காதல் தீ -05

Chellammal Bharathi | 21 Nov 2025 | Share

        அதிகாலையில் சேவல் கூக்குரலிட்டு சிங்கம்புணரி கிராம மக்களை துயில் கலைய செய்ய… மெல்ல கண் விழித்தாள் மகி.

         எழுந்தவுடன் நாசியில் ஒரு வித வாசம் வந்து தாக்க… அந்த வாசத்தை பின் தொடர்ந்து கொண்டே வெளியில் வந்தாள் மகி. வீட்டின் வாசலில் செண்பகம் சாணம் தெளித்து கொண்டிருக்க… சாணத்தின் வாசம் மகியின் நாசியை துளைத்து எடுத்தது.

          “ம்மா…. செம ஸ்மெல்….செமயா இருக்கு…. என்னம்மா இது? ” மகி.

           “அடி கிருக்கி…. நல்லா இருக்கா? இது மாட்டு சாணம்… உன்னைய மாதிரி படிச்சவங்க லாம் அசிங்கம் னு ஒதுங்கி ஓடுவாங்க… நீ நல்லா இருக்கு னு மோப்பம் புடிச்சுட்டு வர்ற? ” செண்பகம்.

           “ஏன்? இதுக்கு என்ன? சூப்பரா இருக்கே வாசம்… இத ஏன் இப்படி வாசல்ல போடுறீங்க? ” மகி.

          “இது மாட்டோட கழிவு… இத தண்ணில கரைச்சு… இப்பிடி வாசல்ல தெளிக்கனும்… “செண்பகம்.

          “ஏன் இப்பிடி தெளிக்கனும்? அதுவும் மாட்டோட சாணத்த மட்டும் ஏன்? ” மகி.

           “ஏன்னா… இது கிருமி நாசினி மா…. இப்படி சூரியன் வர்றதுக்கு முன்னாடி எந்திரிச்சு வாசல்ல தெளிக்கனும்… வீட்டுக்குள்ள வர்றப்ப இத மிதிச்சுட்டு வருவாங்கல்ல…. அப்ப நம்ம கால் வழியா நம்ம உடம்புக்குள்ள போயி நம்ம உடம்புல உள்ள நோய் எதிர்ப்பு சக்திய அதிகப்படுத்தும்…. அத்தோட இந்த சாணத்தோட வாசம் இப்பிடி விடியக்காலை காத்தோட கலந்து… அந்த வாசத்த நாம சுவாசிக்கிறது உடம்புக்கு ரொம்ப நல்லது…. இது புள்ளத்தாச்சி பொம்பளங்களுக்கு ஒரு மருந்து…. “செண்பகம்.

         “வாவ்… சூப்பர் அம்மா…. ம்மா….ம்மா… ம்மா…. ” மகி.

         “இப்ப எதுக்குடி பிச்சக்காரி மாதிரி காலங்காத்தால வாசப்படி ல உக்காந்துட்டு ம்மா னு கத்திட்டு இருக்க? “என்றவாறு தூக்க கலக்கத்துடன் எழுந்து வந்தான் உதி.

         “ச்சீ போடா லூசு….ம்மாஆஆஆ….” மகி.

          “அம்மாக்கு இப்ப என்னடா? “என சிரிப்புடன் வினவினாள் செண்பகம்.

           “நான்… நான் தெளிக்கிறேன் ம்மா… ஆசையா இருக்கு…ப்ளீஸ்… “மகி.

            “இவ்ளோ தானா? வா… வந்து நல்லா தெளி….”என சாணம் கரைத்து இருந்த பாத்திரத்தை மகியிடம் குடுத்தாள் செண்பகம்.

           “அய்….நான் சாணம் தெளிக்க போறேன்…. “என குதித்துக்கொண்டு செண்பகத்திடம் இருந்து பாத்திரத்தை வாங்கி மகி வாசலில் தெளிக்கிறேன் என உதியின் மேல் அள்ளி வீசினாள்.

            “ஹேய்…லூசு… வாசல்ல தெளிடி வெண்ண….என் மேலுல ஏன்டி வீசுற…”உதி.

             “அம்மா தான் சொன்னாங்க… இது கிருமியலாம் சுத்தப்படுத்துமாம்….அதான் உலகின் மிகப்பெரிய கிருமி ய சுத்தம் பண்ண அந்த கிருமி மேல தெளிக்கிறேன்…. ” என நக்கலுடன் கூறினாள் மகி.

         “அடிங்க அறுந்த வாலு… அப்ப இருடி உன் மேல தெளிக்கிறேன்… “என கூறி கொண்டே உதி, மகியின் மேல் சாணத்தை தெளிக்க வர.. மகி அவனுக்கு போக்கு காட்டி சிரிப்புடன் ஓடிக்கொண்டிருந்தாள்.

          உதியனும் மகிழ்விழியும் சிரிப்புடன் ஓடி பிடித்து விளையாடிக்கொண்டிருப்பதை அவ்வழியே சென்ற தீரன் பார்த்து “சை… பொண்ணா இது…. கொஞ்சம் கூட அடக்கமே இல்லாம இப்பிடி ஆடிட்டு திரியுது… இவளலாம் எவன் கட்டிக்கிட்டு மாரடிக்க போறானோ…. “என நினைத்தவாறு முறைத்துக்கொண்டு சென்றான்.

          உதியனும் மகிழ்விழியும் சிரித்து விளையாடும் சத்தம் கேட்டு வெளி வந்த ராசேந்திரன், “என்ன பண்றீங்க ரெண்டு பேரும்…. உடம்பெல்லாம் சாணி… புள்ளைங்களா ரெண்டு பேரும்… போங்க… போய் முதல்ல குளிங்க… “என அதட்டி இருவரையும் குளிக்க அனுப்பினார்.

         ராசேந்திரன் திட்டியதும் முகத்தை தொங்க போட்டுக்கொண்டு சென்ற இருவரையும் கண்ட செண்பகம் ,”அந்த ஆளு அப்பிடித்தான்…நீங்க போய் குளிச்சுட்டு வாங்க… நான் உங்களுக்கு சூடா தோசை சுட்டு தாரேன்…. ” என சமாதானம் படுத்தினார்.

         “அய்…. சோறு…. “என சிறு மழலையென துள்ளிக்கொண்டு மகி ஓட… “இவள…. “என சிரித்தவாறு உதியனும் குளிக்க சென்றான்.

           உதியனும் மகிழ்விழியும் சமத்தாக குளித்து வந்து செண்பகம் சூடாக ஊத்தி குடுக்கும் தோசைகளை இருவரும் கபளீகரம் செய்து கொண்டிருந்தனர். இடைஇடையே இருவரும் செண்பகத்திற்கு ஊட்டி விடவும் மறக்கவில்லை.

          “டேய் தம்பி…. வளைகாப்பு வீட்டுக்கு கிளம்பலயா யாரும்?”என வினவியவாறு ராசேந்திரன் உள்ளே வந்தார்.

         “அய்… அப்பா… நானும்…. நானும்….இதெல்லாம் நான் பாத்ததே இல்ல… “மகி.

         “ஹா ஹா… உன்னைய விட்டுட்டு எப்பிடி உன் ஆத்தாக்காரி கெளம்புவா? நீயும் தான்டா கன்னுக்குட்டி… “ராசேந்திரன்.

          “கன்னுக்குட்டியா இது? காண்டாமிருகக்குட்டி… “என மனதிற்குள் நினைத்துக்கொண்டு வெளியே தோசையை நன்றாக உள்ளே தள்ளினான் உதி.

          விழாவிற்கு புறப்படும் உற்சாகத்தில் ஒரு பட்டு சுடிதாரில் தேவதையென மகி கிளம்பி வர…. அவளை கண்ட செண்பகம் திருஷ்டி கழித்தாள்.

          “சே…. இதுக ரொமான்ஸ் தாங்க முடியலயே….”என உதி முனுமுனுக்க… “போடா… பொறாமை புடிச்ச பொரி உருண்டை… “என உதியனை கிண்டலடித்துக்கொண்டு செண்பகத்துடன் விழா நடக்கும் வீட்டிற்கு புறப்பட்டாள் மகி.

         வளைகாப்பு வீட்டில் வெளியில் கட்டிய வாழைமரங்களுடன் குட்டி குட்டி வானரப்படைகளும் மகியை வரவேற்க… உற்சாகத்துடன் அவர்களுடன் ஐக்கியமானாள் மகி. செண்பகம் வீட்டு பெண்மணிகளுடன் சேர்ந்து கொள்ள, உதி, அவன் வயது தோழர்களுடன் இணைந்து கொண்டான்.

            சிறிது நேரத்தில் விழா ஆரம்பிக்க…. குதூகலத்துடன் மகி யாவற்றையும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

             எட்டு மாத சூழ் கருவை தாங்கிய பெண் தெய்வம் ஊஞ்சலென ஆடி அசைந்து அன்ன நடையுடன் மஞ்சள் குளித்த புன்னகை முகத்துடன் வந்து அமர்ந்தாள். தனது மணி வயிற்றில் ஒரு உயிரை சுமக்கும் பெருமிதத்தில் முகம் பூரித்து இருக்க… அப்பெண்ணிற்கு சந்தனம் குங்குமம் இட்டு வளையல் பூட்டி ஒவ்வொரு பெண்மணியாக ஆசிர்வாதம் செய்ய ஆரம்பித்தனர்.

         மகி, அப்பெண்ணின் மலர்ந்த முகத்தையே ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள். ஒரு பெண்ணின் முகத்தில் அளவு கடந்த ஜொலிப்பை வாழ்வில் முதல் முறையாக கண்டாள் மகி. தன்னை மறந்து அப்பெண்ணை ரசித்து கொண்டிருந்த மகியை ஒரு பெண்ணின் கணீர் குரல் கலைத்தது.

          “இவள எதுக்கு வளையல் போட வர சொன்னது? போ சொல்லுங்க இவள… “என ஒரு பெண்மணி மற்றொரு பெண்ணை பார்த்து கத்திக்கொண்டிருந்தாள்.

         “ஏன்? இவங்க போட்டா என்ன? “என மகி ஒன்றும் புரியாமல் அந்த கணீர் குரல் பெண்மணியை நோக்கி வினவினாள் மகி.

         “ஏய்… நீ யாரு முதல்ல… உன்னைய நான் இதுவரைக்கும் இந்த ஊருல பாத்தது இல்லையே… “கணீர் குரல் பெண்மணி.

         “இந்த அம்மா எதுக்கு நம்மள இந்த மிரட்டு மிரட்டுது? அப்பிடி நாம என்ன தப்பா கேட்டுட்டோம்? “என நினைத்தவாறு செண்பகத்தை விழியால் தேடினாள் மகி.

            மகியின் விழி தேடலில் செண்பகம், உதி, ராசேந்திரன் என யாரும் சிக்காமல் போய்விட….கண்ணீர் தழும்பும் விழிகளுடன் தலை குனிந்து நின்றிருந்த அந்த வளையல் போட வந்த பெண் தான் தெரிந்தாள்.

          “நான் ராசேந்திரன் அப்பாவோட தத்து பொண்ணு… உதியனோட கூட படிக்கிறேன்…. இப்ப எதுக்கு இந்த அக்கா வளையல் போட கூடாது? “என நிமிர்வுடனே வினவினாள் மகி.

          “ஓஓ…. டவுன்க்கார புள்ளையா? அதான் இங்க உள்ள வழக்கம் தெரியல…. அவ ஒரு மலடி…. அவளுக்கு கல்லியாணம் ஆகி நாலு வருஷம் ஆகுது…. இன்னும் அவ வயித்துல ஒரு புளு பூச்சி கூட உண்டாகல… இவ போய் வளையல் போட்டா பொறக்க போற குழந்தை எப்பிடி நல்லவிதமா பொறக்கும்? ” கணீர் குரல் பெண்மணி.

        “ஷப்பா….. விவேக் சொல்லுற மாதிரி… எத்தன பெரியார் வந்தாலும் இவனுங்கள திருத்த முடியாது போலயே…. ஓகே…. நம்மளால முடிஞ்சத சொல்லுவோம்…. கேக்கலனா… கேக்குற மாதிரி சொல்லுவோம்…. “என மனதிற்குள் வாதிட்டு கொண்டு, அழுது கொண்டு நிற்கும் அந்த பெண்ணை நோக்கினாள் மகி.

        “அக்கா…. நீங்க இந்த பொண்ணுக்கு என்ன சொந்தம் க்கா? ” என விழா பெண்ணை கை காட்டி அழும் பெண்ணிடம் கேட்டாள் மகி.

           “நான் இவளோட அக்கா…. “என தலைகுனிவுடன் கூறினாள் அப்பெண்.

           “அத ஏன்க்கா தலை குனிஞ்சுட்டு சொல்லுறீங்க? நல்லா நிமிந்து எல்லாரையும் பாத்து சத்தமாவே சொல்லுங்க… “மகி.

           “ஏய்…இந்தா பொண்ணே…. தள்ளி நில்லு… அடுத்தவங்க வளையல் போடனும்… வீணா நின்னு வெட்டி பேச்சு பேசிட்டு இருக்க… “என மகியை விரட்டினாள் அந்த கணீர் குரல் பெண்மணி.

            “நான் ஏன் தள்ளி நிக்கனும்? இதோ இந்த அக்கா பொண்ணுக்கு வளையல் போட போறாங்க… ஸோ… நீங்க கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா? உங்க அக்கா உங்களுக்கு வளையல் போடுறதுல உங்களுக்கு எதாவது ஆட்சேபணை இருக்கா? “என அந்த கணீர் குரல் பெண்மணியை நோக்கி கூறி விட்டு விழா பெண்ணிடம் வினவினாள் மகி.

             “என் அக்காவ தவிர வேற யாரும் என்னைய மனசார நல்ல எண்ணத்தோட ஆசிர்வாதம் பண்ண மாட்டாங்க…. நீ வளையல் போடுக்கா…. “என நிறைந்த புன்னகையுடன் அப்பெண் தன் கைகளை நீட்டினாள்.

             “அப்புறம் என்ன ப்பா… எல்லாரும் கொஞ்சம் தள்ளி நில்லுங்க…. காத்து வரட்டும்… செமயா வேர்க்குது… “என நக்கலுடன் அந்த கணீர் குரல் பெண்மணியை நோக்கி கூறினாள் மகி.

            அந்த கணீர் குரல் பெண்மணி மகியை முறைத்து கொண்டு நிற்க… விழா பெண்ணின் சகோதரி மகிழ்ச்சியுடன் வளையல் அணிவித்தாள். அதை கண்ட சில பெண்கள் தங்களுள் ரகசியம் பேசிக்கொள்ள…. “ஒரு மலடிய வளையல் போட சொல்லி இருக்க….குழந்தைக்கு என்ன ஆக போகுதோ? “என அந்த கணீர் குரல் பெண்மணி கூறினாள்.

           “இன்னும் நீங்க எந்த காலத்துல இருக்கீங்க ம்மா? ஒரு பொண்ணுக்கு குழந்தை பொறக்கலனா…..அவள இப்பிடி தான் பேர் வச்சு அழைப்பீங்களா? குழந்தை இல்லாததுக்கு இந்த பொண்ணு மட்டும் தான் காரணமா இருக்கனும் னு இல்லையே….இந்த அக்காவோட கணவனும் காரணமா இருக்கலாமே? இந்த அக்காவ மலடி னு சொன்னா….அப்ப இவங்க கணவன மலடன் னு சொல்லி ஒதுக்கி வைப்பீங்களா நீங்க? “மகி.

             “நான் ஏன்டி என் மகன மலடன் னு சொல்லி ஒதுக்கி வைக்கனும்….அவன் ஆம்பள சிங்கம் டி…. “கணீர் குரல் பெண்மணி.

             “ஓஓ…இந்த அக்காவோட மாமியாரா நீங்க? உங்க மகன் சிங்கமா? அப்ப மனுஷன் இல்லையா? அய்யைய….ஏன்க்கா ஒரு காட்டு விலங்கயா கல்லியாணம் பண்ணிக்கிட்டீங்க? “மகி.

         மகி கேள்வி கேட்ட விதத்தில் அக்கா தங்கை இருவருக்கும் சிரிப்பு வர….அதை தங்கள் உதட்டுக்குள் அடக்கி கொண்டனர்.

           “ஏய்….என்னடி நக்கலா? புள்ள பெக்கலனா மலடி னு தான் சொல்லுவோம்… இவ ஒரு பொண்ணே இல்ல…. இவள போய் என் மகனுக்கு கட்டி வச்சேன் பாரு…. என்னைய….. “கணீர் குரல் பெண்மணி.

         “உங்கள? என்ன? செருப்பால அடிக்கனுமா? இந்தாங்க செருப்பு…. நல்ல க்வாலிட்டி தான்…. எவ்ளோ அடிச்சாலும் பிய்யாது… நானே இதுவரைக்கும் நாலஞ்சு பேர அடிச்சு இருக்கேன்…. “மகி.

          “ரொம்ப பேசுற டி நீ…. என்னைய பத்தி உனக்கு தெரியல…. “கணீர் குரல் பெண்மணி.

         “அடச்சை நிறுத்துங்க… என்னைய டி சொல்ல நீங்க யாரு முதல்ல? ஒரு பெண்ணுக்கு குழந்தை இல்லனா மலடி னு சொல்லுவீங்க…. அதுல ஒரு ஆணுக்கும் தான பங்கு இருக்கு… இந்த பொண்ண தாழ்த்தி பேசுற இதே வாய் ஏன் அந்த பையன மலடன் னு சொல்ல மாட்டேன் ங்குது? ஒரு பொண்ணு ஒன்னும் தனியா குழந்தை பெத்துக்கிறது இல்லையே…. அப்புறம் என்ன சொன்னீங்க? இவங்க ஒரு பொண்ணே இல்லையா?இத சொல்லுற நீங்க தான் பொண்ணே இல்ல… ஒரு பொண்ணு எப்ப முழுசா பெண் ஆகுறா தெரியுமா? அவ உடலளவுல தாய்மை அடையிறப்ப இல்ல…. மனசால தாய்மை அடையிறப்ப தான் அவ ஒரு முழுமையான பொண்ணாகுறா…. மனசால தாய்மைங்கிறது, யார் என்னென்னே தெரியாதவங்கள தன்னோட குழந்தையா நினைச்சு மனசு நிறைஞ்ச தாய்மையோட அரவணைக்கிறது…. இப்பிடி அடுத்த பொண்ணோட மனச சில்லு சில்லா நொறுக்குற நீங்களாம் பொண்ணு னு வெளில சொல்லிக்காதீங்க… அது பெண் வர்க்கத்துக்கே அசிங்கம்….”மகி.

          “யாரு… நான் பொண்ணு இல்லையா? இப்பிடி முன்ன பின்ன தெரியாத ஊருல ஒரு ஆம்பள பய கூட ஊரு விட்டு ஊரு வந்து இருக்குற நீலாம் என்ன மாதிரி பொண்ணு? உன்னைய வளத்து இப்பிடி மேய விட்டு இருக்காங்கல்ல உன்னைய பெத்தவங்கள சொல்லனும்… “என அந்த கணீர் குரல் பெண்மணி பேசிக்கொண்டே செல்ல….அந்த பெண்மணியின் கன்னத்தை பதம் பார்த்து இருந்தாள் மகி.

          “என்னைய பத்தியோ….என் அப்பா அம்மா வ பத்தியோ நீ பேச உனக்கு எந்த தகுதியும் இல்லை….”என பெண்புலி என சீறி நின்றாள் மகி.

           அடுத்த நொடி மகியின் கன்னத்தில் ஓங்கி விழுந்தது ஒரு அறை. யாரென ஆத்திரத்துடன் மகி நிமிர்ந்து பார்க்க… ஊர் எல்லையில் நிற்கும் அய்யனார் சிலையென,” என் சித்திய அடிக்க நீ யாருடி? “என கோப மூச்சுடன் அப்போதுதான் அங்கு வந்த தீரன் நின்றிருந்தான்.

         அதிர்ந்து நின்ற அடுத்த நொடி தீரனின் கன்னத்தில் ஓங்கி தன் கைத்தடத்தை பதித்து இருந்தாள் மகி. இப்பொழுது அதிர்ந்து நிற்பது ஊராரின் முறையாயிற்று…..

                               (காதல் தீ பரவும்…..)

                            -செல்லம்மாள் பாரதி
         

    No comments yet.