கல்யாணம் முதல் காதல் வரை – 48

Shanmuha Sethuramachandran | 15 Feb 2026 | Share

                              48….

      ”  விடிஞ்சதும்,  நான்   ப்ரித்வி   பாடிய   வாங்க   மார்ச்சுவரி   வாசல்ல   காத்துக்கிட்டு   இருந்தேன் .  அப்ப   அந்த  ஜூனைத்   கையோட   ஒரு   பொண்ணை   கூட்டிக்கிட்டு    வேகமாக   என்னை   நோக்கி   வந்தார்.   நான்   என்னனு  கேட்டதுக்கு   உங்களுக்குப்   பதிலா   நான்   இங்க    இருக்கேன்,   நீங்க   நேரா   இந்த  பொண்ணு  கூட   அவங்க   வீட்டுக்குப்   போயி   குளிச்சு   கிளம்பி   வாங்க.   இவங்க   என்   கொலீக்  இவங்க   வீடு   இங்கருந்து   ரொம்ப   பக்கத்துல   தான்னு    சொன்னார்.  எனக்கு   முதல்ல   ஒண்ணுமே   புரியல , ஏன்  இப்ப  நான்   குளிக்கப்   போகணும்?   எல்லா   ஃபார்மாலிட்டீஸயும்   முடிச்சுட்டு  அப்புறமா  போறேன்னு   சொன்னேன்,   இல்ல  இவங்க   கூட   போயி   தயாராகிட்டு   வாங்க   இன்னும்   கொஞ்ச   நேரத்துல  நம்ம   ரெண்டு   பேருக்கும்   கல்யாணம்னு   சொல்ல   எனக்கு   பகீர்னு   ஆகிருச்சு”….

      அன்று  காலை  ஆறு  மணி

     “என்ன   விளையாடுறீங்களா?” அவனை   முறைத்துக்கொண்டே   கேட்டாள்   தேனுகா 

       “இல்ல;   இதுல   விளையாட   என்ன   இருக்கு?   நான்    சீரியசா   தான்   சொல்றேன்,   போங்க ,  இவ   புடவை   தருவா   குளிச்சு   முடிச்சுட்டு   அத   கட்டிக்கிட்டு   வாங்க.  ஆல்ரடி   நீங்க   தான்  ரிஜிஸ்டர்   ஆஃபீஸ்ல   எல்லா   ஃபார்மாலிட்டீசையும்  முடிச்சு   வச்சுருப்பீங்களே?   அதனால   எந்த   ப்ராப்ளமும்   வராது”

         “ஹலோ   மிஸ்டர் , என்ன   பேசுறீங்க நீங்க ?   நான்   உயிருக்கு   உயிரா   நேசிச்ச   ஒருத்தன்   செத்து   கெடக்குறான்,  அவன  நினைச்சு   அழுது   வெம்பிப்   போய்   நின்னுட்டு   இருக்கிற   என்   கிட்ட   வந்து  கல்யாணம்   பண்ணிக்கிறியானு   கேக்குறீங்க ,  நீங்கள்லாம்   மனுஷ   ஜென்மம்  தானா?   இல்ல   வேற   எதுவுமா? உங்கள   செருப்பால  அடிச்சு   அவமானப்படுத்த   எனக்கு   ரொம்ப   நேரம்   ஆகாது,   ஆனா   நான்   அதை   செய்ய   விரும்பல.   ஒழுங்கு  மரியாதையா   போயிருங்க,   இனி   நான்   என்   ஆயுசு   முடியுற   வரைக்கும்  உங்கள   பாக்கக்    கூடாது”  அவள்   அந்த   இடத்தை   விட்டு   நகர   முயல,

         “தேனுகா,   ஒரு   நிமிஷம்.   இப்ப   மட்டும்   நீ    என்னய   கல்யாணம்   பண்ணிக்கலன்னா   பின்  விளைவுகள்   ரொம்பவும்   பயங்கரமா   இருக்கும்.  உங்க   நல்லதுக்காகத்   தான்   சொல்றேன் ,  உங்க   உயிருக்கு   இப்ப   பெரிய   ஆபத்து   இருக்குங்க .  இப்போதைக்கு   உங்களுக்கு   தேவை   பாதுகாப்பான   ஒரு   இடம்”

        “என்ன   மிரட்டுறீங்களா?   என்ன   செய்வீங்க ?  சொல்லுங்க   பாப்போம்   என்ன   பின்விளைவுகள்   வரும்? என்னைய  கொலை   செஞ்சுருவீங்களோ?”

      ”  ஹாஹா…..உன்ன   கொன்னு   நான்   என்ன   செய்யப்   போறேன்?   ஆனா   அதுக்கு   பதிலா   நான்   செத்துருவேன்”

        “தாராளமா   செத்துப்   போங்க ,  அதப்  பத்தி   எனக்கு   எந்த   பயமும்   இல்ல,  சொல்லப்   போனா   எந்த   பாதிப்புமில்ல”

       “ஆனா   உன்   பேர   எழுதி   வச்சுட்டு   செத்தா   உனக்கு   பாதிப்பு   வரும்ல?” அவன்    கேட்க , சற்றே   அதிர்ந்தாள்   தேனுகா. “என்ன   சொல்றீங்க? என்   பேர  எழுதி   வைக்கப்   போறீங்களா?”

         “ஆமா , என்   சாவுக்குக்  காரணம்   தேனுகா   விஸ்வநாதன்ற  அட்வகேட்  தான்  அப்டின்னு   கொட்ட   எழுத்துல   எழுதி   வச்சுட்டு   விஷம்   குடிச்சுட்டு   போய்ருவேன்,  எப்படி   வசதி?”  ஜூனைத்   அவளை   கூர்மையாக  பார்த்தான். சிறு  புன்னகை   சிந்திய   தேனுகா,

    “குடிங்க , நோ   ப்ராப்ளம்.   என்   ப்ரித்வி    என்   கூட    இல்லாம   வாழப்   போற   வாழ்க்கை   ரொம்ப   நரகமா   இருக்கும்,   அதுக்கு   நான்    அவனுக்கு   மனசார    இறுதி   காரியம்   பண்ணிட்ட  திருப்தியோட, ஜெயில்லயாவது   என்   காலத்த   சந்தோஷமா  கழிப்பேன்”  என்று   தேனுகா  சொல்லிக்கொண்டிருந்த   அதே   நேரம்  அவள்   காலடியில்   ஏதோ  பூச்சி   ஏற ,  சட்  என   குனிந்து   அவள்   காலை   உதற,   அது   தான்   சமயம்   என்று   அவள்  கழுத்தில்  அந்த   தாலியை   கட்டினான்   ஜூனைத்…

        “அடப்பாவி…ஆனா   உனக்கு   ரொம்ப   திமிரு   தான்  டா , இந்த   விதத்துல   கல்யாணம்   நடந்தா   அந்த   பொண்ணு  எப்படிடா   உன்னய   விரும்பும்  ? அதனால  தான்   உன்   மேல   எரிஞ்சு   விழுது”அவன்   முதுகில்  செல்லமாக   அடித்தான்  ரவி.

         “தப்பு    தான் ,   ஆனா   எனக்கு   வேற   வழி   தெரியலடா   ரவி . அவ   நான்   நார்மலா   சொல்லும்   போதே    கேட்டுருந்தா   பரவாயில்ல , ஆனா   அவ   கேக்கல   அப்போ   எனக்கு   இதைத்   தவிர   வேற   வழியே   இல்ல ,  அதான்   அப்படி   செஞ்சிட்டேன்”

          “சரி   விடு ,  அப்புறம்   என்ன   நடந்துச்சுனு   சொல்லு.   அதுக்கு   முன்னாடி   அந்த   பொண்ணு   பவித்ரா   என்ன  ஆனா? அவள   வேற   அந்த   ரௌடிஸ்   உள்ள   போட்டு   அடைச்சுட்டு   போனாங்களே?”  

         “ஆமாடா, அது   இன்னொரு   கிளைக்   கதை    சொல்றேன்   கேளு.  அவய்ங்க   அந்த   பக்கமா  போன   உடனே  நான்    அவனுக   ரெண்டு    பேரையும்   ஒரு   வழி   பண்ணிட்டு,    போய்   கதவ   தொறந்து   விட்டு   அவள   வெளிய  கொண்டு   வந்துட்டேன்”

    மீண்டும்  அன்றைய  இரவு….

         “பாத்து   பாத்து , உங்களுக்கு   அடி   ஏதும்   படலையே?”   அவள்   கைகளில்  இருந்த   கட்டை   அவிழ்த்தபடியே  கேட்டான்  ஜூனைத்   கான்.    

        ” இல்லங்க,   ரொம்ப   தாங்க்ஸ் என்னை  காப்பாத்துனதுக்கு”  வாயில்   இருந்த   ப்ளாஸ்திரியை  பிரித்துவிட்டு  அவனுக்கு    நன்றி   சொன்னாள்.

         “கொஞ்ச   நேரத்துக்கு   முன்னால   தேனுகா   உயிருக்கு   ஆபத்துனு   நான்   சொன்னேன்ல  ?அது   இவங்களால  தான்,   இவங்க   ரெண்டு   பேரும்   அவள   கொலை   செய்யத்   தான்   இப்ப   உள்ள”  

         “அய்யயோ….பாவம்   அவ   தனியா”

        “இல்ல   இல்ல   பதறாதீங்க  ,அவனுக   ரெண்டு   பேரையும்   ஒரு   வழி   பண்ணிட்டு   தான்   வந்திருக்கேன் , தேனுகாவுக்கு   பிரச்சனை   இல்ல”

        “இப்ப   பிரச்சனை   இல்ல   சரி  தான், ஆனா   இதுக்கு   மேல   தான்   அவளுக்கு   பிரச்சனைகளே  ஸ்டார்ட்   ஆகும்”

        “ஆக்ச்சுவலி   இந்த   கும்பல்   யாரு? அவங்க   எதுக்காக   தேனுகாவை    கொல்ல   நினைக்கிறாங்க ?  என்னதான்  ப்ராப்ளம்?”

         “அது   இருக்குங்க…  ஒரு   பெரிய   கதை . தேனுகாவோட  ஆஃபீஸ்   எக்மோர்ல   இருக்கு.   அந்த   ஏரியால   மாடசாமினு   ஒரு   பணக்கார   ரவுடி   இருக்கான் . ஒரு   ஆறு   மாசத்துக்கு   முன்னால   அவனோட   மனைவியோட   இரட்டை   வடை   சங்கிலி   காணாம   போயிருச்சுனு   தன்  வீட்டுல   வேலை   செஞ்ச  ஒரு   சின்ன   பொண்ணை   சந்தேகப்பட்டு  அடிச்சு   விசாரிச்சுருக்கான்.  மூர்க்கமா  அடிச்சதுல   அந்த   பொண்ணு   இறந்து   போயிருச்சு .  ஆனா   அந்த   விஷயத்த   வெளிய   வர   விடாம   அவன்   மூடி    மறைச்சிட்டான்.  அந்த   சின்ன   பொண்ணோட   அம்மா   மகளிர்  போலீஸ்    ஸ்டேஷன்ல   புகார்   குடுத்துருக்காங்க  ,அந்த    ஸ்டேஷன்   இன்ஸ்பெக்டர்    நம்ம   தேனுகாவோட   ஃப்ரண்ட்.   அவங்க  அந்த   அம்மாவை   இவ   கிட்ட   அனுப்பி   வச்சுருக்காங்க,   விடுவாளா   இவ?  உடனே   ஆதரவுக்கரம்    நீட்டிட்டா. அந்த   அம்மாவ   வச்சு   மாடசாமி   வீட்டுக்கு   தான்   என்    பொண்ணு    கடைசியா   வந்தானு    சொல்லி   அவன்   மேல   சந்தேகமா   இருக்குனு   கேஸ்   குடுத்து,   ப்ரித்வியோட   உதவியினால   நிறைய   பாயிண்ட்ஸ்   கேதர்   பண்ணி,  திறமையா   வாதாடி,   அவன்   செஞ்ச   தப்பை   வெளிய   கொண்டு   வந்துட்டா.   அதனால   தான்   அவன்   மேலயும்   ப்ரித்வி   மேலயும்   அந்த   மாடசாமிக்கு   வன்மம்”….  மூச்சு   வாங்க   அந்த   முன்   கதையை   சொல்லி   முடித்தாள்   பவித்ரா.   பெட்டி   பெட்டியாய்  பணம்   வாங்கிக்கொண்டு , ஒருவன்    கொலை   பாதகன்   என   தெரிந்தும்   அவனுக்காக   வாதிட்டு   அவனுக்கு   கேஸில்   இருந்து   விடுதலை   வாங்கிக்   கொடுக்கும்   கருப்பு   கோட்டுக்காரர்களைப்  பற்றி   தான்   அதிகமாக   கேள்விப்பட்டே   வளர்ந்தவனான   ஜூனைத்தின்   மனதிற்குள்,   தேனுகா   உயர்ந்து   நின்றாள்   சே….எப்பேர்ப்பட்ட   பெண்   இவள்?   இவள்   வாழ்க்கையை   அலங்கோலமாக்கிய   பாவி   ஆகி   விட்டேனே? 

          “சார்”……

        …………….

         “சார்,   உங்களைத்   தான்”

        “சொல்லுங்க”  

         “என்ன   சார்    யோசனை?”

        “இல்ல  , தேனுகாவை   நினைச்சா  தான்   கொஞ்சம்   பயமா   இருக்கு,  அதப்பத்தி   தான்    யோசிக்கிறேன்”

         “இப்ப   யோசிச்சு   என்ன   சார்   பண்ண   முடியும்?   தயவு   செஞ்சு   நான்   உங்கள    குத்தி   காட்டுறதா   நினைக்காதீங்க,   நீங்க  தான்   இப்ப   பெரிய   உதவி   செஞ்சு   அவள   காப்பாத்தி   இருக்கீங்க ,  ஆனா   எத்தன   நாளக்கி   நீங்க   இப்படி   காப்பாத்திக்கிட்டே   இருப்பீங்க?  இல்ல   வேற   யாராவது   தான்   அவள  காப்பாத்திக்கிட்டே    இருக்க   முடியுமா? இதேது   ப்ரித்வி   உயிரோட   இருந்திருந்தா   இதெல்லாம்   அவளுக்கு   தேவையா?    அவரு    உயிரோட    இருந்திருந்தாலும்     அவரு    உயிருக்கும்   ஆபத்து   இருந்திருக்கும்   தான் ,  ஆனா   அவரு   ரொம்ப   கெட்டிக்காரரு ..  எப்படியாவது   எல்லா   பிரச்சனைகளையும்   சால்வ்   பண்ணிருந்திருப்பாரு,   மோசமான  இந்த   உலகத்துல   யாருமே   இல்லாத   அனாதையா   தேனுகா   இருந்தப்ப , அவ   லைஃப்ல    ஏஞ்சல்   மாதிரி   வந்த   ப்ரித்வி   இப்ப   மறுபடியும்   அவள   அனாதை   ஆக்கிட்டு    போயிட்டாரு,  இனி   அவளுக்குனு   யாரு    இருக்கா?ஒவ்வொரு   நாளயும்   பயத்தோட   அவ   எப்படி   கடத்தப்    போறா?   அத   நெனச்சா  தான்   ரொம்ப    வேதனையா   இருக்கு , என்ன   சொல்ல ?  எல்லாம்   அவ   விதி”   பவித்ரா   சொல்லிய   சொற்கள்   அனைத்தும்,   ஏற்கனவே   ரணப்பட்டு   இருந்த    அவனது   இதயத்தை   மேலும்   மேலும்   கீறியது. 

         “சரி   சார்,   நான்   தேனுகாவ   இனி  எப்போதும்  கொஞ்சம்   ஜாக்கிரதையா   இருக்க   சொல்லுறேன்.   எங்க   ரெண்டு   பேர்   உயிரையும்   காப்பாத்தினதுக்கு   ரொம்ப   நன்றி   சார் ,   நான்   உங்கள   காயப்படுத்துற   மாரி   ஏதாவது   பேசிருந்தா   என்ன   மன்னிச்சிருங்க   சார்., நான்   போய்   அவ   கூட    இருக்கேன்,   போயிட்டு   வர்றேன்   சார்”

       “சரிங்க   பவித்ரா”அவள்   விடைபெற்ற    சற்றைக்கெல்லாம்   ஜூனைத்தின்  மொபைல்  அழைத்தது,   சுல்தானா  பாட்டி   அய்யயோ …இன்னிக்கு   எனக்கும்   ரஷிக்கும்   மங்க்னா   இல்ல?  நான்   எப்படி   அதை   மறந்தேன்?   வேகமாக   ஃபோனை   அட்டெண்ட்    செய்தான்.

          “ஜூனைத்…..என்னப்பா?   ஒரு   முக்கியமான  விசேஷத்த   வச்சுக்கிட்டு   இன்னும்   நீ   வீட்டுக்கு   வராம   இருந்தா   என்ன   அர்த்தம்?   ராதா   உன்   மேல   ரொம்ப   கோவமா   இருக்காரு.   மணி   இப்ப   ஆறு ,  இன்னும்  அரை  மணி   நேரத்துல   நீ   வீட்டுல   இருக்கணும்”

         “ராதி,   நசீமா   ஆப்பா   கிட்ட   நான்  நேத்தே    சொன்னேனே?  என்   கூட  வேல   பாக்குற   பையனுக்கு”….. 

          “இரு    இரு  , அவ   எல்லாத்தயும்   சொன்னா..   இப்போதைக்கு   வேற   யாரயாவது   பாத்துக்க   சொல்லிட்டு   நீ   கிளம்பி   வா,   மங்க்னா   முடிஞ்சதும்   சாப்பிட்டு   உடனே   கிளம்பிரு  ,யாரும்   உன்ன   எதுவும்   சொல்ல   மாட்டோம். லேட்   பண்ணிடாம   சீக்கிரம்  வா”   ராதி   கட்   செய்து   விட,    இனி    அவளுக்குனு   யாரு   இருக்கா?  ஒவ்வொரு   நாளயும்   பயத்தோட  அவ  எப்படி   கடத்தப்   போறா? பவித்ராவின்  வார்த்தைகள்   அவன்   காதுக்குள்   மீண்டும்   மீண்டும்   ஒலிக்க,   ஒரு   புரட்சிகரமான   தீர்மானத்துக்கு   வந்தவன்   முதல்   வேலையாய்   தன்   மொபைலை   ஸ்விட்ச்   ஆஃப்   செய்தான்……    

                                              –  தொடரும்… 

               

        

          
 

      

           

             

    No comments yet.