காதல் தீ -03

Chellammal Bharathi | 20 Nov 2025 | Share

மாமன்… மச்சான்… friendship-eh
மனச லேசா மாத்துமடா…
மாமன் …மச்சான்… friendship-eh
மனச லேசா மாத்துமடா….
மாமன் …மச்சான்… friendship-eh
மலைய தாண்டி உயர்ந்ததடா…

        என்ற பாடல் பெண்குரலில் காதில் ஒலிக்க, தன் ஹாஸ்டல் ரூமில் கனவில் நடிகை கீர்த்தி ஷெட்டியுடன் டூயட் பாடி கொண்டிருந்த உதியன், “டேய்… அந்த மொக்க ரேடியோவ ஆஃப் பண்ணுங்கடா. என் கீர்த்து செல்லம் பயப்படுறா.” என முனங்கி கொண்டே திரும்பி படுத்து தன் கனவில் மூழ்கினான் உதியன்.

      மீண்டும், மாமன்… மச்சான் friendship eh மனச லேசா மாத்துமடா…. என்ற பாடல் வரிகள் காதில் ஒலிக்க… “என்னடா இது… இது நம்ம  லூசு மகி வாய்ஸ் மாதிரியே இருக்கே… கனவுல கூட டூயட் பாட விட மாட்டேன் ங்குறா… என் கனவுல கூட வந்து தொல்லை பண்றா… வயித்தெறிச்சல் புடிச்சவ… ” என நன்றாகவே முனுமுனுத்துக்கொண்டு தன் உறக்கத்தை தொடர்ந்தான் உதியன்.

          அவன் மீண்டும் உறங்க ஆரம்பித்ததும் உதியனின் பின்புறத்தில் எட்டி உதைக்கப்பட்டு பெட்டில் இருந்து ,”அய்யையோ… “என்ற கூக்குரலோடு உருண்டு விழுந்தான் உதியன்.

            “எவன்டா அது என்னைய உதைச்சவன்? “என்ற கோபக்குரலோடு எழுந்து நின்ற உதியன், எதிரே உள்ள நபரை கண்டவன் அதிர்ச்சியில் ஆந்தையென விழித்தான்.

         ஊதா நிற அனார்கலி சுடிதாரில் ,விழிகளுக்கு மையிட்டு… நெற்றியில் சிறிய பொட்டிட்டு… காதில் கம்மல் ஊஞ்சலாட…..ஊஞ்சலாடும் கம்மலில் ஊஞ்சலாடும் கூந்தல் கற்றையை ஒதுக்குறேன் பேர்வழியில் கூந்தலை மேலும் ஊஞ்சலாட்டி கொண்டு, மீண்டும்… மாமன்.. மச்சான் friendship eh மனச லேசா மாத்துமடா… என்று பாடிக்கொண்டு உதியனின் ஹாஸ்டல் ரூமில் அமர்ந்திருந்தாள் மகிழ்விழி.

           பாய்ஸ் ஹாஸ்டலில்….அதுவும் தனது ரூமில் மகியை கண்டவன், “பைத்தியம்…இங்க என்னடி பண்ற? “என்று பதட்டத்துடன் வினவினான் உதியன்.

         “நீதான சொன்ன… இன்னக்கி உன் ஊருக்கு போலாம் னு… அதான் கிளம்பி வந்துட்டேன்… “என சாதாரணமாக உரைத்துக்கொண்டு அறையை அலச ஆரம்பித்தாள் மகி.

          “அட அரமெண்டல்… ஒரு ஃபோன் பண்ணி இருக்க வேண்டியது தான? ” என மொழிந்து கொண்டு புறப்பட்டாள் அவசர அவசரமாக அறையை ஒழுங்கு படுத்தினான் உதியன்.

            “நீ ஏன் இப்ப ஒதுங்க வைக்கிற….அதெல்லாம் நாங்க எல்லாம் பாத்துட்டோம்… யூ ஆர் டூ லேட்… ஆங்…என்ன சொன்ன? ஒரு ஃபோனா? கொய்யால… உன் ஃபோன எடுத்து பாருடா விளக்கெண்ண… “மகி.

            “எதேய்… என்ன…என்னத்தடி பாத்த? ஒரு ஆம்பள புள்ளை ரூம்முக்கு வந்து இருக்கோம் ங்கிற கூச்சம் கொஞ்சமாச்சும் இருக்கா? சரியான வெட்கங்கெட்டவ… “என கூறி கொண்டே ,உதியன் தனது  ஃபோனை எடுத்து பார்க்க, அதில் நூற்றுக்கும் மேற்பட்ட மிஸ்டு கால் அவளிடம் இருந்து வந்திருந்தது. அதை பார்த்தவன்….”ஈஈஈஈஈஈஈஈஈ….ஜாரீ…..நம்ம கீர்த்து செல்லம் கூட ரொமான்ஸ் பண்ணுனதுல ரிங் டோன் காதுல விழலடி… “என அசடு வழிந்தான் உதியன்.

          “சரி… பொழச்சு போ… சீக்கிரம் கிளம்பி வா….எவ்ளோ நேரம் வெயிட் பண்றது? “மகி.

          “நீ எப்படி டி உள்ள வந்த? வார்டன் பாத்துட்டா பிரச்சினை ஆகிரும்…முதல்ல நீ கிளம்பு… நான் குளிச்சுட்டு  வர்றேன் …”உதியன்.

          “அட பயந்து சாகாதடா….நான் அந்த மனுஷன் கிட்ட தான் உன் ரூமுக்கு வழியே கேட்டேன்… “என அசால்ட்டாக உதியனின் தலையில் வெடிகுண்டை தூக்கி போட்டாள் மகி.

          “என்னதேய்…..அய்யோ… அய்யோ… போச்சு… போச்சு… இப்பிடியாடி மானத்த வாங்குறது? போடி வெளிய முதல்ல….இம்சை… இம்சை…..ஃபோன் எடுக்கலன்னதும் உடனே ஹாஸ்டலுக்கு வந்துருவியா? பிசாசே….பாய்ஸ் ஹாஸ்டலுக்குள்ள தைரியமா வந்து உக்காந்து பேசிட்டு இருக்க… வெளியே போடி அயோக்கிய ராஸ்க்கல்… “என மகியை புடிச்சு வெளியே தள்ளி விட்டு சிரித்துக்கொண்டு குளிக்க பாத்ரூமில் நுழைந்தான்.

           “வர வர ரொம்ப தான்டா திட்டுற….சீக்கிரமா கிளம்பி வாடா… ” என கத்தி கொண்டே வெளியே வந்தாள். பாய்ஸ் ஹாஸ்டலில் ஒரு பெண்ணை காணவும் அனைவரும் மகியை அதிசயமாகவும் பயத்துடனும் பார்க்க, அதை எதையும் கண்டுகொள்ளாமல்… “நான் அல்லிராணி பொண்ணு… என் மேல வைக்காத கண்ணு… பொண்ணு கேட்டு வராத மாப்பு… இங்க காத்து கிடக்கு ஆப்பு….” என முயல்குட்டியாய் துள்ளி துள்ளி பாட்டு பாடி கொண்டு ஹாஸ்டலை விட்டு வெளியே வந்து உதியனுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள் மகி.

        குளியலறைக்குள் நுழைந்தவனின் நினைவு, மகிழ்விழியை முதன்முதலாக பார்த்த நாளை நோக்கி சென்றது .

          பள்ளி படிப்பை முடித்து விட்டு முதன் முதலாக கல்லூரி வாழ்க்கை எனும் பேருலகத்தில் காலடி எடுத்து வைத்த நாள். அன்று அனைத்து கல்லூரியிலும் நிகழ்வது போலவே சீனியர்கள் அன்பாக தங்களது புத்தம் புதிய ஜூனியர்களை வரவேற்று கொண்டிருந்தனர். அதில் விதி விலக்காக ஒரு சிறிய அணி மட்டும் ஜூனியர்களின் மீது தங்களது ஆளுமையை காண்பித்துக்கொண்டிருந்தனர்.

         அந்த அணியிடம் உதியன் மாட்டிக்கொள்ள… அவனை விருச்சாசனம் செய்ய ஆணையிட்டார்கள். ஒரு காலை தூக்கி மற்றொரு காலின் முட்டியில் வைத்து கரங்களை மேல் நோக்கி தூக்கி இணைத்துக்கொண்டு நிற்க வைத்து விட்டார்கள். ஆடாமல் அசையாமல் கால் வலிக்க….கண்ணீர் இதோ …என்ற நிலையில் உதியன் நின்று கொண்டிருக்க….மஞ்சள் வண்ண தாவணி அணிந்து, நெற்றியில் திருநீறு மின்ன… முல்லை சரம் வைத்து…..அமைதியான மகாலட்சுமி என வருகை புரிந்த மகிழ்விழி அவ்வணியின் கண்ணில் சிக்கினாள்.

        அவளை கண்டவர்கள் அவளையும் விருச்சாசனம் செய்ய ஆணையிட…..”ஹைய்யோ… சீனியர்ஸ்… எனக்கு அப்பிடினா என்னன்னே தெரியாதே… “என முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு கூறினாள் மகி.

            அவளின் அந்த அப்பாவித்தனத்தில் மயங்கிய சீனியர்கள், உதியனை கை காட்டி….”இதோ…இவன மாதிரி நிக்கனும்…அதான் விருச்சாசனம்…”எனக்கூற, “அய்ய….இவன் எப்பிடி நிக்கிறானே தெரியல….நீங்க ரொம்ப ஹேண்டசமா…மேன்லியா இருக்கீங்க….நீங்க ஒரு டெமோ காட்டுனா….நான் சமத்தா நிப்பேன்… “என அவ்வணியின் தலைவனாக தெரியும் ஒருவனை பார்த்துக் கூறினாள் மகி.

            உடனே அவனுக்கு உச்சி குளிர… அவன் உதியனை பார்த்து, “டேய் தம்பி….நீ அப்பிடிக்கா கொஞ்சம் தள்ளி நில்லுடா… இப்ப பாரு… “என கூறி விட்டு அவன் விருச்சாசனம் செய்ய…அதை பார்த்த மகி, “வாவ்… செம அழகா செய்றீங்க… இருங்க.. நான் ஒரே ஒரு ஃபோட்டோ எடுத்துக்கிறேன்….”என கூறி விட்டு அவனை வித விதமாக ஃபோட்டோ எடுப்பது போல் பாவ்லா காட்டினாள் மகி. மகியின் செயல்களை வியப்பு கலந்த அமைதியுடன் பார்த்தபடி நின்றிருந்தான் உதியன்.

           நேரம் ஆக ஆக அவனிற்கு கால் வலி எடுக்க…..மகி, ஃபோட்டோ எடுத்து முடிந்தபாடில்லை. அந்த சீனியரும் ஜீனியர் பெண்ணின் முன்னே தன் மானம் போய் விடக்கூடாதே என எண்ணி, பல்லை கடித்துக்கொண்டு நின்றிருந்தான். அதை கண்ட உதியனுக்கு சிரிப்பு பொங்கினாலும் அமைதியாக நின்று கொண்டான்.

          அக்கூட்டத்தில் இருந்த மற்றொருவன், “என்ன ?நாங்க உங்கள செய்ய சொன்னா…நீ சீனியரையே செய்ய வைக்கிறியா? “என மிரட்டினான்.

           “அது உனக்கு இப்பத்தான் தெரியுதா? “என சாதாரணமாக கேட்டாள் மகி.

            “ஏய்… மரியாதை…மரியாதை… நாங்க சீனியர்ஸ்… ” சீனியர்.

           “அடச்சீ…அடங்கு…..சீனியர்னா என்ன தலையில பெரிய கொம்பா? என்ன எங்கள விட ஒரு ரெண்டு வருஷம் முன்னாடி பொறந்து இருப்பீங்க….அதான? மரியாதைலாம் தானா வரனும்…இப்பிடி கேட்டு கெஞ்சி வாங்க கூடாது….நான் படிக்கிற இந்த மூணு வருஷத்துல நீங்க யாரும் என் கண்ணுல படக்கூடாது… அப்பிடி என் கண்ணுல சிக்குனீங்க…மவனுகளே….நீங்க சிதறு தேங்காய் தான்டா….”என விழிகளில் ஆக்ரோஷம் மின்ன உரைத்து விட்டு உதியனின் கைபிடித்து அழைத்து சென்றாள் மகி.

          அவள் விழிகளில் தெரிந்த தீவிரத்தை கண்ட அந்த சீனியர்கள் அதற்கு பிறகு மகியின் கண்களில் படவே இல்லை. அதற்கு பிறகு எந்த ஜூனியரையும் கிண்டல் செய்யவில்லை அவர்கள். அன்று தன் கைபிடித்தவள் இன்றுவரை விடவே இல்லை. நண்பன் என உதியனிடம் ஒட்டிக்கொண்டாள் மகி.

           உதியனும் அவளின் அடாவடித்தனம் பிடித்து அவளுடன் தோழமையை பகிர்ந்து கொண்டான்.

            மகியின் நினைவில் முழ்கியவன், அவள் காத்திருப்பதை உணர்ந்து, “இன்னும் என்னென்ன செய்ய இருக்காளோ? “என எண்ணிக்கொண்டு விரைவாக தயாராகி மகிழ்விழி யிடம் வந்தான்.

          இருவரும் ஒரு வழியாக பஸ் ஏறி, “எனக்கு ஜன்னல் ஓரம் தான்…”என அடம்பிடித்து அமர்ந்து ,

இருபது வயசு தான்
இதயமே சிறகு தான்…
இமையமும் துச்சமாய் தோனுதே…
மருபடி ஒருமுறை… உலகிலே பிறக்கையில்…
இவர்களும் வேணுமே கடவுளே…
பெற்ற தாயை போல தான்
உற்று காக்கும் தோழன் காக காப்பேனே…
மாமன் மச்சான் friendship-eh
மனச லேசா மாத்துமடா….

          என்று கைகளில் தாளமிட்டு கொண்டே மகி பாட ஆரம்பித்தாள். உதியன் அதை புன்னகையோடு கேட்டுக்கொண்டு வந்தான். இருவரும் புன்னகையுடன் சிங்கபுணரியை நோக்கி பயணித்தார்கள்…

          💖💖💖💖💖💖💖💖💖💖

       கார்மேகங்கள் சூழ்ந்திருக்க …மாலை நேர தென்றல் ,தாலாட்டு பாடி கொண்டிருந்தது .குயில்கள் கூவ.. கார்மேகத்தை கண்ட மயில், வயல்வெளியில் தோகை விரித்து நடனமாடியது சிங்கம்புணரி கிராமத்தில். அவ்வழகிய காட்சியில் லயித்திருந்த தீரன், தன் தந்தை சிதம்பரத்தின், “தீரா… “என்ற குரல் கேட்டு மீண்டெழுந்தான்.

         “என்னப்பா? ” தீரன்.

         “காலையில அந்த சின்ராசு மவன் கைய உடைச்சு விட்டியா? ” சிதம்பரம்.

          “ஆமாப்பா…. அவன் சோறு போடுற பூமியில நஞ்ச விதைச்சான் ப்பா… அதான் விதைச்ச அவன் கைய உடைச்சு விட்டேன்… “என குரலில் உரமேற கூறினான் தீரன்.

          “உன்னைய என்ன தான்டா பண்றது?எப்பத்தான் இந்த முசுட்டுத்தனத்த விடப்போறியோ? சீக்கிரமே உனக்கு ஒரு கால்கட்ட போட்டுறனும்….அப்ப தான் நீ சரி வருவ… “சிதம்பரம்.

          “அதெல்லாம் காலையிலயே அம்மா கிட்ட பொண்ணு பாக்க சொல்லிட்டேன்… அம்மா மாதிரி அமைதியான பொண்ணா பாக்க சொல்லி இருக்கேன்… ” தீரன்.

          “பாப்போம் டா… பாப்போம்… வரப்போற மருமக… அமைதியா வர்றாளா… இல்ல… சூறாவளியா வர்றாளா னு…. “என கூறி கொண்டே சிதம்பரம் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

           “அதெல்லாம் என் அம்மா எனக்கு அமைதியான பொண்ணா தான் பாக்கும்… நீங்க சொல்லுற மாதிரி சூறாவளியா அவ வந்தா… நான் புயலா மாறிருவேன்… “கத்திக்கொண்டு நின்றிருந்தான் தீரன்.

                             (காதல் தீ பரவும்…)

                       -செல்லம்மாள்பாரதி

    No comments yet.