கல்யாணம் முதல் காதல் வரை – 49

Shanmuha Sethuramachandran | 16 Feb 2026 | Share

                              49…..

       “ஏய்ய்ய் , என்ன   காரியம்   பண்ணிட்ட? நீ    இந்த   தாலிய   என்   கழுத்தில   கட்டிட்டா ,  ஆகா   இவன்   தான்   நம்ம   புருசன்னு   உன்   பின்னாலயே   நாய்க்குட்டி   மாதிரி   ஓடி   வந்துருவேன்னு   நினைச்சியா?   அதுக்கெல்லாம்    வேற   ஆளப்   பாரு.   தாலிங்குறது   ஒரு   பொண்ணுக்கு   ஒரு   தடவை   தான் ,அதை   எவன்   அவ   கழுத்துல    கட்டுறானோ  அவன்   தான்   காலத்துக்கும்   அவளோட   புருஷன்   அப்டிங்குற   வெட்டித்தனமான   ஐடியாலஜி  உடைய   பொண்ணு   நான்   இல்ல,   ஐ   அம்   வெல்  எஜூகேட்டட்”   சொல்லிக்கொண்டே   தாலியை  கழற்ற   முயன்றாள்   தேனுகா.

         “தேனு…..ஒரு   நிமிஷம்   இரு”   சற்று  தூரத்தில்   இருந்து   கத்திக்கொண்டே   வேகமாக    ஓடி  வந்தாள்   பவித்ரா.

         “தேனு……என்ன   பண்ற ? அது   தாலி,   உன்   இஷ்டத்துக்கு   கழட்ட   முடியுமா?   அது   மட்டுமில்லாம   இப்ப   உன்   தலைக்கு   மேல   கூர்மையான   கத்தி   ஒண்ணு  தொங்கிக்கிட்டு   இருக்கு,   கொஞ்ச   நாளைக்கு   உனக்கு   பாதுகாப்பான   இடம்   ஒண்ணு   தேவை,  சோ   இந்த   சூழ்நிலைல   நீ    இந்த   தாலியை   கழட்டுறது   தப்பு” 

          “பவித்ரா   நீ   என்ன  சொல்ற? உனக்கு   பைத்தியம்   எதுவும்   பிடிச்சுருக்கா ?  நான்   ப்ரித்வியோட   காதலி..   எவனோ   ரோட்டுல  போறவன்   எனக்கு   தாலி   கட்டுவான்  அதை   நான்   ஏத்துக்கிரணுமா?  கொஞ்சமாவது   புத்தியோட   பேசுடி”

         “உனக்கு   நான்   எல்லாத்தயும்  எடுத்து   சொல்லி   புரிய   வைக்கணும், வா”

        “எங்க  வரணும்? நான்   எங்கயுமே  வர    மாட்டேன்,   இந்த   கயித்த   கழட்டி   போட்டுட்டு   தான்   எனக்கு   மறு   வேலை”

          “தேனுகா,  அவசரப்படாத”…..அவளை   மூர்க்கமாக    தள்ளிக்கொண்டு   போய்   சற்று   தொலைவில்   நிறுத்தினாள்   பவித்ரா.  “தேனு ..  உன்   கோபம் , வருத்தம், எரிச்சல் ,  எல்லாமே   எனக்கு   புரியுது.   ஆனா   இந்த   கல்யாணத்த   ஏத்துக்கிட்டே   ஆகணும்குற   கட்டாயத்துல   தான்  நீ    இப்ப    இருக்குற”

         “ஏத்துக்கிட்டே   ஆகணுமா?  அப்படி   என்ன   கட்டாயம்  வந்திருக்கு?”

          “சொல்றேன் , நடுவுல   பேசாம   முழுக்க    கேளு”    என   தொடங்கி,   முந்தைய   நாள்   இரவின்   சம்பவங்கள்   அனைத்தையும்   கோர்வையாக   சொல்லி   முடித்தாள்   பவித்ரா.  பொறுமையாகக்   கேட்டு   முடித்து   ஏதோ   சிந்தனை   வயப்பட்டு    சற்றே   அமைதி   காத்தாள்  தேனுகா.   அதை   பயன்படுத்திக்   கொண்ட  பவித்ரா,   மேலும்   பேச   ஆரம்பித்தாள்.

        “தேனு…..எனக்கு   என்னமோ   இந்த   ஜூனைத்   நல்லவர்   தான்னு   தோணுது”

       ”  ஓஹோ…….அது   எப்படிடி  ?நேத்து   நைட்   அந்த   ஆள   அவ்ளோ   திட்டிக்கிட்டு   இருந்த,   இப்ப    எதை   வச்சு   அதே  
ஆளை  நல்லவருனு   சொல்லுற?   ஏன்   இந்த   திடீர்   கட்சி   தாவல்?”  தேனுகாவின்   குரலில்   ஏக   கிண்டல். 

        “அதையும்  சொல்றேன்,  அவ  இனிமே   தனியா   எப்படி   வாழ்வா?   ஒவ்வொரு   நாளையும்   பயத்தோட   எப்படி   கடத்துவானு   நான்   கேட்ட   ஒரே    கேள்வியை   பத்தி   யோசிச்சு,   நீ   எப்படி,   உன்   குணம்   எப்படி ,  உன்   ஃபேமிலி   எப்படினு   எதைப்   பத்தியும்  யோசிக்காம,  திடுக்குனு   ஒரு    ஹிந்து   பொண்ண   கூட்டிட்டுப்    போயி  இவ   தான்   என்   மனைவினு   தன்னோட   வீட்ல   அறிமுகம்   செஞ்சா   என்ன   ஆகும்னு   யோசிக்காம,   உனக்காக   மட்டுமே   யோசிச்சு   உன்னைக்   கல்யாணம்   பண்ணிக்கிட்டு   நின்னுட்டு    இருக்காரே   அதை  வச்சுத்   தான்   நான்   அவர   நல்லவருன்னு  சொன்னேன் .  இங்க   பாரு   தேனு , எனக்கு   உன்னோட   நிலைமை   புரியுது   இப்ப   ஒரு   வைராக்கியத்துல   இந்த   தாலியை   நீ   தூர   வீசிட்டு   போயிரலாம்.  ஆனா   அதுக்கு   பிறகு   என்ன   நடக்கும்னு   யோசிச்சுப்   பாரு ,  உன்னை   நடு   ரோட்டுல   வெட்டி   போட்டா    கேக்க    ஆள்   இல்லங்குற   தைரியத்துல   நாளைக்கே   அந்த   மாடசாமி   உன்னை   கொல்ல   ஆள்   அனுப்புவான் . ப்ரித்வி   சாவுக்கு   நியாயம்   வாங்கித்   தர    நீ    இருக்க   ஆனா   நீயே  செத்துப்   போயிட்டா   அந்த   ரவுடி   மாடசாமிக்கு   யாரு   தண்டனை   வாங்கி   தருவாங்?   உனக்கு    மாடசாமியை   ஜெயிலுக்கு   அனுப்புறதுக்கு   போராட   நேரமிருக்குமா?   இல்ல   உன்   உசுர   காப்பாத்திக்கிறதுக்கு   போராட  டைம்   இருக்குமா? எல்லாத்தயும்    தெளிவா   யோசிச்சுப்    பாரு”   

        “இது   என்னடி   பவி   நியாயம்?  என்னோட   ப்ரித்விக்கு,   வேற   ஒரு   ஆளோட   மனைவியா  என்னை   இறுதி சடங்கு   செய்ய   சொல்றியா?  பாதுகாப்பு அது   இதுனு   ஏதேதோ   சொல்ற ,  நீ    சொல்லுற   எல்லாமே   சரியாக்கூட   இருக்கலாம்   ஆனா  என்னோட   மனசுனு   ஒண்ணு   இருக்குல்ல?   அவன்   தான்   அதைப்பத்தி   கவலப்படாம    எனக்கு   தாலி   கட்டிட்டான்னா   நீ   கூட   என்னை   புரிஞ்சுக்க    மாட்டேங்குறியே ?  அது  தான்   எனக்கு   ரொம்ப   கவலையா   இருக்கு.   சரி   அதைக்கூட   விடு,  இந்த   ஜூனைத்த   பத்தி   எனக்கு   என்ன   தெரியும்?   இவரு   கடைசி   வரைக்கும்   என்னய   சந்தோஷமா  வச்சுக்கிருவாருனு   எப்படி   நான்   நம்புறது ? கல்யாணம்குறது   என்ன   ஒரு   நாள்   கூத்தா?   இந்த   அவசரமான   இன்டர்   ரிலிஜியன்   கல்யாணத்தால   அவங்க   வீட்டுல   என்னை  என்னென்ன   கேவலமா   பேசுவாங்களோ?   அதை   யோசிச்சு   பாத்தியா?    ப்ரித்வியோட   இறப்பிலிருந்து   கூட   என்னால    மீண்டு   வந்துர   முடியும்  பவி , ஆனா   அவனோட   மரணம்   என்னை   பாதிச்சதை   விட   இந்த   தாலி   தான்   என்னை   ரொம்ப   கொல்லுது. இனிமேல்  தான்   நான்   பலவிதமான   பிரச்சனைகளை  எதிர்கொள்ள   போறேன்.   கில்ட்டி   கான்ஷியஸ்னால   என்னை   கல்யாணம்  பண்ணி , என்   வாழ்க்கைங்குற   நூலை   அவரு   கையில   எடுத்து   அந்த   பக்கமும்   இந்த   பக்கமும்   இழுத்து   முடிச்சு   போட்டு   விட்டுட்டாரு    கடைசியில   நான்   தான்   பலியாடு”  அவள்   அழுதுகொண்டே    சொல்ல , இதற்கு   என்ன   பதில்   சொல்வது   என்று   தெரியாமல்   பவித்ராவும்   அழ   ஆரம்பித்துவிட்டாள்.  என்னதான்   தள்ளி   நின்றிருந்தாலும்   தேனுகா-  பவித்ராவுக்கு   இடையே   நடந்த   உரையாடல்   ஜூனைத்திற்கு   கேட்டுக்   கொண்டு   தான்   இருந்தது . பாவம்  இவள் . இவளை   என்   உயிர்   உள்ளவரையில்,   அல்லது   இவள்   என்னுடன்   இருப்பதற்கு   விரும்பும்   வரையில்   பத்திரமாய்   பாதுகாக்க   வேண்டும்   ஒரு   உறுதி  போல்   மனதுக்குள்   சொல்லிக்கொண்டு,   கலங்கிய   கண்களை   துடைத்துக்  கொண்டே   அவளை   நெருங்கினான்.

        “தேனுகா,  உங்க   வாழ்க்கையில   முடிவு   எடுக்க   எனக்கு   எந்த   அதிகாரமும்   இல்ல.  பவித்ராவை   சாட்சியா   வச்சுக்கிட்டு     நான்   இப்ப   உங்களுக்கு   ஒரு   வாக்கு  குடுக்குறேன்,   எங்க   வீட்டுல   பொருந்தி   வாழவே   முடியாதுன்னு   உங்களுக்கு   தோணுற   பட்சத்துல   நீங்க   எப்ப   வேணும்னாலும்   நம்ம   திருமண   பந்தத்தை   விட்டு   வெளிய   போயிரலாம்  . அப்படி    ஒரு   முடிவு    எடுத்தீங்கன்னா,   அந்த   சமயத்துல   நான்   தான்    உன்    ஹஸ்பண்ட்   அது   இதுன்னு   சொல்லி   நான்   உங்க   முடிவுக்கு   தடையா   இருக்க   மாட்டேன், சரியா?” ஜூனைத்   அழுத்தமாய்   சொல்ல ,  அவனை   ஒரு   நிமிடம்   உற்றுப்   பார்த்த    தேனுகா   சரி   என   தலையாட்டினாள்.   பவித்ராவுக்கு   தான்   ஒன்றும்   புரியவில்லை . 

         “சரி , நான்   இங்க   இருக்கேன்  நீங்க ரெண்டு   பேரும்    நீங்க   தங்கி   இருக்குற   இடத்துக்குப்   போய்   திங்க்ஸ்    எல்லாம்   எடுத்துட்டு   வந்துருங்க .  நான்  இந்த   ஃபார்மாலிட்டீஸ்  எல்லாம் பாத்துக்குறேன்”  பவித்ரா , பத்திரமா   கூப்பிட்டு   போங்க” 

         “இல்ல  , நான்   எங்கயும்   போகல   இங்கயே   இருக்கேன்” 

        “தேனு,   நீ   வா ,  நேத்து   நைட்   போட்டுக்கிட்ட   நைட்   ட்ரஸ்லயே   இருக்க.    இன்னும்   கொஞ்ச   நேரத்தில   நல்லா   விடிஞ்சுரும் , ஹாஸ்பிட்டல்கு   டாக்டர்ஸ்,   நர்ஸ் ,  விஸிட்டர்ஸ்னு   நிறைய   பேர்    வர   ஆரம்பிச்சுருவாங்க . அப்புறம்   உனக்கு   தான்   ரொம்ப   எம்பராஸிங்கா   இருக்கும்”

         ……………….

        “வா…. ஆட்டோ   எடுத்துக்கிட்டு   ஹாஸ்டலுக்கு   போயி    திங்க்ஸ்  எல்லாம்  எடுத்துட்டு   வந்துரலாம்”

      “என்   கார்   கூட   எடுத்துட்டு   போங்க”

      “இல்ல   சார் , எங்க   ரெண்டு  பேருக்குமே   ட்ரைவிங்   தெரியாது” 

      ” ம்ம்ம்   சரி   சரி  , போயிட்டு   சீக்கிரம்   வாங்க” ஜூனைத்   அவசரப்படுத்த   

        “இல்ல    வேணாம்,   சுடுகாட்டுல   க்ரிமேஷன்   முடிச்சுட்டு   எப்படியும்   குளிக்கணும்ல ?  அதனால   அப்பவே   ஹாஸ்டல்கு   போயிக்கலாம்”  என்று   மறுத்துவிட்டாள்   தேனுகா.   ஒன்றரை   மணி   நேர   காத்திருப்புக்கு   பின்  போஸ்ட்   மார்ட்டம்   முடிந்து,   ப்ரித்வியின்   உடல்   இறுதி  யாத்திரைக்கு  தயாராய்  அவர்களை  வந்தடைந்தது. அதைக்   கண்டதும் ,  இடம்   பொருள்   அத்தனையும்   மீறி   அவன்   மேல்   விழுந்து   கதறினாள்   தேனுகா.  பின்   ஒரு  வழியாய்   அவளை   சமாதானப்படுத்தி   காரில்   ஏற்றி,   மின்  மயானத்திற்கு   அழைத்து   சென்றான்   ஜூனைத்.   ப்ரித்வியின்   உடல்   ஆம்புலன்சில்   அங்கு   வந்து    சேர்ந்தது. ஒரு   அரை   மணி   நேரத்தில்   பிடி   சாம்பலாய்   மாறிப்   போனான்   ப்ரித்வி… அவனது   சாம்பலாய்   ஒரு   ஜிப்லாக்  கவரில்   பத்திரமாய்   வாங்கி   தன்   கைப்பையில்    வைத்தாள்   தேனுகா.   சில   நொடி   நிசப்தமாய்   இருந்த   ஜூனைத்,   “வாங்க   கார்ல   ஏறுங்க,   ஹாஸ்டலுக்கு   போகலாம்”   என்றான்.   தயங்கிய   தேனுகாவை   இழுத்து   வண்டிக்குள்   ஏற்றி, தானும்   ஏறினாள்   பவித்ரா. 

         “பவித்ரா”

         “சார்”

       ” உங்க   ஹாஸ்டல்   அட்ரஸ்   கொஞ்சம்   சொல்லுங்க,   சீக்கிரம்   போயிரலாம்” 

        ” இங்க   இருந்து   பக்கம்   தான்   சார்,  எக்மோர்  ரோட்ல  நேரா  போங்க , கொஞ்சம்   போனதும்  நான்   வழி   சொல்றேன்  ஓகே?” 

       “ஓகேங்க ,  காஃபி   டீ   ஏதாவது?”

      “ஒண்ணும்   வேணாம்   பவி,   சீக்கிரம்   ஹாஸ்டல்ல   கொண்டு   போய்   விட   சொல்லு   ப்ளீஸ்”   கத்தினாள்   தேனுகா. ஒன்றும்   சொல்லாமல்   காரை   வேகமாய்    அவன்    செலுத்த,   விட்ட   இடத்திலிருந்து   மீண்டும்   அழுகையை   தொடங்கினாள்   அவள்…. “இது   தான்ணே   அந்த   கதை,   இந்த   ரீதியில   தான்   எனக்கு   கல்யாணம்   நடந்துச்சு”   மூர்த்தி   அண்ணனிடம்   சொல்லி   முடித்தாள்   தேனுகா…

                                               –  தொடரும்…… 

     

       

        

               

         

            

  

    No comments yet.