60…
“என்ன விக்ரம் சார் பாத்துட்டும் பாக்காத மாதிரி அந்த பக்கம் திரும்பிக்கிறீங்க ? இந்த ரஷிதா உங்கள அப்படி என்ன செஞ்சிட்டா?”
…………..
“உங்க கிட்ட தான் பேசிக்கிட்டு இருக்கேன் விக்ரம் , என்னாச்சு?”…
……………
” என்னங்க இப்டி இன்சல்ட் பண்றீங்க? இதெல்லாம் நல்லா இல்ல”
“அ….அது….. அது….. இல்லங்க ரஷி , நான் உங்க வீட்டுக்கு வந்ததால பெரிய ப்ராப்ளம் ஆகிருச்சுனு நேத்து தான் ப்ரியா சொன்னாங்க. கேட்டதும் ஒரு மாதிரி சங்கடமா போயிருச்சு…. அந்த ப்ராப்ளத்துக்கு பிறகும் உங்கள மறுபடியும் காலேஜ் அனுப்பினதே பெரிய விஷயம் இல்லயா ? அந்த பையன் கூட பேசாத அது இதுன்னு சொல்லித் தான் அனுப்பிருப்பாங்க , நீங்க என்னை அவாய்ட் பண்ணினா எனக்கு கஷ்டமா இருக்கும். அதனால தான் நானே உங்க கிட்ட பேசாம இருந்துக்கலாம்னு”….
“எங்க வீட்டுல பிராப்ளம்னு”….
“ஆமா , அதான் சொன்னேனே ப்ரியா சொன்னாங்கன்னு”.இதயெல்லாம் போய் இவரு கிட்ட சொல்லி வச்சுருக்காளே இந்த ப்ரியா மனதுக்குள் தோழியை திட்டினாள் ரஷிதா.
“சாரிங்க, இனிமே என்னால உங்களுக்கு எந்த ட்ரபுளும் வராது”
“லூசு மாதிரி பேசாதீங்க விக்ரம்”
“லூசா?…..நானா?”
“ஆமா , பிறகென்ன.. எங்க அம்மா அந்த காலத்து ஆளு இல்ல , கொஞ்சம் கட்டுப்பட்டியானவங்க கூட.. ஏதோ விவரம் இல்லாம பேசிட்டாங்க, அதுக்குனு கூட படிக்கிறவங்க கூட பேசாம பழகாம இருக்க முடியுமா? அதுவும் மத்த ஆட்களை விட நீங்க எனக்கு ரொம்ப ஸ்பெஷல் வேற”
“ஸ்பெஷலா? வாட் டூ யூ மீன்?” ஆச்சரியமாகக் கேட்டான் விக்ரம்.
“ஆமா விக்ரம் , இந்த காலேஜ்ல எனக்கு கிடைச்ச ஃபர்ஸ்ட் ஃப்ரண்ட் நீங்க தான் . அதனால எப்பயுமே நீங்க எனக்கு ஸ்பெஷல் தான். அம்மாவை ஈசியா சமாளிச்சுருவேன், இதுக்குப் போயி என்ட்ட பேச வேணாம்னு நினைச்சுட்டீங்க பாத்தீங்களா?” புன்னகையோடு அவள் பேசப் பேச விக்ரமிற்கு தான் அந்தரத்தில் பறப்பது போன்ற ஒரு உணர்வு.
“சாரி ரஷி…..உங்கள ஹர்ட் பண்ணனும்னு நான் அந்த மாதிரி செய்யல , என்னால உங்களுக்கு எந்த பிரச்சனையும் வரக் கூடாதுன்னு தான்”..
“விடுங்க” அவள் பொய் கோபத்தோடு முகத்தை அந்த பக்கமாய் திருப்பிக் கொண்டாள். அந்த செய்கை, அவள் அவனிடம் மிகவும் நெருங்கி விட்டதை தெளிவாக எடுத்துக்காட்ட
“என்ன ரஷி , நான் தான் சாரி சொல்லிட்டேன்ல ? இன்னும் என் மேல கோபமா ? உங்க கோபத்தை குறைக்க என் கிட்ட சூப்பரா ஒரு ஐடியா இருக்கு. வாங்களேன், எதிர்த்தாப்ல இருக்குற ஐஸ் க்ரீம் பார்லர்ல போயி ஒரு ஐஸ் க்ரீம் சாப்பிடலாம்.. அதை சாப்பிட்டா கூல் ஆகிருவாங்க, ஓகே வா?”
“அய்யோ ! ப்ரியாவ விட்டுட்டு ஐஸ்க்ரீம் சாப்பிட்டா அவ என்னை கொன்னே போட்டுருவா. அதனால இன்னொரு நாள் நீங்க நான் , ப்ரியா , அப்புறம் உங்க கூட இருப்பாரே அஷோக் அண்ணா எல்லாரும் ஒண்ணா போய் சாப்பிடலாம்” ரஷிதா சொல்லிக்கொண்டிருந்த அதே நேரம், பாம்ம்ம்ம்ம்ம் என ஒலியெழுப்பிக் கொண்டே வந்தது அந்த பேருந்து.
” ஓகே விக்ரம், நான் ஏற வேண்டிய பஸ் வந்திருச்சி, நாளைக்கு பாக்கலாம். பாய்ய்ய்ய்ய்” ஓடிப் போய் அந்த பஸ்சில் ஏறினாள் அவள்.
“பாத்துப் போ ரஷி…..பாய்” பஸ் கண்ணில் இருந்து மறையும் வரை இமைக்காமல் பார்த்துக்கொண்டே நின்றிருந்தவனின் தோளை யாரோ தட்ட, திரும்பினான். அஷோக்…
“டேய்ய்ய்ய் அஷோக்கு…..நானும் அவளும் பேசினது எல்லாம் கேட்டியா?”
“ம்ம்ம் கேட்டேன் கேட்டேன், கேட்டுட்டு தான வர்றேன்? அவ உன் கிட்ட பேசுனத வச்சு பாத்தா அவளுக்கும் உன் மேல இன்ட்ரஸ்ட் இருக்குன்னு தான் நினைக்கிறேன்”
“டேய்ய்ய்ய்ய் உண்மையாவா டா?” சந்தோஷத்தில் கண்களை அகல விரித்தான் விக்ரம்.
“ஆமா விக்கு…..நம்ம பி.ஜி படிக்குறோம் , இந்த நாலு வருசத்துல நம்ம காலேஜ்ல எத்தனை லவ் ஜோடிகள பாத்திருக்கேன்? அதை வச்சுத் தான் சொல்றேன்.. நம்ம ப்ளான் பண்ணின மாதிரி கரக்டா நீ அவ கண்ணுற படற மாதிரி வந்த, அவங்க வீட்டுக்கு முந்திரிக்கொட்டைத் தனம் பண்ணி நீ போனதால அங்க அவ்ளோ பெரிய பிரச்சனை நடந்துருக்கு, ஆனா அவ அந்த தடமே இல்லாம உன் கிட்ட அவளாவே பேச வந்தா, நீ பேசாம சீன் போட்ட அப்பயும் கூட”
“நானா டா சீன் போட்டேன்? நீ தான அவளே வந்து பேசினாலும் பேசாதன்னு சொல்லி குடுத்த?”
“லூசு, அதத் தான் நானும் சொல்றேன். உனக்கு அந்த பொண்ணு மேல இன்ட்ரஸ்ட் அண்ட் லவ் வந்திருச்சுனு சொல்ற ,அதே ஃபீல் அவளுக்கும் உன் மேல இருக்கான்னு தெரியணும்ல? அதுக்காகத் தான் இந்த நாடகம் .இப்ப என்ன , அந்த நாடகத்தால உனக்கு நல்லது தான நடந்திருக்கு? அவளா வந்து பேசிட்டா.. நீங்க எனக்கு ஸ்பெஷல்னு சொல்லிட்டா … எல்லாத்துக்கும் மேலா”…..
“மேலா?”… விக்ரமின் இதயத்துடிப்பு லேசாய் எகிறியது.
“அவ உன்னை விக்ரம்னு சொல்லித் தான் கூப்பிடுறா”
“எனக்கு என் அப்பா அம்மா வச்ச பேரு விக்ரம் தான், அப்ப எல்லாருமே அப்படித் தான கூப்பிடுவாங்க?”
“என்ன ஜோக்கா? இந்த கேவலமான மொக்கை ஜோக்கெல்லாம் என் கிட்ட சொல்லாத , மூக்க உடைச்சிருவேன் … நாயே, நீ அவள விட மூணு வருஷம் மூத்தவன் .. அவ உன்னை அண்ணன்னு கூப்பிடாம விக்ரம்னு கூப்பிடுறா”
“அட ஆமா….. நான் அதை யோசிக்கவே இல்ல”
” பல்லைக் காட்டாத, பயமாயிருக்கு… அவ்ளோ தான், உனக்கு ஆள் செட் ஆகப் போகுது, எப்ப உன் லவ்வை ரஷிதா கிட்ட சொல்லப் போற?”
“அடுத்த வாரம் அவ பர்த்டே, அவ சர்ட்டிஃபிகேட்ல பாத்தேன் . அன்னைக்கு சொல்லலாம்னு இருக்கேன்”
“பாத்துடா……பக்குவமா சொல்லு, இது இண்டர் ரிலிஜியன் மேட்டர் வேற”
“அடேய்ய்ய், முதல்ல நான் அவ கிட்ட ப்ரப்போஸ் பண்றேன், அவ ஓகே சொல்லிருவா , நானும் அவளும் கொஞ்சம் லவ் பண்ணிக்குறோம். இந்த ரிலிஜியன்லாம் கல்யாணத்த பத்தி பேசும்போது யோசிச்சுக்கலாம் . எனக்கு நம்பிக்கை இருக்குடா, ரஷி எனக்குத்தான் .. எனக்கே எனக்கு தான்”
மூன்று நாட்கள் கழித்து….
அன்று தான் தேனுகாவை ஹாஸ்பிட்டலிலிருந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து வரும் நாள். ஜூனைத்தும் ஆயிஷாவும் அவளை அழைத்து வர சென்றிருந்தனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் வீட்டில் இருந்த ரஷிதா, தேனுகாக்கா வரும் போது அறை சுத்தமாக இருந்தால் நல்லா இருக்குமே சுத்தம் செய்யலாமா என யோசித்துக் கொண்டிருந்த போதே, சுல்தானா பாட்டி அவளது அறைக்குள் வந்தார் “ரஷி”…..
“நன்னி”
“தேனுவோட பொருள்களயெல்லாம் எடு , மேல போயி ஜூனைத் ரூம்ல வச்சுட்டு வந்துரலாம்”
“ஏன் நன்னி? அக்கா இங்க என் கூடவே இருக்கட்டுமே, மாமு ரூம்ல போய் வச்சா அக்கா என்னய தான் சத்தம் போடுவாங்க, கோவிப்பாங்க”
“உங்க நன்னா தான் இதை செய்ய சொன்னாரு ரஷி. தேனு இனி ஜூனைத் கூட தான் இருக்கணும், கொஞ்ச கொஞ்சமா பேசி தன்னை அவளுக்குப் புரிய வைக்கணும்னு விரும்புறான்.. அதை நம்ம ஏன் கெடுக்கணும்னு சொல்றாரு உங்க நன்னா”….
“ஆமா, அதுவும் சரி தான். நீங்க இருங்க, நானே போயி மாமு ரூம்ல அக்கா ட்ரெஸ்லாம் வச்சுருறேன்”
“என்னாது? அந்த பொல்லாத தேனுகா திரும்ப இங்க வர்றாளா?” ரஷிதாவின் அறை வாசலில் நின்று கொண்டு அலறினாள் நஸ்ரின்.
” ஆமா”
“அவ தான் அன்னைக்கே இனிமே இங்க வரவே மாட்டேன்னு சொல்லிட்டு பையோட கிளம்பிட்டாள்ல? திரும்ப எதுக்கு இங்க வர்றா ? அதுவும் இல்லாம எதுக்கு ஜூனைத் ரூம்ல தங்கப்போறா?”
” இங்க பாரு நஸ்ரின் , அவளுக்கும் இது உரிமைப்பட்ட வீடு தான். இங்க வராம வேற எங்க போவா?”
“என்னா சொன்னீங்க ? உரிமைப்பட்டா வீடா? என்னைக்காவது அவ அப்படி சொல்லிருக்காளா? இங்க இருக்க பிடிக்கல இங்க இருக்க பிடிக்கலனு தான சொல்லிக்கிட்டு இருப்பா? ஒண்ணு மட்டும் எனக்கு புரியவே இல்ல, நம்ம உறவே வேணாங்குறவள எதுக்கு எப்பப் பாத்தாலும் தாங்கிக்கிட்டு இருக்கீங்க? அப்படி என்ன அவ தெய்வீகப் பிறவி? சொல்லுங்க, உன்னத் தான் கேக்குறேன் ராதிம்மா… சொல்லு”….
” ஏய் ரஷி , என்ன இவள பாத்துக்கிட்டு அப்படியே நின்னுக்கிட்டு இருக்குற? இவ இப்படித் தான் என்னத்தயாவது பேசிக்கிட்டு இருப்பா. நீ வா பொருள தூக்கு, நமக்கு வேல இருக்கு. இவள மாதிரி சும்மாவா இருக்கோம்” என்றார் பாட்டி. அதே நேரம், வாசலில் போலீஸ் ஜீப் ஒன்று வந்து நிற்க , அதிலிருந்து இறங்கினார் சப் இன்ஸ்பெக்டர் ரஹ்மான்…
– தொடரும்….
No comments yet.