காதல் தீ -02

Chellammal Bharathi | 19 Nov 2025 | Share

        எழில்கள் கொஞ்சும் அழகிய கிராமம் சிங்கம்புணரி. விவசாயத்திற்கு முதலிடம் அளிக்கும் ஊர். அங்கு கல்லூரியில் காலடி எடுத்து வைத்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். எங்கு நோக்கினும் குயில்களும் கிளிகளும் மயில்களும் சிறகடித்து பறந்துகொண்டிருக்கும். கண்ணிற்கு குளிர்ச்சியாக பசுமை கொழிக்கும் கிராமம் சிங்கம்புணரி.

            வெளியில் தென்றல் மலர் வாசத்தை அள்ளி வீச….தன் வயலின் மோட்டார் அறையில் ஒருவன் புயலாக மற்றொருவனை சுழன்றடித்துக்கொண்டிருந்தான்.

       “ஏன்டா… சோத்துக்கு செத்த பயலே… எவ்ளோ தைரியம் இருந்தா விவசாயம் பண்ற நிலத்துல அந்த விஷத்த விதைச்சு இருப்ப? உனக்கு விவசாயம் பண்ண புடிக்கலனா விவசாயம் பண்றவனுக்கு நிலத்த குத்தகைக்கு குடுக்க வேண்டியது தானடா? அதுக்காக சோறு போடுற பூமியில நஞ்ச நடுவியாடா நாறப்பயலே…. “என அவன் மற்றொருவனின் கையை உடைத்தான்.

         “ஆஆஆஆ….. அண்ணே… அண்ணே… இனி யூக்கலிப்டஸ் மரத்த நிலத்துல நட மாட்டேன் ன்ணே…. என்னைய விட்டுரு ன்ணே… இது என் ஆத்தா மகமாயி மேல சத்தியமுண்ணே…. ” என மற்றொருவன் அலற…. “அது… அந்த பயம் இருக்கனும்… இந்த ஊருக்குள்ள யூக்கலிப்டஸ் மரம் வந்துச்சு… அது எவனா இருந்தாலும் தூக்கி போட்டு மிதிப்பேன்…. ஒழுங்கா பொழச்சு போ… ” என்று அவனை விரட்டி விட்டு தன் மீசையை முறுக்கி விட்டு வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு தனது பல்சரில் வீட்டை நோக்கி பயணித்தான்.

            கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் என்ற பழமொழிக்கு உதாரணம் இவன். இவன் தான் அனழேந்தி தீரன். சிங்கம்புணரி ஊரின் இளஞ்சிங்கம். வேளாண்மையில் முதுகலை பட்டம் பெற்று விட்டு வயலில் இறங்கி நாற்று நடுபவன். விவசாயம் தான் இவன் உயிர்மூச்சு. அதற்கு பங்கம் விளைவிக்கும் யாவருக்கும் எமன் இவன். சிதம்பரம் -கருப்பாயி தம்பதியரின் தவப்புதல்வன். சிதம்பரம் அவ்வூரில் செல்வாக்கு பெற்றவர். அந்த ஊரில் படிப்பு சம்பந்தமான அனைத்து சந்தேகங்களையும் ஊரின் இளைஞர்களுக்கு தீர்த்து வைப்பவன் தீரன் ஒருவனே. கருப்பு தான் பேரழகு என்பதற்கு நடமாடும் உதாரணமாக திகழ்பவன் தீரன்.

           தனது இல்லத்திற்கு வந்து வெளியில் கால் கைகளை சுத்தம் செய்து கொண்டிருக்கும் தீரனை பார்த்து விட்டு முகம் கொள்ளா புன்னகையுடன் அவனிற்கு காலை உணவை எடுத்து வைத்தார் அவனின் தாய் கருப்பாயி.

         கருப்பாயி மிகவும் அமைதியான, ஒரு எறும்பிற்கு கூட தீங்கு இழைக்காத குணம் உடையவர். சிறந்த குணவதி. அடங்காமல் திமிரும் இளஞ்சிங்கமான தீரன் அடங்கி பூனையாக உருமாறுவது இவரிடம் மட்டுமே.

        தன் தாய் எடுத்து வைத்த உணவை புன்னகையுடன் சாப்பிட்டு கொண்டே, “ம்மா… வெண்டைக்காய் பொறியல் செம ம்மா…. இன்னும் கொஞ்சம் வை… “என்று தன் தாயின் சமையலை பாராட்டி கொண்டே உணவு உண்டான்.

          தீரன் எப்பொழுதும் உணவு உண்கையில் ஏதாவது ஒரு பதார்த்தத்தை பாராட்டி விட்டு தான் சாப்பிடுவான். உணவில் குறை இருந்தாலும் முகம் சுளிக்காமல் சாப்பிட்டு தாயை கொஞ்சி விட்டே செல்வான்.

         ஒவ்வொரு பெண்ணும் விரும்புவதும் அது தானே… தான் சமைத்த சமையலை சாப்பிட்டு எவரேனும் பாராட்ட மாட்டார்களா? என்ற ஏக்கம் ஒவ்வொரு பெண்ணிற்கும் இருக்கும். அதை சரியாக புரிந்து கொண்டவன் தீரன்.

          “யய்யா… தீரா… கல்லியாணத்துக்கு பொண்ணு பாக்கவாய்யா? உன் கல்லியாணத்த பாக்கனும்னு ரொம்ப ஆசையா இருக்குய்யா… ” என மெல்ல கூறினார் கருப்பாயி.

         “என்ன ம்மா நீயி? நான் தான் முன்னாடியே சொல்லிட்டேனே…. உன்னைய மாதிரி அன்பான…அமைதியான… குணமான… பொண்ணா பாரு…. அப்பிடிப்பட்ட பொண்ண பாத்து என் முன்னாடி நிறுத்து… சந்தோஷமா தாலி கட்டுறேன்…. இந்த அடாவடி பண்ற பொண்ணலாம் பாத்துறாத ம்மா….. எனக்கு உன்னைய மாதிரி அமைதியான பொண்ணு தான் வேணும்… ” என்றபடி சாப்பிட்டு எழுந்து கை கழுவினான் தீரன்.

          “சரிய்யா… சரிய்யா…. இன்னும் ஆறே மாசத்துல உனக்கு கல்லியாணம் தான்… ” என மகிழ்ச்சி பொங்க கூறினார் கருப்பாயி.

          தனது தாயின் மகிழ்ச்சியை கண்டு திருப்தியுடன் பல்சரில் வயலுக்கு புறப்பட்டான் தீரன்.

            தனது வருங்கால துணைவியை பற்றி தெரிந்தால் என்ன செய்வான் தீரன்? 🤔

              💖💖💖💖💖💖💖💖💖

         பேருந்தில் வந்தவன் தன் வருங்கால துணைவனை பாவம் என்று கூறியதால் விளைந்த கோபத்துடன் முகத்தை உர்ரென வைத்துக்கொண்டு விரைந்த நடையுடன் கல்லூரிக்குள் நுழைந்தாள் மகிழ்விழி.

         அங்கு ஒரு மரத்தடியில் தன் நண்பன் உதியன் புன்னகையுடன் அமர்ந்து இருப்பதை பார்த்தவள், கோபமாகவே அவனிடம் சென்று அமர்ந்தாள் மகிழ்விழி.

         அவளின் அந்த குழந்தைத்தனமான கோப முகத்தை கண்ட உதியன், “மகிழ்… உனக்கு ஒரு ஜோடி செருப்பு போதும் ல? பிஞ்சுருச்சா? இல்லாயா? ” என்றான்.

          ” ம்ம்… இப்பத்தான் டா பிய்ய போகுது… என்னடா நக்கலா? “என மகிழ் உதியனை முறைத்தாள்.

         “ஹா ஹா ஹா… அப்பிடி இல்ல லூசு… கோபமா இருக்குறப்ப… நீ செம காமெடியா இருக்க…. அதான் லைட்டா சீண்டி பாத்தேன்… ” என எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றினான் உதியன்.

           “கொப்பமவனே…. என்ன… என்னைய பாத்தா காமெடியா இருக்கா? ” என எழுந்து நின்று அவனை அனல் மூச்சுடன் முறைத்து தள்ளினாள் மகிழ்.

          “நான் என் அப்பனுக்கு மகன்தான்டி பைத்தியமே….. இப்ப எதுக்கு இந்த குதி குதிக்கிற? என்ன ஆச்சு? ” உதியன்.

           “அது வந்து டா உதி…. ” என ஆரம்பித்து பேருந்தில் நடந்ததை விரிவாக கூறினாள் மகிழ்.

          அதை கேட்ட உதியன் விழுந்து விழுந்து சிரித்தான். “ஏன்டி பைத்தியமே… இதுக்குலாமா போய் மூஞ்ச தூக்கி வச்சுட்டு இருக்க? அவன அங்கயே செருப்ப கழட்டி நாலு அப்பு அப்பி இருக்க வேண்டியது தானே? நான் தான் செருப்பு வாங்கி தாரேன் னு சொன்னேன் ல…. “என்றான்.

             “அடப் போடா…. ஏன்டா எனக்கு ஒரு விஷயம் புரியல…. இப்பிடி பஸ்ல போற வர்ற பொண்ண இடிக்கிறதுல அப்பிடி என்ன சந்தோஷம் வந்துற போகுது? சை… எரிச்சலா வருது…. இவனுங்கலலாம் நடு ரோட்டுல நிக்க வச்சு சுடனும்…. பொறுக்கிங்க…. இவன மாதிரி ஆளுங்கனால தான் பொண்ணுங்க வெளில வர்ற பயப்படுறாங்க…. ஸ்கூல் படிக்கிற பொண்ணுங்கனா இவனுங்களுக்கு இன்னும் இளக்காரமா போச்சு….. தெருப்பொறுக்கி நாயிங்க…. இப்பலாம் குழந்தைய கூட விட்டு வைக்கிறது இல்லடா…. இன்னும் ஒரு சில இடத்துல பஸ் கண்டக்டரே டிக்கெட் குடுக்குற மாதிரி கண்ட இடத்துல தடவிக்கும் இடிச்சுக்கும் திரியுறானுங்க…” என பொங்கினாள் மகி.

          “ஏய் என்னடி? இப்பிடி பொங்குற? கொஞ்சம் அமைதியா தான் இரேன்… ” உதியன்.

          “என்னால அப்பிடி இருக்க முடியல டா உதி…. அப்பிடியே உடம்பெல்லாம் எரியுது….. இதுக்கு ஏதாச்சும் பண்ணனும் டா… ” எனக் கூறியபடி குறுக்கும் நெடுக்குமாய் நடந்தாள் மகி.

          “நீ என்னடி பண்ண முடியும்? இது ஒரு ஆளு நினைச்சு நடத்துற விசயம் இல்லை…. இது பொண்ணுங்க எல்லாரும் நினைச்சா தான் நடக்கும்… அவனுங்கள மனசுக்குள்ள திட்டுறதோட மட்டும் நிக்காம அவனுங்கள எதித்து ஒரு அறையாச்சும் அறையனும்…. அப்ப தான் இவனுங்களுக்கு புத்தி வரும்… பயமும் வரும்… ” உதியன்.

          “அதே தான்டா உதி…. என் பக்கத்துல உக்காந்து இருந்த அக்காவே சொல்லுறாங்க டா… இடிச்சா அமைதியா நம்ம வேலைய நாம பாக்கனுமாம் டா…. அதான் அவங்களுக்கும் விட்டேன் ஒரு பேச்சு… அதுக்கு அப்புறம் அவங்க வாயே தொறக்கலயே… ” என சிரித்தாள் மகி.

         “ஹா ஹா ஹா ஹா ஹா…. முடியலடி… நீ தனி டிசைன் டி மகி…. பாவம் அந்த புண்ணியவான்…. ” உதியன்.

          “யாருடா அந்த புண்ணியவான்? ” மகி.

          “வேற யாரு உன்னைய கட்டிக்கப்போறவன் தான்…. பாவம் அவன்…. அந்த கடவுள் தான் உன் கிட்ட இருந்து அவன காப்பாத்தனும்… ” என சிரித்தான் உதியன்.

          “ப்ச்…. அது எப்படி டா எல்லாரும் ஒரே மாதிரி….எனக்கு வரப் போறவன் ரொம்ப பாவம் னு சொல்லுறாங்க… நான் என்ன அவ்ளோ மோசமான பொண்ணா? ” மகிழ்.

         “அச்சீ…அதெல்லாம் ஒன்னுமில்லை லூசு…. என் ப்ரண்ட் தங்கக்கட்டி …நான் சொல்லுறேன் பாரு… நீதான் பாவம்…. உன்னைய விட பத்து மடங்கு அடாவடியா உள்ளவன் தான் உனக்கு வரப்போறான்… அவன் கிட்ட சிக்கி நீ என்ன பாடுபட போறியோ? ” என பொய்யாக அலுத்துக்கொண்டான் உதியன்.

         “அட…இது நல்லா இருக்கே… நீ சொல்லுற மாதிரி நடந்தா லைப் செம த்ரில்லா இருக்கும் ல… ஹே…. உதி… உதி….நாம எங்காவது வெளில போலாமா? எனக்கு இந்த ஊர் ஃபோர் அடிக்குது… ” மகிழ்.

          “அடிப்பாவி… இன்னும் பத்து நாளுல செமஸ்டர் டி…இப்ப போயி ஊரு சுத்துறாளாம்…. பிச்சுப்புடுவேன் பிச்சு….”உதியன்.

          “ஹே… செல்லம் ல…. எப்படியும் செமஸ்டர் எக்ஸாம் க்கு ஸ்டடி ஹாலிடே விடுவாங்கல்ல….நீ உன் ஊருக்கு போவ தான? இந்த தடவ நானும் உன் ஊருக்கு வாரேன்… கூட்டிட்டு போடா… ப்ளீஸ்…” மகிழ்.

            “ஆகான்…..அப்பா அம்மா கிட்ட கேட்டுட்டியா? ” உதியன்.

             “அப்ப உனக்கு ஓகே யா ?”என துள்ளி குதித்தாள் மகிழ்.

             “இல்லனா விடவா போற? என்னைய புடிச்ச இம்சைடி நீ…..” உதியன்.

              “ஹா ஹா ஹா… அதெல்லாம் நான் அப்பா அம்மா கிட்ட சொல்லி ட்ரஸ் லாம் பேக் பண்ணி வச்சுட்டேன்… “என ஆடிக்கொண்டே மகிழ் உரைக்க, உதியன் அவளை முறைத்தான்.

              “அப்ப…..மேடம் ரெடி ஆகிட்டு தான் என் கிட்ட கெஞ்சுற மாதிரி நடிக்கிறீங்க….”உதியன்.

             “ஈஈஈஈ…..எப்ப ஊருக்கு கிளம்புறோம்? “மகிழ்.

             “நாளைக்கழிச்சு போலாம்….இப்ப வா க்ளாஸ்க்கு…” என மகிழ்விழியை இழுத்துக்கொண்டு வகுப்பை நோக்கி சென்றான் உதியன்.

            “ஹே… உதி… உன் ஊரு பேரு என்ன? ” என மகிழ்விழி தன் அதிமுக்கிய சந்தேகத்தை கேட்க…..”சிங்கம்புணரி….” என்றான் உதியன்.

      
                             (காதல் தீ பரவும்… )

                          -செல்லம்மாள்பாரதி 

  • Author
    Ramya Devi
    February 5, 2026

    nice

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *