63….
” என்ன ரஷி சொல்ற? என்னால நம்பவே முடியல”
“நான் என்ன பொய்யா சொல்றேன்?”
“சே….நான் அப்படி சொல்லலடி… அந்த விக்ரம் அண்ணா நம்ம ரெண்டு பேரயும் சிஸ்டர் மாதிரி தான் பாக்குறாங்கன்னு நினைச்சேன்”
“நான் ஃப்ரண்டா தான் பழகுறான்னு நினைச்சேன் டி , ஆனா அவன் என்னை லவ் பண்ணிட்டு இருந்திருக்கான் . அது கூட பரவால்ல நானும் அவன் மேல இன்ட்ரஸ்ட்டடா இருக்கேன்னு நினைச்சிருக்கான்” தனக்கும் விக்ரமிற்கும் இடையே நடந்த உரையாடலை ப்ரியாவிடம் முழுதாகச் சொன்னாள் ரஷிதா. கேட்டுக்கொண்டிருந்த ப்ரியா கொதித்துப் போனாள்.
” அவங்க உன்னை லவ் பண்ணினத நான் தப்புனே சொல்லல … ஆனா நீ மனசுல இதைத் தான் நினைக்கிறன்னு சொல்றதுக்கு அந்த ஆள் யாரு?”
“அதான் ப்ரியா எனக்கும் கோபம்”
“சரி விடு, இப்பவாவது அவரு மனசு தெரிஞ்சுச்சே இனிமே நாம அவங்க கூட பேசவே வேணாம் எதுக்கு வம்பு”
“பேச வேணாமா? அந்த திசைப் பக்கமே போகக் கூடாது”
“அதுவும் சரி தான் ..இன்னொண்ணு சொல்ல மறந்திட்டேன் , தப்பி தவறிக் கூட உங்க வீட்டுல இதைப் பத்தி சொல்லிராதடி”
“சொல்ல மாட்டேன் ப்ரியா. அப்படியே யார் கிட்டயாவது சொல்லி புலம்பணும்னு தோணினா தேனு அக்கா கிட்ட மட்டும் ஷேர் பண்ணுவேன்”
“நல்ல முடிவு தான் ரஷி…. வா பஸ் வருது , பேக் டோர் வழி ஏறிக்கலாம் ” பஸ் நிற்கவும் அவர்கள் இருவரும் ஏறினர் “ரஷி…..ரஷி”…. என பின்னால் விக்ரம் அழைக்கும் குரல் கேட்க.. மறந்தும் திரும்பவில்லை ரஷிதா… மாணவர்கள் ஏறிக்கொண்டதும் பஸ் கிளம்பியது . அப்போதாவது தன்னை திரும்பிப் பார்ப்பாளா என ஆவலாய் காத்துக் கொண்டிருந்த விக்ரமிற்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. அவள் திரும்பவே இல்லை.
“என்னடா அஷோக்கு? அவ ஏன் என் மேல இவ்வளவு கோபமா இருக்கா? அவளோட இந்த ஆக்ட்டிவிட்டீஸ் பாக்க மனசு கஷ்டமா இருக்கு”
” ஒரு வேள அவ சொன்ன மாதிரி அவ உன்னை லவ்வே பண்ணலயோ ?நீ தான் தப்பா புரிஞ்சுக்கிட்டியோ?” அவனை முறைத்தான் விக்ரம்.
“முறைக்காத டா, நான் தான் சொன்னேன் அவ உன்னை லவ் பண்றான்னு. ஆனா அதை இல்லனு அவ மறுத்த போது அவ பேச்சுல ஒரு உறுதி தொனிச்சுச்சு”
” பாத்துக்கலாம் டா அடி மேல அடி வச்சா அம்மியும் நகரும்”
“இல்ல விக்ரம் எனக்கென்னமோ இது சரியா வராதுன்னு தோணுது”
“வாய்ப்பே இல்ல. சரியா வராதுன்னு யார் சொன்னாலும் அது சரிப்பட்டு வர்ற மாதிரி நான் மாத்துவேன் . நான் அவள லவ் பண்றேன், அவளும் என்னை லவ் பண்ணனும்”…. அவன் முகத்தில் தெரிந்த பிடிவாதத்தைக் கண்டு முகம் மாறினான் அஷோக்.
“டேய்ய்ய்ய்!!! என்னடா இது ரூல் மாதிரி ஏதோ சொல்லிட்டு இருக்க?… அந்த பொண்ண லவ் பண்ணனும் கல்யாணம் பண்ணனும்னு நினைக்கிறது எப்படி உன்னோட உரிமையோ அதே மாதிரி அவ உன்னை பிடிக்கல வேணாம்னு மறுக்குறதும் அவளோட உரிமை.
ஒரு அளவுக்கு மேல அதுல நாம தலையிட முடியாது”…
” எல்லாம் எனக்கு தெரியும் நீ ஒண்ணும் அட்வைஸ் பண்ண வேணாம். நான் வீட்டுக்கு கிளம்புறேன் பாய்”…
மறுநாள்
மாஷா அல்லாஹ் இல்லம்
ஜன்னலின் அருகே நின்று தோட்டத்தை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள் தேனுகா. முன்பெல்லாம் தன்னை எப்போது பார்த்தாலும் வம்பிழுத்து கொண்டிருக்கும் ஜூனைத் இப்போதெல்லாம் இவள் பக்கம் கூட திரும்புவதில்லை. அவனது பாராமுகம் தேனுகாவை மிகுந்த வேதனைக்குள் ஆழ்த்தியது . ஆனாலும் என் கிட்ட நல்லா பேசுங்க என்று அவனிடம் கேட்பதற்கு உள்ளுக்குள்ளிருந்து ஏதோ ஒன்று அவளை தடுத்துக் கொண்டிருக்கிறது. அது சொல்வதும் சரி தான்.. எதையும் அலசி ஆராயாமல் இன்னொரு முறை காதல் என்ற பந்தத்துக்குள் நுழைய வேண்டாம், பட்டதே போதும் என்பது தான் அவளின் உள்ளக்கிடக்கை. அவள் நினைப்பது சரி தான். ஒருவர் குணத்தைப் பற்றி அலசி ஆராய்ந்து தான் முடிவெடுக்க முடியும் . ஆனால் ஜூனைத்தின் குண நலன்களை ஆராயக் கூட அவள் தயாராய் இல்லை என்பது தான் தவறு…
“தேனு”…..அழைத்துக்கொண்டே உள்ளே வந்தார் ஆயிஷா
“சொல்லுங்கமா”…
“அங்க நின்னு என்ன செஞ்சுக்கிட்டு இருக்க ? என்னாடி இது? பீட்ரூட் ஜூஸ் அப்டியே இருக்கு, குடிக்கலயா இன்னும்?”
“குடிக்கணும்மா…. பசிக்கல”
” சரி , இன்னக்கி மதியம் உனக்கு சாப்பிட என்ன வேணும்?”
“என்னமா திடீர்னு இப்படி கேக்குறீங்க ? நீங்க எல்லாரும் என்ன சாப்பிடறீங்களோ அதே தான எனக்கும்?”
“ஓ…..நாங்க லாஃப்ஸ்டர் , ப்ராண், அப்புறம் க்ராப்ஸ் தான் சாப்பிடப் போறோம். உனக்கும் அதையே கொண்டு வந்து தரட்டுமா ? கேக்குற பாரு கேள்வி”
“ஹாஹா…..எனக்கு ரசம் சாதமும் தயிர் சாதமும் போதும்மா…. கூட சாலட் மாதிரி ஏதாவது சாப்பிட்டுக்குறேன். ஏன் இன்னக்கி இவ்ளோ ஸ்பெஷல் அயிட்டம்ஸ்? வீட்டுக்கு யாராவது கெஸ்ட் வர்றாங்களா?”தேனுகா ஆர்வமாய் கேட்க, அவளை உற்றுப் பார்த்தார் ஆயிஷா.
“நிஜமாவே இன்னக்கி என்ன நாள்னு உனக்கு தெரியாதா? இன்னைக்கு ஜூனைத் பிறந்த நாள்”
“அ….அப்படியாமா? எனக்கு உண்மையாவே தெரியாது அவரும் என் கிட்ட சொல்லல”
“அது எப்டி அவனா வந்து சொல்லுவான் ? தேனு, எனக்கு பர்த் டே விஷ் பண்ணுனு அவன் சொல்லணுமா? உங்க விஷயத்தில தலையிட எனக்கு உரிமை இல்ல தான் , ஆனா உன்னை மிரட்டி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்குற காரணத்துக்காக நீ ஜூனைத்த தண்டிக்கிறேன்னு உன்னைத் தான் தண்டிச்சுக்கிற.. எதை செய்தாலும் ஒரு முறைக்கு நாலு முறை யோசிச்சு செய். அல்லாஹ்வோ , இல்ல நீ கும்பிடுற சாமியோ, யாரா இருந்தாலும் சும்மா சும்மா உனக்கு வாய்ப்புகள் குடுத்துக்கிட்டு இருக்க மாட்டாங்க”
…………….
” மஷ்ரூம் பிரியாணியும், கோபி மஞ்சூரியனும் செய்யுறேன் உனக்கு”
“வேணாம்மா…. நான் ரசம் மட்டும் சாப்பிட்டுக்குறேன் என் ஒருத்திக்காக எதுக்கு சிரமப்பட்டுக்குறீங்க?”
“அதெல்லாம் ஒரு சிரமமும் இல்ல… எல்லாருமே கொஞ்ச கொஞ்சம் சாப்பிட்டுக்க போறோம் அவ்ளோ தான?
அப்புறம் உன் கிட்ட ஒரு சின்ன வேண்டுகோள் இருக்கு”
“என்னதுமா?”
“இன்னக்கி ஜாகீர் அத்தா குடும்பமும் ஜூனைத் பிறந்தநாளுக்காக இங்க வர்றாங்க . அவங்க முன்னால நீ கோப முகம் காட்ட வேணாம். உனக்கும் ஜூனைத்கும் நடுவுல இருக்குற பிரச்சனை அவங்களுக்கு தெரிஞ்சா ரொம்ப ரொம்ப கவலைப்படுவாங்க”
“அம்மா என்ன இப்படி பேசுறீங்க? இதெல்லாம் எனக்கே தெரியும் மா”
” இல்லமா, உனக்கு இன்னும் பல விஷயங்கள் தெரியல , புரியல. அதனால தான் எத்தன பேர் எடுத்து சொன்னாலும் இன்னும் உன்னோட பிடியிலயே நின்னுட்டு இருக்க”
………….
” நான் உன் கல்யாண வாழ்க்கைய பத்தி என்ன பேசுனாலும் அதுக்கு நீ பதில் சொல்ல மாட்ட?…..அப்படி தான?”
” அம்மா”….
“சரி போதும் தேனு, நீ இந்த மாதிரியே இரு . உன்னை நான் எதுவும் கேக்க மாட்டேன். ஜூச கட்டாயமா குடிச்சிரு , நான் போய் சமைக்கிறேன்”
“அக்கா”…..குதித்துக்கொண்டே உள்ளே வந்தாள் ரஷி.. “ஆயிஷாம்மா, என்ன இங்க நிக்கிற ?பொதுவாவே சண்டேனாலே ஜாலி தான் இதுல இன்னக்கி சூப்பர் சண்டே வேற… மாமுவோட பர்த்டேக்கு அத்தனை ஸ்பெஷல் அயிட்டம்ஸ் செய்யப் போறேன்னு சொல்லிட்டு எதுக்கு இங்க நின்னு டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க? அக்காவ என்கேஜ் பண்ணத் தான் நான் இருக்கேனே? நீ போய் சமையல கவனி, ஓடு”….
“போறேன்டி, நீ அக்கா கூட இரு” ஆயிஷா கிளம்பிவிட
“கா…..ஜூஸ் இன்னும் குடிக்கலயா? இந்தாங்க குடிங்க , மாமுவுக்கு என்ன கிஃப்ட் கா குடுக்கப் போறீங்க? ஈவ்னிங் கேக் கட்டிங்கின் போது குடுங்க ,அப்ப தான் நல்லா இருக்கும்”
” அவருக்கு இன்னக்கி தான் பர்த்டேனு எனக்கு தெரியவே தெரியாது ரஷி, இப்பத் தான் … அதுவும் ஆயிஷாம்மா சொல்லித் தான் தெரியும்”
“ஓ….அப்படியா?…சரி அதனாலென்ன ? இப்ப தெரிஞ்சுருச்சே ? உடனே அமேசான்ல ஏதாவது ஆர்டர் பண்ணுங்க….ஓ வர லேட் ஆகுமோ?”….
………..
“வாங்கக்கா, கடக்கி போலாம்.. நேர்லயே போய் அவருக்கு பிடிச்சது எதையாவது வாங்கிட்டு வரலாம்”
“என்னடி வாங்குறது அவருக்கு என்ன பிடிக்கும்னு எனக்கு தெரியாதே”
“ஆமால்ல…. நான் அத மறந்தே போயிட்டேன் நீங்க அவரு கிட்ட நல்லா பேசினாத் தான அவருக்கு பிடிக்கிற விஷயங்கள்லாம் உங்களுக்கு தெரியும்? என்னக்கா முறைக்கிறீங்க? சரி விடுங்க உங்களுக்கு பிடிச்ச பொருள் எதையாவது வாங்கிக் குடுங்க”
“அவ என்ன வாங்கிக் குடுத்தாலும் நான் வாங்கிக்க மாட்டேன் ” சொல்லிக்கொண்டே அறைக்குள் நுழைந்தான் ஜூனைத்…
– தொடரும்…
No comments yet.