காதல் தீ -07

Chellammal Bharathi | 22 Nov 2025 | Share

         “சை…பொண்ணா இவ? சரியான ராங்கிக்காரி… பொம்பள புள்ளைய கை நீட்டி அடிக்க கூடாதாம்…. அந்த ராங்கிக்காரி என்னைய ரெண்டு அடி அடிச்சாளே…அது இந்த அம்மா கண்ணுக்கு தெரியலயோ…..நான் டி சொல்லக்கூடாதாம்… ஆனா அந்த உதி பய மட்டும் வார்த்தைக்கு வார்த்தை டி போட்டு பேசுறான்.. இவளும் ஈஈஈ னு பல்ல காட்டிட்டு போறா… அது மட்டும் சரியோ? இருக்கு அவளுக்கு… ஒரு நாள் அவ குடுத்தத அவளுக்கு வட்டியும் முதலுமா திருப்பி குடுக்குறேன்…. “என புலம்பி கொண்டே தன் வயலுக்கு வந்து கொண்டிருந்தவனை எதிரில் வந்த பெரியவர் வழி மறித்தார்.

         “என்னப்பா ?தீரா… தனியா பேசிட்டு வர்ற? என்ன ஆச்சு? “என தீரனை பார்த்து அந்த பெரியவர் கேட்க… “ஆங்… ஒன்னுல்ல தாத்தா… சும்மா… சும்மா தான்… “என சமாளித்து அந்த தாத்தாவை அனுப்பி வைத்தான் தீரன்.

           “என்னவோ போ… ஏதோ சரி இல்லை… நடு ராத்திரியில லாம் வெளில சுத்தாதீங்க னு சொன்னா இந்த காலத்து புள்ளைங்க எங்க கேக்குறீங்க? “என முனுமுனுத்துக்கொண்டு சென்றார் அந்த தாத்தா.

          “ஆஆஆஆ… இந்த ராங்கிக்காரியால நான் தனியா பொலம்புற அளவுக்கு வந்துட்டேன்… பாருடி உன்னைய என்ன பண்றேன் னு… “என மனதினுள் உறுதி எடுத்துக் கொண்டு தன் வயல் வேலையை பார்க்க ஆரம்பித்தான் தீரன்.

                💖💖💖💖💖💖💖

       “என்னங்க… என்னங்க… எங்க இருக்கீங்க? “என வீட்டிற்குள் நுழைந்து கொண்டே தன் கணவனை கண்களால் அலசி கொண்டு தேடினார் கருப்பாயி.

        “இப்ப எதுக்கு இவ்ளோ அவசரமா என்னைய தேடிட்டு இருக்க? “என்று குரல் கொடுத்தபடி உள்ளே இருந்து வெளியே வந்தார் சிதம்பரம்.

         “இங்க வாங்க… வந்து இப்பிடி உக்காருங்க… இன்னக்கி என்ன நடந்துச்சு தெரியுமா? “என விழிகள் மின்ன சிதம்பரத்தை பிடித்து ஊஞ்சலில் உட்கார வைத்து தானும் அருகில் அமர்ந்தார் கருப்பாயி.

          “என்னடா இது… இன்னக்கி என் பொண்டாட்டி கண்ணு மினுமினுக்குது… என்ன விசயம் சொல்லு? “என்று தன் மனைவியை கிண்டல் அடித்தார் சிதம்பரம்.

            “ப்ச்… எப்ப பாரு கிண்டல் தான் உங்களுக்கு… போங்க நான் சொல்லல.. “என சிறு குழந்தையென முகத்தை திருப்பிக்கொண்டார் கருப்பாயி.

           “ஹா ஹா ஹா… சரி சரி என்ன னு சொல்லு…. நான் கிண்டல் பண்ணல… “சிதம்பரம்.

          “அது… இன்னக்கி… “என ஆரம்பித்து வளைகாப்பு வீட்டில் நடந்ததில் இருந்து வயல்காட்டில் நடந்தது வரை அனைத்தையும் ஒரு வரி விடாமல் ஒப்புவித்தார் கருப்பாயி.

          “அடிப்பாவி… நம்ம மகன ஒரு பொண்ணு அடிச்சு இருக்கு ஊரு முன்னாடி வச்சு… நீ போய் அந்த பொண்ணுகிட்ட மன்னிப்பு கேட்டுட்டு வந்து இருக்க? “சிதம்பரம்.

           “என்னங்க பேசுறீங்க? அப்ப நம்ம பையன் செஞ்சது மட்டும் சரியா? அவசரபுத்தி… எல்லாத்துலயும் அவசரம்… ஒரு பொண்ண இன்னொரு பொண்ணே இப்பிடி பேசலாமா? அதுக்குத்தான் அந்த பொண்ணு அடிச்சா… அவ ஒன்னும் தப்பு பண்ணாதவள அடிக்கலயே… எனக்கே நாலு அறை விடனும்னு தான் இருந்துச்சு… எனக்கும் சேத்து அந்த பொண்ணு அடிச்சா… அது தெரியாம, கடைசி நேரத்துல வந்து இவன் தாம் தூம் னு குதிச்சா எந்த பொண்ணு சும்மா இருப்பா? தப்பு பண்றவங்கள விட… அதுல உள்ள உண்மைய தெரிஞ்சுக்காம தான் பாத்தத மட்டும் வச்சு தன்னோட இஷ்ட்டத்துக்கு முடிவு பண்ணி தண்டனை குடுக்குறது எவ்ளோ பெரிய தப்பு தெரியுமா? “கருப்பாயி.

          “அடியேய்… கொஞ்சம் மூச்சு விடு…. நான் ஒரு கேள்வி தான கேட்டேன்…. எனக்கும் புரியுது…. இவன் எப்பத்தான் இந்த அவசரபுத்திய மாத்திக்க போறான் னு தெரியல…. நாம சொன்னா எங்க கேக்குறான்? எல்லாம் எனக்குத் தெரியும் னு போயிர்றான்…. தோளுக்கு மேல வளந்த புள்ளைய அடிச்சா சொல்ல முடியும்? “சிதம்பரம்.

           “இதுக்குத்தாங்க நான் ஒரு யோசனை வச்சு இருக்கேன்….”என முக பொலிவுடன் கருப்பாயி கூறினார்.

          “என்ன? அவனுக்கு சீக்கிரமே கல்லியாணம் பண்ணி வைக்கனும் னு சொல்ல போற… அதான? “சிதம்பரம்.

           “அதே தான்….ஆனா பொண்ணு முதக்கொண்டு நான் பாத்துட்டேன்… “கருப்பாயி.

           “என்னது? பொண்ணு பாத்துட்டியா? “சிதம்பரம்.

            “ஆமாங்க….அந்த பொண்ணால மட்டும் தான் நம்ம பையன கட்டுக்குள்ள கொண்டு வர முடியும்… “கருப்பாயி.

           “அப்பிடி யாரு நம்ம ஊருக்குள்ள? “சிதம்பரம்.

             “பொண்ணு நம்ம ஊரு இல்ல.. வெளியூர்… “கருப்பாயி.

              “ஹே… நீ பாட்டுக்கும் பொசுக்குனு அந்த அடிச்ச புள்ளைய முடிவு பண்ணிறாத… இதுல நம்ம புள்ள வாழ்க்கை மட்டும் இல்ல… அந்த பொண்ணோட வாழ்க்கையும் இருக்கு… “சிதம்பரம்.

            “என்னங்க இப்பிடி சொல்லுறீங்க? நம்ம பையனுக்கு என்ன குறைச்சல்? நான் என்ன அந்த பொண்ண பாழுங்கிணத்துலயா புடிச்சு தள்ளி விடுறேன்? தப்பு பண்ணுனா முகத்துக்கு நேரா அந்த பொண்ணு தட்டி கேக்குது… அந்த செண்பகம் குடும்பத்தோட அவ்ளோ பாசமா இருக்கு… என்னைய கூட அம்மா அம்மா னு வாய் நிறைய அத்தனை பாசமா கூப்பிட்டுச்சு…. தைரியமும் பாசமும் நிறைஞ்ச பொண்ணுங்க… எனக்கு இந்த பொண்ண விட மனசு இல்ல… உங்களுக்கு என்ன? என் மகன் அவன் கல்லியாண பொறுப்ப என் கிட்ட தான் விட்டு இருக்கான்… நான் கை காட்டுற பொண்ண தான் அவன் கல்லியாணம் பண்ணுவேன் னு சொல்லி இருக்கான்…. எனக்கு தெரியாது… நம்ம தீரனுக்கு மகி தான்… “கருப்பாயி.

           “அடியேய்… நீ புள்ள பாசத்துல பேசுற… முதல்ல அந்த பொண்ண பத்தி யோசிச்சு பாத்தியா? அது டவுன்க்கார புள்ள… இந்த கிராமத்துல வாழ்க்கைப்பட அது ஒத்துக்குமா? அத்தோட நம்ம மகனுக்கும் அந்த பொண்ணுக்கும் சண்டை வேற…. ரெண்டு அறை வாங்குன உன் மகன் சும்மா இருப்பான்னு நினைக்கிறியா? அவன் இதுக்கு ஒத்துக்குவானா? சும்மா ஏதாவது உலறிட்டு இருக்காத…. “சிதம்பரம்.

             “மோதல்ல ஆரம்பிக்கிறவங்க காதல்ல தான் வந்து நிப்பாங்க…. நீங்க வேணுனா பாருங்க… தீரனுக்கு மகி தான்…. நான் போய் நாளைக்கி செண்பகத்துக்கிட்ட மகி யோட அப்பா அம்மா வீட்டு விலாசம் லாம் விசாரிச்சுட்டு வர்றேன்…. நீங்க தான் மகி வீட்ல போய் பேசனும்… சொல்லுப்புட்டேன் ஆமா… “கருப்பாயி.

            “இந்த டிவி பாத்து பாத்து கெட்டு போய்ட்ட நீ… சினிமா லாம் பாக்காத னு சொன்னா கேக்குறியா நீ? மோதலாம் காதலாம்…. “சிதம்பரம்.

              “அதெல்லாம் எனக்குத் தெரியாது…. என் மகன் கல்லியாணம் என் முடிவு தான்… நான் சொல்லுறது தான் பொண்ணு… “என முந்தானை உதறிக்கொண்டு அங்கிருந்து எழுந்து சென்றார் கருப்பாயி.

             “ஒரு முடிவோட தான் இவ இருக்கா… இது எதுல போய் முடிய போகுதோ…. “என புலம்பியபடி தன் வேலையை பார்க்க ஆரம்பித்தார் சிதம்பரம்.

                💖💖💖💖💖💖💖

     சில்லென்ற காற்று முகத்தில் அறைய…. மாட்டு சாணத்தின் வாசமும்… கீச் கீச் என்ற குருவிகளின் இசையும் தீரனை புன்னைகையுடன் எழ வைத்தது.

          இருள் போர்வை போர்த்தியபடி சூரியன் இன்னும் உறங்கியபடி இருக்க… சிங்கம்புணரி கிராம மக்கள் அந்த அதிகாலையிலும் சுறு சுறுப்புடன் இயங்கி கொண்டிருந்தனர்.

         அதிகாலையின் சுகந்த வாசத்தை ஆழ சுவாசித்தவன்… மனதில் என்றும் இல்லாத புது உற்சாக ஊற்று பிறப்பெடுக்க.. “என்னடா இது… இன்னக்கி மனசு றெக்க கட்டி பறக்குது… டேய் தீரா…. உன் ஹார்ட்டு உன் கிட்ட ஏதோ சொல்ல வருது டா…. இன்னக்கி ஏதோ நடக்க போகுது போல இருக்கேடா…. “என தன் இதயத்தை தட்டியபடி தனக்குள் பேசிக்கொண்டான் தீரன்.

           என்றுமில்லாமல் தன் மகன் சிரித்தபடி தனக்குத்தானே பேசுவதை கண்ட கருப்பாயி… “நம்ம மகனுக்கு காதல் நோய் வந்துருச்சு போலயே… உடனே போய் செண்பகத்துக்கிட்ட பேசிறனும்… “என சமையல்கட்டில் நின்று தீரனை பார்த்து தானே பேசிக்கொண்டார்.

         தனியாக பேசிக்கொண்டு இருக்கும் தன் மனைவியை கண்ட சிதம்பரம், “ஐயோ… இவ என்ன தனியா பேசிட்டு இருக்கா? நேத்து வரப்புல எதுவும் வழுக்கி விழுந்துட்டாளோ… “என புலம்பி கொண்டார்.

          அதே நேரம் தீரனும் கருப்பாயியும் சிதம்பரத்தை பார்த்து, “காலங்காத்தால என்ன தனியா பொலம்பிட்டு இருக்கீங்க…. லூசா நீங்க? “எனக் கேட்க… “எல்லாம் என் நேரம்… “என தலையில் அடித்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தார் சிதம்பரம்.

           அதிகாலை ரம்மியத்தை ரசித்தபடி வயலுக்கு புறப்பட்டு வந்தவன், தன் வயலை புதிதாக பார்த்தான். “என்னடா இது? நம்ம வயல் இன்னக்கி நமக்கே புதுசா தெரியுது… “என ஆழ மூச்செடுத்துக்கொண்டு ஒவ்வொரு பயிராக பார்த்துக்கொண்டு வந்தான் தீரன்.

          செழித்து வளர்ந்து நிற்கும் நெற்தாள்களை ரசித்து வருடியவன்… அதற்கு முத்தம் வைத்து ஆழ முகர்ந்தான் தீரன். உள்ளத்தில் ஏதோ மகிழ்ச்சியும் சுவாரசியமும் பெருக… நடையில் துள்ளலுடன், தனது காய்கறி பயிர்களை நலம் விசாரித்து வாழைக்கன்றுகளிடம் செல்லம் கொஞ்சி…. தென்னம்பிள்ளைகளிடம் குறும்பு செய்து… உற்சாக நடையுடன்  மோட்டார் அறைக்குள் நுழைந்து தனது மேற்சட்டையை கழட்டி மேலே வைத்து விட்டு துண்டை எடுத்து தலையில் கட்டிக்கொண்டு மடித்துக்கட்டிய வேட்டியுடன் மண்வெட்டியை எடுத்து வரப்பு வெட்ட புறப்பட்டவன் கண்ணில் ஒரு நோட்டு சிக்க… மண்வெட்டியை கீழே வைத்துவிட்டு அதை கையில் எடுத்தான் தீரன்.

        “என்னடா இது….நம்ம மோட்டார் ரூம்ல நோட்டு இருக்க….யாரோடாதா இருக்கும்? “என யோசித்து கொண்டு வெளியில் வந்து சுற்றும் முற்றும் பார்த்தான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாரும் இல்லாததால், “நமக்கென்ன? “என தோளை குலுக்கியபடி அதை எடுத்த இடத்தில் வைக்க திரும்பியவன் ஏதோ ஒரு ஆர்வம் உந்தி தள்ள…..அந்த நோட்டை பிரித்துப்பார்த்தான் தீரன்.

       “ஒவ்வொரு அநீதியையும் கண்டு ஆத்திரத்தில் அதிர்ந்து போவாயானால் நீ எனது தோழன் “-சே குவேரா.

        என்று முதல் பக்கத்தில் அழகான கையெழுத்தில் எழுதி இருக்க… “சே குவேராவா? நம்ம ஊருல யார்ரா இவர பத்திலாம் தெரிஞ்சு வச்சு பாலோ பண்றது” என சுவாரசியத்துடன் அடுத்த பக்கத்தை புரட்டினான் தீரன்.

       “மகிழ்விழியின் மனதின் மொழிகள்…”என அடுத்தப்பக்கத்தில் ஒரு மயிலிறகு வரைந்து எழுதி இருக்க….”ஓஓ.. ராங்கிக்காரியோட நோட்டா இது? “என்றவாறு அடுத்த அடுத்த பக்கங்களை ஆர்வமுடன் புரட்டினான் தீரன்.

           அடுத்து அடுத்து உள்ள பக்கங்கள் மகியின் மீது ஒரு சுவாரசியத்தை உருவாக்க….”ராங்கிக்காரி பெரிய ராங்கிக்காரி தான் போல…..”என புன்னகையுடன் முனுமுனுக்க அவனின் பின்னே, “ம்க்ஹூம்.. “என செறுமல் சத்தம் கேட்டு தீரன் திரும்பி பார்க்க….எதிரில் அழகிய தாவணி பாவாடையுடன் தலை குளித்து கூந்தலை கட்டாமல் பறக்க விட்டபடி நெற்றியில் ஒற்றை பொட்டிட்டு எவ்வித ஒப்பனையும் இன்றி அந்த சூரியனின் பிரகாசத்திற்கு போட்டியாக முக பிரகாசத்துடன் தீரனை உறுத்து விழித்தபடி மகி நின்று கொண்டிருந்தாள்.

                             (காதல் தீ பரவும்….)

                           -செல்லம்மாள்பாரதி

    No comments yet.