கல்யாணம் முதல் காதல் வரை – 56

Shanmuha Sethuramachandran | 20 Feb 2026 | Share

                              56….

        மாஷா  அல்லாஹ்  இல்லம்….

       “அத்த , வாங்க  சாப்பிடலாம். வெள்ளை   சாதமும் , ப்ரான்   முட்டை   தொக்கும்   செஞ்சிருக்கேன் . டேஸ்ட்   சூப்பரா   வந்துருக்கு .  வாங்க   சாப்பிடலாம்”…

        “நீங்க   சாப்பிடுங்க ,  நான்   அப்புறமா  சாப்பிட்டுக்குறேன்”

        “ஏன்   என்னமோ   மாதிரி   இருக்கீங்க? உடம்பு   எதுவும்   சரி   இல்லயா?” 

        ……………

       “அத்த    உங்களத்   தான்,   ஏன்   என்னமோ   மாதிரி   இருக்கீக?” 

        “எல்லாம்   அந்த   தேனுகா  பிள்ளய  நினைச்சுத்   தான்.   எல்லாரும்   சொல்ற   மாதிரி   நான்  தான்   சின்ன  விசயத்த   பெருசா  எடுத்துக்கிட்டேனோனு   ஒரு   மாதிரி   குற்ற   உணர்வா   இருக்கு”என்ன  இது?   வேதாளம்  மறுபடியும்   முருங்க   மரத்துல   ஏறுதே?  இத  இப்படியே  விட்டா   சரி   வராது   என்று   நினைத்த   நஸ்ரின்,

       ” உங்க   மேல   என்னத்த   தப்பு?   நீங்க  பேசினது   எல்லாமே   சரி   தான்.   உங்க   கோபம்   ரொம்ப   நியாயமானதும்   கூட…  உங்களுக்கு  வந்த   பயம்   எல்லா   அம்மாக்களுக்குமே   வரக்   கூடிய   நியாயமான   பயம்   தான்” 

        “அது   சரி   தான்.   ஆனா   நான்   அவ்ளோ   பெரிய   சண்ட   போட்டிருக்காட்டி     அவ   வீட்ட   விட்டு   போயிருக்க  மாட்டா,  இப்படி   குத்துப்பட்டு   ஆஸ்பத்திரிலயும்  போயி   படுத்துருக்க   மாட்டாள்ல ?”  அப்போது   தான்   ஃபேக்டரியில்  இருந்து  களைப்பாக   வீட்டுக்குள்   நுழைந்து  கொண்டிருந்த  ரஃபீக்,   இவர்கள்   பேசிக்   கொண்டிருந்ததை   கேட்டுவிட்டார்.

       “என்னது?   தேனுகாவுக்கு   க… கத்திக்குத்தா?   என்ன   சொல்றீங்க?”   பதட்டமாய்   உள்ளே  வந்தார்…

        “அ….அண்ணே  அது   அது”….

        “சொல்லு   நிஷா,   உன்னைத்   தான்   கேக்குறேன்   என்னாச்சு?”   நிஷாவுக்கு   பயத்தில்   வியர்த்து   ஊற்றியது.   நடந்ததை   அப்படியே   சொல்லி   முடித்தால் அண்ணன்  தன்னை   நிச்சயமாக   உண்டு   இல்லை  என   செய்து   விடுவார்   என்று   அவருக்கு   நன்றாகத்   தெரியும். 

         “நான்    சொல்றேன்த்தா….இன்னக்கி   ரஷிதாவ   பாக்க   ஒரு   பையன்   நம்ம   வீட்டுக்கு  வந்திருந்தான்”  

        “பையனா ?  யாரு   அவன்?”

       “அவன்   பேரு   விக்ரமாம்… ரஷியோட   காலேஜ்ல   படிக்கிறவனாம்”   என   தொடங்கி,   தேனுகாவைப்   பார்க்க   அனைவரும்   ஹாஸ்பிட்டல்   விரைந்த   வரைக்கும்   சொல்லி   முடித்தாள்.

        “சரி   நானும்   இப்பயே  கிளம்புறேன்”  

        “அத்தா   நில்லுங்க,   ஆசையா  இறா  தொக்கு   செஞ்சு   வச்சுருக்கேன்.   அற்புதமான   சுவையில   வந்திருக்கு   முதல்ல   முகம்   கழுவிக்கிட்டு   வந்து    நல்லா    சாப்பிடுங்க,  அப்புறமா  போங்க”

        “உன்னை   மாதிரியும்  என்  தங்கச்சி  மாதிரியும்  எனக்கு   ஒண்ணும்   கல்  
மனசு   கிடையாது .  அங்க   ஒரு  பிள்ள   உயிருக்கு   ஆபத்தான   நிலைமையில   கிடக்கு .  உங்களால   எப்படி   பிடிச்ச   சாப்பாடுன்னு   சமைச்சு   சாப்பிட  முடியுது?  ஒருத்தங்கள  விரும்புறதும்  வெறுக்குறதும்   அவங்கவங்களோட   முடிவு   தான்  அது   கூட   ஒரு   வகையில   பாத்தா  சரி   தான்   ஆனா   நமக்கு   பிடிக்காத   ஆட்களோட   துன்பத்தில   இன்பம்   காண   நினைக்கிறதை   என்னால    கொஞ்சம்   கூட   ஏத்துக்கிரவே   முடியாது”

       “அண்ணே   எனக்கு   என்ன  கல்   மனசு?   நான்   என்ன   தப்பு   செஞ்சேன்?”

       ” நீ   ஒரு   தப்பும்   செய்யலமா.   உன்   கூட   நின்னு    பேச   எனக்கு   தெம்பு   இல்ல,  எந்த   ஹாஸ்பிட்டல்   அத   சொல்லுங்க”   முகத்தை   சுளித்துக்கொண்டு   பதில்   சொன்னாள்   நஸ்ரின்   “ராயப்பேட்டை   ஜி.எச்”… …   “ரொம்ப   நன்றி   மகளே”   பதில்   சொல்லிவிட்டு,   வேகமாக   வீட்டை   விட்டு   வெளியேறினார்   ரஃபீக்…

      ஹாஸ்பிட்டல்….

         ஆப்ரேஷன்   தொடங்கி   இரண்டு   மணி   நேரம்   ஆகி   விட்டிருந்தது.   அழுது   அழுது   கண்ணீர்   வற்றிப்   போன   கண்களுடன்   அமர்ந்திருந்தான்  ஜூனைத்.  எப்போது   அந்த   சிவப்பு   விளக்கு   அணையும்  என்று   அடிக்கடி   நிமிர்ந்து    நிமிர்ந்து   பார்த்துக்   கொண்டேயிருந்தார்   சுல்தானா  பாட்டி . விஷயம்   கேள்விப்பட்டு   அங்கு   வந்திருந்த   ஜூனைத்தின்   உயிர்   நண்பன்   ரவி ,   லேட்   ஆகி   விட்டதால்    கதீஜாம்மாவின்   தலைமையில்   அனைவரையும்   சாப்பிடுவதற்காக     வெளியே   அழைத்துச்   சென்றிருந்தான்.  அவன்   எவ்வளவோ  வற்புறுத்தியும்   தாத்தாவும்   பாட்டியும்   அவனுடன்   செல்ல   மறுத்துவிட்டனர் .  தேனுகா  முழிக்கட்டும்   நாங்க   அதுக்கு   அப்புறமா   சாப்பிடறோம்  என   ஒரே   மனதாக   சொல்லி   விட்டனர்…  ஒரு  வழியாக   அவர்கள்   எதிர்பார்த்து   காத்திருந்த   அந்த   நொடியும்   வந்தது.   ஆப்ரேஷன்   தியேட்டரின்   உச்சியில்  எரிந்து   கொண்டிருந்த   சிவப்பு   விளக்கு  அணைந்தது.   பரிதவிப்போடு   மூவரும் நாற்காலியில்   இருந்து  எழுந்தனர்.

        “அத்தா…..எனக்கு   பயமாயிருக்கு” 

        “சும்மா   இரு   சுல்தானா,   எல்லாம்   நல்லதாவே  நடக்கும்”   கதவைத்   திறந்து   வெளியே   வந்த   இரண்டு   டாக்டர்களின்  முகங்களிலும்  வெற்றிப்புன்னகை…

       “ஆப்ரேஷன்   நல்லபடியா   முடிஞ்சது,   அவங்க   பிழைச்சுக்கிட்டாங்க.  மயக்க   மருந்து   குடுத்து   தூங்க    பண்ணிருக்கோம்   அதனால   நாளக்கி    காலையில   தான்   அவங்களால   கண்   விழிக்க   முடியும்   ஸோ  மார்னிங்   அவங்க   கண்   முழிச்சதும்   அவங்கள   நீங்க   பாக்கலாம்…. ஒரு   மாசத்துக்கு   எங்கயும்   அலைய   வேணாம்  ,நல்லா  ரெஸ்ட்   எடுக்கட்டும்.   கூடவே   இருந்து   அன்பா   கவனிச்சுக்கங்க. அந்த   கவனிப்பு   தான்    அவங்க   சீக்கிரமா   குணமடைய  ஒரே   வழி”

      ” கண்டிப்பா   டாக்டர்.  தாங்க்யூ   டாக்டர்,   தாங்க்   யூ   ஸோ   மச்”   ஜூனைத்தின்   கண்களில்   ஆனந்த   கண்ணீர் . அந்த   நேரம்   பார்த்து   சாப்பிட   போனவர்களும்   வந்து   சேர , அவர்களிடமும்   அந்த   மகிழ்ச்சியான   செய்தி  தெரிவிக்கப்பட்டது.   ஆனந்த   கண்ணீர்   வழிய   நின்று   கொண்டிருந்த   தோழனை, பரிவுடன்    கட்டிக்   கொண்டான்  ரவி…”தாத்தா,  பாட்டி   வாங்க   போயி    சாப்பிடலாம்.   மச்சி   நீயும்  வா”   என   அவன்   அழைத்துக்   கொண்டிருந்த   போதே ,    ஃபோனை  எடுத்து   தன்   கணவருக்கு   டயல்   செய்தபடியே    சற்று   தள்ளி   சென்று   நின்றார்   ஆயிஷ. 

         “ஹலோ….. ஆயிஷா   என்னாச்சு?   ஆப்ரேஷன்   முடிஞ்சிருச்சா?  தேனுகா   எப்படி   இருக்கு ?” ஃபகீமின்    குரலில்   சொல்ல   முடியாத   அளவிற்கு   பதட்டம்.

         “நல்லபடியா   முடிஞ்சிருச்சுத்தா  அவளுக்கு   ஒண்ணும்   இல்ல.  அல்லாஹ்   அருளால    பிழைச்சுட்டா” 

          “மாஷா  அல்லாஹ்……இப்ப   தான்   நிம்மதியா   இருக்கு.   இதுக்கப்புறமாவது  ஜூனைத்   அழாம   சந்தோஷமா   இருப்பான்ல?  சந்தோஷம்..   சரி    ரொம்ப   நேரம்  ஆச்சு , நீங்க   எல்லாரும்   போய்   சாப்பிடுங்க”

          “நாங்க   சாப்பிட்டோம்..   ஜூனைத்து   ஃப்ரண்டு   ரவி   வந்தாப்ல,   எங்க   எல்லாரயும்   கூப்பிட்டு   போயி   சாப்புட   வச்சாப்ல .  ஆனா   அம்மா,  அத்தா,   ஜூனைத் , மூணு   பேரும்   இன்னும்   சாப்பிடல . ஆப்ரேஷன்  முடிஞ்சதும்   தான்  சாப்பிட   போவோம்னு   சொல்லிட்டாங்க” 

         “அவங்க   பிடிவாதத்த   பத்தித்   தான்   நமக்கு    நல்லா   தெரியுமே   இப்பவாவது   போயி   சாப்பிடச்   சொல்லு”

         “ம்ம்ம்   போறாங்க   போறாங்க . நீங்க   சாப்பிட்டீங்களாத்தா?” 

         “சாப்பிட்டேன்,   சப்பாத்தி..   வீட்ல   சாப்பிடல ,  வெளிய   சாப்பிட்டேன்”

        “வெளியவா?   ஏங்கத்தா?”

        “வீட்ல   எல்லாரும்   என்ன   மனநிலைல   இருக்கோம் … ஆனா  இங்க   இந்த   நஸ்ரின்   இறா  தொக்கு   செஞ்சு   வச்சுருக்கா.எனக்கு   அதை   சாப்பிட   இஷ்டம்   இல்ல . அதான்   வெளிய   போயி   சாப்பிட்டேன்”

         “அந்த   பொண்ணு   ஏன்   தான்   இப்படி    மாறிப்    போனா? கொஞ்சம்   கூட   மனிதாபிமானமே   இல்லாத  ஷைத்தான்”  வெறுப்பாக   சொன்னார்   ஆயிஷா.

       “உன்   தங்கச்சி   மட்டும்   என்னவாம்?   நிஷாவும்  தான   வர   வர   புத்தி   இல்லாம   நடந்துக்குறா.   அவ   பையனை  வீட்ட   விட்டு   வெளிய   அனுப்புனத   அவளால   ஏத்துக்கிரவே   முடியல..  கொஞ்சம்  கொஞ்சமா   நஞ்சா  மாறிட்டு   வர்றா..  சரி   அத   விடு,   அதைப்பத்தி   எல்லாம்   பேசினா   கஷ்டம்  தான்   மிஞ்சும்.  யாரு   இன்னக்கி   ஹாஸ்பிட்டல்ல   இருக்கப்   போறீங்க?”  

      ”  ஒரு  ஆள்   தான்   இருக்கணுமாம்  ஜூனைத்   இருப்பான் .  காலையில   நானோ   இல்ல   கதீஜாவோ   போயி   அவன   மாத்தி   விட்டுக்குறோம்”

         “சரி  மா”

        “சரிங்கத்தா   நீங்க   போயி   மாத்திரை   போட்டுட்டு   படுங்க   நாங்க   வந்துர்றோம்”

      ஹோட்டல்….

        “ஜூனைத்   உன்னோட   எதிர்காலம்   சம்மந்தமா   நான்   ஒரு   முடிவு   எடுத்திருக்கேன்.   இப்ப   கொஞ்ச   நேரத்துக்கு   முன்னாடி   தான்   இந்த  முடிவ   எடுத்தேன்.  உங்க   ராதிம்மாவ   கூட    நான்   கலந்துக்கல   ஏன்னா   நான்   எடுத்த   முடிவு      நிச்சயமா   சரியானது   தான்” 

          “என்ன   முடிவு   ராதா?”

         “தேனுகா   குணமாகி   வந்த   பிறகு   நீயும்   அவளும்  தனி   வீடு   பாத்து   போயிருங்க.  அது   தான்   இனிமே   சரி   வரும்.   இன்னும்   ஒரு   ரெண்டு   மூணு   மாசத்துல   கிளம்பிருங்க” 

         “அத்தா   என்ன   சொல்றீங்க?” சுல்தானா   பாட்டி   அதிர்ச்சியோடு   தன்   கணவரை   பார்த்தார்.

       “வேற   வழியில்ல   சுல்தானா,.   சொல்ல   எனக்கும்    ரொம்ப   ரொம்ப  கஷ்டமா  தான்   இருக்கு.   ஜூனைத்   இல்லாத   வீட்டை   என்னால   கற்பனை   கூட   செஞ்சு   பாக்க   முடியல.   ஆனா    நிஷா,   நஸ்ரின்   மாதிரியான   ஆட்கள்    இருக்குற   வீட்ல  தேனுகாவால   நிம்மதியா   இருக்க   முடியாது.  எல்லார்   மனசும்   கசந்து   போச்சு   இனி  நம்ம   எல்லாரும்   ஒரே   வீட்டுல   ஒண்ணா   இருக்குறது   எப்பவுமே   சரி   வராது”…..  திட்டவட்டமாக   சொன்னார்  இப்ராஹிம்

                                                  –  தொடரும்…        

    

      

        

       
   

 
          

    No comments yet.