காதல் தீ -01

Chellammal Bharathi | 19 Nov 2025 | Share

திரும்பி வா …
உன் திசை எது தெரிந்தது..
மாறிப் போகாதே….

வருவதை…
நீ எதிர்கொண்டு பார்த்திடு …
கோழை ஆகாதே…

உன்னிலே ரத்தம் ,
அது நித்தம் கொதிக்கட்டும்….
எண்ணிய எண்ணம் ,
அது என்றும் ஜெயிக்கட்டும்…

தப்பேதும் இல்லை
நீ அப்பனுக்குப் பிள்ளை…

எதிர்த்து நில் …
எதிரியே இல்லை…
நம்பிக்கை கொள்
தடைகளே இல்லை….

நிமிடம் ஏன் ?
நொடிகளே போதும்…
நினைப்பதே வெற்றிதானே
எழுந்து வா!

        என்ற பாடல் ஹெட்செட்டில் செவியோரமாய் ஒலிக்க …பாடலுக்கு ஏற்ப கைகளில் தாளமிட்டு கொண்டே பேருந்து பயணத்தை ஜன்னல் ஓரம் அமர்ந்து ரசித்து அனுபவித்து கொண்டிருந்தாள் மகிழ்விழி.

         மகிழ்விழி… பெயருக்கு ஏற்றார் போல் அவளது விழிகளை காண்பவர் மனதில் ஒரு வித மகிழ்ச்சி உருவாகும். **** கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாம் வருடத்தை வெற்றிகரமாக முடித்து இறுதி வருடத்தை தொட்டிருப்பவள். இந்திரன் -பல்லவி தம்பதியருக்கு ஒரே புதல்வி.

      ஜன்னல் வழியே வந்த காற்றினால் முன் நெற்றியில் விழுந்த கூந்தலை ஒதுக்கியபடி, பேருந்தினுள்ளே நோக்கியவள்… ஒரு இளவயது ஆண் ஒருவன் பேருந்தில் நின்று கொண்டு தன்னை பார்த்து சிரித்துக்கொண்டிருப்பதை பார்த்தாள் மகிழ்விழி.

           “யார்ரா இவன்? ஒருவேளை நமக்கு தெரிஞ்சவனா இருப்பானோ? ” என நினைவலையில் அந்த முகத்தை தேட ஆரம்பித்தாள். எவ்வளவு தேடியும் அவன் யார் என்று தெரியவில்லை மகிழ்விழிக்கு.

        “தம்பி….யாருப்பா நீ? எதுக்கு என்னைய பாத்து சிரிச்சுட்டு இருக்க ?” என அவனிடம் கேட்டாள் மகிழ்விழி.

         “ஒன்னுல்ல… “என கூறி விட்டு மீண்டும் அவளை பார்த்துக்கொண்டே நின்றான் அவன்.

         “சரியான பைத்தியம் போல… ” என நினைத்துக்கொண்டு மீண்டும் இசையில் முழ்கினாள் மகிழ்விழி.

        சிறிது நேரத்தில் பக்கத்தில் அமர்ந்து இருந்த பெண், “உங்களுக்கும் உங்க லவ்வருக்கும் சண்டையா? உங்க பின்னாடி இருந்துட்டு அவங்க ரொம்ப நேரமா உங்களயே பாத்து சிரிச்சுட்டு இருக்காரு… ” என மகிழ்விழியிடம் கேட்டார்.

          அதை கேட்ட மகிழ்விழி, “எவன்டா அது எனக்கு தெரியாம என் லவ்வரு …”என நினைத்துக்கொண்டு பின்னால் திரும்பி பார்த்தாள்.

           பின் இருக்கையில் அவன் அமர்ந்து கொண்டு மகிழ்விழியை பார்த்து சிரித்து கொண்டிருந்தான். அவன் சிரிப்பில் இருந்த வித்தியாசத்தை மகிழ்விழியின் உள்ளுணர்வு எச்சரிக்கை செய்ய… உள்ளுக்குள் மூண்ட கோபத்தில் அருகில் அமர்ந்து இருந்த பெண்மணியிடம் ,”ஏன்க்கா… என்னைய பாத்து சிரிக்கிறவன் லாம் என் லவ்வரு ஆக முடியாது… உங்க வேலை என்னமோ அத மட்டும் பாருங்க… தேவ இல்லாத வேலை எல்லாம் பாக்காதீங்க…. ” கூறி விட்டு அவனை ஒரு முறை முறைத்து விட்டு அமைதியாக திரும்பி கொண்டாள்.

         சிறிது நேரத்தில் தனது காலை யாரோ உரசுவது போல் இருக்க….கோபமுடன் திரும்பி அவனை பார்த்தாள் மகிழ்விழி. அவன் மகிழ்விழியின் இருக்கையின் கம்பியில் முகத்தை வைத்துக் கொண்டு அவளின் பின்னங்கழுத்தை உரசி கொண்டிருந்தான்.

            உள் நெஞ்சில் மூண்ட தீயுடன் ,”என்ன தம்பி உன் பிரச்சினை? “என கோபத்தை உள்ளடக்கி கேட்டாள் மகிழ்விழி.

          “நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க… “அவன்.

           “அப்படியா? ஒரு நிமிஷம் இருங்க…” என கூறி விட்டு தனது நண்பன் உதியனுக்கு ஃபோன் பண்ணினாள் மகிழ்விழி.

          “ஹலோ… அப்பா…. நான் 27E பஸ் ல காலேஜ்க்கு போய்ட்டு இருக்கேன்… இன்னக்கி என் செருப்பு பிஞ்சுரும் போல… புது செருப்பு வாங்கி வச்சுருங்க… ” என தந்தையிடம் பேசுவது போல் தன் நண்பன் உதியனிடம் பேசினாள் மகிழ்விழி.

          உதியனும் புரிந்து கொண்டு, “நீ வா தங்கம்… உனக்கு ரெண்டு ஜோடி செருப்பு வாங்கி தாரேன்… “என கூற இதழ்களில் முகிழ்ந்த சிரிப்பை மறைத்துக்கொண்டு அவனை பார்த்தாள் மகிழ்விழி.

          அவன், மகிழ்விழி பேசியதை கேட்டவுடன் பேருந்தின் கடைசி இருக்கைக்கு எழுந்து சென்று விட்டான்.

         “ஹப்பாடா… ” என நிம்மதி பெருமூச்சு விட்டு கொண்டு ,” எங்க ப்பா இருக்கீங்க? ” என  தந்தையிடம் பேசுவது போல் தன் நண்பனிடம் தொடர்ந்தாள் மகி.

        ” என்னடி? ஓவர் கூட்டமா? காலேஜ் வாசல்ல உனக்குத் தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்… ” உதியன்.

        “செம கூட்டம் ப்பா… இதுல அப்பப்ப இந்த கொசுத் தொல்லை வேற… ” என்றவாறு பின்னால் நின்ற அவனை திரும்பி பார்க்க… அவனோ அசையும் மகியின் இதழ்களையே உற்று நோக்கிக் கொண்டிருந்தான்.

        “சரி… சரி… பாத்து பத்ரமா வா… ” உதியன்.

        அவன் தன்னையே பார்ப்பதை கண்ட மகி   மிகுந்த கோபத்தில் ,” இவனுக முன்ன  பின்ன பொண்ண பாத்து இருக்கானுகளா இல்லையா? ச்சை…. ” என தன் நண்பனிடம் ஆதங்கப்பட்டாள் மகி.

       “அட விடுடி… கண்டவனுக்குலாம் நீ டென்ஷன் ஆகிட்டு இருக்காத… ” உதியன்.

       “நான் நார்மலா இருந்தாலும் இவனுக இருக்க விட மாட்டானுக போல… செருப்படி வாங்குனா தான் சரி வருவான்  போல… ” மகி.

        “அய்ய… இதென்ன காலையிலேயே இவ்ளோ டென்ஷன் ஆகுற? ” உதியன்.

        ” வேற என்ன பண்ண சொல்லுற? இந்த மாதிரி கிறுக்கனலாம் பாக்குறப்ப, அப்பிடியே அவன் முடிய புடிச்சு ஆட்டி.. அவன் சில்லு மூக்க சில்லு சில்லா உடைக்கனும் போல வெறி வருது…. ” மகி.

       ” சரி விடுடி…. ” உதியன்.

        “உனக்கென்னப்பா? ஈஸியா சொல்லுவ… நீயும் அதே இனம் தான? “மகி.

         “அடடா…. என் எருமை… அச்சீ… அருமை ப்ரண்ட் இன்னக்கி ரொம்ப டென்ஷன் ஆகுறாளே… எதுவா இருந்தாலும் நிதானமா ஸ்மார்டா மூவ் பண்ற என் ப்ரண்ட்டுக்கு இன்னக்கி என்ன ஆச்சு? ” உதியன்.

         அதைக்கேட்டு அமைதியாக இருந்தாள் மகி.

         “என்ன?  சத்தத்தையே காணோம்? “உதியன்.

        “ப்ச்…ரொம்ப டென்ஷன் ஆகிட்டேனோ? ” மகி.

        “ஹா ஹா ஹா… அதெல்லாம் ஒன்னும் இல்லை….” உதியன்.

        “எனக்கே தெரியுது….” மகி.

        ” சரி விடுடி….நல்லபடியா காலேஜ்க்கு வந்து சேரு…” உதியன்.

        “எனக்கென்னடா பயம்? நான் நல்லபடியா வந்துருவேன்….” மகி.

         “அவன எதுவும் பண்ணிறாம நல்லபடியா வந்து சேரு னு சொன்னேன்….” உதியன்.

          “அது அவன் நடந்துகிறத பொறுத்து….” மகி.

         “சரி… எதுக்கும் நான் போலீஸ் ஸ்டேஷன் வர ரெடியாகிக்கிறேன்….” என சிரித்தான் உதியன்.

        “ஃபோன வைடா வெண்ண…..” என இரகசியமாக கூறி ஃபோனை அணைத்துவிட்டு  இசையில் கலந்தாள் மகிழ்விழி.

         ” என்ன பாப்பா இப்பிடிலாம் பேசுற? ” என மகியின் அருகில் இருந்த பெண்மணி கேள்வி கேட்க அப்பெண்ணை தீயாய் முறைத்தாள் மகி.

           “வேற எப்பிடி பேச சொல்லுறீங்க? ” மகி.

            “இல்ல….கொஞ்சம் பொறுமையா பேசலாம் ல… ” அப்பெண்.

             “பொறுமையா னா எப்பிடி? ” என இழுத்து பிடித்த பொறுமையுடன் கேட்டாள் மகி.

             “அவன் என்னமோ பண்ணிட்டு போறான்…. நாம பொறுத்துட்டு நம்ம வேலைய பாத்துட்டு போக வேண்டியது தான்… ” அப்பெண்.

             “இப்பிடி இந்த மாதிரி கேவலமான ஜீவன் பண்ற சின்ன சின்ன சில்மிஷத்த பொறுத்து பொறுத்து தான் அவன் பச்ச குழந்தைய கூட விட்டு வைக்காம வெறியெடுத்து திரியுறான்… என்ன டேஷ்க்கு நாம பொறுமையா இருக்கனும்? அவன் நம்மள உரசுறப்ப அவன் கைய உடைச்சு அவன் கையிலயே குடுக்கனும்… அப்பதான் அவனுக்குலாம் புத்தி வரும்… “.மகி

        சிறிது நேரத்தில் தான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் எழுந்து படியின் அருகே நின்று கொண்டு அவனை எதார்த்தமாக பார்க்க…அவனும் மகிழ்விழியை பார்த்துக்கொண்டே கண்ணடித்து பறக்கும் முத்தத்தை பறக்க விட…. “நீ சரிபட்டு வர மாட்ட… செத்தடா நீ.. “என நினைத்துக்கொண்டு தனது கல்லூரி பையில் வைத்திருந்த மெல்லிய ப்ளேடை கையில் எடுத்துக் கொண்டாள்.

         கூட்ட நெரிசலில் இறங்குகிற போது அவனின் கையில் ப்ளேடை வைத்து நன்றாக ஒரு இழு இழுத்துவிட்டு தன் செருப்பில் ரெடிமேடாக வைத்து இருந்த குண்டூசியால் அவனது காலை மிதி எடுத்தாள் மகிழ்விழி.

        “இனி நீ எந்த எந்த பொண்ண தப்பா பாத்தாலும் இந்த காயம் தான் உனக்கு ஞாபகம் வரனும்…” என விழிகளில் ரௌத்திரம் மின்ன மீண்டும் குண்டூசியால் அவனது காலை பதம் பார்த்து விட்டு பேருந்தை விட்டு இறங்கினாள் மகிழ்விழி.

           வலியில் கத்தவும் முடியாமல் பல்லை கடித்து வலியை பொறுத்துக்கொண்டு மகிழ்விழியின் பின்னே இறங்கி, “ஏங்க….ஒரு நிமிஷம்… ” என அவளை அழைத்தான்.

         மகிழ்விழி நின்று திரும்பி, “என்ன ?வாங்குனது பத்தலயா? ” என்றாள்.

           “ஸாரிங்க….இனி இப்பிடி பண்ண மாட்டேன்….அண்ட் ஒரு சின்ன அட்வைஸ்… இதெல்லாம் இந்த வயசுல சாதாரணம்… நீங்க இந்த மாதிரி சின்ன சின்ன விசயத்துக்குலாம் ஓவரா பொங்காதீங்க….உங்கள கல்லியாணம் பண்ணிக்க போற புண்ணியவான் ரொம்ப பாவம்….” என்றான் அவன்.

        “ஓஓ… பர்மிஷன் இல்லாம ஒரு பொண்ண டச் பண்றதெல்லாம் சாதாரணமா? உன் வீட்டு பொண்ண என் வீட்டு பசங்கள வச்சு இப்பிடி தொட சொல்லட்டா? அண்ட்….என்னைய கல்லியாணம் பண்ணிக்க போறவர பத்தி நீங்க கவலைபட வேண்டாம்…..டிஸ்கஸ்டிங்… கெட் லாஸ்ட்.. இல்ல… செருப்பாலயே அடிவாங்குவ… ” மகிழ்விழி.

           அவன் எதுவும் கூறாமல் விட்டால் போதும் என்ற ரீதியில் ஓடி மறைந்தான்.

            ” அதென்ன ஆனா ஊனா என்னைய கல்லியாணம் பண்ணிக்கபோறவன் ரொம்ப பாவம் னு எல்லாரும் சொல்லுறாங்க….டேய்…மகிழ்விழி புருஷா… நீயாச்சும் வந்து சொல்லுடா… நான் நல்ல அமைதியான பொண்ணு னு…..மகிழ்விழி புருஷா….எங்கடா இருக்க நீ….” என மனதுக்குள் தன் வழமையான புலம்பலை புலம்பி கொண்டே கல்லூரிக்குள் நுழைந்தாள் மகிழ்விழி.

          மகிழ்விழி புலம்பலின் நாயகன் ,அங்கு ஒருவனை அடித்து கையை உடைத்துக்கொண்டிருந்தான்…..

                      (காதல் தீ பரவும்….)

                       -செல்லம்மாள்பாரதி 
       

         

  • Author
    Ramya Devi
    February 5, 2026

    super

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *