58…..
“அடடா….. உனக்கு கொலை தான் கை வந்த தொழில்னு நினைச்சேன் நடிப்பு கூட நல்லா வருதே?”
” யோவ் இன்சு….. செஞ்சா நான் தான் செஞ்சேன்னு தைரியமா சொல்லப் போறேன். உன்னை மாதிரியான அதிகாரிகளைப் பாத்தோ நீ போட்டுருக்குற உன் யூனிஃபார்மை பாத்தோ இந்த மாடசாமி ஒரு நாள் கூட பயந்தது கிடையாது .அதனால
நான் சொல்றத நம்பு.. அந்த தேனுகாவ கொலை செய்யணும்னு நான் துரத்திக்கிட்டு இருந்ததென்னமோ உண்மை தான், ஆனா அவளை நான் குத்தல…..பரவாயில்ல என் வேலைய வேற எவனோ முடிச்சுட்டான் . அதுல எனக்கு நிம்மதி தான். ஆள் இருக்காளா இல்ல போயிட்டாளா?”
“என்னடா… உன்னை கைது பண்ணனும்னு சொல்லிக்கிட்டு இருக்கேன், தெனாவட்டா பேசிக்கிட்டு இருக்க? எதை சொல்றதா இருந்தாலும் ஸ்டேஷனுக்கு வந்து சொல்லு, வா”….
“அட இது என்ன கூத்து?” வாய் விட்டு சத்தமாக சிரித்தான் மாடசாமி. “நான் தான் சொல்லிக்கிட்டே இருக்கேன்ல ? நம்ப மாட்டியா? அவள நான் குத்திப் போடலய்யா…. நானே அவசர வேலயா பழனிக்கு போயிட்டு இப்பத் தான் இங்கயே வர்றேன்”
“ஏய்ய்ய்ய் இதுக்கு மேல ஒரு வார்த்த பேசின, வாய் கிழிஞ்சுரும்…. வா என் கூட” மாடசாமியின் சட்டையில் கை வைத்தார் இன்ஸ்பெக்டர் ரஹ்மான்..
ஹாஸ்பிட்டல்…
மெல்ல கண்களைத் திறந்தாள் தேனுகா. என்ன இது ? ஹாஸ்பிட்டல் மாதிரி இருக்கு ? நான் ஏன் இங்க இருக்கேன் ? தனக்குள் யோசித்தவள், எழ முற்பட, வயிற்றில் அந்த தீவிரமான வலியை உணர்ந்தாள். உடனே மின்னல் வெட்டியது போல் அவளுக்கு எல்லாம் நினைவு வந்தது.
**********
பீச்சில் அமர்ந்து கடலையே பார்த்துக் கொண்டிருந்த போது அது தன்னை வா வா என அழைப்பது போல் இருக்க, அய்யயோ!!!…. இதை விட வேதனையான பல நிகழ்வுகளை நாம வாழ்க்கையில கடந்துருக்கோம் அப்பலாம் கூட எனக்கு இந்த தற்கொலை எண்ணம் வரலயே? இப்ப மட்டும் ஏன் வருது ? அப்படி என்ன அந்த ஜூனைத்தும் ஜூனைத் வீடும் நமக்கு ஸ்பெஷல் ? ம்ஹூம் … இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்தா என்னையும் மீறி கடல்ல குதிச்சாலும் குதிச்சுருவேன். ஹேண்ட்பேக்கையும் பையையும் எடுத்துக் கொண்டு எழுந்து நின்றாள். மணி ஒன்பது என்பதால் அனைத்து திசைகளிலும் நன்கு இருட்டு அப்பிக்கொண்டு இருந்தது. அப்போது தான் கவனித்தாள், அவள் உட்கார்ந்து கொண்டிருந்த இடத்தில் அவளைத் தவிர யாருமே இருந்திருக்கவில்லை. அவ்வளவு நேரம் இல்லாத பயம் மனதுக்குள் திடீரென முளைக்க, வேகவேகமாய் நடக்க ஆரம்பித்தாள். சற்று தூரம் நடந்திருப்பாள்… அவள் பின்னால் யாரோ வருவது போல இருக்க , சட் என திரும்பினாள். யாரும் இல்லை. சீக்கிரமா ஆபீஸ் போயிரணும் ஈஸ்வரா… வேண்டிக்கொண்டே முன்னேறினாள். ஒரு வழியாக மணல் வெளியைத் தாண்டி கார்கள் நிற்கும் இடத்தை அடைந்தாள். அப்பா…..இனி பயம் இல்ல ரோட்டுக்கு வந்தாச்சு . அதே நேரம் அவள் அருகில் யாரோ நெருங்கி வந்து நிற்க, சே….. யாரு இது கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாம வேகமாகத் திரும்பியவளின் வயிற்றில் ஆழமாகச் சொருகப்பட்டது அந்த கத்தி. அப்போது கண்களை மூடியவள் தான். ஆனால் அந்த வேதனையான நிமிடங்களிலும் அவன் முகத்தை கவனிக்க மறக்கவில்லை தேனுகா . அதனால் அவன் முகம் அவள் கண்களுக்குள் ஒட்டிக்கொண்டது….
“அய்யோ இந்த வலி வலிக்கிதே” …
“தேனு முழிச்சுட்டியா?” கேட்டுக்கொண்டே வேகமாக உள்ளே வந்தார் ஆயிஷா.
“அம்மா”…..
” பாப்பா…. இப்ப எப்டி இருக்கு?” அவள் தலையை ஆதரவாகக் கோதினார். கண்கள் மெல்ல கலங்கியது
“கொ….கொஞ்சம் பரவாயில்ல மா, ஆனா வயிறு தான் ரொம்ப வலியா இருக்கு” ஆப்ரேஷன் செய்த இடத்தைத் தொட்டு காட்டினாள் தேனுகா.
“அது அப்படித் தான் வலிக்கும், ஆப்ரேஷன் பண்ணிருக்காங்க இல்லயா? கொஞ்ச கொஞ்சமாத் தான் சரியாகும்”
“ஆ…..ஆப்ரேஷனா?”
“ஆமா தேனு வயித்துல கத்தி ரொம்ப ஆழமா இறங்கிருச்சாமா, அதனால தான் ஆப்ரேஷன்”
“நீங்க எப்படி இங்க?…ஆ…அய்யோ!!!”
“ப்ச் சும்மா இரு, லொட லொடனு பேசாத.. வலிக்கப் போகுது. உன்னை ஹாஸ்பிட்டல்ல கொண்டு வந்து சேத்த பிறகு நர்ஸ் தான் ஜூனைத்கு போனை போட்டு வரச் சொன்னாங்க. அவன் கூடவே நாங்களும் வந்துட்டோம். நீ கொஞ்ச நேரம் படுத்துக்க,” நான் போய் டாக்டர கூட்டிட்டு வர்றேன்..
மாஷா அல்லாஹ் இல்லம்…
தன்னறையில் அவசர அவசரமாய் தலை வாரிக் கொண்டிருந்தாள் ரஷிதா… அதே நேரம் அவளது மொபைல் அழைத்தது. பின்னலை பின்னிக்கொண்டே ஓடிப் போய் அட்டெண்ட் செய்தாள்.
” சொல்லுங்க ஆயிஷாம்மா , அக்கா முழிச்சுட்டாங்களா?”
“ஆமாடி…..இப்பத் தான் ஒரு கால் மணி நேரத்துக்கு முன்னால கண் விழிச்சா, நல்லா இருக்கா, இப்ப டாக்டர்
செக் பண்ணிட்டு இருக்காரு”
“அல்ஹம்துலில்லா”……ஆனந்தத்தில் திளைத்தாள் ரஷிதா.
” ம்ம்ம்ம்… அல்லாஹ்வுக்குத் தான் நன்றி சொல்லணும் , அவன் தான் தேனுகாவை காப்பாத்திருக்கான். சரி, நீ இந்த விஷயத்த அத்தா, அம்மா, என் வீட்டுக்காரர், கதீஜா, ஃபகீம் எல்லாருக்கும் சொல்லிரு. பாவம் யோசிச்சுக்கிட்டே இருப்பாங்க”
“சொல்லிடறேன் ஆயிஷாம்மா”
“சரி நீ என்ன செய்யுற? அவங்க தேனுகாவை பாக்க வரும்போது கூட கிளம்பி ஹாஸ்பிடல் வருவ தான?”
“இல்ல ஆயிஷாம்மா… நான் நேத்து வேற காலேஜ் போகல, இன்னக்கி ரொம்ப முக்கியமான க்ளாஸ் ஒண்ணு இருக்காம் ப்ரியா நைட்டே மெசேஜ் பண்ணி இருந்தா அதுக்காகத் தான் வேகமா கிளம்பிட்டு இருந்தேன்”
” காலேஜூக்கா?….உன் அம்மா தான் நீ இனிமே காலேஜூக்கே போகக் கூடாதுன்னு முந்தா நாள் கறாரா கண்டிஷனா சொல்லிட்டாளே? இப்ப உன்னை அனுப்புவாளா?”
“அனுப்பித் தான் ஆகணும் ஆயிஷாம்மா, இல்லனா அவ்ளோ தான் வீட்டுல ஒரு பூகம்பமே வெடிக்கும்” கோபமாகச் சொன்னாள் ரஷிதா.
“பூகம்பமா? ஏன்டி நீ வேற? சரி எதை பேசினாலும் பொறுமையா பேசு”
“ம்ம்ம் சரி சரி, இங்க தான்
நன்னா இருக்கார்ல ? அவரு என்னை அம்மா திட்டாம காப்பாத்திருவாரு. ஒண்ணும் சண்டையெல்லாம் ஆகாது நீங்க கவலப்படாதீங்க”
“சரிடி, அதான் எனக்கும் வேணும். ம்ம்ம் சரிடி நீ போ. காலேஜூக்கு லேட் ஆகப் போகுது”
“சரிம்மா”…. ஃபோனை கட் செய்து விட்டு அறையை விட்டு வெளியேறினாள் ரஷிதா. கதீஜா, சுல்தானா இருவரிடமும் தேனுகா கண் விழித்த விஷயத்தை சொல்ல, அவர்கள் இருவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். அதை கவனித்த நஸ்ரின் பாத்திமா உள்ளுக்குள் புகைந்தாள். அவளுக்கு மட்டும் எப்படி தான் எல்லாமே நல்லதாவே நடக்குது? இந்த தேனுகா என்னைக்குத் தான் இந்த குடும்பத்த விட்டு விலகப் போறாளோ? ….
” சரி ரஷி, சாப்பிட்டுட்டு நீ காலேஜ்கு கிளம்பு. நாங்க ஹாஸ்பிட்டலுக்குப் போயி தேனுவ பாத்திட்டு வர்றோம்”
“காலேஜூக்கா?…. அவளத் தான் நான் இனிமே காலேஜூக்குப் போகக்கூடாதுனு சொல்லிட்டேன்ல ?” சொல்லிக்கொண்டே சமையலறையில் இருந்து வெளிப்பட்ட நிஷா, ரஷிதாவை முறைத்தாள்
“என்னடி ? எங்க போறதுக்கு இவ்ளோ சீக்கிரம் கிளம்பி நிக்கிற? நீ படிச்சு கிழிச்சதெல்லாம் போதும் . போ, போயி ட்ரஸ்ஸ மாத்திட்டு வா . கொஞ்சம் கொஞ்சமா சமையல் வேலைகளை பழக ஆரம்பி. இன்னும் ஆறு மாசத்துக்குள்ள உனக்கு நிக்காஹ் செஞ்சு வைக்கணும்னு நானும் உன் அத்தாவும் முடிவு செய்திட்டோம்” அந்த கடைசி வாக்கியத்தை இப்ராஹிம் தாத்தாவின் மனது புண்பட வேண்டும் என்பதற்காகவே அவள் சொன்னாள் ஆனால் தாத்தா கண்டு கொள்வாரா என்ன?
“ரஷி கண்ணு.. போ ,போய் பேக் எடுத்துட்டு வா, காலேஜூக்கு நேரம் ஆகுது பாரு”
“அத்தா, நான் அவள வீட்டோட இருக்க சொல்லிக்கிட்டு இருக்கேன், நீங்க காலேஜூக்கு கிளம்புனு சொல்றீங்க? நீங்க இப்படியே செஞ்சுக்கிட்டு இருந்தா அவ எப்படி என்னய மதிப்பா? என் மக என் இஷ்டப்படி தான் நடக்கணும். அவளுக்கு நல்லது எது கெட்டதுனு எனக்கு தெரியும். தயவு செய்து நீங்க இதுல தலையிடாதீங்க. ரஷிதா இனிமே படிக்க போகக் கூடாது , அதுதான் எங்க குடும்பத்துல உள்ள எல்லாருக்கும் நல்லது”.. நிஷா கோபமாய் கத்திக்கொண்டிருக்கும் போதே, ரஷிதா உள்ளே போய் விட்டாள்.
“நிஷா கொஞ்சம் இரு , உன் மக எப்படி நீ சொல்றத கேக்கணுமோ அதே மாதிரி தான என் மகளாகிய நீ நான் சொல்றத கேக்கணும்?” தாத்தா சரியான பாயிண்ட்டை பிடிக்க , நிஷா வாயடைத்துப் போனாலும் எதையோ சொல்லி சமாளிக்கப் பார்த்தார்.
” அத்தா, நான் உங்க மக தான் இல்லைனு சொல்லல.. ஆனா நான் இன்னொருத்தர் மனைவியும் கூட. அவரு பேச்சைக் கேட்டு , அவரு சொல்றபடி நடக்கிறதும் எனக்கான கடமை தானே?”
“சரி தான், இதைத் தான் நான் சொல்ல வர்றேன். பெண்கள்.. ஏன் உன் அம்மா உள்பட, அத்தா இல்லனா கணவன் சொல்லுறதை கேட்டுத் தான் வாழ வேண்டியிருக்கு . ஆனா என் பேத்தி அப்படி இருக்கக் கூடாது. அவளோட ஆசை நியாயமானதா இருக்குற பட்சத்துல, அவ தான் விரும்புனதை செய்யுறதுக்கான சுதந்திரம் அவளுக்கு இருக்கணும்னு நான் விரும்புறேன் . ரஷி மேல எனக்கு பூரண நம்பிக்கை இருக்கு. அவ படிக்கட்டும்”….
” அத்தா இது என்னோட முடிவு மட்டும் இல்ல, ரஷியோட அத்தா”…
” மாப்பிள்ளை உன்னை எதுவும் சொன்னா இது இப்ராஹிம் எடுத்த முடிவுன்னு சொல்லு.. இதுக்கு மேல இதைப் பத்தி பேச ஒண்ணும் இல்ல”…
காலேஜ்….
” கடவுளே!!! ரஷி படிப்பு என்னால கெட்டுப் போயிருச்சுன்னு ஆகிரக் கூடாது. ப்ரியா சொன்ன மாதிரி அவ இன்னிக்கு காலேஜூக்கு வந்துரணும்” மனதிற்குள் வேண்டியபடி தன் பைக்கில் சாய்ந்து நின்று கொண்டு, பேருந்து வரும் திசையையே பார்த்துக் கொண்டிருந்தான் விக்ரம். கால் மனி நேரக் காத்திருப்புக்குப் பின், அவன் எதிர்பார்த்திருந்த அந்த பேருந்து மெல்ல காலேஜிற்குள் நுழைய , கடைசி சீட்டில் ஜன்னலோரம் அமர்ந்திருந்த ரஷிதா அவன் கண்ணில் பட்டாள்.அப்பாடா…..
என நிம்மதியானான் விக்ரம். ஆனால் அவளைக் கண்டவுடன் நிம்மதியையும் தாண்டி, வேறு ஏதோ ஒரு சந்தோஷமான உணர்வும் அவனுக்குள் எழ….. மனதுக்குள் பல கோடி பட்டாம்பூச்சிகள் பறந்தது…”அடேய் விக்ரம் , நீ ரஷிய லவ் பண்றியா என்ன ?” என அவனே அவனை கேட்டுக்கொள்ள ஆமாம் என்று சிரித்தது மனசாட்சி…
– தொடரும்..
No comments yet.