8.
சனிக்கிழமை காலை ….. வீட்டின் அருகில் இருந்த பார்க்கில் தினமும் காலையில் வாக்கிங்கிற்காக நஸ்ரின் வருவது வழக்கம். அவளுடன் எப்போதும் ரஷிதாவும் வருவாள் அவள் நடக்க ஆரம்பிக்க , எதையோ தீவிரமாக யோசித்தபடி அமர்ந்திருந்தாள் ரஷிதா. இன்னிக்கு தான் தாத்தா தன்னோட முடிவை சொல்றேன்னு சொல்லிருக்கார். என்ன சொல்லப் போறாரோ? ஜூனைத் மாமுவை வீட்டை விட்டு அனுப்பாத பட்சத்து,ல நம்ம இங்க இருக்கக் கூடாதுன்னு அப்பா சொன்னாரே? என்ன நடக்குமோ? காலையில் நடந்த நிகழ்வினை , மனதுக்குள் மீண்டும் ஒரு முறை ஓட்டிப் பார்த்தாள். காலை மணி ஆறு. தன் அறையின் பாத்ரூமில் பல் துலக்கிக் கொண்டிருந்தாள் ரஷிதா. அறைக்கதவு தட்டப்பட்டது . டொக் டொக் கதவைத் திறந்தாள், வெளியே நிஷா.
“அம்மா”
“ரஷி, இன்னிக்கு காலையில சாப்பிடும் போது உன் தாத்தா அவரோட முடிவை சொல்லப் போறேன்னு சொன்னாருல்ல ?”
” ஆமா அம்மா”
” ஜூனைத் இந்த வீட்ல இருக்கக் கூடாதுன்னு எங்கத்தா சொல்லிட்டா, நமக்கு எந்த பிரச்சனையும் இல்ல. ஆனா அவர் அவன் இங்கயே இருக்கட்டும்னு சொல்லிட்டா அடுத்த நொடியே நம்ம இங்க இருந்து வெளியேறணும்னு சொல்லிட்டாரு உங்க அப்பா. அதனால எல்லாத்துக்கும் தயாரா இரு” அவள் சர்வ சாதாரணமாக சொல்ல , அதிர்ந்து போனாள் ரஷிதா.
“அம்மா என்னமா சொல்ற ? இந்த வீட்டை விட்டுப் போறதா? அது நம்மளால முடியுற காரியமா? உன்னோட நிக்காஹ் முடிஞ்சும் கூட நீ இங்க தான் இருந்துருக்க . தாத்தா பாத்துக்கிட்டு இருந்த பிசினஸ்ல அப்பாவும் ஒரு அங்கம். எப்டிமா இந்த பேமிலியை விட்டு விலகுறது ? அத்தா ஏன் இப்டிலாம் பண்றாரு ? எனக்கு புரியல. நான் போய் அவரை கேக்குறேன்”
“வேணாம்டி, அவர் முடிவே எடுத்துட்டார். அதுவும் உனக்காக மட்டும் தான் இந்த முடிவு. இப்ப நீயே போய் இது நியாயமில்லன்னு சொன்னா அது நல்லா இருக்காது”
“சரிம்மா நான் சொல்லல, நீ சொல்லு. வேணாம் , இங்கயே இருக்கலாம்னு சொல்லு, அடிச்சு பேசு. நம்ம போறோம்னா, நீ , நான், அப்பா மட்டும் போகப் போறது இல்லமா. பாபிகள் , சின்ன குழந்தைகள் , என் அண்ணன்கள், எல்லாருமா சேர்ந்து தான் போகப் போறோம் . மிச்சம் இருக்கப் போறது எட்டே எட்டு பேர் . இவ்ளோ பெரிய வீட்ல வெறும் எட்டே பேர் தான் இனி இருக்கப் போறாங்கன்னு நினைச்சாலே கொடூரமா இருக்குமா. எல்லாத்தையும் விடு, நன்னா நன்னியை நினைச்சுப் பாரு. ஜலால் , ஹாலித் ஹஸ்மத், மூணு பேரும் இல்லாம அவங்க என்ன பண்ணுவாங்க? பாவம் இல்லயா?”
“இந்த வீட்டை விட்டு தான் நம்ம போகப் போறோம் , இந்த குடும்பத்தை விட்டு இல்ல. இங்க இருந்து நம்ம கிளம்புறதால யார் கூடவும் பேசாம கொள்ளாம இருக்கப் போறதில்ல. உங்க அப்பாவும் சரி, அண்ணன்களும் சரி , தினம் ஃபாக்டரிக்கு வந்துக்கிட்டும் போயிக்கிட்டும் தான் இருப்பாங்க .ஆனா கூட்டுக் குடும்பமா ஒரே வீட்டுல இருக்க முடியாது” நிஷா சொல்வதை கேட்டு திரு திருவென விழித்தாள் அவள் . “நீ சின்ன பொண்ணு ரஷிம்மா, பெரியவங்க இந்த விஷயத்தை பாக்குற கோணம் உனக்கு புரியாது. அது உன் தப்பு இல்ல, உன் வயசு தான் அதன் காரணம் . நீ உங்க நன்னா நன்னியைப் பத்தி யோசிக்கிற . அவங்க உன் மேல வச்சிருக்குற பாசத்தைப் பத்தி யோசிக்கிற. ஆனா வாழ்க்கை, பாசத்தை அடிப்படையா வச்சு மட்டும் அமையறது இல்ல. மதிப்பு , மரியாதை, முன்னுரிமை இந்த மூணும் ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயங்கள். உன் தாத்தா இன்னிக்கு ஜூனைத் இந்த வீட்லயே இருக்கட்டும்னு சொல்லிட்டா, அது மறைமுகமா உங்க அப்பாவை அவமானப்படுத்துற ஒரு விஷயமாகிரும். இதுக்கு மேல உன்கிட்ட என்ன சொன்னா நீ புரிஞ்சுக்கிருவன்னு எனக்கு தெரியல, ஆனா நாங்க சொல்றதைத் தான் நீ கேக்கணும். திடீர்னு சொன்னா, உனக்கு ரொம்ப ஏமாற்றமா இருக்கும்னு தான் முன்னமே வந்து சொல்லிட்டேன். சரி , எனக்கு கிச்சன்ல வேலை இருக்கு” நிஷா நகர முயல,
” அம்மா ஒரு நிமிஷம்” என்று அவரை நிறுத்தினாள் ரஷிதா.
“என்னடி?”
“நான் நினைச்ச மாதிரி எதுவும் நடக்கலன்னா உங்க வீட்டை விட்டு கிளம்ப வேண்டி இருக்கும்னு அப்பா சொல்லிட்டாரு அவர் சொன்னா அதன் படியே தான் செய்வாரு . உனக்கு கஷ்டமா இல்லையாம்மா?” மகள் கேட்ட கேள்வியில், கண்ணீர் பொங்கி வந்தது நிஷாவிற்கு. அதைத் துடைத்துக் கொண்டவர். “கட்டினவரை மதிக்கணும்னு எங்க அத்தாவும், அம்மாவும் எனக்கு சொல்லி குடுத்து வளர்த்திருக்காங்க. நான் அவங்க சொன்ன படி தான் இந்த நாள் வரைக்கும் நடந்திட்டு இருக்கேன். அப்போ லாம் என்னைப் பத்தி ரொம்ப பெருமையா நினைச்சவங்க , இப்பவும் அந்த மாதிரி தான் நினைக்கணும். வேற வழி இல்ல”
“ரஷி போலாமா?” வியர்வை வழிய, மூச்சு வாங்கிக் கொண்டு வந்தாள் நஸ்ரின் ஃபாத்திமா.
” போலாம் பாபி” இருவரும் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.
“பாபி”
“ம்ம்ம்ம்”
” எப்டி இவ்ளோ சாதாரணமா இருக்க? இன்னிக்கு நமக்கு ஒரு பிக் டே , உனக்கு அது நினைவில்லையா?”
“அதுலாம் இருக்குடி . ராதா கண்டிப்பா நமக்கு சாதகமாத் தான் முடிவு எடுப்பார். நம்ம இவ்ளோ பேரை இழக்குறதை அவர் விரும்ப மாட்டார் . எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு. அதான் உன்னை மாதிரி பயந்துகிட்டு இல்லாம இருக்கேன்”
“ஒரு வேளை ஜூனைத் மாமு இங்கயே இருக்கட்டும்னு நன்னா சொல்லிட்டாருன்னா? அப்ப என்ன பண்ணுவ சொல்லு ? ஒரு பக்கம் தம்பி, ஒரு பக்கம் ஹஸ்பண்ட், யார் பக்கம் நீ யோசிப்ப பாபி?”
“உங்க அண்ணன் என்ன சொல்றாரோ அதைத் தான் நான் செய்வேன்” கொஞ்சம் கூட யோசிக்காமல், சட்டென பதில் சொன்னாள் நஸ்ரின்.
“பாபீஈஈஈ நீ அவ்ளோ செல்பிஃஷா?”
“ஜூனைத் அவளைக் நிக்காஹ் பண்ணிக்கிறதுக்கு முன்னாடி என்னைப் பத்தி யோசிச்சானா ? என் வாழ்க்கையும் இதுல அடங்கி இருக்குன்னு நினைச்சானா? சொல்லுடி”
“நான் எதுவும் பேச விரும்பல”. அதற்குள் வீடு வந்துவிட , இருவரும் ஒன்றும் பேசாமல் உள்ளே சென்றனர்…
*************
ஹாலில் அனைவரும் ஒன்று கூடி இருந்தன.ர் ஒவ்வொருவர் மனதிலும் பல்வேறு விதமான சிந்தனைகள். எதைப் பற்றியும் யோசிக்காமல், சலனமற்ற பார்வையுடன் அங்கு நின்றிருந்தது தேனுகா மட்டும் தான். ஜூனைத் கூட, ராதா என்ன சொல்லப் போகிறாரோ என்ற பயத்துடன் தான் இருந்தான். தன் குடும்பத்தை விட்டு இருக்க அவனால் ஒரு நாளும் முடியாது . ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆபீசில் தன்னுடன் பணிபுரியும் நண்பர்களை வீடு பார்க்க சொல்லி வைத்திருந்தான் .மெல்ல தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேசலானார், இப்ராஹிம் தாத்தா.
“தேனுகா” அவர் அழைப்பில் அதிர்ந்து போனவள் , சட்டென சுதாரித்து,
“சொல்லுங்க தாத்தா” என்றாள்.
“முந்தா நாள் நீ உனக்கும், ஜூனைத்துக்கும் நிக்காஹ் நடந்த சூழ்நிலையை சொல்ல ஆரம்பிச்ச. ஆனா , அதை உன்னால முழுமையா சொல்ல முடியல . இப்ப சொல்லணும் நீ. சொல்லு”
“அது அது”…..
“தயங்காம சொல்லும்மா ” ஜூனைத்தை ஒரு கணம் பார்த்துவிட்டு, சொல்ல ஆரம்பித்தாள் தேனுகா.
“என்னை ஹாஸ்டல்ல இறக்கி விட்டுட்டு நேரா தான் தங்கியிருந்த அறைக்கு ப்ரித்வி போயிட்டு இருக்கும்போது , அந்த மாடசாமி க்ரூப் அவரை துரத்திருக்காங்க. அவங்க பதினைஞ்சு பேர் நம்ம ஒரே ஆள் நிச்சயம் சமாளிக்க முடியாதுன்னு புரிஞ்சுக்கிட்ட ப்ரித்வி , வழியிலயே ஒரு ஒரு”…..திரும்பி ஜூனைத்தை பார்த்தாள். அதில் ஒரு ஆக்ரோஷம் தெரிந்தது . அதற்கு மேல் அந்த சம்பவத்தை அவளால் விவரிக்க முடியாது என்று புரிந்து கொண்டான்.
“ராதா மிச்சத்தை நான் சொல்றேன்.
அன்னிக்கு ராத்திரி நான் என் காரை ஒரு சின்ன ஐஸ்க்ரீம் பார்லர் முன்னால நிறுத்திட்டு ,போன்ல என் ப்ரண்ட் கூட பேசிட்டு இருந்தேன். அப்போ தான் ஸ்பீடா ஒருத்தர் பைக்கை ஓட்டிட்டு வந்தார். வேகவேகமா நிறுத்திட்டு , என்னை நோக்கி ஓடி வந்தார் . சார் என்னை கொல்றதுக்கு துரத்தி வர்றாங்க, நான் அங்க உள்ள ஒளிஞ்சுக்கிறேன். என்னைக் கேட்டா நான் பாக்கலன்னு சொல்லுங்கன்னு சொல்லிட்டு, உள்ள ஓடிட்டார் .எனக்கு ஒண்ணுமே புரியல. ஆனா , அந்த ராத்திரியில என்னைக் கொல்ல வர்றாங்கன்னு அவர் ஓடி வந்து சொன்னப்போ , எனக்கென்னமோ அதை நம்ப தோணலை . அவர் மோசமான நபரோன்னு சந்தேகமா இருந்துச்சு. ஒரு பத்து நிமிஷ இடைவெளியில, ஒரு பெரிய கேங்க் ரெண்டு கார்கள்ல வந்து இறங்கினாங்க . அந்த ஆளோட ஃபோட்டோ காட்டி, அவரைப் பாத்தீங்களா? இங்க இறங்குனாரான்னு? கேட்டாங்க. அந்த நேரத்துல தான் என் நாக்குல சாத்தான் வந்தான் ராதா. ஆமா பாத்தேன் , உள்ள தான் போனார்னு சொல்லிட்டேன். வேகமா உள்ள போன அந்த கும்பல் , என் கண்ணு முன்னாடியே அவரை வெட்டிட்டாங்க ராதா”. ஜூனைத் குரல் உடைந்தது.
“ஜூனைத்…….நீ பெரிய்ய்ய தப்பு பண்ணிட்டப்பா, தப்பு பண்ணிட்ட” சுல்தானா பாட்டி கரகரவென்ற குரலில் சொல்ல , மெல்ல தலையசைத்தான் ஜூனைத் . “ஆமா ராதி தப்பு தான். அவனுங்க வெட்டிட்டு கார்ல ஏறுனதும், நான் அவங்களை ஃபாலோ செய்யலாம்னு தான் நினைச்சேன். ஆனா ப்ரித்வி உடம்புல லேசா உயிர் இருந்தது . அதனால அவரை கார்ல ஏத்திக்கிட்டு ஹாஸ்பிடல் போலாம்னு அவரை நெருங்கினேன். அவர் தன்னோட சட்டைப் பையில இருந்த ஒரு பேப்பரை எடுத்து நீட்டினார். அது ரிஜிஸ்டர் ஆபீஸ்ல கல்யாணம் பண்ணனும்னு அப்ளை பண்றவங்களுக்கு குடுக்குற ஃபார்ம் . அதுல அவர் போட்டோவும், தேனுகா போட்டோவும் இருந்தது. திருமணத் தேதி புதன்கிழமைன்னு இருந்தது . அதை என் கையில குடுத்துட்டு, என்னைப் பார்த்தாரே ஒரு பார்வை ? அது இன்னும் என்னைத் தூங்க விடாம கொல்லுது . அப்டியே அவர் இறந்துட்டாரு. அப்புறம் அந்த ஃபார்ம்ல இருந்த நம்பர் பார்த்து, இவங்களுக்கு கால் பண்ணி , ஜி.ஹெச் மார்ச்சுவரிக்கு வர சொன்னேன் , அங்க”
“ஜூனைத், ஒரு நிமிஷம் இருங்க” என்று அவனை நிறுத்தினாள் தேனுகா.
“தாத்தா, அவர் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டது ஒரு புறம் இருக்கட்டும். அது முடிஞ்சு போன கதை. ஆனா இந்த வீட்ல யார் இருக்கணும்னு நீங்க உங்க முடிவை சொல்றதுக்கு முன்னாடி ,நான் அது சம்பந்தமா உங்க கிட்ட பேசணும் தாத்தா . நான் இந்த வீட்ல இருக்க விரும்பல , வெளியே போயிடறேன்” அவள் சொல்ல, ஏன் பட்டென இப்படி பேசி விட்டாள்? என எல்லாரும் அவளையே உற்றுப் பார்த்தனர் .
– தொடரும்
No comments yet.