கல்யாணம் முதல் காதல் வரை – 59

Shanmuha Sethuramachandran | 23 Feb 2026 | Share

                            59…

        ஹாஸ்பிட்டல் 

  காலையில்   தேனுகா   கண்   விழித்த   சமயத்தில்   இருந்தே    அவளிடம்   தனியாகப்   பேச   வேண்டும்   என   தவியாய்   தவித்துக்   கொண்டிருந்தான் ஜூனைத் .  ஆனால்   தேனுகாவை    சுற்றி  எப்போதும்   ஆட்கள்   இருந்துகொண்டே     இருந்ததால்   மதியம்   தான்   அதற்கான   வாய்ப்பு   அவனுக்கு  கிடைத்தது . கதீஜா,  ஆயிஷா , சுல்தானா    மூவரையும்    சாப்பிட   அனுப்பிவிட்டு   இவன்   மட்டும்   அவளுடன்   அமர்ந்திருந்தான்.  பேச   வேண்டும்   என்று   நினைத்தானே   தவிர   என்ன   பேசுவது   என்று   தெரியவில்லை.   இருவருக்கும்   இடையில்   கனத்த   மௌனம்   நிலவியது.  அவன்   பேசட்டும்   என்று   அவளும்,  அவள்   பேசட்டும்  என   அவனும்   மௌனம்   காத்தனர்.   இறுதியில்   ஜூனைத்   அந்த   மௌனத்தை   கலைத்தான். 

           “தேனுகா”….  அவள்   என்ன  மாதிரி   ரியாக்ட்   செய்கிறாள்   என்பதற்காகத்   தான்   வேண்டுமென்றே   அவன்  ஹனி   என்று   கூப்பிடாமல்   தேனுகா  என   அழைத்தான்.   என்ன   இவன்   எப்பயுமே   இப்படி   கூப்பிட  மாட்டானே  என  யோசித்தாலும்   அதை   கண்டு   கொள்ளாமல்  அவனை   பார்த்தாள்.

          “ஐ   அம்   சாரி  , என்   அத்தை    உன்னை   நோகடிக்குற   மாதிரி   பேசினதால   தானே   நீ   அன்னைக்கு   வீட்டை   விட்டு   கிளம்புன?” 

        “அதெல்லாம்   விடுங்க , பரவாயில்ல,  நடந்து   முடிஞ்சத   பத்தி   பேசறதால   ஒரு   பயனும்   இல்லங்க” 

         “இல்ல  , பயன்   இருக்கு. ஒரு   கெட்ட   விஷயம்   நடந்திருந்தா  அதைப்   பத்தி   சம்மந்தப்பட்டவங்க   ரெண்டு   பேரும்   உக்காந்து   பேசி   முடிக்கணும்,   அப்போ  தான்   அந்த   கெட்ட   விஷயம்   மறுபடி   நடக்காது.   புரியுதா?   ராதா   கூட   சொன்னாரு   நீயும்   தேனுவும்   வேற   வீட்டுக்குப்   போயி   தனியா   இருங்கனு”

        “எதுக்குங்க   தனி   வீடு ?” அவள்   அப்படி   கேட்டவுடன்   ஜூனைத்திற்கு   சந்தோஷமாக   இருந்தது.

         “ம்ம்ம்ம் ..  அது   தான்   நானும்   நினைச்சேன்  . ராதாவுக்கு   பயம் ..  நிஷா  அத்தை,   நஸ்ரின்   ஆப்பா   மாதிரியான   ஆட்கள்   மறுபடியும்   ஏதாவது   சொல்லி   உன்னை   காயப்படுத்திரக்   கூடாதுன்னு   யோசிச்சுத்  தான்  தனியா   போயிருங்கனு   சொன்னாரு.  அவரு   கிட்ட   திட்டவட்டமா   சொல்லிட்டேன் ,  தேனுகா   என்   மனைவி   இனிமே   யாரும்   அவளை   நோகடிக்காத   மாதிரி   பாத்துக்குறது   தான்   என்   முதல்   வேலைன்னு ..   பயப்படாத , நான்   தனி   வீடெல்லாம்   பாக்கப்   போறது   இல்ல”

        “இல்ல   ஜூனைத் ,  நான்   கேட்ட   கேள்விய   நீங்க  தப்பா  புரிஞ்சுக்கிட்டீங்க   போலருக்கு.   நான்   தான்   இனிமே  உங்க   வீட்டுக்கு   வர   மாட்டேனே,  என்ன   அப்படி  பாக்குறீங்க? எல்லார்   கிட்டயும்  சொல்லிட்டு   தான  கிளம்புனேன்?  மறுபடியும்   அங்க   வர   நான்   என்ன   முட்டாளா?   எனக்கு   ஒரு  ஹெல்ப்    பண்றீங்களா ? என்   ஃபோன்   மட்டும்   எங்கனு   பாத்து   கொஞ்சம்   எடுத்து   தாங்களேன்,  மூர்த்தி   அண்ணா   கிட்ட   பேசணும்”  நாற்காலியை   தள்ளிக்கொண்டு  கோபமாய்   விருட்   என   எழுந்தான்  ஜூனைத் 

         “தப்பு   பண்ணிட்டேன்,   உன்   மேல   கோபமா   இருந்தேன்ல  ? உன்   கிட்டலாம்   எப்பயும்   அப்படி   தான்   இருக்கணும்   போல.   நல்லதனமா  மனசு   விட்டு   வெளிப்படையா  பேச   வந்தேன்   பாரு,   என்னைய   தான்   சொல்லணும்.  இனி   நீ   என்   வீட்டுக்கு   வரக்   கூடாது,   எங்க   வேணாலும்   போ,   அதைப்  பத்தி  இனிமே   எனக்கு  எந்த    கவலையும்   இல்ல”

         “அய்யோ   ஜூனைத்!!!   ஏன்   இப்ப   இவ்வளவு   கோபம்?   ஒரு   நிமிஷம்   நின்னு   நான்   சொல்ல  வர்ற   விஷயத்தை   கேட்டுட்டுப்   போங்க.   உங்களுக்கு   தெனாலிராமன்   கதைகள்  தெரியுமா?   அதுல   பூனைக்   கதை   ஒண்ணு  வரும்  அதை   கேள்விப்பட்டிருக்கீங்களா?”

         ” நான்   எந்த   கதையையும்  கேள்விப்பட்டதில்ல.  இப்ப   எதுக்கு   நீ    சம்மந்தம்   இல்லாம   பேசிட்டு   இருக்க?”

         “சம்மந்தம்    இருக்குங்க .. முதல்ல   அந்த    கதைய   கேளுங்க. ஒரு  நாள்   ஒரு   பூனைக்கு   ஒரு   பாத்திரத்துல   கொதிக்க   கொதிக்க  பால்  வைச்சாங்களாம்,   அந்த   பூனை   ஆசையா   வந்து   அந்த   பாத்திரத்துல   வாய்   வச்சிருச்சு,   வாய்   வெந்து   போயிருச்சு  . அடுத்த   நாள்  ஆறுன   பாலை   அதே  பாத்திரத்துல   வச்சாங்க.   பூனை   இந்த   பாலும்   சுட்டுரும்னு   நினைச்சு   அந்த   பால்    பாத்திரம்   பக்கமே   வரலயாம்.  அந்த   பூனை   அடுத்து   பால்   கிட்ட   நெருங்கவே   இல்லயாம்.  இப்ப   நான்  சொல்ல   வர்றது   உங்களுக்குப்   புரிஞ்சுருக்கும்னு    நினைக்கிறேன்.   அந்த   பூனை   தான்   நான் ,  அந்த   பால்   தான்   காதல்….  என்னைப்   பொறுத்தவரை   ஏற்கனவே  காதல்னால   சூடு   பட்டுட்டேன்.   இன்னொரு   தடவை   எனக்கு   அது   வேணாம். ப்ளீஸ்… என்னை  புரிஞ்சுக்கங்க.   புரியாம   கல்யாணம்   தான்   பண்ணிட்டீங்க,   புரிஞ்சுக்கிட்டு  விட்டுட்டாவது   போங்க”   தன்   மனதை   கல்லாக்கிக்   கொண்டு   தான்   பேச   நினைத்ததை   பேசிவிட்டாள்   தேனுகா.

         “நல்லாத்   தான்   பேசுறீங்க  ,  கேக்க   ரொம்ப   நல்லா   இருக்கு..  மேடம்   லாயர்   இல்லயா?   நல்லா  வியாக்கியானமாத்   தான்   பேசுவீங்க . நீங்க   சொன்ன   கதைக்கே   நானும்   வர்றேன்,   அந்த   பூனைக்கு   அஞ்சறிவு   தான்,   நல்லது  எது   கெட்டது   எதுன்னு   அதுக்கு   பிரிச்சு   பாக்க   தெரியாது . ஆனா   நீங்க   மனுஷி..   சூடான   பாத்திரம்   எது ,  ஆறின   பாத்திரம்   எதுனு   அதுக்கு   வேணா   தெரியாம   இருக்கலாம்.   ஆனா   உங்களுக்கு   ப்ரித்வி   எப்படி   நான்   எப்படினு   பகுத்துப்   பாக்க   தெரியுமே?   ஆனா   பிரிச்சு   பாக்க   மாட்டேன்,  உக்காந்து    யோசிக்க   மாட்டேன்னு   நீங்க   வீம்பா   இருக்கும்   போது   இனி   நான்   ஒண்ணுமே   செய்ய   முடியாது . எத்தனையோ   தடவை   என்னை   பேச   விடுங்கன்னு    உங்க   கிட்ட   நான்   கெஞ்சிருக்கேன் ,  ஆனா   அதை   நீங்க   கண்டுக்கிட்டதேயில்ல   பட்   இனிமே   எதுக்காகவும்   உங்கள   நான்   வற்புறுத்த   போறதேயில்ல .  உங்க   மனசுக்கு   எங்க   தங்கணும்னு   தோணுதோ   அங்க   நீங்க தங்கிக்கலாம்   சரியா?”‘ 

         “ரொம்ப   தாங்க்ஸ்   ஜூனைத்,   என்னை   புரிஞ்சுக்கிட்டதுக்கு   நன்றி.   நீங்களே   இந்த   விஷயத்த   தாத்தா   பாட்டி   கிட்ட   சொல்லிடுங்களேன்”

        “அது   என்   வேலை   கிடையாது   ஐ  அம்   சாரி.   ஆனா   எனக்கு   உங்க   கிட்ட   ஒரு   வேண்டுகோள்   இருக்கு”

         “என்னது?”

         “கேக்கலாமா?”

        “கேளுங்க”

       “செய்வீங்களா?”

       “நீங்க   முதல்ல   கேளுங்க”

       “உங்கள   குத்துன    அந்த   ஆளையும்   குத்த   சொன்ன   மாடசாமியையும்   போலீஸ்   அரஸ்ட்   பண்ற   வரை   நீங்க   எங்க   வீட்லயே   இருக்கணும்”  

        ………….

       “என்னோட   இந்த   வேண்டுகோளை  முழுக்க   முழுக்க   உங்க   பாதுகாப்பு   கருதி,  ஒரு   மனிதாபிமான   எண்ணத்துல    தான்   வைக்கிறேனே   தவிர   வேற   எந்த   உள்   நோக்கமும்   இல்ல. யோசிச்சு   உங்க  முடிவ   சொல்லுங்க   நான்   போறேன்”   கதவைத்   திறந்து   வெளியே   போய்விட்டான்  ஜூனைத்.    அவன்   வெளியேறிய   அதே   நேரம்   எதிரே   வந்தார்   சுல்தானா  பாட்டி.

       “என்னப்பா   கிளம்பிட்டியா?”

       “ஆமா   ராதி,  ஆஃபீஸ்   போகணும்” 

        “சாப்பாடு?”

       “அதுக்கெல்லாம்   நேரமில்ல,  போற   வழியில   சாப்பிட்டுக்குறேன்”

      ” நில்லுடா..   அவசரமா   போற,  அப்புறம்   சாப்பிட   எங்க    நேரம்   இருக்கும் ? உனக்கும்    சேத்து   தான்   கதீஜா   டிஃபன்   பாக்ஸ்ல   சாப்பாடு   எடுத்துட்டு   வந்துருக்கா . ஒரு   பத்து   நிமிசம்   இங்கயே   உக்காந்து   சாப்பிட்டுட்டு    போ”

         “ராதிம்மா”….

        “சொன்னா   கேளு   ஜூனைத்.  போ,   போய்   சாப்பிட்டுட்டு   கிளம்பு.   அவ   கண்ணு   முழிக்கட்டும்,   அப்புறமா   சாப்பிட்டுக்குறேன்னு   சொல்லிட்டு   ரெண்டு   நாளா   நீ    சரியா   சாப்பிடவே   இல்ல.   உடம்பு   என்னத்துக்காகும்?  நீ   தெம்பா   இருந்தாத்   தான   தேனுகாவை   நல்லா   பாத்துக்கிர   முடியும்?”

         ” சரி    சரி    நான்   போயி   சாப்பிடுறேன் . ஆனா   ஒண்ணே   ஒண்ணு   ராதி  , யாரயும்   நல்லா   பாத்துக்கிறது  என்  வேலை   இல்ல.  இனிமே   அவள   பாத்துக்க   இவள   பாத்துக்கனு   என்   கிட்ட   எதையும்   சொல்லாதீங்க   ப்ளீஸ்”   சொல்லிவிட்டு   அவன்   தன்   தாயைத்   தேடி   சென்றுவிட , பெருமூச்சு   விட்டார்   பாட்டி .  என்னாச்சு   இந்த   பயலுக்கு ?  ரெண்டு   நாளா   தேனு   தேனுன்னு   அழுது   கரைஞ்சிட்டு   இப்ப   இந்த   மாதிரி   வெடுக்குனு   பேசிட்டு   போறான் ?   ரெண்டு  பேரையும்  கொஞ்ச   நேரம்   கூட   தனியா   விடல,   அதுக்குள்ள   சண்டையா?….படைச்சோனே!!!   இதுக   ரெண்டும்   என்னைக்குத்   தான்  சந்தோஷமா   வாழப்   போகுதுகளோ   எனக்கு   தெரியலயே?…

      காலேஜ்…..

      மாலை  நான்கு  மணி

        காலேஜ்   முடிந்ததை   வெளிக்காட்டும்   விதமாக   அந்த   எலக்ட்ரிக்   பெல்   நீளமாக    அடித்து   ஓய,    இதற்காகத்தானே   காத்துக்   கொண்டிருந்தோம்   என்பது   போல   தங்கள்   பைகளை   தூக்கிக்கொண்டு   சிட்டாக   வகுப்பறையை   விட்டு   வெளியே   வந்தனர்   மாணவ   மாணவிகள்.   அந்த   கூட்டத்திற்கு   இடையில்   கைகளை   கோர்த்துக்கொண்டு   பேசியபடி   வந்து   கொண்டிருந்தனர்   ரஷிதாவும்   ப்ரியாவும்.

       “இன்னைக்கு   டைம்   போனதே   தெரியல,   இல்ல   ரஷி?”

       “ஆமாடி   ப்ரியா  , க்ளாஸ்   ரொம்ப   இன்ட்ரஸ்டிங்கா   போச்சு”  

        “இப்ப    நீ   எங்க   போற ? வீடா   இல்ல   தேனு   அக்காவ   பாக்க   ஹாஸ்பிட்டலா?”

       “ஹாஸ்பிட்டல்   தான்    இங்கருந்தே   அவுட்   பஸ்ல   ஏறிக்கலாம்னு  பாக்குறேன்”

        “ஏன்டி,    வீட்டுக்குப்   போயி   இந்த  பேக்கை   வச்சுட்டு   தலை   சீவி   முகம்   கழுவி,   வேற   ட்ரஸ்   மாத்திக்கிட்டு     வரலாம்ல ?  இப்படி   குப்ப   கழுதை   மாதிரியா   போவாங்க?”  

         “இல்லடி   வீட்டுக்கு   போயிட்டு   ஹாஸ்பிட்டல்   போயிட்டு   திரும்ப   வீட்டுக்குப்   போனா   தேவையில்லாத   அலைச்சல்   தான?  அது   மட்டும்   இல்லாம   அசைன்மெண்ட்   ஒர்க்    வேற   இருக்கு,   அக்காவ   பாத்துட்டு   வீட்டுக்கு   போனேன்னு   வையேன்,   அப்படியே   எழுத   உக்காந்துக்கிரலாம்”   ஒரே   வேலையா  போயிரும்”   பேசிக்கொண்டே   வந்ததில்  காலேஜ்   நுழைவாயில்   வந்திருந்தது. 

          “சரி   ரஷி    நம்ம   பஸ்   வந்துருச்சு,  நான்    போயிட்டு   வர்றேன்,   பாத்து   பஸ்   ஏறிப்  போ   சரியா?”

         “ஓகேடி…..  நீ   கிளம்பு,   பாய்”

         “பாய்ய்ய்”….. ப்ரியா   விடைபெற்று  சென்றுவிட,  காலேஜை   விட்டு   வெளியே   வந்து   பயணியர்   நிழற்குடையின்   கீழ்   நின்றாள்   ரஷிதா.  தான்    ஏற   வேண்டிய  பஸ்  வருகிறதா   என்று   பார்த்துக்   கொண்டிருந்தவளின்   கண்களில்  பைக்கை   தள்ளிக்கொண்டு  வந்த  விக்ரம்   பட,  அவனும்   எதேச்சையாய்   நிமிர்ந்து   இவளை    பார்த்து   விட,    “ஹாய்ய்ய்ய்   விக்ரம் ”  என்றாள்   உற்சாகமாய்.  ஆனால்   அவனோ,   அவளை   கண்டு  கொள்ளாதது   போல்   அந்த   பக்கமாக   திரும்பிக்   கொண்டான்.  என்ன ?  இவரு   ஏன்   இப்படி   பண்றாரு ?  நேராவே   கேட்டுரலாம்   யோசித்துக்   கொண்டே    வேகமாய்  அவனை   நோக்கி   நடந்தாள்   ரஷிதா…

                                                – தொடரும்…

       

 

      

    No comments yet.