காதல் தீ -08

Chellammal Bharathi | 22 Nov 2025 | Share

         பொழுது விடிந்ததிலிருந்து மகி கத்தி ஆர்பாட்டம் செய்து கொண்டிருந்தாள். மகியையும் உதியையும் விலக்கி விடுவதே செண்பகத்திற்கு தலையாய வேலையாக இருந்தது. ராசேந்திரன் முயன்று பார்த்து விட்டு ஒரு ஓரமாக ஓய்ந்து அமர்ந்து விட்டார்.

         “இப்ப உன்னால என்னைய கூட்டிட்டு போக முடியுமா? முடியாதா? “மகி.

         “விளையாடாத மகி… செமஸ்டருக்கு இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு… ஒழுங்கா படிக்கிற வேலய பாரு… “உதி.

          “பொல்லாத படிப்பு…. படிக்கவா நான் இங்க வந்தேன்… ஒரு நாள் முன்னாடி கூட உக்காந்து படிச்சுக்கலாம்…. என்னைய கூட்டிட்டு போடா… “மகி.

           “நீ வீட்ட விட்டு வெளில போனா… ஊரு வம்பெல்லாம் இழுத்துட்டு வர்ற…. உன்னைய நம்பி விட்டுட்டு அங்குட்டு இங்குட்டு போக முடியல… ஒழுங்கா வீட்லயே இரு…..”உதி.

          “நான் ஒன்னும் ஊரு வம்பெல்லாம் இழுக்கல…. கண்ணு முன்னாடி தப்பு நடந்துச்சு… தட்டி கேட்டேன்… அது தப்பா? “மகி.

           “தப்புத்தான்டி… தப்புத்தான்… நீ தட்டியா கேட்ட? அடிச்சு ல கேட்டு இருக்க…. அதுவும் யார… தீரன் அண்ணன…. “உதி.

           “சொல்லுறத கேக்கலனா கேக்குற விதத்துல சொல்லனும்… ஏன் உங்க தீரன் அண்ணனுக்கு தலையில என்ன பெரிய கொம்பா? அவன் தான் என்னைய முதல்ல அடிச்சான்… நான் திருப்பி… ஜஸ்ட்… எனக்கு குடுத்தத திருப்பி குடுத்தேன்… அவ்ளோதான்… “மகி.

           “கேட்டுக்கம்மா…. உன் மக பேசுறத… ஜஸ்ட் குடுத்தத திருப்பி குடுத்தாங்கலாம் மேடம்…. நீயாவது கொஞ்சம் புத்திமதி சொல்லும்மா… “என உதி தன் தாயிடம் முறையிட்டான்.

           “அவ சொல்லுறதுல என்ன தப்பு இருக்கு? அவன் தான முதல்ல நம்ம புள்ளைய அடிச்சான்…. “செண்பகம்.

           “விளங்கிரும்…. அவ சும்மாவே ஆடுறா… நீ சலங்கைய வேற கட்டி விடு…. “உதி.

           “நான் பாட்டுக்கும் பேசாம ஒரு ஓரமா தான நின்னேன்… நீதானடா என்கிட்ட நியாயம் கேட்ட…. “செண்பகம்.

            “உன்னால தான் ம்மா இவ இப்பிடி ஆடுறா…. “என தன் தாயை முறைத்தான் உதியன்.

           “இப்ப எதுக்கு தேவை இல்லாம அம்மாவ திட்டிட்டு இருக்க? நான் கேட்டதுக்கு முதல்ல பதில்ல சொல்லு….என்னைய வயலுக்கு கூட்டிட்டு போவியா? மாட்டியா? “மகி.

           “நீ வெளில வந்து உன் வாலுத்தனத்த எல்லாம் சுருட்டி வச்சுட்டு இருப்ப னு சத்தியம் பண்ணு… கூட்டிட்டு போறேன்….”உதி.

           “கிழக்க உதிக்கிற சூரியன் மேற்க உதிச்சாலும் உதிக்குமே தவிர…நீ கேக்குறது நடக்காதுடா மகனே….”என அடக்கப்பட்ட புன்னகையுடன் கூறினார் ராசேந்திரன்.

        அதை கேட்ட மகி  , “அப்பாஆஆஆஆஆ….”என பல்லை கடித்தாள் .

          “சத்தியம் பண்ணுடி… கூட்டிட்டு போறேன்….”உதி.

           “வாய்ப்பு இல்லை… என் வாயும் கையும் சும்மா இருக்காது போடா….”மகி.

            “அப்ப என்னாலயும் கூட்டிட்டு போக முடியாது….”உதி.

            “இதான் உன் முடிவா? “என விஷமத்துடன் கேட்டாள் மகி.

           “இவ கேக்குற டோனே சரி இல்லையே… பெருசா எதுவும் ஆப்பு வைக்க போறாளோ? “என உள்ளுக்குள் கலங்கினாலும் வெளியே கெத்தாக, “ஆமா… என்னால கூட்டிட்டு போக முடியாது….”என்றான் உதியன்.

          “அப்ப ஓகே….உன் லவ் மேட்டர அம்மா கிட்ட சொல்லிர்றேன்… “என குறும்பு கொப்பளிக்க கூறினாள் மகி.

          “என்ன? லவ்வா? ” என முறைத்தார் ராசேந்திரன்.

            “ஓஓஓ….துரைக்கு இந்த சோக்கு வேற கேக்குதோ? “என விளக்கமாறை தூக்கினார் செண்பகம்.

           “எதேய்… எந்த லவ்வுடி?” என அதிர்ச்சியானான் உதியன்.

            “பாருங்க ம்மா எந்த லவ்வு னு கேக்குறான்….அப்ப நிறைய இருக்கும் போல… எனக்கு ஒன்னு தான் ம்மா தெரியும்….”என முகத்தை போலியான சோகத்துடன் வைத்துக்கொண்டு கூறினாள் மகி.

         அதை கேட்ட ராசேந்திரன் மற்றும் செண்பகத்தின் முகத்தில் அனல் பறந்தது. இருவரையும் பார்த்த உதி, “அய்யையோ… குட்டிச்சாத்தான் நல்லா கோத்து விடுதே….”என உள்ளே புகைந்து கொண்டு, “இப்ப என்ன டி? வயலுக்கு போகனும்… அதான? வா….கூட்டிட்டு போறேன்… போதுமா? “என்றான் உதியன்.

         “அப்பிடி வாடா மவனே வழிக்கு… “என உதியினின் காதில் ரகசியம் பேசி கண்ணடித்தாள் மகி.

         “எல்லாம் என் நேரம்… என்னைக்கி உன்னைய காலேஜ்ல பாத்தேனோ… அன்னக்கி புடிச்சதுடி எனக்கு கிரகம்… வந்து தொலை…. இன்னும் ஒரு நிமிஷம் இங்க நின்னாலும் எனக்கு நீ விளக்கமாத்து அடி வாங்கி குடுத்துருவ….”என மகியை இழுத்துக்கொண்டு வெளியே ஓடினான் உதியன்.

         “ஹா ஹா ஹா… அம்மா… நான் உங்களுக்கு வந்து சொல்லுறேன்… “என கத்திக்கொண்டு உதியனுடன் வெளியில் ஓடினாள் மகி.

           வெளியில் வந்து சிறிது தூரம் நடந்ததும், தன் நண்பன் அமைதியாக வருவதை கண்டவள், உதியனின் தோளை இடித்து, “என்ன மச்சான்? சைலண்டா வர்ற? என்ன யோசனை ஓடிட்டு இருக்கு? “என சிரிப்புடன் கேட்டாள் மகி.

           “ம்ம்… ஏழரைய வெளில கூட்டிட்டு போறேன்… எந்த அசம்பாவிதமும்  நடக்காம இருக்கனும் னு கடவுள் கிட்ட மனு போட்டுட்டு இருக்கேன்… “உதி.

          “என் மேல உனக்கு ரொம்ப தான்டா அக்கறை…எனக்கு எதுவும் ஆக கூடாது னு வேண்டிக்கிட்டு வர்ற… “மகி.

           “அடச்சை… உனக்கு என்ன ஆக போகுது? உன்னால யாருக்கும் எதுவும் ஆகாம இருக்கனும் னு வேண்டிட்டு வர்றேன்டி விளக்கெண்ணை… “உதி.

          “சை… உன்னையலாம் ப்ரண்டா வச்சுக்கிறதுக்கு கொட்டாங்குச்சி ல தண்ணி ஊத்தி அதுல குதிச்சு செத்து போயிறலாம்… “மகி.

        “போடி… யாரு வேணாம்னது? என்னைய புடிச்ச ஏழரை யாச்சும் ஒழியும்… “உதி.

          “உன்னைய இன்னக்கி கொல்லாம விட மாட்டேன் டா முட்டைக்கோஸ் வாயா… “என உதியனை அடிக்க துரத்தினாள் மகி.

            “உண்மைய சொன்னா ஏன்டி கோப படுற? “என சிரித்தபடி மகியின் கைகளில் சிக்காமல் ஓடினான் உதியன்.

            உதியனை துரத்தி கொண்டு ஓடியவள் கையில் இருந்த நோட்டு இடைஞ்சலாக இருக்க… அருகில் இருந்த மோட்டார் அறையில் வைத்து விட்டு உதியனை துரத்தியபடி ஓடினாள் மகி.

           சிறிது தூரம் ஓடியவன் மூச்சு வாங்கி கொண்டு ஓரிடத்தில் நிற்க, வேகமாக உதியனை அடைந்த மகி, சிரித்துக்கொண்டே அவனை அடித்து காதை பிடித்து திருகினாள்.

            “ஆஆஆ…ராட்சசி….வலிக்குது விடுடி… “என சிரிப்புடன் கூறினான் உதியன்.

            “வலிக்கட்டும்… நல்லா வலிக்கட்டும்… “என சிரித்தபடி வாய்க்காலில் கால் நனைத்தபடி வரப்பில் அமர்ந்தாள் மகி. அவளின் அருகிலேயே அமர்ந்த உதி, “சந்தோஷமா இருக்கியா அம்மு? “என்றான்.

             “ஏன்டா இப்பிடி கேக்குற? என்னைய பாத்தா எப்பிடி தெரியுது? சோகமா இருக்குற மாதிரியா இருக்கு? பிளடி பக்கெட்…”என்றவாறு உதியனின் தோளில் கைப்போட்டு கழுத்தை இறுக்கினாள் மகி.

             “ஆஆஆ….கொலை… கொலை….”என சிரிப்புடன்  கத்தினான் உதி.

            “சாவுடா சப்பை மூஞ்சி….”என இன்னும் கழுத்தை இறுக்கினாள் மகி.

            “ஹே….சைக்கோ கொலைகாரி… எங்கடி உன் உயிர்நாடி அந்த அலாவுதீன் நோட்டு? “உதி.

           “ஹைய்யோ… அத மறந்துட்டேன் டா….உன்னைய துரத்துறப்ப அங்க ஒரு மோட்டார் ரூம் இருந்துச்சு….அங்க வச்சுட்டு வந்தேன்… இரு… நான் போய் எடுத்துட்டு வர்றேன்… “என்றவாறு எழுந்தாள் மகி.

           “அதுல அப்பிடி என்னத்த தான் எழுதுறியோ? கையிலே வச்சுட்டு சுத்துற….”உதி.

          “போடா… இரு… வந்துர்றேன்….”என அந்த மோட்டார் அறை நோக்கி ஓடி மறைந்தாள் மகி.

          தாவணி காற்றில் படபடக்க மூச்சு வாங்க தனது நோட்டு வைத்த இடத்தை நோக்கி ஓடினாள் மகி. அங்கு யாரோ தனது நோட்டை எடுத்து பார்த்து கொண்டிருப்பதை தூரத்தில் கண்டவள் கோபத்துடன் வேகமாக வந்தாள் மகி.

            நோட்டை எடுத்து பார்த்துக்கொண்டிருந்த தீரன், பின்னாடி அரவம் கேட்டு திருப்பி பார்த்தான்.

           பச்சை வண்ண தாவணி அணிந்து காற்றில் கூந்தல் அசைந்தாட…கோபத்தில் இதழ்கள் துடிக்க… விழிகளில் கூர்மையுடன் கண் முன்னே தேவதையென நின்றவளை கண்ட தீரனின் நெஞ்சம் சற்று தடுமாறி தான் போனது. “டேய் தீரா… போயும் போயும் இவ கிட்ட விழுந்துறாதடா… இவ ராங்கிக்காரி… ஸ்டடி… ஸ்டடியா நில்லுடா… விழுந்துறாத… “என தனக்குள் சொல்லிக்கொண்டு கண் சிமிட்டாமல் விழிகளாலயே மகிழ்விழியை விழுங்கினான்  தீரன்.

           தன்னை கண்டு கண் சிமிட்டாமல் பார்ப்பனை வித்தியாசமாக உணர்ந்தவள், “ஹலோ… “என தீரனின் முகத்தின் எதிரே கையை அசைத்தாள் மகி.

          அப்பொழுதும் அசையாமல் நின்ற தீரனின் புஜத்தில் கிள்ளினாள் மகி. அதில் சுய உணர்வு பெற்றவன், “ஆஆஆ…. ராங்கிக்காரி….எதுக்குடி என்னைய கிள்ளுன? “என தன் தடுமாற்றத்தை உள்ளுக்குள் மறைத்தபடி வெளியே கோப பட்டான் தீரன்.

           “ஹைய்யோடா… பச்சையா என்னைய சைட் அடிச்சுட்டு இப்ப சமாளிக்கிற மூஞ்ச பாரு…. “மகி.

            “வ்வே…. போயும் போயும் உன்னைய நான் சைட் அடிச்சேனா? உன் மூஞ்சிய கண்ணாடில பாக்குற தான? இருந்தாலும் ஓவர் கான்ஃபிடனஸ் உடம்புக்கு ஆகாது ம்மா… “தீரன்.

            “நீ சமாளிக்கிறனு பச்சையா தெரியுது…. வழியுது… துடைச்சுக்கோ…. “மகி.

           “ஏய்…. “தீரன்.

             “என்ன ஏய்? என் பர்மிஷன் இல்லாம என் நோட்ட பாத்துட்டு என்னைய அரட்டுறியா? முதல்ல நீ போய் டிசிப்பிளின் னா என்ன னு டியூஷன் போய் கத்துக்கோ… நான் வேணுனா பீஸ் குடுக்குறேன்… “மகி.

            “ஏய்… என்னடி திமிரா? “தீரன்.

             “ஆமாடா… திமிரு தான்டா…. அதுக்கு இப்ப என்ன டா? “என வார்த்தைக்கு வார்த்தை டா போட்டு அழுத்தி பேசினாள் மகி.

              “சை… என் வயல்ல நிக்காதடி… வெளில போடி…ராங்கிக்காரி… “தீரன்.

                “எனக்கென்ன கிரகமா? அராத்து புடிச்ச உன் வயல்ல நிக்கிறதுக்கு? குடுடா என் நோட்ட… “என தீரனின் கையில் இருந்த நோட்டை பறித்துக்கொண்டு ஓடி மறைந்தாள் மகி.

              “அடுத்த தடவ பாக்குறப்ப இருக்குடி உனக்கு…. “என வெளியே கடுகடுத்தாலும், “வித்தியாசமான ராங்கிக்காரி தான் நீ…. சே குவேரா, லெனின் னலாம் பாலோ பண்ற…. “என முனுமுனுத்து புன்னகைத்துக்கொண்டான் தீரன்.

             “சை… பரங்கிக்கா மண்டை…. உனக்கு இருக்குடா ஒரு நாளு….அனகோண்டா முட்டை….மூஞ்ச பாரு… பாதி எரிஞ்ச பக்கோடா….”என தீரனை திட்டிக்கொண்டே உதியனிடம் வந்தவள் உதியனை கண்டவள் அதிர்சியில் விழி விரித்து நின்றாள் மகி.

                              (காதல் தீ பரவும்….)

                             -செல்லம்மாள்பாரதி

    No comments yet.