45….
மறுநாள் காலை….
ஆபீசில் மும்முரமாய் வேலை பார்த்துக் கொண்டிருந்த தேனுகா ஃபோன் அடிக்கும் சத்தம் கேட்டு கலைந்தாள் . எடுத்து யார் என பார்த்தாள் ப்ரித்வியின் அக்கா பூமிகா.. கட் செய்து விட்டு மீண்டும் வேலையை பார்க்க ஆரம்பித்த போது… மீண்டும் அழைப்பு வந்தது இந்த முறை ஜூனைத்.
“ஹலோ”
“மேடம் , என்ன பண்றீங்க? ஃப்ரீயா? ஒரு முக்கியமான விஷயம் பேசணும்”
“ம்ம்ம் பேசலாம் , சொல்லுங்க”
“எங்க ஆஃபீஸ்ல என் ஃப்ரண்ட்கு ஒரு சட்ட ஆலோசனை தேவப்படுது உங்க கிட்ட கன்சல்ட் பண்ணலாமா?”
“சிவில் கேசா கிரிமினல் கேசா?”
” சிவில் தான் , ப்ராப்பர்டி சம்மந்தமா”
” சரி வர சொல்லுங்க , மதியத்துக்கு மேல நான் ஃப்ரீ தான் . இல்ல இன்னும் அரை மணி நேரத்துலருந்தே ஃப்ரீயா தான் இருப்பேன்”
“ஓகே….அவனுக்கு வழி தெரியாது கூட நானும் தான் வருவேன், அதனால உங்களுக்கு ஒண்ணும் அப்ஜெக்ஷன் இல்லயே மேம்?:…. அவன் வம்பிழுக்க, கோபத்தில் தேனுகாவின் முகம் சிவந்து சூடாகிப் போனது.
“கடவுளே! என்ன ஜூனைத்? இவ்ளோ நேரம் நல்லாத் தான பேசிக்கிட்டு இருந்தீங்க ? இப்ப எதுக்கு இப்படி பேசுறீங்க? என்னய வம்பிழுக்காட்டி உங்களுக்கு தூக்கமே வராதா?”
“டோண்ட் கால் மீ பை நேம், சார்னு சொன்னா போதும். என் மேல எந்த உரிமையும் நீங்க எடுத்துக்கக் கூடாது அத நல்லா நினைவுல வச்சுக்கங்க , நான் யாருங்க உங்களுக்கு? என்னைய எதுக்கு பேர் சொல்லி”..அவன் பேசிக்கொண்டே போக எரிச்சலடைந்து போனை கட் செய்தாள் தேனுகா. சை.. எப்பப் பாத்தாலும் திமிராவே பேசுறானே ? இப்படித் தான் நாம செய்யும்போதும் அவனுக்கு இருந்துருக்குமோ?… நாம அவன ரொம்பத் தான் நோகடிச்சுட்டோமோ?
“தேனுமா”….அழைத்துக்கொண்டே உள்ளே வந்தார் மூர்த்தி அண்ணன். அவர் நடையில் ஒருவித பரபரப்பு.
“என்னங்க அண்ணா?”
“பூமிகாமா எனக்கு போன் போட்டாங்க, ப்ரித்வி அய்யாவோட டெட்பாடி அது இதுனு ஏதேதோ பேசுறாங்க? என்னாமா ஆச்சு?” அவர் முகத்தில் வியர்வை வழிய, கண்களில் ஒருவிதமான கலக்கம்.
“அது வந்து…. அண்ணா அது”…. தேனுகா தயங்க,
“என்னனாலும் சொல்லுங்கமா, அவரு எங்க போனாருனு நான் கேட்டுக்கிட்டே இருந்தப்பலாம் அது இதுன்னு ஏதேதோ சொல்லி சமாளிச்சீங்க, எம்புட்டு பெரிய வேலையா இருந்தாலும் இத்தன நாளா அவரு உங்கள பாக்க வராம இருக்க மாட்டாரு, அதே போல பூமிகா அம்மாவுக்கும் பொய் சொல்லணும்னு எந்த அவசியமும் இல்ல” பெருமூச்சு ஒன்றை வெளியேற்றி தன் தயக்கத்தை துடைத்த தேனுகா.
“ஆமா அண்ணா, ப்ரித்வி இப்ப உயிரோட இல்ல .. அந்த மாடசாமி சின்னப்பொண்ணு ஒருத்திய கொல செஞ்ச கேஸ்ல நானும் அவனும் தான அவனுக்கு எதிரா வாதாடி அவன அரஸ்ட் பண்ண வச்சோம்?… அந்த கோவத்துல ப்ரித்விய வெட்டி போட்டுட்டான்” சலனமற்ற முகத்துடன் தேனுகா சொல்ல, மூர்த்தி அண்ணனின் கண்களிலிருந்து தாரை தாரையாய் கண்ணீர் வழிந்தது.
“இனிமே நான் சாமியே கும்பிட போறதில்ல தேனுமா, தங்கம் போல மனசிருக்குற உங்கள எப்பப் பாத்தாலும் சோதிச்சுக்கிட்டு இருந்தா அது என்ன சாமி சொல்லுங்க ? உயிருக்கு உயிரான புருசன் செத்துப் போயிருக்காரு , ஒரு பொட்டு கண்ணீர் இல்லாம நீங்க அத சொல்லும் போதே உங்க மனசு படுற வேதனைய என்னால புரிய முடியுது. அடக்கி வக்காதீங்கமா, எதை வேணாலும் அடக்கலாம் ஆனா துக்கத்தை அடக்கி வைக்கக் கூடாது . நான் என்ன அன்னியனா? என் முன்னால அழறதுக்கு சங்கடப்படுறீங்களா தேனுமா?”
“அ….அண்ணா நீங்க நினைக்கிற மாரி ப்ரித்வி என் புருசன் இல்ல, என் கழுத்துல இருக்குற தாலி அவன் கட்டுனது இல்ல . எங்களுக்கு கல்யாணம்னு நாங்க ஃபிக்ஸ் பண்ணி வச்சிருந்ததுக்கு முதல் நாள் தான் அவன் செத்துப் போனான்”
“தேனுமா, நீங்க என்ன சொல்றீங்க? எனக்கு ஒண்ணுமே புரியல” மூர்த்திக்கு தலை சுற்றுவது போல் இருந்தது.
“அ…அது என்னய கல்யாணம் பண்ணிக்கிட்டவர் பேரு ஜூனைத் கான்”
“முஸ்லிமா?…. அம்மா என்னமா? ஏன் இந்த மாரி?”
“அண்ணா ப்ளீஸ் அண்ணா, நான் எந்த தப்பும் செய்யல, எனக்கு தான் எல்லாரும் தப்பு பண்ணினாங்க. என்னய அந்த மாரி பாக்காதீங்க, நான் உங்களுக்கு எல்லாத்தயுமே தெள்ளத் தெளிவா சொல்லுறேன்”…
தேனுகாவின் திருமணத்திற்கு முதல் நாள் இரவு…. மணி பத்து
ப்ளூடூத் ஸ்பீக்கரில் பாடலை ஓடவிட்டு விட்டு , முகத்திற்கு கடலை மாவு போட்டு முடித்து, அதை காய வைத்துக்கொண்டிருந்தாள் தேனுகா. மனது முழுக்க சொல்ல முடியாத ஒரு சந்தோஷம். வயிற்றுக்குள் பலவிதமான சைஸ்களில் பட்டாம்பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன.நாளை இந்நேரம் நான் திருமதி ப்ரித்வி , இனி எந்த கிளையண்ட்டுக்கும் தபால் போடுவதற்கு ஹாஸ்டல் முகவரி கொடுக்க தேவையில்லை, நமக்குனு யாரு காத்து இருப்பாங்க சீக்கிரம் போயி என்னா செய்யப் போறோமுனு ஹாஸ்டலுக்கு லேட்டா போக தேவையில்லை , ரொம்ப வருஷம் கழிச்சு நமக்கே நமக்குனு ஒரு வீடு .. நினைக்க நினைக்க மனது இனித்தது….
“ஹலோ….கல்யாணப் பொண்ணு” வெறுமனே சாத்தியிருந்த அறைக் கதவை
திறந்து கொண்டு உள்ளே வந்தாள் பவித்ரா, பக்கத்து அறையில் இருப்பவள்.
“வாடி பவி…பாட்டு வால்யூம் கம்மி பண்ணு , இல்லனா ஆஃப் பண்ணிரு”
“என்ன மேடம்? நாளக்கி பள பளனு தெரியணும்னு என்னமோ செஞ்சுட்டு இருக்க போலயே?”
“அடியே, இது எப்பவும் போடுற கடலமாவுடி, ஜஸ்ட் ஸ்கின் கேர்”
“ஓகேடி , ரூம் தொடச்சு வச்ச மாரி இருக்கு.. எல்லாத்தயும் எடுத்து பேக் பண்ணிட்டியா தேனு?”
“ஆமாடி, நாளக்கி கல்யாணம் முடிஞ்சதும் ரிஜிஸ்டர் ஆஃபீஸ்ல இருந்து நேரா வீட்டுக்கு போயிருவோம்”
” வீடு பாத்தாச்சா?”
“பாக்குறதெல்லாம் இல்லடி, அவரு ஆல்ரெடி ஒரு வீட்டுல தான் தங்கி இருக்காரு அங்கயே போயிருவேன், நீ தூங்கி வழிஞ்சு கல்யாணத்த மிஸ் பண்ணிராத என் சார்பா வரப் போற கொஞ்ச ஆட்கள்ல நீயும் ஒருத்தி”
“என்ன தேனு, உன் கல்யாணத்த நான் போய் மிஸ் பண்ணுவேனா? அதெல்லாம் கரக்ட் டைம்கு வந்துருவேன் ஆனா இனிமே உன்னத்தான் ரொம்ப மிஸ் பண்ணுவேன்” பவித்ராவின் சிரித்த முகம் சோகமாய் மாறியது.
” எனக்கும் நாலு வருஷமா கூட இருந்த உங்களையெல்லாம் பிரிஞ்சு போறேன்னு வருத்தமா தான்டி இருக்கு. ஆனா என்ன செய்ய ? வாழ்க்கை எப்பவுமே ஒரே இடத்துல தேங்கி நிக்கிறது இல்லயே ? என்ன நடந்தாலும் போக வேண்டிய இடத்துக்குப் போக வேண்டிய திசையில போயிக்கிட்டு தானடி இருக்கும்?”
” கரக்ட் தான் தேனு..சரி நீ ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு சீக்கிரம் தூங்கு, அப்ப தான் முகம் ஃப்ரஷ்ஷா இருக்கும்”
” சரிடி ”
“கல்யாணத்துக்கு எப்ப கிளம்புற?”
“ஆறு மணிக்குள்ள கல்யாணத்த முடிச்சுரலாம்னு இருக்கோம் பவி…. ஸோ நாலரை போலயே அவரு வந்து என்னய கூப்பிட்டுக்கிருவாரு… நானும் அப்பயே லக்கேஜ்லாம் எடுத்துக்கிட்டு அவரு கூட கிளம்பிருவேன்”
“சரி தேனு, அப்ப நீ தூங்கு நானும் போய் தூங்குறேன்”
” கல்யாணத்துக்கு கட்டாயமா வந்துருடி”
“சேரிடியம்மா , ஒண்ணும் கவலப்படாத.
அதெல்லாம் கரெக்டா வந்துருவேன்”
” ம்ம்ம்ம்ம் குட் நைட் டி”
“குட் நைட்”……அவள் சென்றதும், காய்ந்திருந்த முகத்தை கழுவி முடித்து, லைட்டை ஆஃப் செய்து விட்டு வந்து படுத்தாள்… உடன் மொபைல் ஃபோன் அழைத்தது, ப்ரித்வி தான்.. இந்நேரத்துக்கு எதுக்கு கூப்டுறான்? பதட்டத்துடன் அட்டெண்ட் செய்தாள்.
“ப்ரித்வி….என்னாடா இன்னும் தூங்கலயா?நேரம் ஆகுதே நீ இவ்ளோ நேரம் தூங்காம இருக்க மாட்டியே?”
“ஹலோ” இது ப்ரித்வியின் குரல் இல்லையே? தேனுகாவுக்கு மேலும் பதட்டம் கூடியது.
“ஹலோ….சார் நீங்க யாரு என்” …
” மேடம், நான் சொல்லுறத கொஞ்சம் பொறுமையா கேளுங்க . ப்ரித்விக்கு ஒரு ஆக்சிடெண்ட் , ராயப்பேட்டை ஜி.எச் கு கொஞ்சம் சீக்கிரமா வாங்க” தேனுகாவுக்கு காலடியில் பூமி நழுவுவது போல் இருந்தது….
“நீங்க என்ன சொல்…சொல்றீங்க?”
“ஃபோன்ல பேசுற மாரி இல்லங்க, யாரயாவது துணைக்கு கூப்பிட்டுக்கிட்டு சீக்கிரமா வாங்க இங்க”
” ம்ம்ம் ச….சரி”…..உடல் நடுங்க போனை கட் செய்தவள் , உடனே மூர்த்தி அண்ணனுக்கு அழைத்தாள். ரிங் போய்க் கொண்டே இருந்தது , மீண்டும் மீண்டும் அழைத்தாள்… ம்ஹூம் இது சரி வராது பவித்ராவிடம் வண்டி வாங்கிக் கொண்டு கிளம்ப வேண்டியது தான்.. அவசரமாக சுடிதார் மாற்றிக்கொண்டு வேகமாக அறையை விட்டு வெளியேறி பக்கத்து அறையின் கதவைத் தட்டினாள் உடனே திறந்தாள் பவித்ரா.
“தேனு ….என்னடி?”
“பவி எனக்கு வண்டி சாவி வேணும் , கொஞ்சம் குடேன்”
“என்னடி பதட்டமா இருக்க?”
“பவி…..பேச நேரம் இல்ல, ப்ரித்விக்கு ஆக்சிடெண்ட் ஆகி ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிருக்காங்களாம் போன் வந்துச்சு….அதுக்கு தான் உன்கிட்ட வண்டி கேக்குறேன் , ப்ளீஸ்டி”
“நீ மட்டும் எப்படி தனியா போவ? வா , நான் கூட்டு போறேன்” பவித்ரா அவளை அழைத்துக்கொண்டு விரைந்து கிளம்பினாள். அரக்க பரக்க இருவரும் ஹாஸ்பிட்டலை அடைந்தபோது, என்ட்ரண்சிலேயே காத்துக் கொண்டு இருந்தான் ஜூனைத்….
“தேனுகா விஸ்வநாதன்?”
“ஆமா , நீங்க தான் போன்ல பேசுனீங்களா? என்ன சார் ஆச்சு அவருக்கு? ரொம்ப அடியா?”
“அது அது வந்து சாரிங்க .. நடந்தது ஆக்சிடெண்ட் இல்ல, அட்டம்ப்ட் டூ மர்டர் .. யாரோ ஒரு நாலஞ்சு பேரு வந்து அவர வெட்டிட்டாங்க”…..
“மை காட்ட்ட் ப்ரித்வி….ப்ரித்வி”…… அலறிக்கொண்டே, தேனுகா ஐ.சி.யூ வை நோக்கி ஓடினாள்.
“சார் , ப்ரித்வி எப்படி இருக்காரு? பயப்படுற மாரி ஒண்ணும் இல்லயே?” கம்மிப் போன குரலில் ஜூனத்திடம் கேட்டாள் பவித்ரா.
” இல்லங்க ஹி இஸ் நோ மோர்”
– தொடரும்……
No comments yet.