கல்யாணம் முதல் காதல் வரை – 40

Shanmuha Sethuramachandran | 10 Feb 2026 | Share

                            40.

           “ஆப்பா,   நீ   என்ன   சொல்ற?  இ… இதெல்லாம்   ப்ளானா ?  கொஞ்சம்  தெளிவா    சொல்றியா   ப்ளீஸ்?” 

           “சொல்றேன்,   அதை   சொல்லத்  தான   உனக்கு    ஃபோன்    பண்ணேன்?  டாக்டர்   மாலா   கிட்ட ,   தேனுகா   கர்ப்பமா  இருக்கானு   பொய்   சொல்ல  சொல்லி   மிரட்டுனது   யார்னு   நினைக்கிற?” 

           “ஜமால்   மாமா”

           “அதான்   இல்ல  , முஸ்தஃபா  மாமா  தான்    அந்த   திட்டத்துக்கு   மூளை.  ஒரு  வேளை   மாட்டினா   என்ன  செய்யுறதுனு,   முன்னேற்பாடா   என்   வீட்டுக்காரரை  ஒப்புக்க   சொல்லி   சொன்னதும்  மாமா  தான்,   இப்ப   புரியுதா?” 

           “புரியுது   புரியிது,  ஆனா  இதெல்லாம்  எதுக்குனு   தான்   புரியல” 

           “அடியே ,  நீ   என்   கூட  தான்  பொறந்தியா?   இது   கூடவா  புரியல?   தேனுகா   அந்த   வீட்டை  விட்டுப்  போகணும்டி  , அப்போ  தான்   நம்ம   நினைக்கிறது    எல்லாமே  அந்த  வீட்ல  நடக்கும்.  நம்ம    நேர்ல   பாக்கும்  போது    எல்லாம்   தெளிவா  சொல்றேன்”

            “ம்ம்ம்   சரிக்கா,   ஆனா   என்ன  ப்ளான்   பண்ணாலும்   ராதா   கிட்ட  மாட்டிக்காம   பண்ணுங்க”

           “ஹாஹாஹா….. இப்பக்   கூட  ஒரு  ப்ளான்   பண்ணி   தான்   நாங்க   வெளிய   வந்துருக்கோம்  , அது   தெரிஞ்சிருச்சா ? இல்லைல ? அதெல்லாம்   பாத்துக்கலாம்,  சரி    சமைக்கணும்டி,  நான்   சாயங்காலம்  ஃபோன்  பண்றேன் ”

          “சரிக்கா,   பத்திரமா  இரு”

                      ***************
  
           ” ஜூனைத், என்னடா, நான்   கேள்வி   கேட்டுட்டே    இருக்கேன்   நீ   பேசாம  அமைதியாவே   இருக்க?   இப்ப   எதுக்கு  இந்த   தாலியையும் , செயினையும்  ரிட்டர்ன்   குடுக்க    சொல்ற?   உன்   மனைவிக்காக  எவ்ளோ   ஆசை    ஆசையா   வாங்குன?

           “ஆசையும்   காதலும்,  எனக்கு  மட்டும்   இருந்தா   போதுமா   ரவி?”

           “என்னடா   சொல்ற?” 

           “ஆமா .  அந்த   ப்ரித்வி   மாதிரி  நானும்   ஏதோ   ஒரு   காரணத்துக்காகத்   தான்  அவளை   என்    கூட   சேர்ந்து   வாழ   சொல்லி   ஃபோர்ஸ்   பண்றேனாம்,  நீயே  ஒரு    நியாயத்தை   சொல்லு  நான்   என்ன   அப்படிப்பட்டவனா?” 

            “நாங்க   ரொம்ப  நாளா   உன்   கூட   பழகுறோம்,   ஆனா  அவங்க    அப்படி   இல்லயே ?  ரொம்ப   நம்பின  ஒரு  ஜீவனால   ஏமாற்றப்பட்டிருக்காங்க,   உன்னை  புரிய  அவங்களுக்கு   கொஞ்சம்  டைம்  எடுக்கும்  ஜூனைத்.   அது  வரை  வெயிட்   பண்ணலாம்   ஒரு   தப்பும்   இல்ல”  என்றாள்   உள்ளே  இருந்து   ட்ரேயில்   ஸ்நாக்ஸோடு  வந்த  ஸ்வேதா,  ரவியின்   மனைவி .   அதை  டீபாய்   மேல்   வைத்தாள். ரவியும்,  ஸ்வேதாவும்  அவனது  ஆஃபீஸ்  நண்பர்கள்.  தன்  வீட்டை   அடுத்து  ஜூனைத்   இவர்களுடன்   மட்டும்   தான்   ஒட்டுவான். 

         “ஸ்வேதா, நான்   என்ன   சொல்றேன்னு   உனக்கு   புரியுதா?   அவ   நான்   உங்களை   புரிஞ்சுக்குறதுக்கு   கொஞ்சம்   டைம்  வேணும்,   அது   வரை   என்னை   தொந்தரவு   செய்யாதீங்கனு   சொன்னா  நான்   எத்தனை   வருஷம்  ஆனாலும்  காத்திருப்பேன் . ஆனா  அவ   அப்டி   சொல்லல,   என்னை   ரொம்ப  ஹர்ட்  பண்ற   மாதிரி   பேசுறா.   அதான்   என்னால  தாங்க   முடியல .  அவளை   எப்டியெல்லாமோ  பாத்துக்கணும்னு   நான்   ஆசைப்படுறேன்,  இல்ல   இல்ல   ஆசைப்பட்டேன்.   இப்போ  என்   மனசுல   அந்த   மாதிரி   எந்த   எண்ணமும்  இல்ல” 

          ” டேய்ய்ய் !!!   நீ    என்ன   சொல்ற?”   அதிர்ந்தான்   ரவி .  

           :அவ   நான்   வேணாம்னு  ரொம்ப  தீர்மானமா   இருக்கா.  இனி  மேல்  என்னால   அவ   கிட்ட   கெஞ்ச   முடியாது”  

         ” ஜூனைத் ,  ஸ்நாக்ஸ்  எடுத்துக்க. இந்த   விஷயம்   எடுத்தோம்  கவுத்தோம்னு   பேச   வேண்டிய   விஷயமில்ல,  ஒரு  ஒரு  ஸ்டெப்பையும்   பொறுமையா   யோசிச்சு   தான்   எடுத்து   வைக்கணும்.   நான்   தேனுகா   கிட்ட   பேசுறேன்”

           “நீயா ? வேணாம்   வேணாம்,  அவ   உன்    கிட்ட   ஏதாவது   திமிரா  பேசிட்டா   எனக்கு   அது   தர்மசங்கடமா  போயிரும்”

           “ஏய்   ஜூனைத்!  ஸ்வேதா  சொல்றது  கரக்ட்.    இவ   பேசினா   சரியா  இருக்கும்னு   தான்   எனக்கு   தோணுது.   ஏன்னு  கேளு , உங்க   வீட்ல   அவங்க   தன்னோட     ஃபீலிங்சை   சொன்னா  ரொம்ப  அக்யூரட்டா    அதை   புரியுற   ஏஜ்    க்ரூப்ல   யாரும்    இல்ல .  ரஷிதா   ரொம்ப  சின்ன  பொண்ணு,  அவ   கிட்டயும்   சொல்ல   முடியாது.  ஆனா  ஸ்வேதா   பேசுனா   சரியா  இருக்கும்ல?” 

             …………

            “என்னடா   அமைதியா   இருக்க?   நான்   தேனுகா   கிட்ட   பேசணும்,  அவ்ளோ  தான். நீ   அவங்க   நம்பர்   மட்டும்  சொல்லு.  மீட்டிங்   ஸ்பாட் ,  டேட் , டைம்  எல்லாம்  நான்  அவங்க   கிட்ட   பேசிட்டு   ஃபிக்ஸ்   பண்ணிக்கிறேன்,   நம்பர்   சொல்லு”

           “இல்ல   அது”….

           “சொல்லுனு   சொன்னேன்”

           9087653241   அவன்   சொல்ல  சொல்ல ,  தன்  ஃபோனில்  அந்த   நம்பரை   சேவ்   செய்து   கொண்டாள்  ஸ்வேதா. 

          “ஓகே , நான்   கிளம்புறேன்”

          “டேய் ,  என்ன   விளையாடுறிய  உனக்காக   கஷ்டப்பட்டு   ப்ரெட்  பஜ்ஜிலாம்   செஞ்சு   எடுத்துட்டு   வந்தா,   நீ  பாட்டுக்கு   கிளம்புறேன்னு   சொல்ற ?  ஒழுங்கா  சாப்பிட்டுட்டு   போ. ரவி , பாரேன்   இவனை”

          “இல்ல   ஸ்வேதா ,  எனக்கு   மனசு  சரி   இல்ல  , ப்ளீஸ்” 

          “ஜூனைத்…..ஒண்ணு   தெரிஞ்சிக்க,  மனசு   சரியில்லனாத்   தான்   நல்லா  வயிறு   முட்ட    சாப்டணும்”  

          “டேய்  , சாப்டுட்டு   போடா. வீட்டுக்குப்   போய்    என்ன   செய்யப்   போற?   தனியா  ரூம்   சீலிங்கை   வெறிச்சு   பாத்துக்கிட்டு
இருக்கப்   போற , அதுக்கு   எங்க   கூடயாவது   கொஞ்சம்  பேசி   சிரிச்சுட்டு   போனைனா  உனக்கு  கொஞ்சம்   ரிலாக்ஸா   இருக்கும்ல ?”

          “சரி”  என்று   அமர்ந்தான்  ஜூனைத்..

                      ************

           “தேனு”……… சுல்தானா  பாட்டி   அழைக்க ,  படுத்திருந்த   தேனுகா  சட்டென  எழுந்தாள் .  “பாட்டி”……

            “அட ,   என்னமா?   எதுக்கு   இப்டி  பயந்தவாக்குல   எந்திரிக்கிற ?  உனக்கு  பேரீச்சம்பழ    ஜூஸ்   போட்டு   கொண்டு  வந்துருக்கேன் ,  குடி”    டம்ளரை  நீட்டிக்   கொண்டே  அவள்   அருகில்  அமர்ந்தார்.

          “பேரீச்சம்பழத்துல   ஜூசா?  என்ன  பாட்டி    சொல்றீங்க?”  

           “ஆமா  .பேரீச்சை ,  வால்நட், முந்திரி,   நிலக்கடலை ,  எல்லாத்தையும்   போட்டு  அரைச்சு,   வடிகட்டி   கொண்டு  வந்திருக்கேன்.  இதை   குடிச்சா  உடம்புல   நிறைய    ரத்தம்   ஊறுமாம்”  தேனுகாவின்   கண்கள்   கலங்கியது.

           “என்னாச்சு ,  ஏன்   அழற?” 

          “பா…பாட்டி”

           “ம்ம்ம்.. சொல்லு   தேனு, என்னாச்சு?  ஏன்   அழுகுற ?  உடம்பு   ஏதாவது  பண்ணுதா?”   பதறினார்   பாட்டி.

          ” என்   மேல   உங்க   யாருக்குமே  கோபம்    இல்லயா?   இத்தனை  நாள்   ஒரே  வீட்ல   ஒண்ணு   மண்ணா  இருந்த  குடும்பத்துல ,   நான்   வந்த   நாள்ல  இருந்தே   அப்பப்ப   பிரச்சனை  தலை  தூக்கிட்டு   தான்   இருந்துச்சு.  ஆனா  எல்லாத்துக்கும்   மேலா,   இப்ப  ஒரு  சின்ன  குடும்பமே   வெளிய   போயிருச்சு.  இதுக்கு  காரணம்   யாரு?   நான்   தான ?  அப்புறம்  எப்டி   பாட்டி   என்   மேல   உங்களுக்கு  கோபம்   வராம    இருக்கும்?”

           “அதுக்கு   ரெண்டு   காரணங்கள்  இருக்கு   தேனு ,  சொல்லட்டுமா?”

         “சொல்லுங்க   பாட்டி” 

         “முதல்   காரணம்.   ஜமால்,   நசீமா  வெளிய   போனதுக்கு   நீ   எந்த  விதத்துலயும்   பொறுப்பு   இல்ல.   அவங்க  போனதுக்கு    காரணம்  அவங்க  மனசுல  தோன்றின   துர்   எண்ணங்கள்  தான்.  இதுல   நாங்க   எல்லாருமே   ரொம்ப  தெளிவா   இருக்கோம்”

          “இரண்டாவது   காரணம்?”

          “நீ   எங்க   ஜூனைத்   மனைவி”…

          ……………..

          “உன்   பார்வைக்கான   அர்த்தம்  எனக்கு   புரியுது   தேனு .  இது   எல்லாம்  ஒரு   காரணமானு   தான   நினைக்கிற ? ஜூனைத்   ரொம்ப   நல்ல  பையன்மா,  இந்த    வீட்டுல   எல்லாருக்குமே  அவன்   ரொம்ப  செல்லம். யாருக்காவது  ஒரு  கஷ்டம்னு   தெரிஞ்சா,  ஓடிப்போய்   உதவி   பண்ணுவான் . யாரோட   மனநிலையையும்  சட்டுனு   புரிஞ்சுக்குவான்.  ஆனா  அவனைத்    தான்   யாரும்   புரிய   மாட்டாங்க”   அவர்   தன்னைத்   தான்   சொல்கிறார்  என   புரிய,   மௌனம்   காத்தாள்   தேனுகா.  அவள்  ஏதாவது   பேசுவாள்   என   அமைதியாய்  காத்துக்கொண்டிருந்த   சுல்தானா, அவளிடம்    இருந்து   பதில்   ஒன்றும்  வராமல்    போகவே   பெருமூச்சொன்றை  வெளியேற்றி   விட்டு   எழுந்தார்.

           ” குடிம்மா ,  குடிச்சிட்டு  கொஞ்சம்  ரெஸ்ட்    எடு .   எனக்கு   கிச்சன்ல  கொஞ்சம்    வேலை    இருக்கு,    நான்   போய்   அதை   பாக்குறேன்   சரியா?”

          “என்னை   மன்னிச்சிருங்க  பாட்டி”   அவள்   சொல்ல,   பதில்   பேசாமல்  அறையை   விட்டு   வெளியேறினார்   சுல்தானா    பாட்டி.

          அன்று  இரவு,

           எல்லோரும்   டைனிங்   டேபிளில்  அமர்ந்து    சாப்பிட்டுக்   கொண்டிருக்க,   மாடிப்படிகளில்   இறங்கி  வந்தான்  ஜூனைத் .  தேனுகா  அவனை   நிமிர்ந்து  பார்க்க, அதை   கவனித்தாலும்    முகத்தில்   எந்த  உணர்வுமே   இல்லாமல் ,  அல்லது   எந்த   உணர்வையும்  காட்டி   கொள்ளாமல்,   ஒரு   தட்டை  எடுத்துக்கொண்டு ,  இடியாப்பத்தை  அதில்  எடுத்து  வைத்தான். 

           ” நான்   வைக்கிறேன்பா , நீ   எதுக்கு   இதைலாம்   செய்யுற  ? உக்காரு”

            “வேணாம்   நிஷா  மாமி,   நான்   என்னோட   ரூம்கு   எடுத்துட்டுப்   போய்  சாப்பிடப்   போறேன் ”  அனைவரும்  ஒருவரையொருவர்   குழப்பமாய்  
பார்த்துக்   கொண்டனர்.

           “இது   என்ன   புது   பழக்கம்?” 

           “சில   பேரோட   முகத்தைப்   பாக்க   பாக்க  , எனக்கு    கோபமும்  ஆத்திரமும்  மண்டுது   ராதா.  சாப்பிடும்   போது  நிம்மதியா  சாப்பிடணும்னு   நீங்க  தான   சொல்லி   குடுத்திருக்கீங்க ? அதான்  ராதா” அவனது   முதல்   உதாசீனம்,  தேனுகாவின்  ஆழ்   மனதில்   சுருக்   என   தைத்தது.

                                              – தொடரும்   

            

               

    

    No comments yet.