கல்யாணம் முதல் காதல் வரை – 5

Shanmuha Sethuramachandran | 09 Dec 2025 | Share

                             5.

        “என்னடா?   அவளை  அரட்டுற  சாக்குல  என்னை   அரட்டுறியா?”

        “இல்லயே,   உன்னை   அரட்ட   நான்  எதுக்கு   பயப்படப்    போறேன்?   நீ  என்ன  சிங்கமா?   இல்ல   புலியா ?  தேனுகா  என்னை   என்ன   பாக்குற  ? ஒரு  பருக்கை  கூட   மிச்சம்   வைக்காம   சாப்பிட்டுட்டு  தான்   எந்திரிக்கணும்.   யாரைப்   பாத்தும்   நீ   பயப்படவோ,   இல்ல  பாதி  சாப்பாட்டுல  எந்திரிக்கவோ,  ஒரு  அவசியமும்   இல்ல. என்ன   புரியுதா  ? உக்காரு”   அமைதியாய்  தலையைக்   குனிந்து   கொண்டு   சேரில்   அமர்ந்தாளே  தவிர,   சாப்பிட்டாள்  இல்லை.

        “ஆளைப்   பாரு  , கோழி   திருடுறவ  மாதிரி .  முழியும் ,   இவ   மண்டையும். தைரியமா  யாரையாவது   நிமிர்ந்து   பாக்குறாளான்னு  பாரு ?  சை,  என்ன   தைரியத்துல   இவளை   இங்க  கூட்டிட்டு  வந்த?   நாங்க   எல்லாரும்   இவளை  ஏத்துக்கிட்டு   சந்தோஷமா  இருப்போம்னு  நினைச்சியா?   அது  என்னிக்குமே   நடக்காது.   ஒண்ணு  மட்டும்  மனசில   வச்சுக்க.   இனி  நீ   ஒரு  அனாதை  தான்.   உனக்கு  நல்லது   நடந்தாலும்  சரி,  கெட்டது    நடந்தாலும்   சரி,   நாங்க  யாருமே  வந்து   நிக்க   மாட்டோம்.   என்னிக்குமே  தனி  மரமா  தான்  இருப்ப.  இவளைக்   கல்யாணம்  பண்ணிக்கிட்டு   வந்து  , எங்க   எல்லார்  மனசையும்  சல்லி  சல்லியா  நொறுக்கி  கதற   விடுறதுக்கு,   அல்லா  உனக்கு   கண்டிப்பா   தண்டனை  வழங்குவார் . இது நடக்குதா இல்லையான்னு   பாரு ” நசீமா  சாபம்  கொடுப்பது   போல்   பேச, 

        “நிறுத்து  நசீமா”  சொல்லிக் கொண்டே  கிச்சனில்   இருந்து   உள்ளே   வந்தாள் சுல்தானா   பாட்டி.

         “ராதி”

       ” என்ன? நீ   பாட்டுக்கு  சாபம்  குடுக்குற   மாதிரி   அதிகமா   பேசிட்டே   போற ? அவன்  உங்க   ராதாவை   மதிக்காம , அவன்  மனசுக்குப்   பிடிச்ச   பொண்ணை  கட்டி  கூட்டிட்டு   வந்திருக்கான்   சரி,   நீ  மட்டும்  என்ன   அவரை  மதிக்கிறியா?”  

      ” நான்   அவரை   மதிக்காம   இது  நாள்  வரை   ஏதாவது   செஞ்சிருக்கேனா  ராதி?”

       “இது   நாள்   வரை   செய்யல .  ஆனா  இன்னிக்கு   பண்ற .  அவர்  தான்   இரண்டு   நாள்ல   முடிவு   சொல்றேன்   அது  வரை  யாரும்   இதைப்   பத்தி   பேச  வேணாம்  எல்லாரும்  அவங்கவங்க  வேலையைப்  பாருங்கன்னு  சொல்லிட்டாருல்ல?  இப்ப  நீ இங்க   நின்னுக்கிட்டு   எதுக்காக  தேவையில்லாம  வம்பளந்துட்டு  இருக்க?”  பதில்   சொல்லாமல்  சுல்தானாவை  முறைத்தாள்   நசீமா. 

        “போ,   உன்   ரூமுக்குப்   போ .  இனி       உன்னால   இந்த   மாதிரி   எந்த  பிரச்சனையும்  வரக்  கூடாது” வெடுக்கென  முகத்தைத்   திருப்பிக்   கொண்டு , உள்ளே  சென்றாள்   நசீமா.

       “ஏய்ய்ய்   நஸ்ரின்,   உனக்கும்  சேர்த்து  தான்   சொல்றேன்.   யாரைப்  பத்தியும்  தேவையில்லாம   புறம்  பேசிக்கிட்டு  இருக்காத,   அது   நல்லதுக்கில்ல . ரஷி,  சீக்கிரம்   சாப்பிட்டு   போய்   உங்க   நன்னாவைப்   பாரு.   உன்   கிட்ட   பேசணும்னு    சொன்னாரு”

       “சரி  நன்னி,   நான்  வந்து  பாக்குறேன்” 

        “ராதி”…..வேகமாக   எழுந்து  சென்று,  சுல்தானாவின்  கையைப்  பிடித்தான்  ஜூனைத். “ரொம்ப  தேங்க்ஸ்  ராதிம்மா.  நீ   எப்பவுமே   என்   பக்கம்   தான்னு  எனக்கு  தெரியும்”   கண்கள்   கலங்கினான்.

        “என்   வீட்டுக்காரரை   மதிக்காத  யாரும்  என்   கூட   பேசக்   கூடாது”   அவன்  கையை  உதறி   விட்டு   சென்றார்   ராதிம்மா.

       “ஐயா , வந்து   உக்காந்து   சாப்பிடுங்க. பாட்டியம்மாவைப்   பத்தி   தெரியாதா?  சீக்கிரமே   எல்லாம்   சரி  ஆகிரும் . உங்க  பொறுப்பான  மனைவியா , தேனுகாம்மா  இங்க   எல்லாரையும்  மாத்திருவாங்க. கவலைப்படாம   சாப்பிடுங்க .

                   ****************

       மாலை  ஆறு   மணி   இருக்கும்.  வீட்டின்  அருகில்  உள்ள  ட்ரான்ஸ்ஃபார்மர்   திடீரென   வெடித்து   விட்டதால்,   நான்கு  மணியில்   இருந்தே   கரண்ட்   இல்லை . வீடு  எங்கும்   ஒரே   புழுக்கம்.  குழந்தைகள்  வெக்கை   தாங்காமல்   அழ  ஆரம்பிக்க,  வீட்டின்   அருகில்   உள்ள  பார்க்குக்கு  அழைத்துச்   சென்று   விளையாட  விட்டு  கூட்டி   வரலாம்  என   நினைத்து,  சுல்தானா,  இப்ராஹிம்,  ஆயிஷா,  நிஷா   கதீஜா,   நசீமா,  நஸ்ரின்,  ஹாலித்,   ஹஸ்மத்,   ஜலால் , அனைவரும்  சென்று   விட்டனர்.  ரஷிதாவையும்   அழைத்தனர். அவள்   இப்ராஹிம்  தாத்தாவிடம்  கல்லூரிக்கு   செல்ல  அனுமதி   கேட்டு  பெற்று  விட்ட   நிறைவில் ,  கொஞ்ச  நேரம்  தூங்கப்   போவதாக  சொல்லிவிட்டு  வீட்டிலேயே   இருந்து   விட்டாள்.  ஆட்டுத்  தோலை   பதப்படுத்தி,   எக்ஸ்போர்ட்   செய்யும்   பிசினசை ,  பெரிய  பெரிய  ஃபாக்டரிகள்  கைவசம்   இருக்க,  பல  தலைமுறைகளாய்  செய்து   வந்தனர்  இப்ராஹிம்   குடும்பத்தினர் . அதனால்  வீட்டு   ஆண்களுக்கு   எப்போதுமே  அங்கு  தான்   வேலை   இருக்கும் .  வயதான  காலத்தில்    அவருக்கு   ஓய்வு   தான்  தேவையென   மருமகன்களும்,  மகனும்  பிசினசை   கையில்   எடுத்து,  அதைத்  திறம்பட   நடத்தியும்  வருகின்றனர்.  ஜூனைத்   நல்ல   பர்சன்டேஜில்  பாஸ்  செய்ததால்  , ஐ.டி. கம்பெனியில்  வேலை  பார்க்கிறான் .  அவனும்   எங்கோ  வெளியில்  சென்று   விட்டான்.  இப்போது  அவ்வளவு   பெரிய  வீட்டில்   ரஷிதாவும்,  தேனுகாவும்  மட்டுமே  இருந்தனர் .  தன்னையே  அறியாமல் ,  தன்  வாழ்வில்   நடந்த   திருப்பங்களை  அசை போட்டபடி,    ஜூனைத்தின்   அறையில்,  ஜன்னலின்   அருகில்   நின்றிருந்தாள்  தேனுகா.   அதே   நேரம் , அறைக்  கதவு  தட்டப்பட்டது   யாரா   இருக்கு?ம்  ஒருவேளை  வனிதாம்மாவோ?   இல்லையே,  ஐந்து  மணி வரை   தான்  எனக்கு   வேலை , அது  முடிந்த உடன்   கிளம்பி   விடுவேன்  என்றாரே?  இந்த  வீட்டில்   உள்ள   வேறு   யாராவது   வந்து, திட்டப்   போகிறார்கள்   போல…….. தயக்கத்துடன்   மெல்ல  கதவை  நோக்கிப்  போனாள்,  திறந்தாள் .வெளியே  ரஷிதா.  ஜூனைத்தை   எதிர்பார்த்து,   

       “மாமு”   என்றவள்   தேனுகாவை  எதிர்   பாராததால்   ஒரு   நொடி  தயங்கிவிட்டு,

      “மாமு   இல்லைங்களா?”   என்றாள்  

       “இல்ல,   வெளிய   போயிருக்காரு” 

       “வர   லேட்   ஆகுமா?” 

       “தெரியல .  என்கிட்ட   எதுவுமே  சொல்லிட்டுப்   போகல”

      “ஓகே   தாங்க்  யூ”  சொல்லிவிட்டு  நகரப்  போனவளுக்கு,   ப்ரியா  சொன்ன   வார்த்தைகள்  சட்டென   நினைவுக்குள்  வந்தது.    “தேனுகாவும்  ஜூனைத்தை  லவ்  பண்ணல ,  ஜூனைத்தும்   தேனுகாவை  லவ்   பண்ணல . ஏதோ  ஒரு   தவிர்க்க  முடியாத   சிச்சுவேஷன்ல   தான்  இந்த  கல்யாணம்   நடந்துருக்கு .  உன்   மனசு  கொஞ்சம்   சரியானதும்  , உங்க   மாமா  கிட்ட   நீ   என்ன   நடந்துச்சுன்னு   கேளு” 

        “தேனுகா,  உங்க  கிட்ட  ஒண்ணு   கேக்கட்டுமா?”   அவள்   பேச ,  லேசாய்  ஆச்சரியமானவள்,   

        “கேளுங்க”   என்றாள்

      ” எங்க   மாமாவும் , நீங்களும் எத்தனை  வருஷமா  லவ்   பண்றீங்க?”   

        “என்ன?” 

       “இல்ல, எங்க  குடும்ப   கோட்பாடுகளை   மீறி  எங்க   மாமா ,  உங்களை  , உங்க   மத  முறைப்படி    கல்யாணம்  பண்ணி , எங்க  வீட்டுக்குக்   கூட்டிட்டு   வந்திருக்காரு. அந்த   காதலோட  ஆழத்தை   நான்  …….எனக்கு  கண்டிப்பா   தெரியணும்”

        “உங்க   மாமாவை   எனக்கு  எத்தனை  வருஷமா   தெரியும்னு   தான   கேட்டீங்க?  நேத்தி   ராத்திரி   தான்   உங்க  மாமாவை  என்   வாழ்க்கையில  முதல்  முறையா  சந்திச்சேன்.   அது   வரைக்கும்  எனக்கு  அவர்   யார்னே   தெரியாது”   அவளது  பதிலில்   ஆடிப்   போனாள்  ரஷிதா.

      “எ….என்ன   சொல்றீங்க?   அப்புறம்  எப்டி  கல்யாணம்    பண்ணிக்கிட்டீங்க?” 

      “அதான்  என்   விதி.  எல்லாம்   தெளிவா  சொல்றேன்,   உள்ள  வாங்க”

        “இல்ல   பரவாயில்ல,  நான்   இங்கயே  இருக்கேன் ,  சொல்லுங்க”

       “ஏன் ? என்   கூட   பேசினா  உங்க  வீட்ல  உங்களை  திட்டுவாங்களா?” வேதனையோடு  கேட்டாள்   தேனுகா.   ரஷிதாவுக்கு  மிகவும்  தர்மசங்கடமாய்   போய்   விட்டது.

       “சே  சே   அப்டிலாம்   இல்ல” 

      “அப்புறமென்ன?  உள்ள  வாங்க”

      ” ரஷி …….வாவ்வ்வ்வ்வ்!!!!  வாட்   எ   சர்ப்ரைஸ்?   இரண்டு   பேரும்  இவ்ளோ  சீக்கிரத்துலயே   பேசிக்க  ஆரம்பிப்பீங்கனு  நான்   நினைக்கவே   இல்ல ”  வெளியே  போய்விட்டு   அப்போது  தான்  வந்திருந்த  ஜூனைத்,  சந்தோஷமானான்.

      “உங்களைத்  தான்  தேடி  வந்தேன் மாமு. நன்னா  காலேஜ்ல   சேர்ந்து   படின்னு   சொல்லிட்டாரு .   ப்ரியா,  எம்.சி.சி ல  சேரத்  தான்  அப்ளிகேஷன்   வாங்கிருக்கா.  அவ  கூட   காலேஜ்   போனா   எனக்கு  ரொம்ப  நல்லா   இருக்கும்”  

       “இவ்ளோ   தான?   எம்.சி.சி   நல்ல  காலேஜ்   தான் . நாளைக்கே   அங்க உனக்கும்  அப்ளிகேஷன்   வாங்கிட்டு   வர்றேன் .   உன்   மார்க்குக்கு   அங்க  கண்டிப்பா   கிடைச்சிரும்.  அதைப்  பத்திலாம்  நீ   கவலைப்படாம இரு  என்ன?   சரி ,  உள்ள   வா”  

       “தேங்க்ஸ்  மாமு.   இல்ல   பரவாயில்ல, நான்   கீழ   போறேன்” 

      “அட!  இவ்ளோ   நேரம்   தேனுகா  கிட்ட  நல்லாத்   தான   பேசிக்கிட்டு   இருந்த? இப்ப  நான்   வந்ததும்   ஏன்   ஓடுற?  வா”

        “அதுலாம்   இல்ல  மாமு,  பாய் ” வேக  வேகமாக   ஓடி,   படிகளில்   இறங்க  ஆரம்பித்து   விட்டாள்   ரஷிதா.

       “வெடிச்ச   ட்ராண்ஸ்ஃபார்மர்ல  வேலை  பாக்க   ஆரம்பிச்சாச்சு.  வழியில  இப்ப  தான்   பாத்துட்டு   வந்தேன்.  மேக்சிமம்  இன்னும்  ஒன்  அவர்ல   கரண்ட்   வந்துரும்”.

       “சரி”   

      “ரொம்ப    வேர்க்குதா?   கார்ல   போய்   ஏசியில    இருக்கியா?”

      “வேணாம் ”  

      ” சரி,  நீயும்  ரஷிதாவும்  என்ன  பேசிட்டு  இருந்தீங்க?   என்ன   கேட்டா   அவ?”

      ” நம்ம    ரெண்டு   பேரும்   எத்தனை  வருஷமா  லவ்   பண்றோம்னு   கேட்டா. நான்   நேத்து   தான்   அவரை   முதன்   முதலா   பாத்தேன்னு   சொன்னேன்” அதே  நேரம்,   வீட்டின்   வாசலில்    இரண்டு  மூன்று  கார்களின்   இரைச்சல்.  அதைத்  தொடர்ந்து,

      ” ஏய்   தேனுகா,  வாடி   வெளிய.   நீ   இங்க  வந்து    ஒளிஞ்சுக்கிட்டா,   எங்களால  உன்னை   கண்டுபிடிக்க  முடியாதுன்னு  நினைச்சியா?”  ஒருவன்  அலற,  பதறிப்   போய்    ஜன்னல்   வழியே   கீழே   பார்த்தாள்   தேனுகா .  வீட்டின்  வாசலில்  மூன்று   கார்கள்   நின்றிருக்க,  கையில்  அரிவாள்,  கம்புகளோடு   பத்து  பதினைந்து  அடியாட்கள்.   அவர்களின்   கண்களில்   கொலை   வெறி   தெரிந்தது.

  

  

   

     

  

  

       

    

         

            

         

   

         

    No comments yet.