத்தாள் தூரிகை.
“அட…கோபத்த பார்ரா…நண்ட தர முடியாது…நீ மாமா னு சொல்லு… நண்ட தர்றேன்… “என மீண்டும் விளையாடினான் உதி.
உதியனை நன்றாக முறைத்தவள், ஒரே தள்ளாக அவனை வாய்க்காலில் புடித்து தள்ளி விட்டு கொலுசொலி சிணுங்க ஓடி மறைந்தாள் தூரிகை.
“இதான் டி நடந்துச்சு….”என அனைத்தையும் கூறி முடித்தான் உதியன் .
“அட அல்ப்ப… உனக்கு இது தேவையா? அந்த பொண்ணா இருந்ததுனால புடிச்சு தள்ளுனதோட விட்டு இருக்கா…நானா இருந்தா தலையில கல்ல தூக்கி போட்டு இருப்பேன்…”மகி.
“நான் சும்மா விளையாட்டுக்குத்தான பண்ணேன்….”என உதட்டை பிதுக்கினான் உதி.
“எது எதுல போய் விளையாடுறது னு விவஸ்த்தை இல்லையாடா அறிவு கெட்டவனே….”என உதியனின் மண்டையில் நங்கென்று கொட்டினாள் மகி.
“இல்லைடி… நான் சும்மா விளையாட்டுக்குத்தான பண்ணேன்….இதெல்லாம் கிராமத்துல சாதாரணம் டி…”உதி.
“எது? இது சாதாரணமா? அந்த பொண்ணு யாருன்னே உனக்கு தெரியாது…உனக்கு தெரிஞ்ச பொண்ண…உன் சொந்தக்கார பொண்ண கிண்டல் பண்ணுனா கூட அது ஏதோ ஒரு உரிமை இருக்கு… யாருன்னே தெரியாத பொண்ண கிண்டல் பண்ண உனக்கு என்ன உரிமை இருக்கு? உனக்கும் ரோட் சைட் பொறுக்கிக்களுக்கும் என்ன வித்தியாசம்? அடுத்தவங்க மனச நோகடிக்கிறது பெரிய தப்பு உதி….உன் கிட்ட இத நான் எதிர்பாக்கல டா… “மகி.
“ஹே…ஸாரி டி….”உதி.
“என் கிட்ட ஏன் கேக்குற? அந்த பொண்ணுக்கிட்ட இந்த நண்ட குடுத்துட்டு அவ கிட்ட ஸாரி கேட்டுட்டு வீட்டுக்கு வா…”என கூறி விட்டு வீட்டிற்கு கிளம்ப மகி திரும்பினாள்.
இவர்கள் இருவரும் பேசியது அனைத்தையும் கேட்டபடி பின்னால் தீரன் நின்றிருந்தான்.
மகி பேசிய அனைத்தையும் கேட்டவன், “நிஜமாவே இவ வித்தியாசமான பொண்ணு தான்…..தப்பு பண்ணுனா யாரா இருந்தாலும் முகத்துக்கு நேரா தட்டி கேக்குறா… “என மகியை பார்த்து வியந்தபடி நின்றிருந்தான் தீரன்.
தீரனை கண்டவள், “அடுத்தவங்க நோட்ட அனுமதி இல்லாம பாக்குறது….அடுத்தவங்க பேசுறத ஒட்டு கேக்குறது… இதே வேலையா போச்சு உங்களுக்கு… “என்றாள் மகி.
“ஏய்….உனக்கு வாய் ஓவரா நீளுதுடி….நான் ஒன்னும் ஒட்டு கேக்கல…..என் மோட்டார் கிட்ட யாரு நிக்கிறது னு பாக்க வந்தேன்….அப்ப நீங்க ரெண்டு பேரும் ஊருக்கே கேக்குற மாதிரி பேசுனா எல்லாருக்கும் கேக்க தான் செய்யும்….”என கோபபட்டான் தீரன்.
“அண்ணே… “என தயங்கினான் உதி.
“உதி… உன்னைய நான் கிளம்ப சொன்னேன்… “என உதியை முறைத்தாள் மகி.
“என்ன மகி…. அண்ணன் டி… பாத்து பேசு…. “உதி.
“உனக்குத்தான் அவன் அண்ணன்… முதல்ல நீ பண்ணுன தப்ப போய் சரி பண்ணு… நீ பண்ணுன தப்புக்கு மன்னிப்பு கேக்க தயங்குற ஒவ்வொரு நொடியும் நீ பண்ணுன தப்போட அளவு அதிகமாகிட்டே இருக்கும்….இந்நேரம் அந்த பொண்ணு மனசு எவ்ளோ சங்கடபடும்?” என உதியனை உறுத்து விழித்தாள் மகி.
“ஸாரி டி…. நான் கிளம்புறேன்…. “என மகியிடம் கூறிவிட்டு தீரனிடம் கண்களாலயே கெஞ்சி விட்டு தூரிகையிடம் மன்னிப்பு கேட்க புறப்பட்டான் உதியன்.
“பெரிய பெண்ணியவாதி னு நினைப்பா? பொண்ணுக்கு ஆதரவா இப்பிடி குரல் குடுக்குற? “தீரன்.
“நான் பெண்ணியவாதி இல்ல மிஸ்டர் அனழேந்தி தீரன்…. என் கண்ணு முன்னாடி எந்த தப்பு நடந்தாலும் அதுக்கு எதிரா குரல் கொடுக்குறேன்… அவ்ளோதான்… கண்ணு முன்னாடி நடக்குற தப்ப பாத்துட்டு நமக்கென்ன னு போறவங்க என்னைய பொறுத்தவரைக்கும் செத்த பொணத்துக்கு சமம்…. நான் உயிருள்ள மனுஷியா இருக்கேன்… அவ்ளோதான்…. நம்ம கண்ணு முன்னாடி நடக்குற சின்ன சின்ன தப்ப பாத்துட்டு நமக்கேன் வம்பு னு உயிர் இருந்தும் உணர்வு இல்லாம கண்டும் காணாத மாதிரி போகம நம்மளால முடிஞ்ச சின்ன எதிர்ப்ப காட்டுனாலே பெரிய பெரிய தப்பெல்லாம் இங்க நடக்காது…. என் கண்ணுக்கு முன்னாடி தப்பு நடந்துச்சுனா முகத்துக்கு நேரா தட்டி கேப்பேன்….அதான் நான்….அதுக்கு நீங்க திமிர்புடிச்சவ… ராங்கிக்காரி….. மரியாதை தெரியாதவ னு பேரு வச்சீங்கன்னா… ஆமா நான் ராங்கிக்காரி தான்…. திமிர்புடிச்சவ தான்… மரியாதை தெரியாதவ தான்…. பெண்ணியம் பேசுறவங்கலாம் பெண்ணியவாதி இல்ல மிஸ்டர் அனழேந்தி தீரன்…. அது அவங்களோட வலியோட வெளிப்பாடு…. அநியாயத்துக்கு எதிரா பேசுனா பெண்ணியவாதி னு முத்திரை குத்துறத நிறுத்துங்க…. “என கூறி விட்டு விறு விறு வென அங்கிருந்து வீட்டிற்கு புறப்பட்டாள் மகி.
கோபமாக செல்லும் மகியை விழி விரிய பார்த்தவன், “இன்ட்ரஸ்ட்டிங்…. “என முனுமுனுத்துக்கொண்டான் தீரன்.
கோபமாகவே வீட்டிற்கு வந்தவள் உள்ளே புதிதாக பேச்சுக்குரல் கேட்கவும் தயங்கி நின்றாள் மகி.
“எனக்கு மகியை ரொம்ப புடிச்சு இருக்கு செண்பகம்…. ரொம்ப நல்ல புள்ள…. இப்பிடி ஒரு புள்ள குடும்பத்துக்கு கிடைக்க குடுத்து வச்சு இருக்கனும்… “என கருப்பாயி செண்பகத்திடம் கூறி கொண்டிருந்தார்.
பேச்சில் தன் பெயர் அடிபடவும், “யார்ரா இது இந்த ஊருக்குள்ள நம்மள தெரிஞ்சவங்க…. “என உள்ளே நுழைந்தாள் மகி.
உள்ளே பேசி கொண்டிருந்தது தீரனின் அம்மா கருப்பாயி என அறிந்ததும் புன்னகையுடன், “ரெண்டு அம்மாவும் சேந்து என்னைய பத்தி என்ன பேசிட்டு இருக்கீங்க? “எனக்கேட்டவாறே அவர்கள் முன் சென்று நின்றாள் மகி.
திடீரென மகியை கண்டதும் பேசி கொண்டிருந்ததை நிறுத்தி விட்டு இருவரும் அதிர்ந்து திரு திரு வென விழித்தனர் கருப்பாயியும் செண்பகமும்.
“என்ன ரெண்டு பேரும் ஏதோ தப்பு செஞ்சது மாதிரி முழிக்கிறீங்க? அப்பிடி என்ன தப்பு பண்ணீங்க? “என இருவரையும் பார்த்து கேட்டாள் மகி.
“நம்ம பேசுனத கேட்டு இருப்பாளோ? “என இருவரும் பயந்து விழித்தனர்.
“ஏன் இப்படி என்னைய பாத்து பயப்படுறீங்க? “எனக்கேட்டவாறு இருவரையும் கூர்ந்து நோக்கினாள் மகி.
(காதல் தீ பரவும்…)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.