54…
“போ உள்ள, சும்மா எப்பப் பாத்தாலும் போறேன் போறேன்னு சொல்லிக்கிட்டு இருக்க? அப்படி சொல்லுறதால தான் உன்னைய மையமா வச்சு இப்ப இவ்ளோ பெரிய பிரச்சனை வெடிச்சுருக்கு அறிவிருக்கா தேனுகா உனக்கு? ஏன் எப்பப் பாத்தாலும் அவசரகதியிலயே முடிவு எடுக்குற பின் விளைவுகளைப் பத்தியெல்லாம் யோசிக்க மாட்டியா?”
“அம்மா, நீங்க என்ன வேணாலும் சொல்லுங்க நான் இங்க வந்ததுனால தான் எல்லா ப்ராப்ளமும். சரி நான் தாலிய கழட்டல, ஆனா இங்க இருந்து போயிடுறேன் உங்க எல்லாரையும் நான் மீறுறேன்னு என்னைத் தப்பா நினைக்காதீங்க. யாருக்கும் நான் தவறான உதாரணமா ஆக விரும்பல” சொல்லிக்கொண்டே வேகமாக ரஷிதாவின் அறைக்குள் நுழைந்த தேனுகா, கதவை சாத்தி தாழ் போட்டாள். யார் கூப்பிட்டும் அவள் வெளியே வரவே இல்லை . ஒரு மணி நேரம் கழித்து அறையை விட்டு இரண்டு பைகளுடன் வெளியே வந்தாள்.
“தாத்தா பாட்டி நான் போயிட்டு வர்றேன். ஆயிஷாம்மா கதீஜாம்மா நான் கிளம்புறேன். ரஷி பாய்டி நல்லா படிக்கணும் நீ சரியா? இனிமே உங்க யார் வாழ்க்கையிலயுமே நான் இடைஞ்சலா இருக்க மாட்டேன்” என்றவள் ஜூனைத்தை நேராகப் பார்த்து” ஜூனைத்; தாங்க் யூ தாங்க் யூ ஃபார் எவ்ரிதிங் யூ கேவ் மீ…. நான் உங்கள ரொம்ப இன்சல்ட் பண்ணிருக்கேன் மொத்தத்துல உங்க நல்ல மனச புரிஞ்சுக்காம ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன் எல்லாத்துக்கும் சேத்து வச்சு உங்களால முடிஞ்சா என்னை மன்னிச்சிருங்க, இனிமே நான் உங்க ஃலைஃப்ல இல்ல” காற்றைப் போல் விரைவாய் கிளம்பினாள்.
“ஹனி” …….ஜூனைத் கண்ணீர் கண்களோடு அழைக்க, திரும்பிக் கூட பார்க்காமல் சென்று விட்டாள்.
“அக்கா…..அக்கா……ப்ளீஸ் அக்கா நில்லுங்க , நான் சொல்லுறத கேளுங்க, அக்கா இது உங்க வீடு இங்கருந்து கிளம்பிட்டா இப்ப எங்க போவீங்க? வேணாம்க்கா போகாதீங்க” ரஷிதா அவள் பின்னால் ஓட முயற்சிக்க, அவள் கையை இறுக்கிப் பிடித்தார் நிஷா.
“ஏய் எங்க போற? அவ போனா போறா நீ சும்மா இரு”…..
நசீமா வீடு…..
கமகமவென உணவின் மணம் வீட்டை நிறைத்தது . கிச்சனில் ஆசையாய் பிரியாணிக்கு தம் போட்டுக் கொண்டிருந்தாள் நசீமா…..
” நசீமா…. என்னமா , பிரியாணி எப்ப வரும்? நான் பசியோட காத்துக்கிட்டு இருக்கேன், வா வா சீக்கிரம் வா” ஹாலில் அமர்ந்திருந்த முஸ்தஃபா, கிச்சனைத் திரும்பிப் பார்த்து குரல் கொடுத்தார்.
“இருங்க மாமா, தம் போட்டுருக்கேன் இன்னும் கால் மணி நேரம் வெயிட் பண்ணுங்க டேஸ்ட்டான பிரியாணி தயார் ஆகிடும்”
“எப்படியோ அந்த தேனுகாவை வீட்டை விட்டு தொரத்தியாச்சு, இப்பத் தான் அத்தா எனக்கு நிம்மதியா இருக்கு” ஷாரிக் சொல்ல தலையாட்டினார் அவர்.
“ஆமாடா…ஒரு மாசத்து போராட்டம் ஒரு வழியா வெற்றி அடைஞ்சிருச்சு”
“ஆனா நம்ம முயற்சியால அவ வெளிய போயிருந்தா இன்னும் நல்லா இருந்துருக்கும் திருப்தியா இருந்திருக்கும்”
“விடு , அதான் நம்ம எல்லாருக்கும் சேத்து உங்க அம்மா பேசிட்டாளே”
“அதான் மாமா எனக்கும் ஆச்சரியம்”
“எல்லாம் என்னோட ட்ரைனிங் தான். நான் அவ கூட அங்க தான இருக்கேன்? இந்த தேனுகா வந்ததால தான் இங்க எல்லா பிரச்சனையும் அவ இங்க இல்லாம போயிட்டா நம்ம வீடு பழைய மாதிரி சந்தோஷமா ஆகிரும் அது இதுன்னு தூபம் போட்டு அவளுக்கே தெரியாம அவ மூளையை எனக்கு அடிமையாக்கிட்டேன். நீங்க வீட்டை விட்டு வெளிய வந்ததுல இருந்தே நிஷா தன்னோட சுயமா சிந்திக்குற தன்மையை கொஞ்சம் கொஞ்சமா இழக்க ஆரம்பிச்சு நான் சொல்றது மட்டும் தான் சரின்னு நினைக்க ஆரம்பிச்சுட்டா. அதனால தான் ரஷி கூட படிக்குற பையன் வீட்டுக்கு வந்துட்டு போனான்ங்குற சின்ன விஷயத்த சின்னதா பாக்காம ஊதி பெரிசாக்கி நாம அங்க இருந்துருந்தா என்ன மாதிரி பேசிருப்போமோ அதே மாதிரி அவளும் பேசிட்டா. இனி தான் நமக்கு பெரிய வேலை இருக்கு, அவங்க ரெண்டு பேரும் சட்டப்படி பிரிஞ்சதும் நம்ம ரஷியை ஜூனைத்துக்கு நிக்காஹ் பண்ணி வச்சுரணும் . அப்போ தான் நம்ம குடும்பத்துக்குள்ள நம்ம குடும்பத்தை சேர்ந்த ஆட்கள் மட்டும் இருப்பாங்க”
“அத்தா நீங்க சொல்றதெல்லாம் சரி தான். ஆனா ரஷியை நிக்காஹ் பண்ணிக்கிறதுக்கு ஜூனைத் சம்மதம் சொல்லணுமே? எனக்கு தெரிஞ்சு அவன் சொல்ல மாட்டான், அவன் தான வேணும் வேணும்னு அந்த தேனுகாவ பிடிச்சுட்டு வந்தான்? நீ நிக்காஹ் செஞ்சுக்கணும்னு அவன் கிட்ட சொல்ல ஆரம்பிச்சாலே அவள என்னால மறக்க முடியலனு ஆரம்பிச்சுருவான்”
“அட விடு ஷாரிக்கு, மலையவே நகர்த்தியாச்சு, மடுவா ஒரு பிரச்சனை? பாத்துக்கலாம் விடு . போயி பிரட் அல்வா எடுத்துட்டு வா நசீமா, எல்லாரும் ஒண்ணா இனிப்பு சாப்பிடலாம்”.
கடற்கரை….. மாலை நேரம்….
சிலை போல் அமர்ந்திருந்தாள் தேனுகா. மனது முழுக்க வெறுமையாய் இருந்தது சே….. என் வாழ்க்கையில் எனக்கு என்று எந்த இடமுமே நிரந்தரமாய் இருக்காதோ ? எங்கு சென்றாலும் நான் ஒரு வேண்டாத பொருளாகவே ஏன் பார்க்கப்படுகிறேன்? யாருக்கும் பிடிக்காமல் வாழ்வதை விட கடலில் விழுந்து இறந்து விடலாமே யாருக்கும் பாரமில்லாமல் போய்விடுமே? கண்ணீரோடு கண்களை மூடியவளின் மனத் திரையில் ஜூனைத்தின் முகம் வந்து போனது . மானசீகமாய் அவனுடன் உரையாட ஆரம்பித்தாள். ஜூனைத் ஐ அம் சாரி நீங்க என்னை சமாதானப்படுத்தி என் கூட சந்தோஷமா வாழ உங்களால முடிஞ்ச அத்தனை முயற்சிகளையும் எடுத்தீங்க ஆனா என்னால தான் மனசார உங்க மனசார வாழவும் முடியல மனசு வெறுத்து போகவும் முடியல நான் என்னங்க பண்ணட்டும் இன்னொரு தடவை அன்புங்குற மழையில நனைஞ்சு ஏமாந்துட்டா என்ன செய்யன்னு ஒரு பெரிய பயம் அந்த பயத்தால தான் என்னால உங்க அன்பை அப்போ ஏத்துக்கிற முடியல ஆனா உங்க நல்ல குணங்களையும் பண்புகளையும் பாத்த எனக்கு உங்க மேல என்னையும் அறியாமலயே ஒரு பிடித்தம் வந்துருச்சு ஆனா என்னதான் படிச்சு பெரிய வேலைல இருந்தாலும் நம்ம போய் ஒரு ஆம்பளை பையன் கிட்ட எனக்கு உங்கள பிடிக்குதுன்னு எப்படி சொல்றதுங்குற எண்ணம் சொன்னா நீங்க என்னை என்ன நினைப்பீங்கனு ஒரு எண்ணம் அந்த எண்ணங்கள் என்னை தடுத்துருச்சு அதனால நானே என்னை தடுத்துக்கிட்டேன் நீங்க என் மேல கோபமா பாராமுகமா இருந்தீங்க பாருங்க அதை என்னால தாங்கவே முடியல அப்போ தான் எனக்கு உங்க மேல அன்பு இருக்குன்னே நான் உணர்ந்தேன்….ஆனா எனக்குத் தான் யாரு மேலயும் அன்பு வைக்கிறதுக்கான தகுதியே இல்லயே….. உங்களைப் பிரியவே கூடாதுன்னு நினைச்ச கொஞ்ச நேரத்துலயே உங்களை ஒட்டுமொத்தமா பிரிஞ்சுட்டேன் சாரி ஜூனைத் என்னை மன்னிச்சிருங்க என்னால நீங்க நிறைய கஷ்டத்த அனுபவிச்சிருக்கீங்க அதுக்காகத் தான் இந்த மன்னிப்பு……கண்களை அவள் திறந்த போது அந்த கடல் அவளை வா வா என்று அழைப்பது போல் இருந்தது.
***********
“அம்மா அவ ரொம்ப நல்ல பொண்ணுமா, எல்லாம் கூடி வர்ற நேரத்துல மாமி ஏன் மா குறுக்க புகுந்து எல்லாத்தயும் கெடுத்துட்டாங்க? நான் அவ கூட பேசாம இருந்தேன் அதை அவளால தாங்க முடியலம்மா அவ கண்ணுல நான் பாசத்தை பார்த்தேன் காதலை பாத்தேன் முழுசா எல்லாமே மாறப் போகுதுன்னு நினைச்சேன் ஆனா இப்ப அவ போயிட்டாமா, என்னை ஒரேடியா விட்டுட்டு போயிட்டாமா. இனி அவ என் வாழ்க்கையில இல்லமா, வரவே மாட்டா, அவளுக்கு என் மேல காதல் வர லேட் ஆனாலும் எனக்கு அவள ரொம்ப பிடிக்குமே மா அப்புறம் ஏன் அவ வீட்ட விட்டுப் போகணும் ? இதுல என்னமா நியாயம் இருக்கு? இப்பவும் அவ எதனால தெரியுமா வீட்டை விட்டுப் போனா ? அவள வச்சு நம்ம வீட்டுல பிரச்சனை வருதுன்னு தான். இவ்ளோ நல்லவளா இருக்குற தேனுவை நான் எதுக்காக விடணும்?” தோட்டத்து ஊஞ்சலில் அமர்ந்திருந்த கதீஜாவின் முன்னால் நின்று மனது உடைந்து போய் பேசிக் கொண்டிருந்தான் ஜூனைத். அவனைத் தேற்ற வழி இல்லாமல் அமைதியாய் அமர்ந்து அவனையே வெறித்துக் கொண்டிருந்தார் கதீஜா. என்ன செய்வது? இல்லை எதையாவது அவர் செய்ய நினைத்தாலும் செய்து விட முடியுமா? அதே நேரம் அவன் செல்ஃபோன் அழைத்தது, ஏதோ அன்நோன் நம்பர் எடுக்க வேண்டாம் என்று நினைத்தவன், ஏதோ ஒரு உள்ளுணர்வில் அட்டெண்ட் செய்தான். “ஹலோ”….
“மிஸ்டர், நீங்க தேனுகாவோட ஹஸ்பண்டா?” பதட்டமாய் ஒரு குரல்,
“எஸ்….. சொல்லுங்க” இவனும் பதட்டமாய் கேட்டான்.
“நீங்க உடனே கிளம்பி ராயப்பேட்டை ஜி. எச். வாங்க , உங்க ஃவைப் சீரியசான நிலைமையில இருக்காங்க”
“அ….அவளுக்கு எ…. என்ன?”
“கத்திக்குத்து”…..
– தொடரும்…..
No comments yet.