கல்யாணம் முதல் காதல் வரை – 7

Shanmuha Sethuramachandran | 12 Dec 2025 | Share

                           7.

        ” எ…என்னடா  சொல்ற?”  இப்ராஹிம்  தாத்தா   அதிர்ச்சியோடு   வினவினார் .

         “ஆமா  ராதா,   இவங்க  கல்யாணம்  பண்ணிக்க   இருந்த   ப்ரித்வியை  நான்  தான்    கொன்னேன் ”  டேபிளின்  அருகில்  நின்று    கொண்டிருந்த   கதீஜா , பாய்ந்து  அவன்   அருகில்   சென்றார்.

       ” ஜூனைத்   என்ன   சொல்ற  நீ?   கொஞ்சம்   தெளிவா   சொல்லு.   என்  மகன்   ஒரு   கொலைகாரனா   இருக்க  முடியும்னு  என்னால   கற்பனை  கூட   பண்ணிப்  பார்க்க  முடியாது.  என்ன ஆச்சு?  சொல்லு”  அவனது   தோள்பட்டையைப்  பற்றி,  வேகமாக   உசுப்பினாள்.

       “நான்   சொல்றேன்  . ப்ரித்வி   சாவுக்கு   இவர்   தான்   காரணம்னு   இவர்   சொல்லிட்டு   இருக்குறதுக்கு  காரணம்  இவரோட   குற்ற   உணர்வு   தான்.  நான்  ஒரு   லாயர்னு   சொன்னார்ல?  ஆலந்தூர்  கோர்ட்குள்ள  தான்  என்   ஆபீஸ்  இருக்கு.  ப்ரித்வியும்   ஒரு   லாயர்  தான்.  அந்த  ஏரியாவுல   மாடசாமின்னு   ஒருத்தன் , தன்   வீட்ல   வேலை    பாத்துக்கிட்டு   இருந்த  செல்வின்னு   ஒரு   சின்ன  பொண்ணை , அஞ்சு   பவுன்  மதிப்புள்ள   நெக்லசை  திருடிட்டான்னு   சொல்லி , அடிச்சு  துன்புறுத்தி   கொன்னுட்டான் .  அந்த  கேஸ்ல   அவனுக்கு   தண்டனை  கிடைக்க  நானும்   ப்ரித்வியும்  தான்   காரணம் . இது  ஒரு   நாலு   வருஷத்துக்கு  முன்னாடி   நடந்த    விஷயம் . சொல்லப்போனா  அதை  நாங்க   ரெண்டு   பேரும்  மறந்தே  போயிட்டோம்.   ஆனா  அந்த  மாடசாமி, போன   வாரம்   ஜாமீன்ல   வெளிய  வந்துருக்கான்.  எங்க  ரெண்டு  பேரையும்  கொலை   பண்ணனும்னுங்குறது  தான்  அவனோட   முதல்   வேலையா  கருதி,   எங்களைத்   தேடி   அலைஞ்சிருக்கான். என்னோட   கெட்ட   நேரம்,  கோவிலுக்குப்  போறச்சே    நானும்   ப்ரித்வியும்  அவன்  கண்ணுல   பட்டுட்டோம்.   என்னை  ஹாஸ்டல்ல   விட்டுட்டு   அவரோட  ரூம்கு  போயிட்டு  இருந்தப்போ,  பின்  தொடர்ந்து  வந்த   மாடசாமி   அவரை   வெட்ட   வந்து” அதற்கு   மேல்   பேச   முடியவில்லை.  ஹாஸ்பிட்டல்   மார்ச்சுவரியில்,  அதீத  ரத்தப்போக்குடன்   அவள்  கண்ட  காதலனின்  சடலம்  நினைவு  வந்தது.     முகத்தை  கைகளால்  மூடிக்  கொண்டு   தேம்பி  அழ   ஆரம்பித்தாள். சுல்தானாவும்,   கதீஜாவும்   மிகவும்  இளகிய   மனம்   படைத்தவர்கள்  . தேனுகாவின்  கண்ணீரைக்   கண்டு   அவர்களது  மனம்  கரைந்தாலும் ,  அவளை   நெருங்கி  சென்று   தேற்ற   ஏதோ   தடுத்தது.  ஆனால்  அவளது  அழுகையைக்   கண்டவுடன்  ரஷிதாவால்  பொறுக்க   முடியவில்லை.   எழுந்து  சென்று  தேனுகாவை   கட்டிக்   கொண்டாள்.

      “ஒண்ணுமில்ல ,அழாதீங்க .அவர்  மேல  இருந்து   உங்களைப்   பாத்துக்கிட்டு  இருப்பார்.   உங்களுக்கு   ஒரு   நல்ல  கார்டியன்   ஏஞ்சலா  இருப்பார்”  அவளது  செய்கை,  அந்த   வீட்டில்   இருந்த  பெரிய  மனிதர்களின்   மனதைத்   தொட்டது. 

      “இந்தா   பேட்டி ,  தண்ணி   குடி ,அழாத.
என்ன   தான்   அழுதாலும்,   போனவங்க  திரும்பி   வர   மாட்டாங்க .  தண்ணி  குடி”  தண்ணீர்   டம்ளரை   வாங்கி  ஒரு  வாய்  குடித்தாள். “உக்காரு   வா”   டைனிங்  டேபிளில்   காலியாய்   இருந்த   சேர்   ஒன்றில்  , அவளை  அமர  வைத்தார் பாட்டி. ஆனாலும்  அழுகை   ஓய்ந்த   பாடில்லை.  அவள்   அழுது   கொண்டிருப்பதை,  முகத்தில்   எள்ளும்  கொள்ளும்  வெடிக்க  பார்த்துக்   கொண்டிருந்த  தன்  சகோதரிகளைக்   கண்டு  விட்டான்  ஜூனைத் .  எரிச்சல்   மண்டியது. 

      ” ராதி,   நான்   அவளை  மாடிக்குக்  கூட்டிட்டுப்   போறேன்”  

       “சாப்பாடு?”

       “அப்புறமா  வந்து   சாப்பிட்டுக்குறோம்  ராதி . தேனுகா ,  வா”   அவளை  அழைத்துக்  கொண்டு   மீண்டும்   படிகளை   நோக்கி   நடந்தான்.   அவன்   தலை  மறையும்  வரை  அமைதியாய்   இருந்த   தாத்தா  , கொஞ்சம்  தண்ணீர்  குடித்துவிட்டு  பேச ஆரம்பித்தார்.

        “ஜூனைத்தோட   இந்த   அவசரமான  நிக்காவுக்கு   பின்னால   ஏதோ  ஒரு  அசைக்க   முடியாத   காரணம்   இருக்கும்னு  என்  உள்ளுணர்வு  சொல்லிட்டே   இருந்தது.  ஆனா   இப்ப   அந்த   பொண்ணு  சொல்றதைப்  பாக்கும்  போது” 

       “மாமா ,  குறுக்கிட்டுப்   பேசறதுக்கு  என்னை  மன்னிச்சிருங்க . அந்த  பொண்ணும்   சரி  , ஜூனைத்தும்   சரி, இன்னும்   எதையும்   முழுசா  சொல்லல. ஏதோ   சொல்ற  மாதிரி   வந்துட்டு, அப்டியே  அழுதுகிட்டு   போயிருச்சு .அப்டி  இருக்கும்  போது,   நம்மளால   எந்த   ஒரு   தெளிவான  முடிவுக்கும்  வர   முடியாது   இல்லங்களா?  முஸ்தஃபா  முந்திக்   கொண்டு  வந்தா.ர் 

       “நான்   தெளிவான  எந்த   முடிவுக்கும்   இன்னும்   வரவே   இல்ல   மாப்பிளை.  ஆனா   என்   பேரன்   இந்த   குடும்பத்தோட கட்டுப்பாடுகளை   திமிரெடுத்து  மீறலை, அது   மட்டும்   நல்லா   தெரியுது.  அதைத்  தான்    சொல்ல   வந்தேன்”

       “ராதா,  எனக்கென்னமோ  நீங்க  அந்த பாசாங்குக்காரியோட   அழுகையை  நம்பி  ஏமாந்துருவீங்களோன்னு   தோணுது.  தயவு   செய்து   அதை  மட்டும்  பண்ணிடாதீங்க.  எல்லாம்   முதலைக்   கண்ணீர்  . தான்  ஜூனைத்தை   கூட்டிக்கிட்டு   அவ  இங்க   வந்தது,   எங்க   கல்யாணம்  நடந்த  காரணம்னு   ஏதோ   ஒரு   கதையை  ஆரம்பிச்சது  , அதை   முழுசா  சொல்லாம  நடுவுலயே    அழுதுகிட்டு  ஓடுனது,  எல்லாமே    ஏதோ  ஒரு  ப்ளான்னு  தான்  எனக்கு   தோணுது”   நசீமா  வெறுப்பாகப்  பேசி   முடிக்க, 

       “பாபி,   தேனுகா  சொன்னது   பொய்  மாதிரி   எனக்கு    தெரியல.   உங்களுக்கு  அவங்களைப்   பிடிக்கலன்னு  எல்லார்  கிட்டயும்  அவங்களைப்  பத்தி  தப்பா  சொல்லி,  அவங்க   பேரை  கெடுக்காதீங்க”

        “ரஷிதா,  உன்   கனவுகளை  கலைச்சு,   உன்   ப்ரியமான   மாமுவை  கல்யாணம்  பண்ணிக்கிட்டு   வந்தவளுக்கா  நீ   சப்போர்ட்   பண்ணிட்டு   இருக்க?  ஏன்டி  உனக்கென்ன   புத்தி  கித்தி   கெட்டுப்  போச்சா?   முட்டாள்தனமா   பேசிட்டிருக்க”

        “இல்ல   பாபி .  அந்த   மாடசாமியைப்  பத்தி   அவங்க   சொன்ன   எல்லாமே  சத்தியமான   நிஜம்.   ஏன்   நான்   இவ்ளோ  உறுதியா சொல்றேன்னா , நானே  அவனை  நேர்ல   பாத்தேன்”  

        “ரஷி   என்ன   சொல்ற?”

        “ஆமா   நன்னா,   நீங்க   எல்லாரும்   சாயங்காலம்   பார்க்குக்கு   போனீங்கள்ல?  அப்போ   என்ன   நடந்துச்சு   தெரியுமா?  அந்த   மாடசாமி ,  ஒரு   பத்து   இருபது  ஆளுங்களை   கூட்டிட்டு  தேனுகாவை  கொல்றதுக்கு   நம்ம   வீட்டுக்கு  வந்திட்டான்  . கையில  ஒரு   பெரிய  அரிவாளோட .அவனை   என்ன  மாதிரி   டீல்  பண்ணினாங்க   தெரியுமா?  ஒரு  ஜான்சி  ராணி   மாதிரி ,  ஒரு   வேலுநாச்சியார்  மாதிரி  , என்ன   ஒரு   மிடுக்கு?  என்ன  ஒரு  தோரணை ?  அப்பப்பா…  அவங்க  கண்ணுல  துளி  கூட  பயம்  இல்ல. புத்திசாலித்தனமா  அவனை  மிரட்டி,   துரத்தி   விட்டுட்டாங்க.  அவ்ளோ   கோபம்   வர்ற   அவங்க,   நசீமா  பாபி    அவங்களை   தேவையில்லாம  சீண்டி   சண்டை   போடுறப்போலாம்,  ஏன்   பொறுமையா   இருக்கணும் ? நம்ம  பேமிலி  மேல   இருக்குற  மரியாதைனால  தான?” அனைவரிடத்திலும்   ஒரு   மௌனம்  நிலவியது.  

         “நீ   தான்   அவளால   ரொம்ப  ரொம்ப  பாதிக்கப்பட்டு   இருக்க .  எப்டி   உன்னால இவ்ளோ   சீக்கிரத்துல  அவளுக்கு   சப்போர்ட்  பண்ண   முடியுது?”   எனக்கு   ரொம்ப ஆச்சரியமா இருக்கு நிஷா  சொல்ல

         “அம்மா ,  எனக்கு   நான்   நினைச்சது   நடக்கலன்னு   ஏமாற்றம்   இருக்கு.  மனசு  முழுக்க  வலியா   இருக்கு  . அதை  எதையுமே  நான்   மறுக்கல . ஆனா  நான்  பாத்த   நியாயத்தை   வெளிய  சொல்லாம  இருக்குறது   தப்பு   தான?   அதனால  தான்  நசீமா   பாபி   தேனுகா  சொல்றதெல்லாம்  பொய்யினு  சொன்னப்ப,  அதைத்  தாங்க  முடியாம  தான்  எல்லாத்தையும் ,  உங்க  எல்லார்   முன்னாலயும்   சொன்னேன்” 

     ” அத்தா , என்னத்தா?   இங்க   எல்லாரும்  ஒரு   விஷயத்தைப்   பேசிட்டு   இருக்கோம்,   நீங்க   மட்டும்   ஏன்  அமைதியா  இருக்கீங்க?”  ரஷிதாவின்   தாய்   நிஷா,  தன்   தந்தை  இப்ராஹிமைப்   பார்த்தாள்.

        “நிஷா,   நான்   தான்  காலைலயே  சொல்லிட்டேன்ல?   இரண்டு   நாள்ல  சொல்றேன்னு.  நான்   இந்த  விஷயத்தில   ஒரு   திடமான  முடிவு   எடுக்க  எனக்கு   கொஞ்ச  அவகாசம்  வேணும்.   ஆனா  இப்ப  ஜூனைத்தும்,   அந்த   பொண்ணும்,  எதையோ   சொல்ல   வந்து ,  ஒரு   புது  குழப்பத்தை   உருவாக்கியிருக்காங்க.  அது  என்னனு  அவன்  கிட்ட   தீர  விசாரிக்கணும். இன்னிக்கு  என்ன  புதன்கிழமை இல்லயா?  சனிக்கிழமை   காலைல   என்   முடிவை  நான்    சொல்றேன்.   அது   வரையும்  உங்க எல்லாராலயும்   பொறுமையா   இருக்க  முடியும்னு  நினைக்கிறேன்.  இப்போதைக்கு  இந்த   வாதத்தை  இத்தோட  முடிச்சுக்கிட்டு,   பேசாம   சாப்பிடுங்க” .

       “மாமா,   ஒரு   நிமிஷம்” 

       “சொல்லுங்க   மாப்பிளை” 

       “நீங்க , ஜூனைத்துக்கு  இந்த  சொத்துல  பங்கு   குடுக்குறதைப்   பத்திலாம்   நான்  எதுவும்   பேச   மாட்டேன்.   அது   முழுக்க  முழுக்க   உங்க   விருப்பம்.  ஆனா  நான்   இருக்குற   இடத்துல   அவன்   இருக்கக்  கூடாது . அதை   மட்டும்   நீங்க  பாத்துக்கங்க. உங்க   மக   நிஷாவை   நான்  கட்டிருக்கேன்  .எனக்கும்    இந்த   வீட்டுல   நடக்குற   விவகாரங்கள்ல   தலையிடவும்,   என்  எண்ண  ஓட்டங்கள்,   கருத்துகள்   இதையெல்லாம்  வெளிப்படையா  சொல்லவும் , உரிமை   இருக்கு . என்னோட   ஒரே   மகளைக்  கல்யாணம்  பண்ணிக்கிறேன்னு   வாக்கு   குடுத்துட்டு,  அவளை   ஏமாத்தி   காயப்படுத்திருக்கான்.  நானும்,   என்   மனைவி   பிள்ளைகள்  அடங்கிய   என்   குடும்பமும்,  உங்களுக்கு   தேவைன்னு   நினைச்சீங்கன்னா,  எங்க  மனசு   நோகாம   ஒரு   முடிவு   எடுங்க.  நிஷா  ,எனக்கு   சாப்பாடு   போதும்”   பாதி   சாப்பாட்டில்   எழுந்து   சென்று  ,அந்த   குடும்பத்தில்    ஒரு   மோசமான  பழக்கத்தை   முதன்முதலில்   தொடங்கிய  பெருமையை   ஏற்றார்   முஸ்தஃபா.

      “நன்னா,  எங்க   அப்பா   முடிவும்  தான்  எங்க   முடிவும்.  ஜூனைத்தை   இந்த  வீட்ல  இருக்க   நீங்க   அனுமதிச்சீங்கன்னா, நான்,  என்   தம்பி   ஷாரிக் ,  எங்க   அம்மா  அப்பா,  நசீமா  , நஸ்ரின்,   எங்க   தங்கச்சி ,  எங்க   பிள்ளைகள்   யாருமே  இந்த   வீட்ல  இருக்க   மாட்டோம்.    அவன்   ஒருத்தனால  நம்ம   இவ்ளோ   பெரிய   குடும்பம்  உடையணுமா?  நீங்க   எங்க   எல்லாரையும்   விட  மூத்தவர்  ,எல்லாம்   தெரிஞ்சவர்,   புத்திசாலி.   நாங்க  உங்களை   நம்புறோம்,    பாத்துக்கங்க” சொல்லிவிட்டு   ஜமாலும்   தட்டிலேயே   கை  கழுவி   விட்டு   எழுந்து   சென்றான்.  ஷாரிக்கும்    பின்    தொடர்ந்தான்.  “ஏய் , அதான்   நம்ம    வீட்டு   ஆளுங்க   எல்லாரும்   போயிட்டாங்களே?    இன்னும்   எதுக்கு  இங்க    நிக்கிற?   வா”   என   சொல்லியபடி  ,நஸ்ரின்   கையைப்   பிடித்து   இழுத்து  சென்றாள்   நசீமா.   என்ன  செய்வது   ஏது   செய்வது   ஒன்றும்  புரியாமல்    கைகளைப்  பிசைந்து  கொண்டு   நின்றார்    நிஷா.   பின்   கண்ணீரோடு   தந்தையைப்   பார்த்துவிட்டு, தன்னறைக்கு  சென்றார் . விரக்தியான   சிரிப்பொன்றை   உதிர்த்தார்  இப்ராஹிம்   தாத்தா .

       கணவர்   நாற்பத்தைந்து  வருடமாய்  கட்டிக்காத்த   குடும்பம் ,  ஜூனைத்தின்  நிக்காவால்   உடைந்து   விடுமோ ? சுல்தானா  பாட்டிக்கு  முதன்முதலாக  பயம்  வந்தது ….. கலக்கமடைந்தார் …

                                                   – தொடரும்

         

 

        

       
 
      

       

    No comments yet.