கல்யாணம் முதல் காதல் வரை – 51

Shanmuha Sethuramachandran | 17 Feb 2026 | Share

                             51…..

        மாஷா  அல்லாஹ்  இல்லம்….

         “அத்தா”

         “என்ன   சுல்தானா?”

         “தேனுகா   விஷயத்துல   அடுத்து   நம்ம   என்ன   செய்யப்   போறோம்?” 

        ” உன்   கேள்வியே   எனக்கு   புரியல.   இதுல    நம்ம   என்ன   செய்ய   முடியும்?   வாழப்   போறது   அவங்க   ரெண்டு   பேரும்,   அவங்க   எடுக்குறது   தான   முடிவு?    நீயோ   நானோ   தலையிட   முடியாது   தலையிட்டாலும்   அது   அநாகரிகமா  இருக்கும்.  எனக்கு    அவங்க   ரெண்டு   பேரும்   ஒண்ணு   சேந்து  வாழணும்னு   விருப்பம்    இருக்கு.   ஆனா   அல்லாஹ்   என்ன   நினைக்கிறானோ  அது  தான   நடக்கும்,   பாக்கலாம்”

        ” நாளையோட   அவ   கேட்ட   ஒரு   மாசம்   கெடு   முடியுது.   என்ன   முடிவு   எடுக்கப்   போறாளோ,  அதுக்கப்புறம்   ஜூனைத்   என்ன   செய்யப்   போறானோ   இதை   எல்லாம்   நினைச்சாலே   கொஞ்சம்   பயமா   தான்த்தா   இருக்கு”
 
        “பயந்து   என்ன   ஆகப்   போகுது   சுல்தானா ? எல்லாமே   இறைவன்  செயல்   தான்.   ஆனா   இந்த   ஒரு   வாரமா  ஜூனைத்   கிட்ட   ஒரு   மாற்றம்  தெரியுது   நீ   அதை   கவனிச்சியா?” 

        “இல்லங்களேத்தா,   நீங்க   எதை   சொல்றீங்கனு   எனக்கு   புரியல”   

        ” ஜூனைத்  தேனுகா  இருக்குற   திசை   பக்கமே   இருக்க   மாட்டேங்குறான்,  சாப்பிட   வரும்போது   இவன்   சாப்பாடு   தட்டை   எடுத்துக்கிட்டு   மேல   போயிடுறான்.   பாரா   முகமாய்    இருக்கான் ,  முன்னாடிலாம்   தேனுகா   தான்   அப்படி    இருப்பா.   ஆனா   இப்ப   இவன்   அப்படி   இருக்கான் .  ரெண்டு   பேருக்குள்ள    ஏதோ   பெரிய   பிணக்கு  இருக்குனு    நினைக்கிறேன்”

          “என்னத்தா    இது?  முன்னாடி   அவ   மட்டும்   தான்   அப்படி   இருந்தா , இப்ப   இவனும்   ஆரம்பிச்சுட்டானா?    நமக்கு   தெரியாம   நிக்காஹ்   தான்   செஞ்சுக்கிட்டு   வந்துட்டான்   சரினு   விட்டுட்டோம் ,  சண்ட   சச்சரவு   இல்லாம   நிம்மதியா   வாழலாமே ?  வயசான   காலத்துல  நம்மள  எதுக்கு    இப்படி   சித்ரவதை   பண்றான்?  சரி    நம்மள   கூட   விடுங்க,  நம்ம   மகனும்   கதீஜாவும்  பாவம்   இல்லயா?   பாசமா   வளர்த்த   மகனை   திட்டவும்   முடியாம ,  நல்லபடியா  நிம்மதியா   வாழ்க்கையை   நடத்துனு   சொல்லவும்   முடியாம   ரொம்ப   சோகமா   இருக்காங்க   .என்னைக்குத்   தான்   இந்த   பிரச்சனை   எல்லாம்   தீருமோ  எனக்கு   தெரியல”   சுல்தானா   பாட்டியின்   கண்கள்   லேசாக   கலங்கியது.

          “என்ன   சுல்தானா   நீயும்   ஜூனைத்   தான்   தப்புங்குற   ரீதியில   பேசுறியே?   இங்க    இருக்குற   யாருமே   அவனை   புரிஞ்சுக்கிரலன்னா   அவன்   கவலைப்பட   மாட்டான்   ஆனா   நீயும்   நானும்   அவனை   புரிஞ்சுக்கலைன்னா   அவன்   ரொம்ப    நொந்து   போயிருவான்மா.  தேனுகாவுக்கு   தீராத   வேதனைய   குடுத்துட்டோமேங்குற ஒரு   குற்ற   உணர்வுல   தான   ஜூனைத்   அவளை   நிக்காஹ்   பண்ணிக்கிட்டான்?   ரெண்டு   பேரும்   மனசு   பொருந்தி   போய்   வாழுறதுக்கு    இன்னும்   கொஞ்சம்   காலம்     ஆகும்,   அவங்க   ரெண்டு   பேருக்கும்   இடையே   இருக்கிறது   பெரிய   உளவியல்   சிக்கல்.  பொறுமையா   கையாளாட்டி   பெரிய   வினையில   போய்  முடிஞ்சுரும்.   அவங்க   படிச்சவங்க,  வெளிய   நாலு   இடங்களுக்குப்   போயி   பழக்கப்பட்டவங்க,   அவங்களுக்கு   தெரியாதது   ஒண்ணுமில்ல.  அவங்கள   நம்புவோம் , அவங்க   என்ன   முடிவு   எடுத்தாலும்   அதை   சந்தோஷமா  வரவேற்கணும் ,  புலம்பாம   இரு .   நம்ம   வீட்டுல   உள்ள   மத்த    எல்லாரும்  தான்   அவசரப்பட்டு   தேனுகா   ஜூனைத்   ரெண்டு   பேர்   வாழ்க்கையும்   வீணாப்   போச்சுனு   புலம்புறாங்கன்னா   நீயும்   அதே   போல   யோசிக்கிறியே?   வயசு   ஆகுதுங்குறது   முகமும்   உடம்பும்    முதிர்ச்சியாகுறது    மட்டும்   இல்ல,  சிந்தனைகளும்    முதிர்ச்சியோடவும்   தெளிவாவும்   இருக்குறது   தான்   புரியுதா?   எல்லாமே   சரி   ஆகும்.    அல்லாஹ்   இருக்கான்,  தைரியமா  இரு”   அவர்   பாடம்   எடுப்பது   போல   தெளிவாக   விளக்கி   முடித்தார்   “நான்   வாக்கிங்   போகலாம்னு   இருக்கேன்  , இங்க   உக்காந்தா   என்னத்தயாவது   யோசிச்சுக்கிட்டே   இருப்ப    நீயும்   வாயேன்   போயிட்டு   வரலாம்”

        ” சரித்தா”   குழம்பிய   குட்டையாய்   இருந்த    சுல்தானா   பாட்டியின்   முகம்   இப்போது   சற்றே    தெளிந்திருந்தது.  இப்ராஹிம்   தாத்தா   வெளியேறி   செல்ல,   சுல்தானா  பாட்டியும்   அவரைப்   பின்   தொடர்ந்தார்… அவர்கள்   வெளியேறிச்  செல்வதை   கவனித்துக்   கொண்டிருந்த   நஸ்ரின்,  உடனே   ஃபோனை   எடுத்து   நசீமாவிற்கு   கால்   செய்தாள். 

          “ஹலோ   ஆப்பா”

         “சொல்லு   நஸ்ரினு   என்ன   இந்நேரத்துக்கு   ஃபோன்   பண்ணிருக்க?”

         “அதுவா …  இன்னக்கி   தான   நாம   போட்ட   திட்டத்த   செயல்படுத்துற   நாளு ? அதான்   ஒரு   மாரி   படபடப்பா   இருக்கு   எல்லாம்   சரியா   நடக்குமா   ஆப்பா?”

         “நீ   பயப்படாதடி   எல்லாமே   சரியா  தான்   நடக்கும்”  

         “கொஞ்சம்   பிசகினாலும்   நாம   மாட்டிக்கிருவோம்க்கா  ,அப்புறம்  உன்னை   மாதிரியே   நானும்   என்   வீட்டுக்காரரும்   இங்க   இருந்து   மூட்டை   முடிச்சை   கட்டிக்கிட்டு   வர   வேண்டியது   தான்”  

         “சை….ஷைத்தான்  மாதிரி   பேசாத,   எல்லாம்   நாம   நினைச்சது   போலவே     நல்லபடியா   நடந்து   முடியும்.  நம்ம   மாமா   சொன்ன   மாதிரி   இது   தான்   அந்த   தேனுகாவை   நம்ம   குடும்பத்தை   விட்டு  பிரிக்குறதுக்கான   கடைசி   அஸ்திரம்,  இது  சரியா  நடந்தே   தீரணும்”  

         “ஆமா,   சரி   நீ   எல்லாம்   முடிஞ்ச   பின்னால   எனக்கு   ஃபோன்  பண்ணு  மறந்துராத   சரியா?”

         “மறக்க   மாட்டேன்டி”

          “சரி    சரி”

          “பாப்பா   என்ன    செய்யுறா?”

          “ஆயிஷாம்மா   தோட்டத்துக்கு   தூக்கிட்டுப்   போயிருக்காங்க” 

         “சரிடி    நஸ்ரினு,  எனக்கு   கொஞ்சம்   வேலை   இருக்கு    நீ   ஃபோனை   பக்கத்துலயே   வச்சுரு   காரியம்   ஆனதும்   நான்   அடிக்குறேன்”

          “சரி   ஆப்பா”….  ஃபோனை   கட்   செய்தாள்   நஸ்ரின்….

     காலேஜ்….கல்லூரி   முடிந்து   விட்டிருந்த   மாலை   நாலு   மணி.  கேட்டை   நோக்கி    போய்க்   கொண்டிருந்த   மாணவர்கள்   கூட்டத்தில்   ஒரு   அங்கமாய்    நடந்து    கொண்டிருந்தனர்   ரஷிதாவும்,  ப்ரியாவும்.   ரஷிதாவின்   முகத்தில்  எப்போதும்   காணப்படும்   துள்ளல்  இல்லை   மாறாக   சோர்வாக  இருந்தாள். 

         ” ரஷி,   ஏன்டி    இன்னும்   டல்லாவே   இருக்க ?  அத   விடுடி ,  கவலப்படாத,   சில   ஜென்மங்கள்   அப்படி   தான்   இருக்கும். ராகிங்குறது   ஒரு   புதிய   சூழ்நிலையை   எப்படி   எதிர்கொள்ள   போறோமோனு     பயந்து   வர்ற   ஜூனிய்ர்சை  சீனியர்ஸ்   கூட   சகஜமா   ஃப்ரண்டாக்குறதுக்காக   உருவாக்கப்பட்டது .  ஆனா   அதைப்   பத்தி   சரியா   புரிஞ்சுக்காம   சின்ன   பசங்க   மனசை   தான்   எல்லாரும்   கஷ்டப்படுத்துறாங்க” 

          “ப்ரியா,   நான்    நல்லா   தான்டி   இருக்கேன்   நீ    வொர்ரி   பண்ணாத.    எனக்கு   ராத்திரி   தூங்கி   எந்திரிச்சா  எல்லாம்  தன்னால   சரியா   போயிரும்.  இப்ப   நாம   செய்ய   வேண்டியது   ஒண்ணே   ஒண்ணு   தான்” 

           “என்னது?”

         “அந்த   விக்ரமை   தேடுடி , காலையில   நம்ம    ஒரு   தேங்க்ஸ்   கூட   சொல்லாம   ஓடி    போயிட்டோம்ல?”

          “ஆமாடி ,   ஆனா   இவ்ளோ  பெரிய   கூட்டத்துல   அவர   எப்படி   தேடுறது?”  ப்ரியா   சொல்வது   ப்ராக்டிக்கலாய்   சரி   தான்   ஆனால்   அவனை   நிச்சயமா   பாப்போம்னு   எனக்கு   தோணுது  ரஷிதா   தன்   மனதுக்குள்    நினைத்துக்   கொண்டிருந்த   அதே   நேரம்,   கான்ட்டீன்   வாசலில்   பாவ்   பாஜியும்  கையுமாய்  நின்று   கொண்டிருந்த  விக்ரம்   குப்தா..  ப்ரியாவின்  கண்ணில்   பட்டான்

        ” ஏய்ய்ய்   ரஷி   ரஷி  , அங்க   பாரு   அங்க   நிக்கிறாங்க   பாரு,  வா” கூட்டத்தை   தள்ளிக்கொண்டு   இருவரும்   கேன்ட்டீன்   வாசலை   அடைந்தனர்.

        “விக்ரம்   அண்ணா”  ப்ரியா  அழைக்க   சட்  என   நிமிர்ந்தான்   அவன்.   அவர்கள்   இருவரையும்    பார்த்ததும்   லேசாய்   ஆச்சரியமடைந்தான்.

        “ஹேய்ய்ய்!!   ஹாய்ய்ய்,   ஹாய்ய்ய்   என்ன   ரெண்டு    பேரும்   காண்ட்டீன்  
பக்கம்   வந்திருக்கீங்க?   ஏதாவது   சாப்பிடணுமா?  உள்ள   ரொம்ப   க்ரவுடா  இருக்கு   என்ன   வேணும்னு   சொல்லுங்க   நான்   போய்   வாங்கிட்டு   வர்றேன்”

         “இல்ல   இல்ல,   நாங்க   உங்கள   பாக்க   தான்   வந்தோம்.   காலையில   அந்த   ஷைத்தான்ங்க   கிட்ட   இருந்து   என்னை   நீங்க   தான்   காப்பாத்துனீங்க.    நான்   பதட்டத்துல   தேங்க்ஸ்   கூட   சொல்லாம   போயிட்டேன்,   அதான்   உங்களத்   தேடி   வந்தோம்.   ரொம்ப   ரொம்ப   ரொம்ப  தாங்க்ஸ்   விக்ரம்”   அவள்   சொல்ல,   லேசாக   புன்னகைத்து   அதை   ஏற்றுக்கொண்டான்   அவன். 

       “ராகிங்   தப்பு   இல்லங்க ,  நான்   கூட   பல   பேர   ராக்   பண்ணிருக்கேன்   அது   சின்னதா   ஒரு   குறும்புத்தனத்தோட   இருந்துட்டா   பரவாயில்ல .  ஆனா  அவனுங்க   கேங்   அப்படி   கிடையாது,   பையன்   பொண்ணுனு   யார்   கிடைச்சாலும்   டார்ச்சர்   பண்ணுவாங்க.   நிறைய   தடவை   இது   தப்புனு   அவனுகள   கண்டிச்சிருக்கேன்   கேட்டா   தான?   ஆனா   இன்னைக்கு    ரொம்ப   வரம்பு   மீறி   போனானுக   அதான்   அடிச்சுட்டேன்”   

           “சரிங்க,  பஸ்   வர்ற   டைம்   ஆச்சு..  நாங்க   கிளம்புறோம்,  ரொம்ப   தாங்க்ஸ்”

           “ஓகேங்க   பாய்”  

         ” பாய்”  அவர்கள்   இருவரும்   கிளம்ப,   விக்ரமின்   தோளை   இடித்தான்   நண்பன்   கமலேஷ்,   “என்னடா ,  அந்த   முஸ்லிம்   பொண்ணை   ரூட்   விடுற   போலயே?”

          “சேச்சே   அதெல்லாம்   இல்லடா,   காலையில   ஒரு   ஹெல்ப்   பண்ணினேன்  அதுக்கு   இப்ப   வந்து   தாங்க்ஸ்   சொல்லிட்டு   போகுது   அவ்ளோ   தான்.  மத்தபடி   நீ   நினைக்கிற   மாதிரியெல்லாம்   இல்ல.   நான்   சாப்பிட்டுட்டேன்  அங்க   போய்   பில்   பே   பண்ணிட்டு   இருக்கேன்,   நீயும்   சீக்கிரமா   சாப்பிட்டுட்டு  வா”   என்று    சொல்லி   நகர்ந்த   விக்ரமின்   கண்களில்   கீழே   விழுந்து   கிடந்த   அந்த   ஃபைல்  தென்பட,   அதை   எடுத்தான். 

         M.  RASHEEDHA   BHEGUM   என்று   எழுதப்பட்டிருந்த   அந்த   ஃபைலை   திறந்து   பார்க்க   உள்ளே   அவளது   ஒரிஜினல்  மார்க்  ஷீட்   இருந்தது…..

                                            –  தொடரும்….

    

   
 

    

           

           

        

   

    No comments yet.