கல்யாணம் முதல் காதல் வரை – 6

Shanmuha Sethuramachandran | 09 Dec 2025 | Share

                              6.

         “தேனுகா , யார்   இவங்கள்லாம்?  அவங்க    தோற்றமே  ஒண்ணும்  சரியில்ல”

        “எ…எனக்கும்   தெரியல . இருங்க,  நான்    கீழ   போய்   பாக்குறேன்”

        “வேணாம் .  தனியாப்   போகாத.   நீ  இங்கயே   இரு,   நான்   போய்   யாரு  என்னனு    பாக்குறேன்”   ஜூனைத்  வேக  வேகமாய்  அறையை  விட்டு  வெளியேறி,  படிகளில்   இறங்கினான் .  பதட்டமாய்  அவனைப்   பின்தொடர்ந்தாள்  தேனுகா. காலிங்பெல்   அழுத்தப்   பட்டது .  பர்ர்ர்ர்ர்  பர்ர்ர்ர்ர்ர்    பர்ர்ர்ர்ர்ர்

      ” ஏய்  , யாரு  வீட்ல?  கதவைத்  திறங்க”  தட்ட்ட்ட்   தட்ட்ட்     தட்ட்ட்   கண்களை  அகல  விரித்து ,  வாசல்  கதவைப்  பயமாய்   பார்த்துக்கொண்டு   நின்றிருந்தாள்  ரஷி. 

      ” மாமு,   யார்   அது ?  எனக்கு   ரொம்ப  பயமா    இருக்கு” 

       “தெரியல   ரஷி.   நீ   ஏன்   கதவு   கிட்ட   போய்   நிக்கிற?  தள்ளி  வா, எதுக்கு  பயம் அந்த   ரவுடிகளைப்   பாத்து ? இரு,   அவங்களை   ஒரு  கை   பாத்துடறேன்”

       “அவங்க   பேரை   சொல்லித்   தான்  கத்துனாங்க.   என்ன   வில்லங்கம்னு  தெரியலயே?”   தேனுகாவைத்   திரும்பிப்   பார்த்தாள்   ரஷிதா   பேகம்.

        “ஷ்   சும்மா   இரு ”  சொல்லிக்  கொண்டே  கதவைத்   திறந்தான்  ஜூனைத். வேஷ்டி   சட்டையில்,  பெரிய   அரிவாளைக்   கையில்  பிடித்துக்  கொண்டு  , உள்ளே   நுழைந்தான்  ஒருவன் .  அவனுக்குப்  பின்னால்   உள்ளே   நுழையப்   பார்த்த   அவனது   கையாட்களை   வாசலோடு  தடுத்து    நிறுத்தினான்.

        “இருங்க  டா” 

        “ஹலோ ,  யார்   சார்    நீங்க?   என்ன   வேணும்   உங்களுக்கு?” 

       “இங்க   பாரு ,  உன்னை  நான்  எந்த  விதத்திலும்   தொந்தரவு   செய்ய   வரலை . உன்   வீட்ல   ஒண்ட  வந்துருக்கா  பாரு,   இதோ   அங்க   நிக்கிறாளே ,  அவ   தான்  வேணும் . அவளை  என்   கூட  அனுப்பு  அவ்ளோ   தான்.   நான்   பாட்டுக்கு   வந்த  வழியில   போயிட்டே    இருப்பேன் ” முன்னேறி   வந்தவனை ,  நெஞ்சில்  கை  வைத்து  பின்னால் தள்ளினான்  ஜூனைத்.  

         “ஏய்ய்ய்ய்…. நில்லு.   என்ன   நீ  பாட்டுக்கு   திறந்த   வீட்ல    ஏதோ  நுழையுற   மாதிரி   வந்துக்கிட்டே  இருக்க?   யாரையும்  அனுப்பி  வைக்க  முடியாது.  வெளிய  போ”   “அடேய்,  யாரைப்   பாத்து   என்ன  சொல்ற?” என   வெளியே   நின்றிருந்த   அடியாட்கள்  அலற,    கொஞ்சம்   தள்ளி   நின்றிருந்த  தேனுகா  முன்னால்   வந்தாள்.

        “மாடசாமி  , நீங்க   எப்ப   ஜெயில்ல   இருந்து   ரிலீஸ்   ஆகி   வந்தீங்க?  சரி  வந்தது   தான்   வந்தீங்க,   இப்ப   எதுக்கு   அனாவசியமா   இங்க   வந்து  பிரச்சனை  பண்றீங்க  ? போங்க   வெளிய”

       “ஏன் பேச   மாட்ட? நான்  ஜெயிலுக்குப்   போனதுக்கு   காரணமே   நீயும்   அந்த   ப்ரித்வியும்  தான?  நான்  வெளிய  வந்ததே  உங்க   இரண்டு   பேரையும்  வெட்டி  சாய்க்கத்   தான்டி.   அவனை   ஒரு  வழியா  போட்டு   தள்ளிட்டேன்.   கூடவே   இருந்த  நீயும்   செத்திருப்படி.   ஆனா   கண்   இமைக்குறதுக்குள்ள   இதோ  நிக்கிறாரே   ஹீரோ   சார்,   அவர்   உன்னை  காப்பாத்தி எங்கயோ  கூட்டிட்டுப்   போயிட்டார்.  நேத்து ராத்திரில   இருந்து   அங்க   இங்கனு  தேடி அலைஞ்சோம்.   இதோ   இன்னிக்கு   மாட்டிட்ட .   இங்க   பாரு,   விசாரிச்சுப்  பாத்ததுல   இது   ரொம்ப   பெரிய  குடும்பம்னு    சொன்னாங்க.   வீணா  உன்   ரத்தம்   இங்க  சிந்த   வேணாம்.   என்   கூட   வெளிய    வந்துரு .  உனக்கு   சம்பந்தமே  இல்லாத   இடத்துல  செத்து  தொலையாத”  அவன்   அரிவாளை   உயர்த்தி ,  கையில்  கெட்டியாகப்   பிடித்துக்   கொண்டு  ,சிவந்த   விழிகளுடன்   தேனுகாவை   நெருங்கும்  நோக்கில்    அடியெடுத்து   வைத்தான்.

        “டேய் , என்ன   சொன்ன?   அவளுக்கு   இது   சம்பந்தம்    இல்லாத   இடமா?  அவ  என்    பொண்டாட்டி.   இன்னொரு   தரம்   மரியாதை   இல்லாம   வாடி   போடின்னு   பேசினன்னு   வை ,  அடுத்து  பேசறதுக்கு   நாக்கு   இருக்காது.   அவ   மேல   உன்   நகம்   பட்டாக்   கூட   அப்புறம்   நான்   மனுஷனா  இருக்க   மாட்டேன்” 

        “என்னது?   நீ   அவ   புருஷனா ?  அடிப்பாவி, உன்னை  நான்  குறைச்சு  எடை  போட்டுட்டேன்  . ஆனா   பலே   கில்லாடி   தான்   நீ .  நேத்து   வரைக்கும்   அந்த  ப்ரித்வி   கூட   சுத்திக்கிட்டு  இருந்துட்டு,  இன்னிக்கு   இவனைக்   கட்டிக்கிட்டியா?”  சட்டென   அவனை   நெருங்கி,  பற்களைக்  கடித்துக்   கொண்டு   ஓங்கி  அவனை  ஒரு  அறை   விட்டாள்  தேனுகா.  அறைச்  சத்தம்   அமைதியாய்  இருந்த  வீடுகளின்  சுவற்றில்  பட்டு   எதிரொலித்தது .

       ” பொறுக்கி    நாயே,   வீட்ல   வேலை  செஞ்ச    சின்ன  பொண்ணை,   நகையை  திருடிட்டான்னு   சந்தேகப்பட்டு   டார்ச்சர்  பண்ணி   அடிச்சு   கொன்னியே ,  அந்த   பாப்பா   சாவுக்கு   நியாயம்  கிடைக்கணும்னு   போராடி   தண்டனை  வாங்கிக்   குடுத்தா,   நீ    ஜாமீன்ல  வெளிய  வந்து   என்னையே   கொலை   செய்ய  வருவியோ?   டேய் ,  என்னை  வெட்டிக்க.  என்   உயிர்   என்னிக்குமே   எனக்கு   பெரிய  விஷயமா    இருந்தது    இல்ல  . ஆனா   நான்    இப்ப   உன்னை  எடுத்திட்டு   இருக்குற   வீடியோ   ஆதாரத்தால,   நீ   தூக்குக்   கயித்துல  தான்   தொங்குவ . எல்லா  சோஷியல்   மீடியாலயும்   லைவ்   போயிட்டு    இருக்கு”  தன்   கையில்    இருந்த   போனை,   அவன்  முன்னால்   ஆட்டினாள்.   திரு   திரு வென  விழித்தான்  மாடசாமி  . நான்கு   வருடங்கள்  கடும்  சிறை   வாசத்தை   அனுபவித்து   விட்டு  வந்தவன்    மீண்டும்   அங்கு   செல்ல  விரும்புவானா ?  மெல்ல  பின்வாங்கினான்.

       “அண்ணே ,  என்னணே ?  போயும்  போயும்   ஒரு    பொட்டக்   கழுதை…   அவளைப்    பாத்து   என்னணே  பயம்?” 

       ” ஓகோ ! அப்படியா?   இந்த   பொட்டை  கழுதை   தான் ,  உங்க   உருப்படாத   அண்ணனை   ஜெயில்ல  வச்சேன் . நினைவு   இருக்கட்டும்”  

         “ஏய் ,  எங்கடா   போயிருவா?   இந்த   வீட்ல   தான    இருப்பா?  பாத்துக்கிரலாம், வாங்க    போலாம்”

        “போ  போ  , என்னை   உன்னால  எதுவும்   பண்ண   முடியாது”   அவளை  முறைத்துக்  கொண்டே   வெளியேறினான்  மாடசாமி.  அவனது   அல்லக்கைகளும்,  ஜால்ராக்களும்,  பின்   தொடர்ந்தனர். 

     அப்பா  எப்படி    பெண்   சிங்கம்  போல  சீறுகிறாள் ?  அரிவாள்   கொண்டு  அவளை  வெட்ட   வருகிறான்,  துளி   கூட  பயம்  இல்லாமல்   பல்   தெறித்து   விழுவது  போன்ற   சத்தத்துடன்   என்ன  ஒரு  அறை ? பார்வையில்   என்ன  ஒரு   தைரியம்?  இவளா   நம்   வீட்டு   மனிதர்கள்  மனதைப்  புண்படுத்தும்   போது   அவ்வளவு  பொறுமை   காத்தாள்?   இனி   பாபிகள்  இருவரையும்   இவளிடம்  வாய்  விடாமல் பார்த்துக்கொள்ள   வேண்டும்.  மனதில்  இப்படி   நினைத்துக்   கொண்டு,   திறந்த  வாய்   மூடாமல்   தேனுகாவைப்  பார்த்துக்  கொண்டு   நின்றிருந்தாள்  ரஷிதா  பேகம்.

        ” ஜூனைத்”  அரண்டு   போய்   நின்று  கொண்டிருந்தவன்,   அவள்  புறம்  மெல்ல  திரும்பினான். 

         “சொல்லு”

        “அதான்   போயிட்டாங்களே,   கதவை   சாத்திட்டு   வாங்க”   மாடிப்படிகளை   நோக்கி   நடக்க   ஆரம்பித்தாள்.

                      ***************

  

       இரவு   மணி   எட்டு .  உணவு  மேஜையில் அமர்ந்திருந்தனர்  அனைவரும்.  இந்த   வேளை   உணவு   கொடுத்ததற்கு   நன்றி   சொல்லும்  பொருட்டு , கைகள்  இரண்டையும்  மேலே  தூக்கி  இறைவனைத் தொழுதுவிட்டு கைகளை  கீழே  இறக்கினார்  இப்ராஹிம்  தாத்தா. அவரைச்   சுற்றி,   பகீம் ,  முஸ்தஃபா,  ஜலால்,  ஷாரிக்  , அனைவரும்   அமர்ந்திருந்தனர் . வீட்டுப்    பெண்கள்   அனைவரும்   சுற்றி  நின்று   பரிமாறிக்  கொண்டிருந்தனர் . யார்   முகத்திலும்   ஒரு   அருளே   இல்லை .  வீட்டில்    நடந்த   அசம்பாவிதமான  சம்பவத்தால்    ஒவ்வொரு   முகமும்  களையிழந்து  போய்  சோர்வாய்   இருந்தது.   ஆனால்,   என்ன  நடந்தாலும்    உணவை   அவமதிக்கக்  கூடாது   என்பது   அவர்கள்  குடும்பத்தில்   ஒரு    எழுதப்படாத   விதி   என்பதால்,   சாப்பிட   அமர்ந்திருந்தனர்.

      “ஜூனைத்  எங்க?”  பழக்க  தோஷத்தில்  கேட்டு   விட்டு,   சட்டென  அமைதியானார்.

      “மேல   இருக்கான்த்தா , கூப்பிடவா ?” கேட்டுவிட்டு ,   ஒரு  வித   எதிர்பார்ப்போடு   அவர்   முகத்தையே   பார்த்தார்   சுல்தானா.

       “ஏன்   தட்டுல   வச்சு   எடுத்துக்கிட்டுப்  போய்   ஊட்டி   விட்ட   வேண்டியது   தான?  சின்ன   பாப்பாவா  அவரு? பசிச்சா  அவரே  வந்து    சாப்பிடுவாரு ,  சும்மா   இரு”

     “அவருக்குத்  தான்   புத்தம்   புதுசா  ஒரு   சொந்தம்   வந்திருக்கே.   இனி   நம்மல்லாம்  கண்ணுக்கு    தெரிய   மாட்டோம் .  நம்ம  கூடலாம்   உக்காந்து    சாப்பிட  வருவாரா?” சப்பாத்தியை   மென்று   கொண்டே  பகீம்   சொல்ல,   ” ஓ !  நம்ம   கூட   உக்காந்து   சாப்பிட   வருவானா  அவன்? அப்படி  அவன்  வந்தா,   நான்    சாப்பிடாம   எந்திரிச்சு   போயிருவேன்.   என்   மக   வாழ்க்கையை  அஷ்ட    கோணலாக்கியவன்   அவன்.   அந்த   முகத்தில   முழிக்கிறதையே   நான்  பாவமா  நினைக்கிறேன்”   முஸ்தஃபா  ஆத்திரத்தில்   வெடித்தார் . “பேசாம   சாப்பிடுங்க”   என  அவர்   தோளில்   கை  வைத்தாள்  மனைவி   நிஷா  .அதே  நேரம்,  படிகளில்  தேனுகாவை  அழைத்துக்   கொண்டு   இறங்கி   வந்தான்   ஜூனைத்.   அனைவரும்  ஒரு   சின்ன  அதிர்வோடு   அவனைப்  பார்த்தனர்.  இறங்கி  வந்தவன்   டேபிளின்   முன்னால்  நின்றான்  .  சற்று   தள்ளி   நின்றிருந்த   தன்   மனைவியின்   கையைப்  பிடித்து   இழுத்து,   அவனருகில்    நிறுத்தினான். 

      ” தேனுகா   என்னோட   அழகான  கம்  அன்பான   குடும்பத்தை   உனக்கு  அறிமுகம்    பண்ணப்   போறேன்.  இது  என்  தாத்தா    இப்ராஹிம்.   இவங்க  பாட்டி  சுல்தானா.   என்   அப்பாவோட   அம்மா  அப்பா.   அதனால   இவங்களை   ராதா  ராதின்னு   கூப்பிடுவேன்  . அவர்   எங்க   அப்பா   ரஃபீக்   அது   அம்மா   கதீஜா.  எனக்கு   இரண்டு   ஆப்பா   இருக்காங்க  ஐ   மீன்    அக்காள்கள்.   அதோ   நசீமா  அக்கா  ஜமால்  மாமா .அவங்க  குழந்தைகள்  ஹாலித் ,ஹஸ்மத்  இன்னொரு   அக்கா   நஸ்ரின்   ஃபாத்திமா ,  மாமா   ஷாரிக்  அவங்களுக்கு    ஒரு   குட்டி  பையன்  இருக்கான்   ஜலால் . எனக்கு   இரண்டு  மாமிங்க    இருக்காங்க.   உங்க   பாஷைல  அத்தை .  அப்பாவோட   அக்காக்கள்.  ஆயிஷா  மாமி  , ஃபகத்   மாமா .  அப்புறம்,  நிஷா   மாமி,   முஸ்தஃபா   மாமா.  இவங்க  பசங்க   தான்,   ஜமால் ,  ஷாரிக் , ரஷிதா.  அவ்ளோ   தான்   எங்க   குடும்ப  உறுப்பினர்கள்”  என்ன  ஆனாலும்,  தன் குடும்பத்தில்  யாருக்கும்  பாதி   சாப்பாட்டில்   எழுந்து போகும்   வழக்கம்  இல்லை  என்பதால், தைரியமாக  இந்த  நேரத்தை  உபயோகித்து  , அறிமுகப்   படலத்தை   அழகாக   முடித்து  விட்டான்  ஜூனைத்.  

       “இது   என்   மனைவி   தேனுகா.   தேனுகா  விஸ்வநாதன்.  இவளுக்கு  அம்மா  அப்பா  கூடப்   பிறந்தவங்கன்னு  யாரும்  இல்லை.   சின்ன  வயசுலயே   ஒரு   விபத்துல   எல்லாரும்   இறந்துட்டாங்க . தாய்  மாமா   வீட்ல   தான்   வளர்ந்தா.     லீடிங்   லாயர் .  இவ   ஒரு    நிலைக்கு  வந்த  நேரத்துல  , அந்த   மாமாவும்  இறந்து   போயிட்டார்.   தன்   கூட   வேலை   பாத்த   ப்ரித்வியை  ரொம்ப  லவ்   பண்ணி,    இன்னிக்கு   காலையில  தான்   கல்யாணம்   பண்ணிக்க  இருந்தா. அவரை   நான்    கொன்னுட்டேன்.  அதனால  மனசு  கேக்காம  தனியா  நின்ன  இவளை,  நான்    கல்யாணம்  பண்ணி   கூட்டிட்டு  வந்துட்டேன்”  அவன்  சொன்னதில்   அங்கு   இருந்த அனைவருக்கும்   இதயம்   ஒரு   முறை  நின்று ,  பின்  துடித்தது.                            

        

  

 

 

  

    

 

 

      

   

        

           

        

  

         

                         

         

       

    

   

       

       

      

        

         

        

    

    No comments yet.