46….
“எ….என்ன சொல்றீங்க ?அவரு இறந்து போயிட்டாரா?” அதிர்ந்து விட்டாள் பவித்ரா. “அவருக்கும், இப்ப உள்ள போனாளே தேனுகா அவளுக்கும் நாளக்கி காலயில கல்யாணம் சார். இப்ப நான் என்ன செய்ய ? அவளுக்கு என்னனு ஆறுதல் சொல்லுவேன்? பாவம் சார் அவ, அடுக்கடுக்கா கஷ்டம் மட்டுமே வந்துட்டு இருந்தா என்ன செய்வா?” பவித்ராவின் கண்கள் கலங்கியது. சே… அவனை பத்தி கேட்டவங்க கிட்ட நான் பாக்கலன்னு சொல்லிருக்கலாமோ ? என்னால தானே இந்த பொண்ணோட வாழ்க்க கெட்டு போயிருச்சு, அல்லாஹ்ஹ் இந்த பாவத்த நான் எங்க போய் தொலைப்பேன்? மனதுக்குள் புழுங்கி தவித்தான் ஜூனைத்… “என்ன செய்யுறது? கஷ்டம் தான் , ஆனா நாம தானே எடுத்து சொல்லி அவங்களுக்கு நிதர்சனத்த புரிய வைக்கணும் ? ப்ளீஸ் அவங்கள தனியா விடாதீங்க, நீங்களும் உள்ள போயி கூட இருங்க. அவங்க கிட்ட அவரு இறந்து போன உண்மைய சொல்ல எனக்கு மனசு வரல அதான் அமைதியா இருந்துட்டேன். நீங்க போயி கொஞ்சம் பக்குவமா சொல்லுங்க”
“ஓகே சார்”….
“வாங்க போலாம்” இருவரும் தளர்வாய் நடந்து உள்ளே சென்றனர்.
ஐ.சி.யூ…..
கண்களில் இருந்து கண்ணீர் அருவியென கொட்ட , கதவின் அருகே காத்துக்கொண்டிருந்தாள் தேனுகா.
“தேனு”….
“பவி…. என்னடி இன்னும் கதவ திறக்க மாட்டேங்குறாங்க? எனக்கு ரொம்ப பயமா இருக்கு அவனுக்கு ஒண்ணும் ஆகிருக்காதுல்ல? அவன் இல்லாட்டி எனக்கு வாழ்க்கையே இல்ல” அந்த வார்த்தைகள் ஜூனைத்தின் மனதை சுருக் என தைத்தது. பொதுவாக எதற்குமே கலங்காதவனின் கண்களில் இப்போது கண்ணீர். பெருமூச்சு ஒன்றை வெளியேற்றி விட்டு அவளை நெருங்கினான்.
“மேடம்….. நான் சொல்றத நீங்க கொஞ்சம் பொறுமையா கேளுங்க”
“சார் அதுக்கு முன்னாடி நான் உங்க கிட்ட ஒரு விஷயம் கேக்கணும். ப்ரித்விக்கு எந்த இடத்துல இப்படி ஆச்சு? யார் அவனை வெட்டினது? அந்த ஆள் பாக்க எப்படி இருந்தான்?”
“இல்லங்க, நான் பக்கத்துல ஒரு ஐஸ்க்ரீம் பார்லர்ல நின்னுட்டு இருந்தேன் . அப்ப தான் அவரு என் கிட்ட ஓடி வந்து, யாரோ நாலு பேர் என்னய துரத்திக்கிட்டு வர்றாங்க நான் உள்ள போயி ஒளிஞ்சுக்குறேன். உங்க கிட்ட ஏதாவது கேட்டாங்கன்னா தெரியாதுனு சொல்லிருங்கனு சொல்லிட்டு”….. ஜூனைத் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கதவைத் திறந்துகொண்டு அந்த நர்ஸ் வெளிப்பட்டாள்.” சார் , என்ன சார் ? அந்த நபரோட உறவுக்காரங்களுக்கு ஃபோன் பண்ணி தகவல் சொல்றேன்னு சொன்னீங்க, சொல்லியாச்சா? அவங்க வந்ததும் பாடியை ஒரு தடவை காமிச்சுட்டு போஸ்ட்மார்ட்டத்துக்கு அனுப்பணும் சார், டாக்டர் சொல்ல சொன்னாங்க. சீக்கிரம் அவங்கள வர சொல்லிருங்க சார்”….
“எ….என்ன சொல்றீங்க? யா….யாரு போஸ்ட்மார்ட்டம் ப்ரித்வி என் ப்ரித்வி”… கண்கள் லேசாக இருட்ட, பொத் என தரையில் விழுந்த தேனுகா மெல்ல ஒரு மயக்கத்துக்குள் போனாள். கண் விழித்த போது அதே ஹாஸ்பிட்டலில் ஒரு பெட்டில் படுத்துக்கொண்டிருந்தாள்
“தேனு…..இப்ப எப்படி இருக்கு?” அவள் அருகே சேரில் அமர்ந்திருந்த பவித்ரா எழுந்து இவள் அருகில் வந்தாள்.
“அதெல்லாம் இருக்கட்டும் பவி….ப்ரி ப்ரித்வி இற இறந்து போயிட்டானா?”….
ம்ம்ம் தலையை ஆமோதிப்பாய் ஆட்டிய பவித்ரா சிரமப்பட்டு அழுகையை விழுங்கினாள். “தேனு, நீ ரொம்ப போல்ட் ஆன பொண்ணு . எனக்கு தெரியும், இந்த பெரிய இழப்புல இருந்து நிச்சயமா நீ மீண்டு வருவ உன்னால முடியும்”…
………….. அவள் சொன்னதைக் கேட்டு தேனுகாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இப்போது நான் என்ன செய்ய வேண்டும் ? காதலன் இறந்து விட்டான் என அழ வேண்டுமா? இல்லை மீண்டும் அனாதையாகி போனோமே என்று அழ வேண்டுமா?
“தேனு…..என்னடி? மறுபடியும் மயக்கம் வர்ற மாதிரி இருக்கா?”
“பவித்ரா இந்தாங்க காஃபி, அவங்கள குடிக்க சொல்லுங்க . அப்பதான் கொஞ்சம் தெம்பா இருக்கும்” ஒரு சின்ன ப்ளாஸ்க்கோடு அறைக்குள் நுழைந்தான் ஜூனைத்.
“வேணாம்…..எங்களுக்கு எது தேவையோ அத நாங்க பாத்துக்குறோம். உங்க உதவி இனிமே எங்களுக்கு வேண்டாம் , போயிட்டு வாங்க”
“பவி….என்னடி இப்படி பேசுற? அவரு தான ரோட்டுல வெட்டு வாங்கி கிடந்த ப்ரித்வியை ஹாஸ்பிட்டல்ல சேத்தாரு? என்ன தான் ப்ரித்வி இறந்து போயிட்டாலும் இவரோட உதவி ரொம்ப பெரிசில்லையா? விடுடி, எல்லாம் என் நேரம். சார், நைட்டு நேரம்னு கூட பாக்காம என் ப்ரித்வியை ஹாஸ்பிட்டல்ல சேத்துருக்கீங்க உங்க உதவியை நான் என்னைக்குமே மறக்க மாட்டேன் , ரொம்ப ரொம்ப நன்றி சார்”….. இதயத்தை கசக்கி பிழியும் அந்த துக்கத்தில் கூட தனக்கு நன்றி சொல்லும் தேனுகா விஸ்வநாதன் ஜூனைத்தின் மனதைத் தொட்டாள்….
“தேனு ஷட் அப், ப்ரித்வியை தூக்கிட்டு வந்து ஹாஸ்பிட்டல்ல சேத்தது மட்டுமில்ல அவரு வெட்டு வாங்குனதுக்கே காரணம் இவரு தான்”
“எ….என்னடி சொல்ற?” குழப்பமாய் பவித்ராவை பார்த்தாள் தேனுகா.
“ஆமா, நீ பாதி கதையை கேட்டுக்கிட்டு இருக்கும்போதே நர்ஸ் வந்து சொன்ன செய்தியை கேட்டு மயங்கி விழுந்துட்டயில்ல? நான் முழு கதையையும் கேட்டேன். அதனால தான் இவரு மேல எனக்கு ஆத்திரமா வருது. சார் என்னய கொலை செய்றதுக்காக துரத்தி வர்றாங்க , நான் அந்த பக்கமா போயி ஒளிஞ்சுக்குறேன் அவங்க வந்து கேட்டா என்னய பாக்கலனு சொல்லிருங்கனு ப்ரித்வி இவரு கிட்ட சொல்லிட்டு போயிருக்காரு ஆனா இவரு அரிவாளோட தேடி வந்தவனுங்க கிட்ட ப்ரித்வி இந்த பக்கமா தான் போனாருனு காட்டி குடுத்துட்டு, அவரு வெட்டு வாங்குறதையும் பாத்துட்டு நின்னுட்டு இருந்துருக்காரு”
“அய்யோ! என்ன மேடம், நான் என்னமோ எல்லாத்தயும் வேணும்னு செஞ்ச மாதிரி பேசுறீங்க? செத்துப் போன ப்ரித்வி எப்படிப்பட்டவருன்னு எனக்கு என்னங்க தெரியும்? இரண்டு ரவுடிக் கும்பலுக்கு இடையில ஏதோ தகராறோனு எனக்கு தோணுச்சு”
“அப்ப நீங்க செஞ்சது சரி , அப்படி தான சொல்ல வர்றீங்க?”
“இல்லங்க , அந்த நேரத்துல நான் ஏன் அப்படி நடந்துக்கிட்டேனு எனக்கே தெரியல, பொதுவா நான் இந்த மாதிரி எல்லாம் செய்யுற ஆள் கிடையாது”
“போதும்.. உங்க கதாகாலட்சேபத்தை கேக்குற மனநிலை எங்க ரெண்டு பேருக்குமே கிடையாது , இடத்தை காலி பண்ணுங்க சார்” பவித்ரா மட்டும் தான் பேசிக்கொண்டு இருந்தாளேயன்றி தேனுகா வாயை திறக்கவே இல்லை. அவளது மௌனம் ஜூனைத்தின் இதயத்தை கீறியது . குற்ற உணர்வில் துடித்தான். கோவப்பட்டு ஏதாவது நான்கைந்து வார்த்தைகள் திட்டினால் கூட பரவாயில்லை ஆனால் அவள் இப்படி அமைதியாய் இருக்கிறாள்.
“சார் , போங்க இங்க இருந்து”
“இருங்க மேடம் போயிருறேன், தேனுகா கிட்ட ஒரு நிமிசம் பேசிட்டு மட்டும் போயிடுறேன் . தேனுகா, உங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு தொண்ணூறு சதவிகிதம் நான் தான் காரணம், நான் மட்டும் தான் காரணம். என்னய மன்னிச்சிருங்க ரொம்ப ரொம்ப சாரிங்க….. என்னய பத்தி தப்பா”. போதும் சார் சொல்லிக்கொண்டே அவனை நிமிர்ந்து பார்த்தவள் , லேசாய் புன்னகை செய்தாள்.”என் தலையெழுத்து இப்படி தான்னு இருக்கும் போது நீங்க எதுக்கு சார் மன்னிப்பு கேக்குறீங்க ? நோ ஹார்ட் ஃபீலிங்க்ஸ் .. பை த பை, உங்களுக்கு நான் தாங்க்ஸ் தான் சொல்லணும் . வெட்டுப்பட்டு கிடக்கட்டும்னு அப்படியே போகாம, கொண்டு வந்து இங்க சேர்த்து எனக்கு தகவல் சொல்லணும்னு நினைச்சீங்கள்ல? அதுக்கு தாங்க இந்த நன்றியுணர்வு . அப்புறம் இன்னும் ஒண்ணே ஒண்ணு மட்டும் உங்க கிட்ட சொல்லணும்னு எனக்கு தோணுது. நான் பரவால்ல, கொஞ்ச நாள்ல அழுது கரைஞ்சிட்டு வாழ்க்கையை அதோட ஃப்ளோல வாழ ஆரம்பிச்சுருவேன். அதுக்கான சக்திய கடவுள் எனக்கு தருவாருனு நான் ஆழமா நம்புறேன். ஆனா இதே போல ஒரு செயலை இன்னொரு முறை வேற யாருக்கும் செஞ்சிராதீங்க. இது என்னோட வேண்டுகோள்னு எடுத்துக்கிட்டாலும் சரி , இல்ல மன்றாடல்னு எடுத்துக்கிட்டாலும் சரி. பவி , வா போலாம் . ப்ரித்விய பாத்துட்டு வந்துரலாம்” பேசி முடித்த கையோடு அவள் எழுந்து அறையை விட்டு வெளியேறி செல்ல , செய்வதறியாது திகைத்து நின்றான் ஜூனைத். சில நொடிகளில் ப்ரித்வி…… என்ற தேனுகாவின் அலறல் அந்த நள்ளிரவில் ஹாஸ்பிட்டல் வராண்டாவில் எதிரொலிக்க, என்னோட இந்த தப்பை வாழ்க்கை முழுக்க என்னால மறக்க முடியாது போலருக்கே என அவன் குமைந்து கொண்டிருந்த அதே நொடியில் மொபைல் ஃபோன் அழைத்தது. எடுத்து யார் என பார்த்தான், அக்கா நசீமா…
“ஹலோ”
“டேய் ஜூனைத் , மணி இப்ப என்னனு தெரியுமா? பன்னெண்டு மணி ஆகியும் வீட்டுக்கு வராம எங்கடா இருக்க ? என்ன பண்ணிட்டு இருக்க?”
“ஆப்பா…. அது அது .. என் கூட ஆஃபீஸ்ல வேலை பாக்குற ஃப்ரண்டுக்கு ஒரு ஆக்சிடெண்ட், ஹாஸ்பிட்டல்ல இருக்கேன்”
“ஓ சரி சரிடா, சீக்கிரம் வா. நாளக்கி உனக்கு மங்க்னா, வீட்டுல சொந்தக் கார மனுஷங்க எல்லாரும் வந்துட்டாங்க ரொம்ப நேரமா நீ இல்லாம சமாளிக்க முடியாது கொஞ்சம் வாடா”…
“சரிக்கா வந்துடறேன்” ஃபோனை கட் செய்தவன் தளர்வாய் ஹாஸ்பிட்டலின் வாசலை நோக்கி நடந்தான். தன் காரில் ஏறி அமர்ந்து அப்படியே ஸ்டீயரிங்கில் தலையை கவிழ்த்தான், ஒரு பத்து நிமிடம் கழிந்திருக்கும்.
“நம்ம அண்ணன் சொன்ன மாரி அந்த ப்ரித்விய போட்டாச்சு , இனி அந்த தேனுகா தான் பாக்கி அவளயும் இன்னக்கி ராத்திரியே முடிச்சுரணும்”
“அது சரி , எங்க வச்சு அவள போடுறது? அது தான் எனக்கு யோசனையா இருக்கு”
“ஏன் ? இந்த ஹாஸ்பிட்டலே தோதான இடம் தான்னு எனக்கு தோணுது” பேசிக்கொண்டே இரண்டு தடியர்கள் அவனைக் கடந்து செல்ல, ஜூனைத்தின் தண்டுவடம் மெல்ல குளிர்ந்தது….
– தொடரும்….
No comments yet.