கல்யாணம் முதல் காதல் வரை – 55

Shanmuha Sethuramachandran | 20 Feb 2026 | Share

                                55…

       ” எ..என்ன   சொல்றீங்க? தேனுகாவுக்கு கத்திக்குத்தா?……எ…. எதனால?”

        ” ஆமா   சார்  .. எல்லாத்தயும்   ஃபோன்ல   சொல்ல   முடியாது,   சீக்கிரம்   கிளம்பி   வாங்க.  உங்க   மனைவி   பீச்சுல    உக்காந்திருந்தப்ப   தான்  இந்த   சம்பவம்   நடந்துருக்கு .  சுத்தி   இருந்த   ஆட்கள்   தான்   அவங்கள   இங்க   கொண்டு   வந்து   சேத்தாங்க.   நீங்க   கொஞ்சம்   சீக்கிரம்  வந்தா   நல்லாருக்கும்”  ஃபோனில்  பேசிய    அந்த   பெண்ணின்   பரபரப்பு   ஜூனைத்தையும்   தொற்றிக்   கொள்ள,

           “இ……இதோ   இப்பவே   கிளம்பிட்டேன் ,  தாங்க்  யூ   மேம்”…   ஃபோனை   கட்    செய்தான்.  “என்னடா   ஆச்சு   தேனுவுக்கு?  எனக்கு   விபரீதமா  ஏதோ  காதில  கேட்டுச்சே?” ஃபோனை   கட்   செய்தவனைப்   பார்த்து   பரபரப்பாகக்   கேட்டார்   கதீஜா  . அவரது   குரலில்   லேசாய்   நடுக்கம். 

          ” ஆமாம்மா….அம்….அம்மா … தேனுவ   யாரோ   கத்தியால   குத்திட்டாங்களாம் ”

        “டேய்  ஜூனைத் , நீ  என்ன   சொல்ற?” 

        “ஆமாம்மா…..வாங்க   உடனே  ஹாஸ்பிட்டல்   போலாம்”   அவன்   பதட்டமாக   நகர   முயல, அவனை   வழி   மறித்தார்  கதீஜா…  “ஒரு   நிமிஷம்  டா, ராதா   ராதி  கிட்ட   சொல்லி   அவங்களையும்   கையோட கூட்டிட்டுப்   போலாம்  . அவங்க   விஷயம்   கேள்விப்பட்டா   ரொம்ப   பதட்டம்   ஆகிருவாங்க .  வா  வா”  அவனையும்   இழுத்துக்கொண்டு   காற்றைப்   போல்   வீட்டுக்குள்   நுழைந்தார்   கதீஜா…

         ” என்ன  கதீ? ஏன்   இப்படி   ஓடி   வர்ற? என்னாச்சு ?”  சுல்தானா   பாட்டி   கேட்க,   குமுறி   அழுதுகொண்டே    ஜூனைத்   நடந்ததை   சொல்ல ,  அனைவரும்   பேரதிர்ச்சியில்   உறைந்தனர். 

         ” ராதா   ராதி ,  ஆயிஷா  மாமி ,  இது   இப்படி   நிக்க   வேண்டிய    நேரமில்ல.   ராயப்பேட்டை   ஜி.எச்.ல   அவ   மட்டும்   தனியா   இருக்கா , வாங்க    போலாம்   அவளுக்கு   என்னாச்சுனு   பாப்போம்”…

           ” மாமு   இருங்க,  நானும்   வர்றேன்”   ரஷிதா   முன்னால்   நகர,   அவள்   கையை   இறுக்கமாய்   பிடித்தாள்   நிஷா…

           “ஏய்ய்ய்ய்   நீ   எங்க   போற ? இரு”   மனிதத்தனமே   இல்லாமல்   நடந்துகொள்ளும்   நிஷாவை   முறைத்து  விட்டு   அவர்கள்   ஐவரும்   வெளியேற,

           “ம்ம்ம்ம்…..போ   உள்ள” 

          “என்னய   அவங்க   கூட   போக   விடாம   தடுத்துட்டா   என்னால   போகவே   முடியாதா   என்ன ?  இப்பவே   ப்ரியாவுக்கு   ஃபோன்   பண்ணி  அவளை   இங்க   வர   சொல்றேன் ,  அவ   கூட   சேர்ந்து    அக்காவ   பாக்க   போறேன்”

         ”  ரஷி……நான்   தன்மையா   சொல்லும்   போதே    கேட்டுக்க,    என்னை   பொல்லாதவளா   ஆக்காத.   அவ   கூட   சகவாசம்  வச்சனு   வை ,  உன்னால   ஒழுக்கமான   ஒரு   வாழ்க்கய   வாழ   முடியாது .  அவள   மாதிரியே   தான்   அசலா   மாறிப்   போயிருவ”

          ” ஓ…..இனி   தான்   நீ   பொல்லாதவளா   மாறப்    போறியா?    இப்ப    மட்டும்   என்ன   மனுஷியாவா   இருக்குற ?  தேனு   அக்கா   இப்ப   ஹாஸ்பிட்டல்ல   படுத்து   கிடக்குறதுக்கு   காரணமே   நீ   தான்”

          ஏய்ய்ய்ய்….. நிஷா   அலற ,  அதை  சட்டையே   செய்யாமல்   தன்   அறைக்குள்   நுழைந்து   மொபைலை   எடுத்து   ப்ரியாவுக்கு   அழைத்தாள்   ரஷிதா.  மனதுக்குள்   தீவிரமான   பிரார்த்தனை   “யா   அல்லாஹ்,   எங்க   அக்காவுக்கு   ஒண்ணும்   ஆகக்   கூடாது..   அவங்கள   நீ    தான்   சீக்கிரமா   காப்பாத்தணும்”.. 

     ஹாஸ்பிட்டல்……

        “உங்க   மனைவியோட   வயிற்றிலும்,  இடது  தோள்   பட்டையிலும்  பலமா   காயம்   பட்டிருக்கு . அதுவும்   வயித்துல   கத்தி   ரொம்ப   ஆழமா   இறங்கியிருக்கு.   அவசரமா   ஒரு    ஆப்ரேஷன்   பண்ணி   ஆகணும்.   இல்லனா   பொழைக்குறது   ரொம்ப   கஷ்டம்.   அதனால   தான்  உங்கள   சீக்கிரம்   வர    சொன்னது.  இது   கொஞ்சம்   ரிஸ்க்கான   ஆப்ரேஷன்.  அதனால   அஸ்  எ  ஹஸ்பெண்டா   இந்த   ஃபார்ம்ல   நீங்க   சைன்   பண்ணிருங்க”   கண்ணீர்   வழிய  அவர்   நீட்டிய   ஃபார்மில்   கையெழுத்துப்    போட்டான்   ஜூனைத்.

           “அவ   எனக்கு    ரொம்ப   முக்கியம்   டாக்டர்,   எப்படியாவது ”  வாக்கியத்தை   முடிக்க   முடியாமல்   விம்மலோடு   கதறினான்   அவன்.  தன்   நாற்காலியில்   இருந்து   எழுந்து   வந்த   டாக்டர்   ஆதரவாக    அவன்  தோளைத்   தட்டினார்.

          “கடவுளை   நம்புவோம் ,  லெட்ஸ்   ஹோப்   ஃபார்   த   பெஸ்ட்”….. டாக்டரின்  அறையை   விட்டு   வெளியே   வந்தவன்   காத்திருந்த   குடும்பத்தாரிடம்  விஷயத்தை   சொல்ல ,  அனைவரும்   கலங்கிப்   போய்விட்டனர் .  பாவம்   சின்ன   பொண்ணு   அவளுக்கு   மட்டும்   ஏன்   தான்   இவ்வளவு   கஷ்டம் ? அல்லாவே…..நீ   தான்   அவள   காப்பாத்தணும்    என   ஒவ்வொருவரின்   மனதிற்குள்ளும்   பல்வேறு   விதமான  ஆனால்   பலமான   வேண்டுதல்கள்..

          “இங்க   மிஸ்டர்   ஜூனைத்   யாரு?”  பின்   பக்கம்   குரல்   கேட்க   திரும்பினான்   ஜூனைத்  .வெள்ளை   பேண்ட்   வெள்ளை சர்ட்  சகிதமாய்   ஒருவர்   நின்று   கொண்டிருந்தார். 

         “நான்   தான்,   நீங்க   சார்?”

        “ஐ. அம்  ரஹ்மான் , பீச்   ஸ்டேஷன்   சப்  இன்ஸ்பெக்டர்  . உங்க   மிஸஸ்   தேனுகா   விஷயமா   கொஞ்சம்   விசாரிக்க   வேண்டியிருக்கு,   கொஞ்சம்   அப்படி   போய்   உக்காரலாமா?” 

         “எஸ்   சார்”

        “வாங்க ”  இருவரும்   நடந்து   போய்   சற்று   தள்ளி    இருந்த   நாற்காலிகளில்   அமர்ந்தனர்.  

        “உங்களுக்கு   கல்யாணம்   ஆகி   எத்தனை   நாள்   ஆகுது?”

        “ஜஸ்ட்   ஃபார்ட்டி   டேஸ்”

        “உங்க   வைஃப்   லாயர்   இல்லயா?   அவங்க   ஹேண்ட்பேக்   செக்   பண்ணும்   போது   பாத்தேன்”

       “ஆமா   சார்,    டூ   இயர்சா   தனியா   பிராக்டீஸ்   பண்ணிக்கிட்டு   இருக்கா”

        “ஓகே    நான்    இப்ப    நேரா   பீச்சுல   இருந்து   தான்   வர்றேன்.   அங்க   விசாரிச்சு   பாத்ததுல   உங்க   மனைவி   ரெண்டு    பெரிய    பைகளோடு   ஒரு   மணி   நேரத்துக்கும்   மேலா   பீச்சுல   உக்காந்திருந்ததா   சொல்றாங்க .  அந்த   பேக்கை   நான்   செக்   பண்ணினப்ப   அதுல   முழுக்க   முழுக்க   டிரஸ்ஸஸ்   அவங்க   எங்கயாவது   வெளியூர்  கிளம்பினாங்களா ?” 

         ” இல்ல   சார் “

         ” பின்ன    ஏன்   பை   முழுக்க   துணிகளோட    சாயங்கால   நேரத்துல  பீச்சுக்கு   வந்தாங்க?”  சப்  இன்ஸ்பெக்டர்  ஜூனைத்தைப்   பார்த்த   பார்வையில்   லேசாக   சந்தேகம்   இருந்தது.   ஆனால்   அவனோ   கொஞ்சமும்   தயங்காமல்   வெளிப்படையாய்   சொன்னான்.

         ”  எங்களுது   இண்டர்   ரிலிஜியன்   மேரேஜ்   அப்டின்றதால   அடிக்கடி   எங்க     வீட்டுல   யாராவது   தேனுகாவை   குத்திக்   காட்டி    பேசுவாங்க,   அவ   வீட்ட   வெளிய   போறேன்னு   கிளம்புவா   நாங்க  தடுப்போம்,   ஆனா    இந்த   வாட்டி   யார்  தடுத்தும்   கேக்காம  அவ   போயிட்டா  .சரி   ஆஃபீசுக்கு   தான்    போயிருப்பா, காலையில   நேருல   போயி   பேசி   சமாதானம்   பண்ணி   கூட்டிட்டு   வரலாம்னு    இருந்தேன்   அதுக்குள்ள   இப்படி   ஆகிப்   போச்சு”   மீண்டும்   அழ   ஆரம்பித்தான்  அவனை   சற்று     நேரம்   அழ   விட்ட   சப்    இன்ஸ்பெக்டர்,   “காம்   டவ்ன்   மிஸ்டர் ..  சரி  அவங்கள   யாரு   இந்த  மாதிரி  பண்ணிருப்பாங்க ? ஏதாவது   கெஸ்ஸஸ்   இருக்கா?”….

          “ம்ம்ம்ம்    இருக்கு    சார்  ,கெஸ்   இல்ல   என்னால   உறுதியாவே   சொல்ல   முடியும்.   இது   எல்லாத்துக்கும்   காரணம்   அந்த    மாடசாமி   தான்”

        ” மாடசாமி?..யூ   மீன்   தொழிலதிபர்   காசிமேடு   மாடசாமி?”

         “ஆமா  சார்,   அவன்   தான்   தேனுகாவோட    இந்த    நிலைமைக்கு   காரணம் .    நான்   அவன்   மேல   கம்பிளையண்ட்   தர்றேன்   ப்ளீஸ்   அவனை   நீங்களாவது   கைது   பண்ணி   ஜெயில்ல   போடுங்க   சார்” 

         ” அவனுக்கும்   உங்க   மனைவிக்கும்   என்ன   சம்பந்தம்?   ஓ……எனக்கு   இப்பத்   தான்   புரியுது,  அந்த   வேலைக்கார  பொண்ணு   கேஸ்ல …   லாயர்   தேனுகா   விஸ்வநாதன்   உங்க   மனைவி   தானா???  அந்த   மாடசாமிக்கும்   எனக்கும்  பழைய   பகை   ஒண்ணு    இருக்கு,   இந்த   கேஸ்ல   அதையும்   முடிச்சுருறேன்.   சரி   நீங்க   இருங்க ,  ஆப்ரேஷன்   முடிஞ்சதும்  ஸ்டேஷன்   வந்து  அவன்   மேல   ஒரு   புகார்   மட்டும்   குடுங்க.   மத்த   எல்லாத்தயும்  நான்   பாத்துக்குறேன்”… அவர்கள்   பேசிக்   கொண்டிருந்த   அதே   நேரம் ,  அங்கு   புயல்   வேகத்தில்   வந்து   சேர்ந்தாள்   ரஷிதா .  உடன்  ப்ரியா.

        “மாமு……அக்கா  எப்படி  இருக்காங்க ? என்ன   நீங்க   மட்டும்   இருக்கீங்க? நன்னா   நன்னி  எல்லாரும்   எங்க?”   ரஹ்மானைப்   பார்த்து   ஒரு   நிமிஷம்   சார்   என்று  சொல்லிவிட்டு   எழுந்து   அவளை   நெருங்கினான்   ஜூனைத்.

          ” ரஷி…..ஒரு   நிமிஷம்   வெயிட்   பண்ணு,   நான்   பேசிட்டு   வந்து   கூப்பிட்டுப்   போறேன்” 

          “நீங்க   பேசி   முடிச்சு   எப்ப   வர்றது? சொல்லுங்க ,  நான்   போறேன்” 

         “நேரா  போயி  லெஃப்ட்ல  திரும்பினா  ஐ.சி.யூ  , அங்க   தான்   இருக்காங்க”

        ”  தாங்க்  யூ   சார்”   ரஹ்மானுக்கு   நன்றி    தெரிவித்து   விட்டு   வேகமாக   உள்ளே   விரைந்தாள்   ரஷிதா…..

        ” சரி   ஜூனைத்   நீங்க   பாருங்க,  ஆப்ரேஷன்   நல்லபடியா   முடிஞ்சதும்   போலீஸ்   ஸ்டேஷன்   வந்து   புகார்   குடுத்துருங்க.  டோண்ட்   வொர்ரி,  உங்க   வைஃப்   நல்லவங்க,   ரொம்ப   நேர்மையானவங்க  .அவங்களுக்கு   ஒண்ணும்   ஆகாது” அதே நேரம்…..  ஆப்ரேஷன்   தியேட்டரில்   தேனுகாவுக்கு   ஆப்ரேஷன்   தொடங்கியிருந்தது…

                                            –   தொடரும்….

      

     

         

           

       

       

       

    No comments yet.