கல்யாணம் முதல் காதல் வரை – 9

Shanmuha Sethuramachandran | 15 Dec 2025 | Share

                            9.

       “என்னமா   சொல்லப்   போற?”

       “தாத்தா ,  நான்   உங்க   பேரன்  ஜூனைத்தை    கல்யாணம்   பண்ணிட்டு  வந்தது   உங்க   பேமிலல  யாருக்குமே  பிடிக்கல.   பிடிக்காத   ஒரு   விஷயத்தை  சகிச்சுட்டு   வாழணும்னு    சொல்றது  பெரிய   வன்முறை.   மனுஷங்களோட  அடிப்படை   உரிமைகள்  பத்தி  அங்குலம்  அங்குலமா   விவரிக்கிற  சட்டம்  படிச்சவ  நான் . அந்த சட்டத்தை   மதிக்கிறவ  நான்.  அதனால  தான்  சொல்றேன் . குடும்பம்  வெறும்   வார்த்தை   இல்லை   தாத்தா,   அது   பெரிய   விஷயம் .  என்னை   மாதிரி  பாதிலயே   அனாதை   ஆனவங்களுக்கு  தான்   அதோட   மகத்துவம்   தெரியும். நிறைய   குடும்பப்   படங்கள்ல   வர்ற  மாதிரி   இந்த   வீடு    இருக்கு.   எல்லாரும்  ஒண்ணா   உக்காந்து   சாப்பிடறது,   உங்க   பேச்சை    எல்லாரும்   மதிக்குறதுன்னு  பாக்க   பாக்க    அத்தனை  அழகா  இருக்கு.   நான்   உங்க   மார்க்கத்தை   சேர்ந்தவ   இல்ல.   ஆனா , இந்த   வீடு    எனக்கு   தெய்வீகமா  தெரியுது  தாத்தா .அல்லாஹ்   வேற   எங்கயும்   இல்ல,  உங்க   எல்லார்   மனங்கள்லயும்  தான்  இருக்கார்.  நான்  ஒருத்தி   வந்ததுனால   இப்ப   இங்க   யாருமே   நல்லா   இல்ல.   இந்த   இரண்டு  நாளா,   நான்   சந்திக்கிற   உங்க   எல்லார்  முகங்கள்லயும்  எப்பப்   பாத்தாலும்  ஒரு  குழப்பம் ,  ஒரு   யோசனை,  சில  கண்கள்ல  என்னை   எரிக்கிற   அளவுக்கு   கோபம்,  இந்த   மாதிரி   தான்   இருக்கு .  இது  எல்லாத்தையுமே   நான்   கவனிச்சுட்டு  தான்   இருந்தேன்  . உங்க  வீட்டு  ஜூனைத் என்னை   காதலிச்சு   கல்யாணம்   பண்ணல ,  ஏதோ   ஒரு   குற்ற   உணர்வு.   என்   ப்ரித்வி   சாவுக்கு   அவர்   தான்  காரணம்ங்குற   குற்ற   உணர்வு  மட்டும்  தானே   தவிர,   வேற   ஒண்ணும்  இல்ல.  உங்க   ரஷிதாவுக்கு   அவர்   துரோகம்  செய்யல . எனக்கு  அடைக்கலம்  குடுக்க  நினைச்ச   பாவத்துக்கு  அவரை   நீங்க  விலக்கி   வைக்க   வேணாம்.   புயலுக்குப்  பின்   அமைதிங்குற   மாதிரி   புயலா  வந்த  நான், அது  கரையைக்   கடக்குற   மாதிரி   இந்த  வீட்டை  கடந்து  போயிடுறேன்.  நான்  போன   உடனே , இந்த   வீடு   பழைய  மாதிரி   அமைதி   அடையட்டும்  தாத்தா.  ஏனோ   அவள்   பேசப்   பேச,  கதீஜாவுக்கு  தொண்டை   அடைத்தது.

        “சரி ,  ரொம்ப   நல்ல   முடிவு .  நீயா  வந்த  ,ஆனா   இப்ப   ஜூனைத்தை  விட்டுட்டுப்  போறேன்னு   சொல்ற,  இனி  அவன்  என்ன   செய்வான் ?  ரஷியைக்   கட்டி  வைக்க  முடியாத  அளவுக்கு   பண்ணிட்ட , இப்ப  நீயும்   கிளம்பிருவ,   எங்க   வீட்டு  வாரிசு  தனி   மரமா   நிக்கணுமா?  இனி  எனக்கும்  ஜூனைத்துக்கும்   சம்பந்தம்  இல்லன்னு  ஒரு    விடுதலைப்   பத்திரம்   எழுதி   குடுத்துட்டு,   இங்க   இருந்து  கிளம்பு.   நாங்க   எங்க   ரஷியை  என்   தம்பிக்கு  கட்டி   வச்சுக்குறோம்” . கொஞ்சம்  கூட   ஈரமே   இல்லாமல்   பேசினாள்   நசீமா.  அவளைப்   பார்த்து   லேசாக  சிரித்த  தேனுகா, “விடுதலைப்  பத்திரம்  என்னங்க? விவாகரத்தே    பண்ணிடறேன் . அந்த  வேலைகளை  கூடிய   சீக்கிரம்  முடிச்சிடலாம். அப்போ  தான்  பிற்காலத்துல  உங்க  ரஷிக்கு , எந்த  விதமான   பிரச்சனையும்   வராது”   அவள்   சொல்ல,   அப்பாடா  என   முஸ்தஃபாவின்   மனது  குளிர்ந்தது.  அருகில்   நின்று   கொண்டிருந்த  மகன்  ஜமாலைப்   பார்த்து   புன்னகைக்க,   அவனும்  சிரிப்பை  பதிலாகக்    கொடுத்தான்.

        “தேனுகா ,  என்ன   பேசுற?   இந்த  வீட்டை  விட்டு   வெளிய   போய்  என்ன பண்ணப்   போற?   நான்   உன்னை  அவசரமா  தான்  கல்யாணம்  பண்ணேன்.  குற்ற   உணர்வுல  தான்  உன்  கழுத்துல  தாலி   கட்டுனேன்.   ஆனா  அதிருப்தில  பண்ணல.   என்னால   நீ   இழந்த   வாழ்க்கையை   நானே  உனக்கு  திருப்பி  குடுக்கணும்னு   நினைச்சிருக்கேன்”

       “இல்லங்க ,  வேணாம் .  எனக்கு  வாழ்க்கை   குடுக்க   நினைச்சீங்கன்னா,  அதுக்கு   நீங்க   குடுக்கப்   போற  விலை  ரொம்ப    பெரிசா   இருக்கும்.  அந்த  விலை  இந்த   குடும்பம்   தான் . இதை   இழந்து  என்னை  மனைவியா  வைக்கிற  அளவு  நான்  வொர்த்   பீஸ்   இல்ல. எனக்கென்னங்க   தங்க   இடம்  கூடவா  கிடைக்காம   போயிடும்?  தடுக்கி  விழுந்தா அத்தனை   லேடீஸ்   ஹாஸ்டல்  இருக்கு,  நான்    பத்திரமா  தங்கிக்குவேன்.   அது  ஒண்ணும்  எனக்கு   புதுசில்லையே?  அதனால  என்னைப்   பத்தி  யோசிக்காம, எல்லா  கில்ட்டியையும்  விட்டு  ஒழிச்சுட்டு ,   நீங்க  சந்தோஷமா   இருங்க,   இருப்பீங்க” 

       “தேனுகா,   நீ   ரொம்ப  அவசரப்படுற”  அனைவரும்  என்ன  பதில்   சொல்வது என   தெரியாமல்   அமர்ந்திருக்க,  வேக  வேகமாக   மாடிப்படி   ஏறினாள்   நசீமா.  ஒரு  கால்  மணி   நேரத்தில்   கீழே   வந்தவளின்  கைகளில்   தேனுகாவின்   சூட்கேஸ்கள் . கொண்டு   வந்து   அவள்   காலடியில்  வைத்தாள்.  “இந்தா .  வெளிய   கிடந்த  லொட்டு   லொசுக்கு   சாமானெல்லாம்  அள்ளி  , இந்த   கருப்பு   பைக்குள்ள  போட்டுருக்கேன்.  உன்   பொருள்  அங்க  வேற   ஒண்ணும்   இல்ல,   எல்லாத்தையும்  எடுத்துட்டு   வந்திட்டேன்.   நீ   தாராளமா  கிளம்பலாம்.   ராதா , இந்த   பொண்ணு   கிளம்புனதும்   நம்ம   அடுத்த  வாரத்துக்குள்ளவே  ஒரு  நல்ல  நாளா  பாத்து  , ஜூனைத்கும்   ரஷிதாவுக்கும்  மங்க்னா   வச்சிடலாம் .  எனக்கு   இப்ப  எவ்ளோ  சந்தோஷமா  இருக்கு  தெரியுமா?”  ஓடிச்சென்று   ரஷிதாவை   இறுக்கமாகக்  கட்டிக்   கொண்டு,   பின்   விலகினாள்.  ஏனோ   அவள்   முகத்தில்   இருந்த  அந்த   சந்தோஷமும்,  மன  நிறைவும் , முஸ்தஃபா, ஷாரிக்  , ஜமால் , முகங்களில்   மட்டும்  தான்  எதிரொலித்ததே   தவிர,  வேறு  யார்  முகத்திலும்   தெரியவில்லை.  

        “ராதா”……

       “நசீமா ,  சும்மா   இரு .  அதைப்   பத்தி  பேச   இது   சரியான    நேரம்   இல்ல”  

        “தாத்தா,  என்னை  ஆசீர்வாதம்  பண்ணுங்க”   சற்றும்  யோசிக்காமல்,  இப்ராஹிம்   தாத்தாவின்  கால்களில்   விழுந்து  வணங்கினாள்.  பதறிப்  போனவர்,

       “பேட்டி,   நல்லா   இரு   நல்லா  இரு” என  வாழ்த்தினார்.பின் சுல்தானா  பாட்டியிடமும்   ஆசி   பெற்றுக்  கொண்டவள் , தன்   பெட்டிகள்   இரண்டையும்  கையில்  எடுத்துக்   கொண்டாள் .

      “வேண்டாத   விருந்தாளியா   உங்க  வீட்டுக்குள்ள   வந்து,   உங்க   எல்லார்  மனசையும்  காயப்படுத்தினதுக்கு  எல்லாரும்   என்னை   மன்னிச்சிருங்க.  நான்   கிளம்புறேன் . ஆங்….  அப்புறம்    ஜூனைத் , நோட்டீஸ்  வீட்டுக்கு   வரும்.  அதுல   சொல்லிருக்க  டேட்ல    கோர்ட்கு  வந்துருங்க .  அதுல   ஏதாவது   டவுட்   வந்தா  என்   ஆபீஸ்ல   வந்து   என்னைப்  பாருங்க”  வாசலை   நோக்கி   வேகமாக   நடக்க  ஆரம்பித்தாள் .  “ஒரு   நிமிஷம்”   நசீமா  அழைக்கவே ,  திரும்பினாள்.

     ” ஜூனைத்   நிக்காஹ்கு  கூட  நீ  வரக்   கூடாது  .  இனிமே   ரஷிதா   வாழ்க்கைல  உன்னோட   தலையீடு   இருக்கவே  கூடாது”

        “பாபி   வாயை  மூடு,   ஏற்கனவே  கல்யாணம்   ஆன   ஒருத்தரை  என்னால  எப்டி   நிக்காஹ்   செஞ்சுக்க   முடியும்?  தேனுகாக்கா , நீங்க   நில்லுங்க   நீங்க  எதுக்கு   வெளிய   போகணும்?   நீங்க  எங்க  மாமுவோட   மனைவி.   அவருக்கு   இந்த   வீட்ல   என்னென்ன  உரிமைகள்  இருக்கோ,  அதே   உரிமை   உங்களுக்கும்   இருக்கு.  பேக்கை  வைங்க”  

       “ரஷிதா ,  பொம்பளைப்   பிள்ள   நீ?  என்ன    இவ்ளோ   தூரம்  வாயாடுற?  என்ன  இது   புது   பழக்கம்  ? பேசாம  இரு”  ஜமால்   சீறிக்   கொண்டு   முன்னால்  வந்தான் .

        “ஓ   அண்ணா!   வா  வா,   இவ்ளோ  நேரம்   நசீமா   பாபி   ரத்த   வெறி  பிடிச்ச காட்டேரியாட்டம்   பேசினாங்களே?  அவங்க  பொம்பளைப்    பிள்ளை   இல்லயா?  அவங்களை  மட்டும்  ஏன்   பேச  விட்ட? இப்ப   என்னைத்   தடுத்த   மாதிரி,  அப்போ  அவங்களையும்   தடுக்க  வேண்டியது  தான? ஏன்   தடுக்கல?   ஏன்னா  அவங்க   பேசின  விஷயம்    உனக்கு   சாதகமானது.   நான்   பேசின   விஷயம்   உனக்கு   பாதகமானது. இது   கூட   புரிஞ்சுக்க  முடியாத  அளவுக்கு  நான்   ஒண்ணும்   குழந்தை  இல்ல “

      ” அமைதியா   இரு  ரஷிம்மா.  நெடு  நெடுன்னு   வளர்ந்திட்டதால   நீ  ஒண்ணும்  பெரிய   பொண்ணு    இல்ல”   முஸ்தஃபா,  கோபத்தில்   கன்னம்  சிவக்கக்  கத்தினார். 

        “பெரிய   பொண்ணு  இல்லலத்தா?  அப்புறம்   எதுக்கு   எனக்கு   இப்போ  நிக்காஹ்   செய்ய   துடிக்கிறீங்க?  எப்போ  எனக்கு   உங்க   எல்லார்   முன்னாலயும் என்   மனசுல   உள்ளதை   பேச  முடியுற  அளவு  வயசாகுதோ,  அப்ப  எனக்கு  நிக்காஹ்  செஞ்சு   வைங்க . நன்னா,  நீங்க   ஜூனைத்  மாமாவையும்  , தேனுகா   அக்காவையும்  இங்கயே   இருக்க  அனுமதிக்கணும்.  ஆனா  அப்படி   நீங்க   அனுமதிச்சா ,  என்  அப்பா,  அம்மா   அண்ணன்கள்,   பாபிகள்,  குழந்தைகள்   எல்லாரும்  இங்க   இருந்து  கிளம்பிருவாங்களாம்.  என்னையும்  கூப்பிட்டு   போகத்   தான்  பாப்பாங்க.  நான்   இங்க   தான்   இருப்பேன் .  யார்   கூடவும்  ,எங்கயும்   போக   மாட்டேன்.  உங்க  கோபத்துக்கெல்லாம்  எது   அடிப்படை?  என்னை   நிர்க்கதியா  விட்டுட்டு  அக்காவை  கல்யாணம்   பண்ணிட்டாருங்கறது  தான? இப்ப   நானே   அவங்க   ரெண்டு  பேரையும்  ஏத்துக்கிட்டு  அவங்க  கூட   இதே  வீட்ல  வாழ   தயாரா   இருக்கும்   போது,   வேற  என்ன   பிரச்சனை   நன்னா?” 

     ” பிரச்சனை  அது   மட்டும்  இல்ல .  வேற   என்னென்ன  இருக்குன்னு   சொல்லட்டுமா?  சொன்னாலும்   உனக்கு   புரியுமா?  கவா  கவான்னு  எதுக்கு  கத்திக்கிட்டே   இருக்க?  உன்னை   என்ன   செய்யுறேன்னு  பாரு”  பாய்ந்து    வந்து,  அவள்  தலை  முடியை  கொத்தாகப்   பிடித்தான்  ஷாரிக். 

      “பேசாத  பேசாதன்னு அப்பா, அண்ணன்  இரண்டு  பேரும்   சொல்லிட்டு   இருக்காங்க,  அதை   காதுலயே   வாங்கிக்கிடாம  நீ  பாட்டுக்கு பேசிட்டு  இருக்க?” 

       “ஷாரிக்,   கையை   எடு” 

       “நன்னா”    

       “எடுடா   கையை,   பொம்பளைப்   புள்ள  மேல   எதுக்கு  கை   வைக்கிற?   நீ   பேச  வேண்டியதெல்லாம்   அவ   பேசறாளே,  அந்த  கோபமா ? இப்ராஹிம்  குடும்பத்தில    என்ன   புதுசு  புதுசா  ஆரம்பிச்சுட்டு    இருக்கீங்க ? என்   பொறுமைக்கும்   ஒரு  எல்லை   இருக்கு.  என்   முடிவை  இப்ப  சொல்றேன் ,  எல்லாரும்   கேட்டுக்கங்க.   இந்த   வீட்ல   இப்ப   இருக்குற  யாருமே  இன்னும்   ஒரு   மாசத்துக்கு   எங்கயும்  போகக்கூடாது ,  இங்க  தான்  இருக்கணும்.  தேனுகா  , ரஷிதா   கூட   அவ  அறையில  தங்கிக்கட்டும்.  ஒரு   மாசத்துக்கு   அப்றமும்  இதே  அளவு   வெறுப்போட   தேனுகாவை   இங்க  யாராச்சும்   ஒருத்தருக்கு,   நல்லா  கேட்டுக்கங்க ,  ஒருத்தருக்கு   கூட    பிடிக்கலன்னா. அப்ப   நானே  அவளை   வெளிய  அனுப்பிடுவேன் .அவ்ளோ  தான்.  எல்லாரும்   போங்க”

          “தாத்தா”  

         “என்   வீட்ல  தான்  மா   நீ   இப்ப   இருக்க .  அதனால   நான்   எடுக்கிற  முடிவுகள்    எல்லாமே   உனக்கும்  பொருந்தும்   . போம்மா  , உன்   பொருட்களை  எடுத்திக்கிட்டு  ரஷிதா  ரூம்கு   போ.  வழக்கம்   போல   இங்க   இருந்தே  நீ   கோர்ட்டுக்கு    போயிட்டு   வரலாம்   என்ன?  போம்மா,  ரஷி   கூட்டிட்டுப்   போ”   பேசி  முடித்துவிட்டு,   வேகமாக   வீட்டை  விட்டு  வெளியேறிவிட்டார்  இப்ராஹிம்  தாத்தா.

       “ஒரு   மாசம்   இவ   நம்ம    கூட   தான்  இருப்பாளா?    இனி  இந்த   வீட்ல  என்னென்ன   கூத்து   நடக்கப்   போகுதோ?”  வாய்விட்டு   புலம்பினாள்   நஸ்ரின்.

                                                    –  தொடரும்

    

             

       

      

     

        

         

      

       

        

    No comments yet.