காதல் தீ -04

Chellammal Bharathi | 20 Nov 2025 | Share

           ஈரக்காற்றில் மிதந்து வரும் மண் வாசனையை நுகர்ந்தபடி புன்னகை மலராய் பேருந்தின் இருக்கையில் வீற்றிருந்தாள் மகிழ்விழி.

           இருள் வானில் பிறை நிலவு எட்டிப் பார்க்க நட்சத்திரங்கள் யாவும் வைர வைடூரியமாய் ஜொலித்திக்கொண்டிருந்தது. அசையும் மரம் யாவற்றுக்கும் புன்னகை ஒற்றை பரிசளித்தபடியே வேடிக்கை பார்த்து வந்து கொண்டிருந்தாள் மகிழ்விழி.

          வீசும் காற்றில் அவள் கன்னத்தில் வீழ்ந்த முடியை அவள் காதோரமாய் ஒதுக்கிவிட்டபடி, “அம்மு… தூங்கலயா நீ? “என பாசமாக அவளின் தலையை தடவியவாறு கேட்டான் உதி.

           “இல்ல உதி… தூக்கம் வரல…நாம வீட்டுக்கு போய் ஹாய்யா தூங்கலாம்….”என இருள் வானில் மின்னும் நிலவாய் முகம் ஜொலிக்க கூறினாள் மகி.

          “சரி… சரி….இன்னும் கொஞ்ச நேரம் தான்…ஊருக்கு போயிறலாம்… “உதியன்.

           “ம்…சரி டா… “என கூறி விட்டு தன் நண்பனின் தோளில் தலை வைத்து சாய்ந்தவாறு வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் மகி.

          “அம்மு….ஏதாவது பிரச்சனையா? என் கிட்ட ஏதாவது மறைக்கிறியாடி? “என அவளின் தலையை கோதிவிட்டபடி கேட்டான் உதியன்.

          “ஏன்டா இப்பிடி கேக்குற? “மகி.

           “இல்ல….வானரம் வால சுருட்டிட்டு அமைதியா உக்காந்துட்டு வருதே.. அதான் கேட்டேன்… “என நமட்டு சிரிப்புடன் கூறினான் உதியன்.

            “அப்ப நான் குரங்கா? நீதான்டா மலைக்குரங்கு….வெள்ளை குரங்கு.. ஜிம்பன்சி… எல்லாம்… “என உதியனின் தோளில் சரமாரியாக அடித்து தள்ளினாள் மகி.

             “ஹே… போதும் டி…வலிக்குது…ஊரு வந்துருச்சு….அடுத்த ஸ்டாப் ல இறங்கனும்…உன் பேக் லாம் ரெடியா வச்சுக்கோ…”என சிரிப்புடன் கூறினான் உதியன்.

          உதியனை ஒரு முறை முறைத்து விட்டு அமைதியாக யாவற்றையும் எடுத்து வைத்து இறங்க ஆயுத்தமானாள் மகிழ்விழி.

         இருவரும் ஒரு வழியாக பேருந்தை விட்டு இறங்கி உதியனின் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். இவர்கள் இருவருக்காகவும் வாசலிலேயே காத்திருந்த உதியனின் தாய் செண்பகம், இருவரையும் கண்டவர் முகம் மலர்ந்தார்.

         “மகி மா… எப்படி இருக்க? இப்ப தான் உன்னைய நான் பாக்குறேன்… ஃபோன்லயே பேசிட்டு இப்பத்தான் உனக்கு வீட்டுக்கு வரனும் னு தோனுச்சா? “என வாசலில் வைத்தே மகிழ்விழியை முத்தம் கொஞ்ச ஆரம்பித்தார் செண்பகம்.

          “யம்மோவ்… நீ பெத்த புள்ள இங்க இருக்கேன்… என்னைய விட்டுட்டு இந்த இம்சைய புடிச்சு கொஞ்சிட்டு இருக்க? தாயாமா நீ? “என மூக்கை சிந்தினான் உதியன்.

         உதியனை ஒரு முறை ஏறிட்டவர், “உள்ள வந்து தொலை… அப்பிடியே எல்லா பேக்கையும் எடுத்துட்டு வா… நீ வாடா ராசாத்தி… “என மகிழ்விழியை தன் கையணைப்பிலேயே உள்ளே கூட்டி சென்றார் செண்பகம்.

         “எல்லாம் காலக்கொடுமை… “என தலையில் அடித்துக் கொண்டு அனைத்தையும் அள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தான் உதியன்.

          “அம்மு… போய் கை கால் அலம்பிட்டு வாடா… உனக்கு புடிச்ச பூரி செஞ்சு இருக்கேன்… “செண்பகம்.

         “அய்… ஜாலி…. லவ் யூ ம்மா… “என செண்பகத்தை கட்டி முத்தம் கொஞ்சி விட்டு குட்டி மானாக துள்ளிக்குதித்து ஓடினாள் மகி.

         அவள் நடந்து செல்லாமல் துள்ளி செல்வதை சிரிப்புடன் பார்த்துக்கொண்டே,”எங்க ம்மா உனக்கு வாழ்க்கைபட்ட அப்பாவி ஜீவன் ராசேந்திரன் ? ஆளயே காணோம்….”என்றான் உதியன்.

          “அவரு அப்பாவி னா… நான் கொடுமைக்காரியா? “என முறைத்துக்கொண்டு தன் மகனின் தோளில் செல்லமாக தட்டினார் செண்பகம்.

          “ஹா ஹா…..அத நான் எப்பிடிம்மா என் வாயால சொல்லுவேன்…சரி சரி….ராத்திரி நேரத்துல எங்க போய்ட்டாரு? “உதியன்.

            “அது நம்ம பக்கத்து வீட்டு வளர்மதிக்கு நாளைக்கி வளைகாப்பு… அங்க ஏதாச்சும் வேலை பாத்துட்டு திரிவாரு…இவ்ளோ நேரம் உங்கள தான் எதிர்பாத்துட்டு இருந்தாரு… நீ சாப்பிட்டு போய் அவங்க வீட்ல தலைய காட்டிட்டு கையோட அப்பாவ கூட்டிட்டு வா….”என்று கூறியபடி உதியனுக்கு சாப்பாடு எடுத்து வைத்தார் செண்பகம்.

            “அய்….சோறு…சோறு…..நானும் வந்துட்டேன்….”என ஆடிக்கொண்டே வந்து உதியனின் அருகில் அமர்ந்து கொண்டாள் மகி.

            “சோறு இல்ல பைத்தியம்… பூரி….”உதியன்.

             “அது எங்களுக்கு தெரியும்… நீ நல்லா கொட்டிக்கடா வெண்ண… “என கூறி கொண்டே தன் தட்டில் இருந்த பூரியை ஒரு வாய் எடுத்து செண்பகத்திற்கு ஊட்டினாள் மகி.

        எதிர்பாராமல் மகி செய்த செயலால் திடுக்கிட்டு கண் கலங்கினார் செண்பகம்.

          “என்னடி? நீ சாப்பிடாம எதுக்கு இப்ப அம்மாக்கு ஊட்டி விடுற? “என வாய்க்குள் பூரியை நன்றாக அமுக்கி கொண்டே கேட்டான் உதியன்.

         கேள்வி கேட்ட தன் நண்பனை முறைத்துக்கொண்டு மறு வாய் எடுத்து மீண்டும் செண்பகத்திற்கு ஊட்டி கொண்டே,”நீங்க சாப்பிட்டீங்களா ம்மா? “எனக்கேட்டாள் மகி.

             மகி, செண்பகத்தை கேட்ட கேள்வியில் உதியனுக்கு பூரி தொண்டைக்குள் சிக்கியது.

         தன் நண்பனுக்கு தண்ணீர் எடுத்து குடுத்துக்கொண்டே, “எப்பவாச்சும் அம்மா கிட்ட சாப்பிட்டியா னு கேட்டு இருக்கியாடா ?”என்றாள் மகி.

          “அம்மா வீட்ல தான இருக்காங்க… அதெல்லாம் சாப்பிட்டு இருப்பாங்க னு…. “உதியன்.

           “சாப்பிட்டு இருப்பாங்க னு கேட்டது இல்ல நீ… ம்ம்? “என உதியனிடம் வினவிக்கொண்டே, செண்பகத்திற்கு அடுத்த வாய் சாப்பாட்டை ஊட்டினாள் மகி.

           “ஸாரி… ஸாரி ம்மா… அதுக்கு ஏன் நீ சாப்பிடாம அம்மாக்கு ஊட்டி விடுற? அம்மா என்ன சின்ன குழந்தையா? உதியன்.

           “ஏன் சின்ன குழந்தைக்கு தான் சாப்பாடு ஊட்டி விடனுமா என்ன? அம்மா எத்தனை தடவை நமக்கு சாப்பாடு ஊட்டி இருப்பாங்க… நாம எப்பவாச்சும் அம்மாக்கு ஊட்டி விட்டு இருப்போமா? அவங்களுக்கும் அடி மனசுல இந்த மாதிரி சின்ன சின்ன ஆசை லாம் இருக்கும்… அம்மாக்கு புள்ள சாப்பாடு ஊட்டி விடுறதுலாம் நமக்கு கிடைச்ச வரம்…. நீ ஆஆ காட்டுமா… உனக்கு நான் ஊட்டி விடுறேன்… “என புன்னகையுடன் செண்பகத்திற்கு ஊட்டி விட்டாள் மகி.

           அடுத்த வாய் ஊட்டி விட மகி நிமிர்கையில் உதியன் தன் தாய்க்கு உணவூட்டிக்கொண்டிருந்தான். அதை ஆனந்த கண்ணீருடன் பேச நா வராமல் உணவை வாங்கி கொண்டார் செண்பகம்.

           தன் தாயின் ஆனந்த கண்ணீரை தன் கரங்களால் துடைத்துவிட்டு தாயை சேயென கருதி உணவூட்ட ஆரம்பித்தான் உதியன். அதை கண்ட மகி, குறுஞ்சிரிப்புடன் பூரியை வெளுத்து வாங்க தொடங்கினாள்.

       மூவரும் உணவுண்டு முடித்ததும் மகியை இறுக்க அணைத்து உச்சி முகர்ந்தார் செண்பகம். அங்கு பேசப்படாத வார்த்தைகள் கூட பேரழகாக மிளிர்ந்தது. அவர்களின் பாசத்தை ஒரு வித பொறாமையுடன் ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே ஒரு டி சர்ட்டை எடுத்து அணிந்து கொண்டு வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு பக்கத்து வீட்டிற்கு புறப்பட்டான் உதியன்.

        உதி புறப்படுவதை கண்ட மகி, “உதி… உதி… நானும் வாரேன் டா… “என்றாள்.

         “அட அரை பைத்தியம்… பக்கத்து வீட்ல நாளைக்கி ஒரு பங்க்ஷன்… அங்க அப்பா சுத்திட்டு இருப்பாரு… அவர அழைச்சுட்டு வர தான் போறேன்… வேற எங்கேயும் போகல…. “உதி.

        “பரவாயில்லை…நானும் வாரேன்… “மகி.

         “சரி கூட்டிட்டு போடா…. பக்கத்துல தான… “என செண்பகம் அனுமதி அளிக்க.. மகிழ்ச்சியுடன் உதியனுடன் புறப்பட்டாள் மகி.

         “ராத்திரி நேரம் டா அம்மு….அவன் கைய புடிச்சுட்டு போடா… “செண்பகம்.

         “சரி ம்மா… “என சிரிப்புடன் கூறி விட்டு உதியனின் தோளில் தொங்கி கொண்டே அவனுடன் நடக்க ஆரம்பித்தாள் மகி.

        “ஹே….வாலு….பேசாம வா…இங்க எல்லாரும் ஒரே மாதிரி யோசிக்க மாட்டாங்க…..”என புன்னகையுடன் தன் தோழியை அதட்ட, அப்பொழுது ஒரு பல்சர் அரை இருட்டில் இருவரையும் நெருங்கி நின்றது.

          “டேய் உதி… எப்படா வந்த? “என்றபடி பல்சரில் இருந்து மகிழ்ச்சியுடன் குரல் குடுத்தான் தீரன்.

          “இப்பத்தான் அண்ணே வந்தேன்… இது என் ப்ரண்ட் ண்ணே… நம்ம ஊர பாக்கனும் னு சொன்னுச்சு….கூட்டிட்டு வந்தேன்….”என தீரனின் தீர்க்க பார்வை மகியை அலசுவதை கண்ட உதி, தீரன் வாய் கேட்காத கேள்விக்கும் பதிலுரைத்தான்.
        
          “ஓஓ… சரி டா… வளர்மதி வீட்டுக்குத்தான? பத்ரமா போய்ட்டு வாங்க… “என கூறி விட்டு தன் பல்சரில் பறந்தான் தீரன்.

          தீரனின் கம்பீர குரலில் ஈர்க்கப்பட்ட மகி, அரை இருட்டில் தீரனின் முகத்தை சரியாக பார்க்க முடியாத எரிச்சலுடன் ,”யார்டா இவன்… பல்சர் பால்பாண்டியாடா? “என்றாள்.

        “எரும…எரும…இவங்க தான் எங்க தீரன் அண்ணா….ரொம்ப நல்லவரு….உன்னைய மாதிரி தான் தப்பு பட்டா யாரு என்ன னு பாக்க மாட்டாரு….வெளுத்துருவாரு…..படிப்பு சம்பந்தமா என்ன உதவி வேணுனாலும் செய்வாரு… ஏன் என்னைய நம்ம காலேஜ் ல சேத்து விட்டதே அண்ணே தான்….”உதியன்.

         “சரி சரி….உங்க பல்சர் பால்பாண்டி புகழ் பாடுனது போதும்.. வா போய் அப்பாவ பாப்போம்…”என இளித்துக்கொண்டு கூறினாள் மகி.

       “இம்சை… இம்சை.. “என தலையில் அடித்துக் கொண்டு மகிழ்விழியை அழைத்துக்கொண்டு விழா நடக்கவிருக்கும் வீட்டிற்கு சென்றான்.

         வீட்டிற்கு வெளியே வாழை மரம்… தோரணம் கட்டி…உறவினர்கள் நிறைந்து வீடே வித்தியாசமாக மகிக்கு தோன்ற….நன்றாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் மகி. வீட்டிற்கு வெளியே சின்ன சின்ன வாண்டுகள் விளையாடுவதை கண்டவள், அவர்களுடன் ஆர்பாட்டத்துடன் ஐக்கியமாகி விட்டாள்.

        அவளை சிரிப்புடன் குழந்தைகளுடன் விளையாட விட்டு விட்டு உள்ளே நுழைந்தான் உதியன். தன் உறவினர்களை கண்டு நலம் விசாரித்து விட்டு தன் தந்தை ராசேந்திரனை அழைத்துக்கொண்டு மகியை தேடினான் உதியன். அப்பொழுது உதியனின் கண்ணில் கையில் கட்டுடன் ஒருவன் தெரிய, “ஏய் பொன்ராசு….கைக்கு என்னடா ஆச்சு? “என விசாரித்தான்.

        அப்பொழுது குழந்தைகளுடன் கண்ணாம்மூச்சி விளையாடி கொண்டு வந்த மகி, அந்த பொன்ராசுவின் மீது மோத….இருவரும் ஒன்றாக தரையில் விழுந்தனர்.

         “ஏய் எரும… “என பதறி உதியன் ஓடி சென்று மகியையும் பொன்ராசுவையும் தூக்கி விட்டான். உதியனின் பின்னே வந்த ராசேந்திரனும் ,”பாத்து விளையாட கூடாதா? “என்றார்.

        தன் கண் கட்டை அவிழ்த்த மகி, எதிரே தான் மோதிய கை ஒடிந்த பொன்ராசுவை கண்டவள், “ஐயோ….ஸாரி ண்ணா…..தெரியாம மோதிட்டேன்….வலிக்குதா அண்ணா? ” என பதறினாள்.

          “ஒன்னுல்ல மா… விடு விடு… “என மெதுவாக எழுந்தான் பொன்ராசு.

          “உன் கைக்கு என்ன டா ஆச்சு ?”என பொன்ராசுவை தூக்கி விட்டுக்கொண்டே வினவினான் உதியன்.

          “அதுவா மச்சான்… நம்ம நிலத்துல யூக்கலிப்டஸ் மரத்த நட்டேன்… அதுக்கு தீரன் அண்ணா கைய உடச்சுட்டாரு… “என பெருமிதத்துடன் கூறினான் பொன்ராசு.

          “ஒருத்தன் உங்க கைய உடைச்சு விட்டு இருக்கான்… நீங்க என்னமோ அவார்ட் வாங்குனது மாதிரி பெருமையா சொல்லுறீங்க? ” மகி.

          “ஹா ஹா….அது அப்பிடி இல்லமா…..எங்க அண்ணன் ரொம்ப நல்லவரு….நான் பண்ணுனது தப்பு தான? அதான் எனக்கு தண்டனை குடுத்து இருக்காரு….”என அவனும் தீரனின் புகழ் பாட ஆரம்பிக்க, “அய்யோ சாமி….ஆள விடுங்க….உங்க அண்ணா பெருமைய நீங்களே வச்சுக்கங்க….வா உதி வீட்டுக்கு போலாம்….”என்றாள் மகி.

           “ஹா ஹா…..காலையில வந்து உன் கிட்ட பேசுறேன் மச்சான்….”என பொன்ராசுவிடம் விடைபெற்று கொண்டு மகிழ்விழியை அழைத்துக்கொண்டு புறப்பட்டான் உதியன்.

            “தம்பி, நீங்க மெதுவா வாங்க…நான் சைக்கிள்ல வர்ரேன்…”என இருவரிடம் விடைபெற்றார் ராசேந்திரன்.

            அவர் சென்றதும் படபடவென பொரிந்தாள் மகி, “உங்க அண்ண என்ன அவ்ளோ பெரிய ஆளா என்ன? யூக்கலிப்டஸ் மரத்த நிலத்துல நடுறது தப்புத்தான்….அதுக்காக ஒருத்தன் கைய உடைக்க உங்க நொன்னனுக்கு என்ன உரிமை இருக்கு? “என்றாள்.

                   “இங்க பாரு மகி… தீரன் அண்ணாவ பொறுத்த வரை …பொண்ணும் மண்ணும் ஒன்னு… பொண்ண ஒருத்தன் மானபங்க படுத்துனான்னா …என்ன சொல்லுவோம்? தண்டனைகள் கடுமையானா தான் இது போல எவனும் பண்ண மாட்டான் னு சொல்லுவோம் ல… அதே தான் மண்ணுக்கும்… நமக்கு சோறு போடுற மண்ண ஒருத்தன் மானபங்க படுத்துனான்னா அவனுக்கும் அதே தண்டனை தான்… எங்கள பொறுத்த வரை பொண்ணும் மண்ணும் ஒன்னு தான்… அதுனால தீரன் அண்ணா செஞ்சதுல எந்த தப்பும் இல்ல னு நான் சொல்லுவேன்… “உதியன்.

           “ரொம்பத்தான் உங்க அண்ணன புகழுற…. “என கழுத்தை நொடித்துக்கொண்டாள் மகி.

           “பைத்தியம்… அண்ணாவ நேருல பாக்குறப்ப நீயே அவர பத்தி புரிஞ்சுப்ப… “என பாசமா மகியின் தலையை வருடி கொண்டு அவள் கரம் பற்றி வீட்டை நோக்கி அழைத்து சென்றான் உதியன்.

             “நேருல பாக்குறப்ப இருக்கு உங்க நொன்னனுக்கு… “என மனதினுள் தீரனை வசைபாடி கொண்டு உதியனுடன் வீடு நோக்கி நடந்தாள்.

             உதியன், மகியின் கரம் பற்றி அழைத்து செல்வதை தூரத்தில் இருந்து நிலவொளியில் கண்ட தீரன் இனம்புரியா கோபம் மகியின் மீது படர… அவளை முறைத்துக்கொண்டே அவளின் எதிர்புறம் தன் பல்சரில் சென்றான்.

           நாளையே இருவரும் முட்டிக்கொண்டு நிற்க போவதை நினைத்த விதி இருவரையும் பார்த்து கை கொட்டி சிரித்தது.

                                (காதல் தீ பரவும்…)

                          -செல்லம்மாள்பாரதி

    No comments yet.