கல்யாணம் முதல் காதல் வரை – 57

Shanmuha Sethuramachandran | 21 Feb 2026 | Share

                              57…

          “அத்தா…நீங்க   என்ன   சொல்றீங்க?   இதெல்லாம்   சரியா   வரும்னு   எனக்கு       தோணல . ஜூனைத்   இல்லாம   அந்த   வீட்டுல   நம்மளால   எப்படி    இருக்க   முடியும்?  இல்லங்க   அத்தா,  இது   ஆகாது   இந்த   பேச்ச   இதோட   விட்டுரலாம்” 

         “சுல்தானா,   நான்   சொல்லுறத   கொஞ்சம்   பொறுமையா   கேளு.
வீட்டுல   எல்லாரும்   ஒண்ணா   இருந்தா   மட்டும்   போதும்னு    நினைக்காத. மனசளவுல   ஒற்றுமையா   இருந்தாத்   தான்  சந்தோஷமா   வாழ    முடியும்.  ஜூனைத்,    நீ  , நான் , ரஷிதா , ஆயிஷா   கதீஜானு   தேனுகாவ   எல்லாருக்கும்   பிடிச்சிருந்தாலும்  நிஷாவும்   நஸ்ரினும்   அங்க   இருக்குற   வர  தேனு   அங்க   ஒரு   அன்னியத்தன்மைய   தான்    உணர்வா”

        “அதுக்குனு   இவங்க   ரெண்டு   பேர   மட்டும்   வெளிய   அனுப்புறதா?”

       “நான்   என்ன   நிரந்தரமாவா   இவன   வெளிய   போகச்   சொல்றேன்?   எல்லாம்   கொஞ்ச   நாளைக்குத்   தான்.   காலம்   எல்லாவற்றையும்   மாத்தும். விஷமா   மாறிப்   போயிட்ட    நிஷாவ   அல்லாஹ்   நிச்சயம்   பழையபடி   ஆக்குவான் , எனக்கு   அந்த   நம்பிக்கை   இருக்கு.  ஜூனைத்,   என்னப்பா? நாங்க   ரெண்டு    பேர்   மட்டும்   பேசிக்கிட்டு   இருக்கோம்   நீ   ஒண்ணுமே   சொல்லாம   சும்மா  இருக்கியே?” 

        “ராதா ,  நான்    உங்கள   எதிர்த்துப்   பேசுறதா   நினைக்க   வேணாம்.   நானும்  தேனுவும்   நம்ம   வீட்டுல   இருந்து   தனியா   போறது   எனக்கு   சரியாப்   படலை.  அவளை   நம்ம   வீட்டுக்கு   கூட்டிட்டு  வந்தப்ப , அவ   இங்க   செட்   ஆக   மாட்டா  தனியா   போயிடறது  பெட்டர்னு   நானே   யோசிச்சேன்   தான்.  ஆனா   எப்ப  அவ  உங்களுக்கு   பிடித்தமானவளா   ஆனாளோ   அப்பவே   நான்   அந்த   எண்ணத்த   கை   விட்டுட்டேன்”

         ” எல்லாம்   சரி   தான் , ஆனா”…

         “இருங்க    ராதா , நான்    இன்னும்   பேசி    முடிக்கல . அவளோட   துன்பங்கள்   எல்லாத்துக்கும்   ஒரு   விதத்துல   நானும்    காரணம்   தான்.  அவளுக்கு   ஒரு   நல்ல   ஹஸ்பெண்டா  இப்ப   வரைக்கும்  நான்   நடந்துக்கிரவே   இல்ல . நம்ம  வீட்டுல   அவளுக்கு   எந்த   விதமான   அசௌகரியங்களும்   சங்கடங்களும்   வந்துராம   நான்   அரண்   மாதிரி   நின்னுருக்கணும்,   ஆனா   நான்   அதை  செய்யாம   வீட்டு   மனுஷங்க   எல்லாரும்   அவள   மனசார   ஏத்துக்கிற  வரைக்கும்   இந்த   மாதிரி   விஷயங்கள   சகிச்சுக்கிறது   தான்   சரிங்குற   மாதிரி   நடந்துக்கிட்டு   என்   மனசை   அவளுக்கு   புரிய   வைக்கிறதுலயே   காலத்த  போக்கிட்டேன்.  ஆனா   இப்ப    நான்   ரொம்ப   தெளிவா   இருக்கேன்   ராதா   இனியும்   என்   அன்பை   அவளுக்கு   புரிய   வைக்கணும்னு   நான்   டைம்   வேஸ்ட்   பண்ண   மாட்டேன்.   எந்த   முறையில  நிக்காஹ்   செஞ்சு  கூட்டிட்டு   வந்திருந்தாலும் , அதை   தேனுவால   ஏத்துக்கவே   முடியாம   இருந்தாலும்,  அவ   என்   வைஃப்,  என்னோட   பிலாங்கிங்.   அவளுக்கு   சின்னக்   கஷ்டம்   கூட   நேராம   பாதுகாக்க   வேண்டியது   இனிமே   என்னோட   பொறுப்பு . கூடவே, மாடசாமியால   தேனு   உயிருக்கு   ஆபத்துங்குறத   கண்   கூடா   பாத்தாச்சு,   இந்த   நேரத்துல    தனியா  நானும்   அவளும்   போறது    சரி   வராது . நம்ம   வீடு   தான்   எங்களுக்குப்   பாதுகாப்பு”    நீளமாய்   அவன்   பேசி   முடிக்க,   மெல்ல  சிரித்தார்   இப்ராஹிம்   தாத்தா.

      “வெரிகுட்   ஜூனைத்..இந்த  பொறுப்பு   உணர்வை   உனக்குள்ள   ஏற்படுத்தத்   தான்   நான்   அந்த   மாதிரி   பேசினேன்.   ஆனா   நான்   உணர்த்துறதுக்கு   முன்னால   நீயே   அத   புரிஞ்சுக்கிட்ட.   உங்கள  வேற   வீட்டுக்குப்   போங்கன்னு   ஒரு   நாளும்   நான்   சொல்ல   மாட்டேன்.   ஒரே   ஒரு  விஷயம்   மட்டும்   சொல்லிக்கிறேன்  ஜூனைத்..   தேனுகா   ரொம்ப   நல்ல  பேட்டி,   தனக்குனு   யாருமே   இல்லங்குற   ஒரு   சுய   பச்சாதாபத்துக்குள்ள   அவளை   என்னைக்குமே   போக   விட்டுராத”  

        “மாட்டேன்   ராதா. இனி   நான்   எல்லா   விஷயத்துலயும்   அவளுக்கு   பக்க   பலமா   இருப்பேன்”  அழுத்தந்திருத்தமாய்   சொன்னான்   ஜூனைத்.

        “அத்தா…..என்னங்கத்தா   நீங்க?   கொஞ்ச   நேரத்துல   என்னைய   கதி   கலங்க   வச்சுட்டீங்களே?”   சுல்தானா   பாட்டிக்கு   இப்போது   தான்   மூச்சே   வந்தது   போல்   இருந்தது…. நிம்மதி பெருமூச்சு   விட்டார்

    மறுநாள்  காலை 

       காலேஜ்….

       தன்   பைக்கை   பார்க்கிங்கில்   நிறுத்தி, விக்ரம்  கீழே   இறங்கிய   போது,   அந்த   கல்லூரி   பேருந்தும்   உள்ளே   நுழைந்தது.   அய்ய்ய்ய் !!! ரஷிதா   இந்த   பஸ்ல   தான   வருவா ? அவளை   பாத்து    பேசிட்டு   போலாம்    நினைத்தபடியே   வண்டியை   ஸ்டாண்ட்   போட்டு   நிறுத்திவிட்டு,  பேருந்தை    நோக்கி   விரைந்தான்.   கும்பலாய்   பஸ்லிருந்து   இறங்கிய   மாணவ   மாணவிகளுக்கு   இடையில்   ப்ரியா   சுலபமாய்    தென்பட்டு   விட,   ரஷிதாவை   மட்டும்   காணோம்..

         “ப்ரியா…..ப்ரியா”..முன்னால்   சென்று   கொண்டிருந்த   ப்ரியா   திரும்ப  அவள்   முன்னால்   போய்   நின்றான்   விக்ரம்.

         “ஹாய்   ப்ரியா , குட்   மார்னிங்”

        “குட்   மார்னிங்   அண்ணா”

        “என்ன   நீங்க   மட்டும்   வந்திருக்கீங்க? கூட   உங்க   ஃபிரண்ட்   ரஷிதாவ   காணோமே ? எங்க   அவங்க?”   உன்னால   தான்டா   நேத்து   அவங்க   வீட்ல   அவ்வளவு   பெரிய   பிரச்சனை   மனதிற்குள்   நினைத்த  ப்ரியா,  லேசாய்   எழுந்த    கோபத்தை   உள்ளுக்குள்   அடக்கிக்   கொண்டே,

        “அவ    இன்னக்கு   வரலணா”  என்று   பதில்   சொன்னாள்.

        “ஓ.   அப்படியா?  ஏன்   என்னாச்சு?   உடம்பு   சரி    இல்லயா ?”

        …………….

       “ஹாஸ்பிடல்   போனாங்களா?  நீங்க   பேசுனீங்களா   அவங்க   கிட்ட?”

       “அண்ணா, இன்னக்கி   ஆல்ரடி   பஸ்   லேட்,க்ளாஸ்ல   கொஞ்சம்  இம்பார்ட்டண்ட்   வொர்க்   இருக்கு    நான்   போகணும்:

       ” சரி   ஓகே    நீங்க   போங்க , ஆனா   ரஷிதா   நம்பர்   குடுத்துட்டுப்   போங்க”

        “அவ   நம்பரா   எதுக்கு?”

        “என்ன  ப்ரியா   இப்படி   கேக்குறீங்க?  தெரிஞ்ச   பொண்ணுக்கு   உடம்பு   சரி   இல்லனா  கால்  பண்ணி  விசாரிக்கணும்ல, அதான  முறை?”..அதற்கு    மேல்  ப்ரியாவால்  பொறுக்கமுடியவில்லை.  

       “என்ன   சொன்னீங்க?  முறையா?   முறைய   பத்தி    நீங்க   பேசுறீங்களா? ரஷி   ஃபைலை   மிஸ்   பண்ணிட்டான்னா  எடுத்து   பத்திரமா   வச்சு    மறுநாள்   காலேஜ்  வரும்   போது   அவ   கிட்ட   குடுத்துருக்கலாமே? அதை   விட்டுட்டு   எதுக்கு   அவ   வீட்டுக்கு   போனீங்க ?நீங்க   அங்க   போனதால  ரஷிக்கு   எவ்ளோ   பிரச்சனைனு  தெரியுமா?  இனி   நீ   காலேஜூக்கே   போக   வேணாம்னு  ரஷி   அம்மா  சொல்லிட்டாங்க”

        “அய்யோ…..ப்ரியா,   நீங்க   என்ன   சொல்றீங்க ?  அவங்க   வீட்டுக்கு  நான்   ஃபைலை  தானங்க   குடுக்கப்   போனேன்?  ரொம்ப   சின்ன   விஷயம்  அது,  அதில  என்ன  தப்பு   இருக்கு?   இதுக்கு   எதுக்கு   அவங்க   அம்மா   அவங்கள  படிப்ப   நிறுத்த   சொல்லணும் ?எனக்கு   புரியல” 

        “அவங்க   வீடும்   சரி  ,அவ   ஃபேமிலியும்   சரி,  வெரி   ஆர்த்தொடக்ஸ்.
சில   விஷயங்கள  நம்ம  ஜோவியலா   எடுக்குற   மாதிரி   அவங்க   எடுத்துக்கிர  மாட்டாங்க   அதான்   ப்ராப்ளம்”

         “மை  காட்ட்!!  எல்லாம்   என்னால  தான்..  நீங்க   சொன்ன   மாதிரி    நான்   ஃபைலை   எடுத்து   வச்சுட்டு   இன்னக்கி   நேருல   பாத்து   குடுத்திருக்கலாம்.  பாவம்….  என்னால   ரஷிதாவுக்குத்   தான்   ரொம்ப   கஷ்டம்”  விக்ரமின்   குரலில்   தொனித்த   வருத்தம், ப்ரியாவின்  கோபத்தை   லேசாய்   குறைக்க,

       “சரி   விடுங்கணா,  நீங்க   என்ன   தெரிஞ்சா   எல்லாம்   செஞ்சீங்க?”

        “நான்  வேணும்னா  இன்னக்கி  அவங்க   வீட்டுக்குப்   போயி   மன்னிப்பு   கேட்டுக்கிட்டு   நாளையில   இருந்து   அவங்கள   மறுபடியும்  காலேஜ்கு   அனுப்ப   சொல்லி   பாக்கவா?” 

       “அய்யோ..வேற   வினையே   வேணாம், சும்மா   இருங்க  .. அவ   வீட்டுல   ஒரு   தாத்தா   இருக்காரு , அவரு  சொல்லுறது   தான்   அங்க   சட்டம்.  ரஷி   அம்மாவ   அவரு   சமாதானப்படுத்திக்கிருவாரு..  அவங்க   வீட்டுல   வேற   ஒரு   ப்ராப்ளம்,   ஒரு   மெடிக்கல்   இஷ்யூ,   அது   சரி   ஆனதும்   அவ   காலேஜ்  வந்திருவா.   இடையில   புகுந்து   நீங்க  குட்டய   குழப்பாம   இருந்தா   போதும். சரிங்கண்ணா   டைமாச்சு,   நான்   க்ளாஸ்கு   போறேன்.. பாய்ய்ய்ய்”  

        “பாய்ய்ய்ய்ய்” ப்ரியா   சென்றுவிட, விக்ரமுக்கு   தான்   ஏதோ   போல்   ஆகி   விட்டது   சே…..அவசரக்குடுக்கைத்   தனமா  அவங்க   வீட்டுக்குப்   போயி   அந்த   புள்ளக்கி   தொந்தரவு   குடுத்துட்டேனே …  தன்னைத்தானே   நொந்து   கொண்டான் 

  மாடசாமியின்  அரிசி  குடோன்   

       சோர்வாய்   உள்ளே   நுழைந்தான்   மாடசாமி .  இரவு   முழுக்க   தூங்காமல்   இருந்ததின்   விளைவாகக்   கண்கள்   இரண்டும்   தீப்பற்றிக்   கொண்ட  மாதிரி   எரிய ,  பாத்ரூமுக்குள்   நுழைந்து   முகம்   கழுவிக்கொண்டு   வெளியே  வந்தான். துண்டோடு   தயாராய்   இருந்த   ஒருவன்   அதை    அவனிடம்   நீட்ட ,  வாங்கி   முகம்   துடைத்துக்கொண்டே  முன்னறைக்கு   வந்து    கணக்கு   வழக்கு   பார்க்கும்   டேபிளில்   குதித்து   ஏறி   அமர்ந்தான்.  அதே   நேரம்   கையில்   விலங்கோடு   வேகமாக   உள்ளே   வந்தார்   சப்  இன்ஸ்பெக்டர்   ரஹ்மான்

         “டேய்ய்ய்ய்    மாடசாமி….லாயர்   தேனுகா   விஸ்வநாதனை   கத்தியால   குத்தினதுக்காக   உன்னை   அரஸ்ட்   பண்ண   வந்துருக்கேன்”

         “என்னது?   தேனுகாவை   நான்   கத்தியால   குத்தினேனா?”

                                                 –  தொடரும்…

      

 

        

       

       

         

    No comments yet.