64….
“என்ன மாமு இப்டி பேசுறீங்க?”
“வேற எப்டி பேசச் சொல்ற ரஷி? உங்கக்கா தான எனக்கு இந்த வீடு பிடிக்கல இங்க வாழ பிடிக்கலன்னு சொல்லிட்டு இருக்கா? மாடசாமிக்கு தண்டனை கிடைச்சதும் இங்கருந்து கிளம்பி போயிருவா, அப்புறம் எதுக்கு அவ எனக்கு கிஃப்ட் பண்ணனும் ? அவ விஷ் கூட எனக்கு தேவயில்ல” ஜூனைத்தின் கோபமான வார்த்தைகளால் தேனுகாவின் முகம் சுருங்கியது.
“மாமு…..அக்காவ ஏன் ஹர்ட் பண்றீங்க ? சும்மா இருங்க”
“நீ சும்மா இரு”
“இல்ல மாமு”
“ரஷி விடு….. அவர் சொல்றதும் சரி தான?பிரியணும்னு முடிவு செஞ்ச பிறகு என்னை நினைவு படுத்துற மாதிரியான எந்த பொருளும் அவரு கிட்ட இருக்கக் கூடாது தான்”
“ரெண்டு பேரும் இப்படியே விட்டு குடுக்காம பேசிட்டே இருங்க , ஒரு நாள் இல்லனா ஒரு நாள் இத எல்லாம் நினைச்சி நீங்க வருத்தபடற நாள் ரொம்ப தூரத்துல இல்ல” கோபமாகச் சொன்ன ரஷிதா தேனுகாவை பார்த்தாள். “அக்கா, நான் கீழ போறேன் நீங்க வர்றீங்களா?”
” நான் இப்ப கீழ போயிருவேன், நீயும் உங்க அக்காவும் இங்கயே இருங்க ” கப்போர்டைத் திறந்து தன் பர்சை எடுத்த ஜூனைத் , வெளியேறி சென்று விட்டான் . தேனுகாவின் சோகமான முகத்தைப் பார்க்க ரஷிதாவுக்கு பாவமாக இருந்தது. சற்று நேரத்திற்கு முன்னால் அவள் மேல் இருந்த கோபம் இப்போது மறைந்து விட்டிருந்தது…..
“அக்கா”….
“ம்ம்ம்ம்”
“சரி ஃபீல் பண்ணாதீங்க விடுங்க, இன்னக்கி நம்ம வீட்டுக்கு முக்கியமான ஆட்கள் வரப் போறாங்க தெரியுமா?”
“அம்மா சொன்னாங்கடி…. அந்த இன்ஸ்பெக்டர் ரஹ்மான் சாரோட ஃபேமிலி தான?”
“ஆமாக்கா, அவங்க ராதாவும் நம்ம நன்னாவும் திக்கோ திக் ஃப்ரண்ட்ஸ்”
“அப்படியா?”….
“ஆமாக்கா…. அந்த ஃப்ரண்ட்ஷிப் ஸ்டோரிய சொல்லட்டுமா?”
“சொல்லேன் கேப்போம்” தேனுகாவும் கதை கேட்க ஆர்வமாய் தயாரானாள்.
“எங்களுக்கு சொந்த ஊர் திருநெல்வேலி தான்க்கா…..நன்னா இங்க வந்து தான் ஆட்டுத் தோலை பதப்படுத்தி எக்ஸ்போர்ட் பண்ற ஃபேக்டரிய தொடங்கினாரு . அப்புறம் தான் நம்ம ஃபேமிலியோட எகனாமி லெவலும் இன்க்ரீஸ் ஆச்சு . அதுக்கு முன்னால வரைக்கும் மிடில் க்ளாஸ் லைஃப் தான் நாங்க.எங்க அண்ணனுக , பாபிங்க , மாமு, நான்னு எல்லாருமே அங்க தான் பொறந்தோம். அங்க வாழ்ந்துட்டு இருந்தப்ப எங்க பக்கத்து வீட்டுல இருந்தவங்க தான் ஜாகீர் நன்னாவோட ஃபேமிலி. அவங்க ரொம்ப வசதியான குடும்பம் . அவருக்கு மூணு பசங்க அஹமது மாமா….நூருன்னிசா அம்மா, ஃபாத்திமா அம்மானு… எல்லாரும் எங்க மேல ரொம்ப பாசமா இருப்பாங்க . நம்ம பெரிய குடும்பமா இருக்குறதால அடிக்கடி சமையலுக்கு காய்கறிங்க பொருட்கள் லாம் பத்தாது. அவங்க வீட்ல இருந்து தான் குடுப்பாங்களாம் . அங்க ஏதாவது ஸ்பெஷலா சமைச்சா ஒரு பானை நிறைய கொண்டுவந்து குடுப்பாங்களாம். எங்க அண்ணனுங்களுக்கு பல தடவை ஸ்கூல் ஃபீஸ் கூட கட்டிருக்காங்கன்னா பாத்துக்கங்களேன்”
“அப்படியா…..பரவாயில்லயே”
“ஆமாக்கா.. நன்னா மேல ஜாகீர் நன்னாவுக்கு ரொம்ப பாசம். இப்பு….இப்புனு உயிரா இருப்பாரு.. சென்னைக்கு ஷிஃப்ட் ஆகி வந்த பிறகும் கூட நம்ம அப்ப தங்கியிருந்த வீட்ல ஃபோன் வசதி இல்லாததால லெட்டர்லாம் போட்டுட்டு தான் இருந்தோம், சட்டுனு ஒரு பாயிண்ட்ல அதும் விட்டுப் போச்சு…. ஆனா நன்னா அவங்கள நினைக்காத நாளே இல்ல. பல வருசம் கழிச்சு…. இன்னக்கி ரெண்டு குடும்பமும் சந்திக்கப் போறோம் . எனக்கு அவங்க வீட்ல யார் முகங்களும் சரியா நினைவுல கூட இல்ல, ஆனா அவங்கள சந்திக்கப் போறோம்னு நினைச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கு. அவங்க எங்க மேல காட்டுன அன்பு அந்த மாதிரிக்கா…..சுப்ஹான் அல்லாஹ்!!!”
“உனக்கு அவங்கள பாக்கப் போறது எவ்ளோ சந்தோஷமா இருக்குன்னு நீ சொல்றதுலயே எனக்கு தெரியுது ரஷி.. குடும்பம், நட்புகள், உறவுகள் இதெல்லாம் ரொம்ப உன்னதமானது. என்னை மாதிரி எல்லாத்தயும் இழந்துட்டு தனியா நிக்கிறவங்களுக்குத் தான் அதனோட அருமை தெரியும்” சொன்ன தேனுகாவின் கண்களில் கண்ணீர்.
“அக்கா…. நான் ஒண்ணு சொன்னா கோபப்படக் கூடாது . நீங்க தனி ஆள் இல்ல , உங்க மேல அன்பா இருக்குறதுக்காக ஒரு பெரிய கூட்டமே தயார் நிலையில இருக்கு . ஆனா உங்கள தேடி தேடி ஓடி வர்ற உறவை நீங்க தான தள்ளி விடறீங்க?”
“ரஷி”…..
“விடுங்கக்கா…நீங்க என்ன சொல்லப் போறீங்கன்னு எனக்கு நல்லா தெரியும். உனக்கு நான் சொல்றது புரியாது ரஷினு சொல்வீங்க , அது தான? இட்ஸ் ஓகேக்கா, உங்களுக்கு உங்க பிடிவாதமும் வீம்பும் தான் பெரிசு”
………. அதற்கு மேல் அவர்கள் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
“நசீமா……. ஜமாலு…… வாங்க வாங்க” ஆசையாய் ஓடி வந்து மகனையும் மருமகளையும் வரவேற்றார் நிஷா.. வேண்டாவெறுப்பாய் மகனை பார்ப்பது போல நடித்தார் முஸ்தஃபா…
“வாங்க வாங்க” கொள்ளு பேரப் பிள்ளைகளை ஆசையாய் தூக்கினார் இப்ராஹிம் தாத்தா…
“நல்லா இருக்கீங்களா நன்னா?”…
“நல்லா இருக்கேன் ஜமாலு…. நீ
எப்படி இருக்க?”
“நல்லா இருக்கேன் நன்னா”…
” என்ன ராதா ஒரே ஆச்சரியமா இருக்கு ? எங்க கிட்ட பேசல்லாம் செய்றீங்க … எங்கள பாத்தாத் தான் உங்களுக்கு ஷைத்தான் மாதிரி தெரியுமே?” சும்மா இருந்தவரை வம்புக்கு இழுத்தாள் நசீமா.
” நீ திருந்துறதுக்காகத் தான் உன்னை வீட்டை விட்டு அனுப்பினேன், ஆனா நீ இன்னும் செஞ்ச தப்ப கொஞ்சம் கூட உணரலயோன்னு தான் எனக்கு தோணுது நசீமா”
“சும்மா இருங்கத்தா , வந்ததுமே என் மருமகள வசை பாடாதீங்க . ஜமாலு நீ உக்காரு, நசீ… வாடி உள்ள” நிஷா அவள் கையைப் பற்றி உள்ளே அழைத்துச் சென்றார். சமையலறைக்குள் கதீஜா, ஆயிஷா, சுல்தானா பாட்டி மூவரும் பம்பரமாய் சுற்றி வேலை செய்து கொண்டிருந்தனர்.
“அம்மா”….கதீஜாவின் பின்னால் போய் நின்றாள் நசீமா.
” வாடி…..என்ன இவ்ளோ நேரம் கழிச்சு வர்ற? காலையில சாப்பிட்டியா? இல்ல ஜூஸ் ஏதாவது போட்டு தரட்டுமா?”
“அதெல்லாம் வேணாம் சாப்பிட்டுத் தான் வந்தோம் . எங்க உன் அரும மகனையும் ஆச மருமகளயும்?”
“ஜூனைத் வெளிய போய்ருக்கான், தேனு மேல இருக்கா”
“ஏன் மகாராணி இங்க வந்து உங்களுக்கு ஒத்தாசை செய்ய மாட்டாளா ? நீங்க நாலு பேரு மட்டும் தான் வேல செய்யணுமாக்கும்? சரியான ஆளு தான் அவ , ரொம்ப விவரம்”
“ஏன் உன் தங்கச்சி நஸ்ரின் கூடத் தான் காலையில இருந்து இந்த பக்கம் எட்டிக் கூட பாக்கல.. வீட்டுக்கு கெஸ்ட் வராங்கனு தெரியும், என்னென்ன சமைக்கணும்னு நேத்து ராத்திரி அவ முன்னால தான் பேசுனோம் , அவ வந்தாளா என்ன ? அவளையும் தான் திட்டேன்.. தேனுகாவை மட்டும் எதுக்கு புறம் பேசுற?” ஆயிஷா பாய்ந்து கொண்டு வர நசீமா மௌனமானாள்.
“இங்க பாரு நசீமா, ஜாகீர் அத்தா குடும்பம் பல வருசங்கழிச்சு இங்க வர்றாங்க .அந்த சந்தோஷமான நேரத்துல நம்ம வீட்டுல உள்ள பிரச்சனைகள் எதுவும் அவருக்கு தெரிய வேணாம். அவங்க போற வரைக்கும் வம்பு பேசுற உன் வாயை கொஞ்சம் அடக்கி வை” சுல்தானா பாட்டி கறாராக சொல்ல வேண்டா வெறுப்பாய் தலையசைத்தாள் நசீமா…
ஒரு பனிரெண்டு மணி போலவே அவர்கள் வந்து சேர்ந்தனர். பல வருடங்கள் கழித்து பார்த்தவுடன் இப்ராஹிம் தாத்தாவும் ஜாகீர் தாத்தாவும் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு நெடுநேரமாய் ஆனந்த கண்ணீர் பெருக்கினர். இருவரின் குடும்ப நபர்களும் ஒருவருடன் ஒருவர் அளவளாவி மகிழ்ந்தனர். ஜூனைத்துக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினர். தேனுகாவை முன்னால் வரவழைத்து எல்லார் முன்னிலையிலும், “இவங்க தான் தேனுகா .. ஜூனைத் மனைவி” என பெருமையாய் அறிமுகம் செய்து வைத்தார் இப்ராஹிம் தாத்தா… மதக் கோட்பாடுகளை எக்காரணம் கொண்டும் மீறக் கூடாது என உறுதியாக இருக்கும் இப்பு…. இந்த திருமணத்தை எதற்காக ஏற்றுக்கொண்டார் என தோன்றினாலும் , பின்னொரு நாளில் கேட்டுக் கொள்ளலாம் என நினைத்தபடி
“ம்ம்ம்ம் எனக்குத் தெரியும்.. ரஹ்மான் எல்லாம் சொன்னான் இப்பு” என்று சொன்னார் ஜாகீர் தாத்தா…
“சரி சரி”
“உன் உடம்பு இப்ப எப்டிம்மா இருக்கு ? வலி பரவால்லயா?”
“பரவால்லங்க தாத்தா”….
“அத்தா வாங்க, பேசிக்கிட்டே சாப்பிடலாம்”… சுல்தானா பாட்டி அழைக்க,
“சாப்பிடலாம்மா…..அதுக்கு முன்னாடி கொஞ்சம் முக்கியமா பேசணும்.. முஸ்தபா…..நிஷா… இங்க கிட்ட வாங்க”
“சொல்லுங்க மாமா”…
“இப்பு , சுல்தானா , முஸ்தபா ,நிஷா உங்க நாலு பேரு கிட்டயும் கேக்குறேன். என் பேரன் ரஹ்மானுக்கு , என் பேத்தி ரஷிதா பேகத்த கேக்குறேன்.. நிக்காஹ் செஞ்சு தர்றீங்களா?”
– தொடரும்…
No comments yet.