52….
தோட்டத்தைக் கூட்டிக் கொண்டிருந்த நிஷா , கேட் திறக்கும் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தார் . விக்ரம், வீட்டை பார்த்தபடியே வாசல் கேட்டைத் திறந்து உள்ளே வந்து கொண்டிருந்தான்.
“யாரு நீங்க? யாரு வேணும்?”
“என் பேரு விக்ரம் மா , ரஷிதா கூட காலேஜ்ல ஒண்ணா படிக்கிறேன்”
“ஓ நீயும் அவளும் ஒரே க்ளாஸா?”
“இல்லமா, நான் சீனியர்”
“அப்படியா? வா வா உள்ள வா, நான் ரஷிதாவோட அம்மா தான்”
“ம்ம்ம்ம் தெரியும் மா”
“தெரியுமா எப்படி?”
“அதான் முக ஜாடையே சொல்லுதே” விக்ரம் புன்னகைத்தபடியே சொல்ல, ஏனோ அந்த பதில் நிஷாவுக்கு பிடிக்கவில்லை .ஹாலில் நுழைந்ததும் சோபாவை காட்டி உக்காருப்பா என்றார் “என்ன விஷயமாப்பா இவ்ளோ தூரம் வந்துருக்கீங்க?”
“ரஷிதாவை பாக்க தான்மா”….
“என்னது ரஷியை பாக்கவா?” நிஷா அவனை முறைப்பது போல் பார்க்க,
“காலேஜ்ல அவங்க ஃபைலை விட்டுட்டு வந்துட்டாங்க. அதுல மார்க் ஷீட் எல்லாம் இருந்துச்சு மிஸ் ஆகிட்டா பெரிய பிரச்சனை ஆகிரும்ல? அதனால தான் அதைக் கொண்டு வந்து குடுத்துட்டு போகலாம்னு வந்தேன்”
” ம்ம்ம் சரி என் கிட்ட குடு நான் அவ கிட்ட குடுத்துடுறேன்”
“ஏன்மா இவ்ளோ தூரம் உங்க பொண்ணுக்காக வந்திருக்கேன் ஒரு காஃபி குடுக்க மாட்டீங்களா? அட்லீஸ்ட் கொஞ்சம் தண்ணியாவது” அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே “அம்மா….பசிக்குது இன்னக்கி என்ன டிஃபன் பண்ணிருக்க?” கேட்டுக்கொண்டே உள்ளிருந்து வெளியே வந்தாள் ரஷிதா. விக்ரமை கண்டு ஆச்சரியம் அடைந்தாள்.
“வாங்க வாங்க, என் வீடு எப்டி உங்களுக்கு தெரியும்?”
“உங்க ஆதார் கார்டுல அட்ரஸ் பாத்து வந்தேன்”
“ஆதார் கார்டா?” அப்போது தான் அவன் கையில் இருந்த தன் ஃபைலை கவனித்தாள் ரஷிதா.
“அச்சோ….என் ஃபைல், இது எப்படி உங்க கிட்ட வந்துச்சு?”
“கான்டீனுக்கு வந்து என் கிட்ட பேசிட்டு போனீங்கள்ல? அப்ப கீழ விட்டுட்டு போயிட்டீங்க, அது தான் குடுத்துட்டு போலாமேனு வந்தேன்” அவன் ஃபைலை நீட்ட, ரஷிதா
வாங்கிக் கொண்டாள்.
” தாங்க்ஸ்ங்க, தாங்க் யூ சோ மச். இதுல தான் என்னோட எல்லா சர்டிஃபிகேட்சும் இருக்கு. அம்மா, இவரு தான் விக்ரம் , எங்க சீனியர். ஹார்லிக்ஸ் போட்டு கொண்டு வா”
“அதெல்லாம் வேணாம் ரஷி, தண்ணி குடுங்க போதும்”
“ரஷிதா போ, போய் தண்ணி கொண்டு வந்து குடு”
ம்ம்ம்ம் அவள் நேராக கிச்சனுக்குள் நுழைந்து தண்ணீர் கொண்டு வந்தாள். வாங்கிக் குடித்துவிட்டு புறப்பட எழுந்தான் விக்ரம் . வர்றேங்கம்மா…
“சரி”
“ரஷி நான் போயிட்டு வர்றேன்” அவன் விடைபெற்று கிளம்ப, தானும் பின் தொடர்ந்தாள் ரஷிதா.
“போயிட்டு வாங்க, எதுல வந்தீங்க? பஸ்லயா இல்ல பைக்லயா?”
“பஸ்ல தான்”
“மணி ஆறாச்சு, இதுக்கு மேல எங்க ஏரியாவுல பஸ் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம் , நீங்க ரொம்ப நேரம் வெயிட் பண்ற மாதிரி இருக்கும்”
” அய்யயோ…. இப்ப என்னங்க செய்யுறது? நான் வேற ஏழு மணிக்குள்ள வீட்டுல இருந்தாகணுமே?”
” ஒண்ணும் ப்ராப்ளம் இல்ல அதுக்கு வேற ஒரு ஐடியா இருக்கு”
“என்ன ஐடியா? ஸ்கூட்டி எடுத்துட்டு வந்து நீங்களே என்னை எங்க வீட்ல ட்ராப் பண்ண போறீங்களா?”
“ம்ஹூம் எனக்கு வண்டி ஓட்ட தெரியாது. பஸ் தான் கிடைக்காது ஆனா ட்ரெயின்ல போறது கஷ்டமே இல்ல . எங்க வீட்ல இருந்து வெளியே போன உடனே ஒரு லெஃப்ட் கட் ஆகும், அதுல கொஞ்ச தூரம் போயி தர்ட் ரைட் எடுத்தீங்கன்னா மெட்ரோ ஸ்டேஷன்கு போயிரலாம் உங்க வீடு எங்க விக்ரம்?”
“அரும்பாக்கம்”
“அப்ப ப்ராப்ளமே இல்ல ஈசியா போயிரலாம்” அவள் புன்னகைக்க
“சரிங்க, தாங்க்ஸ் நான் கிளம்புறேன்”
“நான் தான் உங்களுக்கு தாங்க்ஸ் சொல்லணும், என் ஃபைலை ரொம்ப பத்திரமா கொண்டு வந்து குடுத்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்றி” பேசிக் கொண்டே வந்ததில் கால் இடறி சற்று தடுமாறி விழப் போன ரஷிதாவை கையைப் பிடித்து சட்டென நிறுத்தினான் விக்ரம். “பாத்து பாத்து.. நான் போயிட்டு வர்றேன் பாய் , காலேஜ்ல பாக்கலாம்”
“சரிங்க…. பாய் ” அவனை அனுப்பி விட்டு உள்ளே வந்த ரஷிதா,
“அம்மா டிஃபன் தர்றியா?” என்றாள்
“யாருடி அவன்?”
“விக்ரம். என் கூட காலேஜ்ல படிக்குறாரு, ஏன் கேக்குற ? அதான் உன்கிட்ட நான் சொன்னேன்ல?”
“காலேஜுக்கு படிக்கத் தான போற? ஆம்பள பையன் கூடலாம் எதுக்கு பழக்கம் வச்சுக்குற?”
“என்னாது பழக்கம் வக்கிறேனா? அம்மா…. என்ன பேசுறன்னு உணர்ந்து பேசு. என் ஃபைலை காலேஜ்ல மிஸ் பண்ணிட்டேன், அதை எவ்ளோ நல்ல மனசோட வீடு தேடி வந்து குடுத்துட்டு போயிருக்காரு ? அதைப் பாக்காம நீ ஏதேதோ பேசிக்கிட்டு இருக்க?”
“அதே தான்டி நானும் சொல்றேன், கீழ கிடந்த உன் ஃபைலை பாத்தா எடுத்து வச்சிருந்துட்டு நாளக்கி காலேஜ்ல குடுத்திருக்கணும், இல்லாட்டி ஆஃபீஸ் ரூம்ல ஒப்படைச்சிருக்கணும் ரெண்டுமே செய்யாம எதுக்குடி வீட்டுக்கு வர்றான்? உனக்கும் அவனுக்கும் அப்படி என்ன சம்பந்தம்?”
“அம்மா……….என்னமா ஒரு சின்ன விஷயத்த இவ்ளோ பெரிசாக்குற?” கோபமானாள் ரஷிதா…
“சின்ன விஷயமா? அப்படியே அறைஞ்சேன்னா தெரியும் சேதி…..கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு, அவன் உன் கூட படிக்குற பையனா இருந்தாக் கூட பரவாயில்ல , சீனியர்ங்குற .. அவன் கூட உனக்கு என்ன பேச்சு?” நிஷா மீண்டும் அதே கேள்வியை கேக்க ரஷிதாவின் கோபம் எல்லை மீறியது.
“இங்க பாருமா, சும்மா அது இதுனு கண்டபடி பேசி டென்ஷன் பண்ணாத. கடிவாளம் கட்டுன குதிரை மாதிரி காலேஜ்ல யார் கிட்டயும் பேசாம யார் கூடவும் பழகாமலாம் என்னால இருக்க முடியாது . ப்ரியா எப்படி எனக்கு ஃபிரண்டோ அதே மாதிரி விக்ரமும் எனக்கு ஃப்ரண்டு அவ்ளோ தான். உன் மரமண்டைக்கு நான் சொல்லுறது புரியுதா? புரியாட்டி புரிஞ்சுக்குறதுக்கு கொஞ்சமாவது முயற்சி செய்”
” ரஷிதா……அம்மாவை பாத்து என்ன சொல்லுற ?அவ என்ன மரமண்டையா?” கோபமாய் கேட்டுக்கொண்டே வீட்டுக்குள் வந்தார் வாக்கிங்கை முடித்திருந்த இப்ராஹிம் தாத்தா. பின்னாலேயே சுல்தானா பாட்டியும் வந்து சேர்ந்தார்.
“நல்லா கேளுங்க அத்தா , காலேஜ் போக ஆரம்பிச்சதுல இருந்து இவளுக்கு வாய் ரொம்ப கூடி போயிருச்சு . சுத்தமா சேர்க்கை சரி இல்ல, அந்த தேனுகா கூட சேர்ந்து சேர்ந்து இவளும் அவ மாதிரியே ஆகிட்டா. அவ ஜூனைத்தை நிக்காஹ் பண்ணிக்கிட்டு வந்த மாதிரி நீயும் அந்த விக்ரமை நிக்காஹ் செய்ய ஆசைப்படுறியா?”
“அம்மா போதும் நிறுத்து” கண்ணீரோடு அலறினாள் ரஷிதா.. “ஒரு பையன் என் ஃபைலை கொண்டு வந்து குடுத்துட்டு போனதுக்கா இவ்ளோ அதிகமா பேசுற? நன்னா இங்க பாருங்க, இவங்க என்ன பேசுறாங்கன்னு பாருங்க , நான் அவங்கள மரமண்டைனு சொன்னது தப்பு தான். ஆனா அதுக்காக அம்மா இந்த மாதிரி பேசுறது சரியா?” வீட்டுக்குள் ஒரு பெரிய வார்த்தைப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த அதே நேரம், வாசலில் வந்து நின்றது ஜூனைத்தின் கார். தேனுகாவின் ஆஃபீசில் இருந்து கிளம்பியதால் அவளையும் கூடவே தான் அழைத்து வந்திருந்தான். :என்ன வீட்டுக்குள்ள இவ்ளோ சத்தம்?” கேட்டுக்கொண்டே வேகமாக உள்ளே விரைந்தான் ஜூனைத்.
“ரஷி…..அழாம என்ன நடந்துச்சுனு சொல்லு ” சுல்தானா பாட்டி அவளை சமாதானம் செய்ய , அவள் அழுது கொண்டே நடந்ததை விவரித்தாள்.
“நிஷா, இது சாதாரண விஷயம்… உன்னோட அதீத கற்பனையால நீ தான் இதை பூதாகரமானதா ஆக்குற, சின்ன பிள்ளை கிட்ட தகாத வார்த்தைகளை பேசுற, இது தப்பும்மா”
“அத்தா…. அவன் சரி இல்லை, அவனை பாத்தா நல்ல பையன் மாதிரி எனக்கு தெரியல, உங்க மகள பாக்கத் தான் வந்தேங்குறான், உனக்காக இவ்ளோ தூரம் வந்திருக்கேன் குடிக்க தண்ணி கூட தர மாட்டியானு கேக்குறான், எல்லாத்துக்கும் மேலா அவன் கிளம்பின போது ரஷிதா தடுமாறி விழப் போறா அவன் கைய புடிக்குறான், இவ இடம் குடுக்காம எப்படித்தா அவன் இவ்வளவு உரிமை எடுத்துக்குவான்? நீ எதுக்குடி அவன் கூட கேன்ட்டீன்லாம் போற?”
“அம்மா , இன்னக்கி காலேஜ்ல சீனியர் பசங்க என்னை ராகிங் பண்ணினாங்க . அதுல இருந்து விக்ரம் தான் என்னைக் காப்பாத்துனாரு அதுக்கு தாங்க்ஸ் சொல்லத் தான் நான் அவர தேடி போனேன்”
” என்னாது ராகிங்கா ? அத்தா, அம்மா, பாத்தீங்களா? இவ காலேஜ்ல இந்த கண்றாவியெல்லாம் கூட நடக்குதாம். ஏய்ய்ய், நீ படிச்சு கிழிச்சது எல்லாம் போதும். இனிமே காலேஜுக்குலாம் போகாத , வீட்டோட இரு. உன்னைய என்னால நம்ப முடியல” நம்ப முடியல என்ற வார்த்தை ரஷிதாவின் மனதை சுக்குநூறாய் உடைக்க, கதறி அழ ஆரம்பித்தாள். அவள் அப்படி அழுவதை தேனுகாவால் தாங்கி கொள்ள முடியவில்லை.
“நிஷாம்மா…. இவ உங்க பொண்ணு இவள நீங்க என்ன வேணாலும் சொல்லி திட்டுறதுக்கு உங்களுக்கு உரிமை இருக்கு , ஆனா அதுக்குனு என்ன பேசணும்னு ஒரு வரைமுறை இருக்கில்ல? பெத்த அம்மா நீங்களே இப்படி பேசினா அவ வேதனை”….
“போதும் நிறுத்து…..உன்னை யார் இங்க கருத்து சொல்ல கூப்பிட்டாங்க? என் வீட்டுல நடக்குற எல்லா பிரச்சனைக்கும் காரணமே நீ தான், நீ மட்டும் இங்க வந்துருக்காட்டி என் மக இந்நேரம் ஜூனைத்தை நிக்காஹ் செய்து நிம்மதியா இருந்துருப்பா. உன்னால தான் அவ வாழ்க்கையே கெட்டு போயிருச்சு…..இதோ பாரு, என் மகளை நான் திட்டுவேன் அடிப்பேன் அதை என் குடும்ப ஆட்களே கேள்வி கேக்குறது தப்பு , எங்க இருந்தோ வந்த அனாதை கழுதை நீ என்னை கேள்வி கேக்குறியா? இதுக்கு மேல என் மக விஷயத்துல தலையிட்டனு வை, நடக்குறதே வேற சொல்லிட்டேன். போடி அந்த பக்கம்”.விஷமாய் வார்த்தைகளை கக்கினாள் நிஷா….
– தொடரும்…….
No comments yet.