கல்யாணம் முதல் காதல் வரை – 38

Shanmuha Sethuramachandran | 09 Feb 2026 | Share

                              38…..

           மாலை   மணி    ஆறு….   கூட்டமான   ஆலந்தூர்   மெட்ரோ   ஸ்டேஷன்.  சேரில்   அமர்ந்து  கொண்டு    ட்ரெயினின்  வருகைக்காக   காத்திருந்தாள்   தேனுகா… அவள்   அருகே  காலியாய்    இருந்த   நாற்காலியில்  வந்து   அமர்ந்தார்  ஒரு   பாட்டி….. மிகவும்   களைத்துப்   போன   முகம்,   சாயம்   போன   சேலை ,  கலங்கிய   கண்கள் .” ஏன்மா,   தண்ணி  இருக்கா?”  

           “இருக்கு   பாட்டி . ஆனா  கொஞ்சம்  தான்    இருக்கு,   பரவாயில்லயா?”

          “பரவாயில்லமா,  இருக்குறதை  குடு  ரொம்ப   தாகமா   இருக்கு”    

           “இந்தாங்க”  

         ” ரொம்ப   நன்றிம்மா”   சிந்தி   சிந்தி  அவர்   தண்ணீர்   குடிக்க,   ஏனோ  அவரது   நிலை   தேனுகாவிற்கு   மிகுந்த    பரிதாபத்தை  ஏற்படுத்தியது  . யாரிடமும்  தானாக   பேச்சு    கொடுக்காதவள்  அந்த   பாட்டியிடம்   பேச   ஆரம்பித்தாள். 

          “டிக்கெட்   எடுத்துட்டீங்களா,   இல்ல  இனி    தான்   எடுக்கணுமா  பாட்டி?  நான்   வேணும்னா   எடுத்து   தரவா?”….

          “இல்ல….இல்லமா.   நான்   இப்ப  போய்ருவேன்”

           ” எங்க?”

           “வீட்டுக்கு    தான்”

           “பாட்டி ,  எனக்கு   புரியல.   எங்கயோ  போகணும்னு   புறப்பட்டு   வந்துட்டு,  அப்புறம்   ஏன்   வீட்டுக்கு   போகணும்?”  அவள்    கேட்டது    தான்   தாமதம் ,  அந்த  பாட்டி    புடவையை   வாயில்   வைத்துப்   பொத்திக்   கொண்டு  அழ   ஆரம்பித்தார்.  பதறிப்போனாள்   தேனுகா.  

           “என்னாச்சு   பாட்டி?  எதுக்கு  இப்படி  அழறீங்க ? என்ன   ப்ராப்ளம்  உங்களுக்கு?”

            “அம்மா,   பாப்பா  , என்னால  தாங்க  முடியலம்மா.   என்   மருமக   என்னைய   ரொம்ப    சித்ரவதை   பண்றா.  அவங்க  அம்மா   இப்ப   வீட்டுக்கு   வர்றான்னு  என்னை   வெளிய   அனுப்பிட்டாமா”…..

            “பாட்டி   மன்னிக்கணும்,   நீங்க   கொஞ்சம்   தெளிவா   சொல்றீங்களா?”

          ” என்  வீட்டுக்காரர்   இறந்து  போய்   நாலு    வருஷம்   ஆகுது .  சொந்த   ஊர்ல  தனியா    இருக்க   வேணாம்னு    என்   மகன்    என்னை   இங்க   கூட்டிட்டு   வந்துட்டான்.   என்னோட   மருமக   ரொம்ப  மோசம்.  வீட்ல   எல்லா   வேலையையும்  என்னை   தான்   செய்ய   சொல்லுவா,   ஆனா  ஒரு  வாய்   சோறு   கூட   மனசு   வந்து  போட  மாட்டா .  மூணு   வேளையுமே   சாப்பாடு  சாப்பிட்டு   பல   நாள்   ஆகுது, பெரும்பாலும்   இரண்டு   வேளை    சாப்பாடு   தான்.   அதுவும்   ராத்திரி  நேரத்துல   பட்டினி   போட்டுருவா!  போக  வழியில்லாம   அங்கனயே   கிடந்து, நானும்   ஒவ்வொரு   நாளையும்   தள்ளிக்கிட்டு   இருக்கேன்.   இன்னிக்கு  அவ  அம்மா, அப்பா,  தம்பி,   தம்பி   பொண்டாட்டி,  எல்லாரும்   வர்றாங்க.   நான்   என்   மகன்  வீட்ல   தான்   இருக்கேன்னு   அவங்க  வீட்டுல   யாருக்கும்   தெரியாதாம்.  அதனால  அவங்க  வந்து   சாப்பிட்டு   போறவரைக்கும்,   நீ    இங்க   வரக்   கூடாதுன்னு   சொல்லி  என்னை   வெளிய   தொரத்தி  விட்டுட்டா”…

            “கடவுளே!!!  ஏன்   பாட்டி   உங்க  மகனுக்கு   இதைப்   பத்தி   எதுவுமே  தெரியாதா?   இல்ல   தெரிஞ்சும்  அவங்களை  கண்டிக்காம   இருக்காங்களா??

           “அவன்   பாவம்மா   வாய்   செத்த   பய,   ஆரம்பத்தில   ஏசுனான்,   அப்புறம்   கெஞ்சுனான்,   ஆனா   இப்ப   கண்டும்  காணாம    போயிருறான்.   அவனும்  பாவம்   என்ன   தான்   செய்வான் ?!

          “இல்ல    இல்ல,   இது   சரி   வராது , வாங்க   கிளம்புவோம் .  உங்க  வீட்டுக்கு  போய்    உங்க   மருமகளை   ஒரு   வழி   பண்ணலாம்   வாங்க   பாட்டி,”   தான்  சொல்ல   நினைத்ததை   வேறு   யாரோ  சொல்ல   வேகமாக   திரும்பினாள்  தேனுகா.    முதுகுப்புறத்தில்   அவன்   நின்றிருந்தான்  நல்ல   உயரம்    

ஸ்நேகமான   முகம்.

          “ஹலோ…..யார்   சார்   நீங்க ?  இவ்ளோ  நேரம்    நாங்க    பேசுறதை   ஒட்டு  கேட்டுட்டு  இருந்தீங்களா? படிச்சவர்   தான?”

          “ஆமா  மேம்,   படிச்சவன்  தான் , லா  படிச்சவன்!   அதான்   அந்த   பாட்டி   ஃபீல்  பண்ணி  பேசினதை  கேக்க ஆரம்பிச்சதும், என்னை   மீறி   ரியாக்ட்  பண்ணிட்டேன் .”

         ” ஓ…..ஐ  அம்   சாரி.   சரி    அப்போ   நீங்களே   பாட்டியை   கூட்டிட்டு   அவங்க   வீட்டுக்குப்   போயிட்டு   வாங்க.   பாட்டி   சார்  வக்கீல்.   ஒரு   மருமகளா   வயசான  காலத்துல   உங்களை  பாத்துக்க  வேண்டிய   பொறுப்பு   அவங்களுக்கு   இருக்கு , அதை  அவங்க   மீறினா   அவங்க   மேல  சட்டப்படி   என்ன   நடவடிக்கை   வேணாலும்  எடுக்கலாம்.    நீங்க   உங்க  வீட்டுக்கு   இவரை   கூட்டிட்டுப்   போங்க.” 

          “எங்க   வீட்டுக்கா   எதுக்கு   எப்பா   சாமீஈஈஈஈஈ ,   இந்த   ஆட்டத்துக்குலாம்  நான்   வரலை ,   ஏதோ   நீ   கேட்ட   நான்   என்   கதையை   சொல்லி   புலம்புனேன்.,   இப்ப    என்னடான்னா   வக்கீலை  கூட்டிட்டு   வீட்டுக்கு   போங்குற ? ஆளை  விடும்மா”  அவள்   வேகமாக   எழுந்து   நடக்க  ஆரம்பிக்க ,  தேனுகா   பதறினாள்.

           “பாட்டி    போகாதீங்க,  நில்லுங்க,  நான்   உங்க   நல்லதுக்கு   தான்   சொல்றேன்.  இங்க    பாருங்க”…   அவள்   கத்திக்கொண்டே   இருக்க   பாட்டி   திரும்பவே   இல்லை….

          ” என்ன   மேம்   போயிட்டாங்க”?

           “ஆமா   சார்,   பாவம்   நம்ம   வக்கீல்,  சட்டம் ,  அது   இதுன்னு    சொன்னதும் கொஞ்சம்   பயந்துட்டாங்க   போல”…  

           “அவங்க   அதுக்கு   பயப்படல, அவங்களே    மாட்டிக்கிட்டா   என்ன   செய்யுறது ? அதுக்கு   தான்  பயந்துபோய்,   நீங்க   எவ்ளோ   கூப்பிட்டும்   திரும்பி  பாக்காம   போயிட்டாங்க.   என்ன  மேம்  புரியலயா?   அந்த   லேடி   பக்கா  ஃப்ராடு,  தினம்   இந்த   மாதிரி   கூட்டமா   இருக்குற   ஸ்டேஷன்ல   யார்   கிட்டயாவது   போய்   உக்காந்து   ஒரு   சோகக்   கதையை  அவிழ்த்து   விட்டு   அழ  வேண்டியது,  உடனே   அவங்க   அய்யோ   பாவமேனு   நினைச்சு   பாத்திட்டு   இருக்கும்  போதே,   ரொம்ப   பசிக்குது    சாப்பாடு   வாங்கி   தர்றீங்களான்னு   கேட்டு ,  பர்சை  கையில  எடுக்கும்   போது   பிடுங்கிகிட்டு  ஓடுறது.   இதான்   வேலை,   இது   ஒரு   க்ரூப்  ஆக்ட்டிவிட்டினு   கூட   சொல்லலாம்.    இன்னிக்கு   நீங்க  மாட்டிக்க    இருந்தீங்க”    அவன்  சொல்ல  சொல்ல , தேனுகாவின்   முகம்  வாடிப்போய்   விட்டது .  எதையோ  தீவிரமாக  சிந்திக்க  ஆரம்பித்தாள்.   அதை   உணர்ந்து  கொண்டவன்   போல், 

           “என்ன  மேம்   சட்டுனு   சைலண்ட்  ஆகிட்டீங்க,  என்ன   யோசனை?  ஏன்  இந்த  மாதிரி    ஒருத்தரோட   இரக்க  குணத்தை  தப்பா   பயன்படுத்துறாங்கன்னு  யோசிச்சு  ஃபீல்   பண்றீங்களா?   இல்ல,  அப்டி  யோசிக்காதீங்க.   இரக்க   குணம்  கடவுள்  மாதிரி,   அதைத்   தப்பா  பயன்படுத்திக்க   நினைக்கிறவங்களை   கர்மா  பாத்துக்கும்.  யூ   டோண்ட்   வொர்ரி.   இனிமே  கொஞ்சம்  ஜாக்கிரதையா    இருங்க”  நான்  இதைத்  தான்   யோசிக்கிறேன்  என  புரிந்து  அதற்கு   சமாதானமும்   சொல்பவனைக்  கண்டு,   அவளால்   ஆச்சரியப்படாமல்   இருக்க  முடியவில்லை…புன்னகைத்தாள்.

            “ரொம்ப    தாங்க்ஸ்   சார்,  இனிமே  ஜாக்கிரதையா    இருப்பேன்”   

           “ஓகே,   ஐ  அம்   ப்ரித்வி”   தன்  வலது  கையை    நீட்டினான்.   

           “ஐ  அம்  தேனுகா,  தேனுகா   விஸ்வநாதன்” 

           “சென்னையா   நீங்க?”

           “படிச்சது   சென்னைல,   ஆனா   நேட்டிவ்    கோயம்புத்தூர்”   அவன்  மீண்டும்  ஏதோ   கேட்க   முயல,   அதற்குள்  ட்ரெய்ன்  வரும்   சத்தம்   கேட்க,

           “ஓகேங்க   பாய்…..உங்க   உதவிக்கு   ரொம்ப   நன்றி ,  வர்றேன்”

           ” பாய்ய்ய்”……..

          அதான்   எங்க   முதல்  சந்திப்பு.  யார்   கிட்டயும்    விசாரிக்காம   நெருங்க  நினைக்கக்   கூடாது ,  ஏமாந்து   போகக்  கூடாதுன்னு    எனக்கு   பாடம்   எடுத்த   அந்த    ராஸ்கலே,   என்னை   ஏமாத்தத்  தான்    நினைச்சிருக்கான்.   சே….எல்லாம்   என்    விதி .  அதுக்கு   அப்புறம்   அவனை   நான்   சுத்தமா   மறந்தே   போயிட்டேன்.   ஒருநாள்  ஏதோ  ஒரு   கேஸ்ல, போலீஸ்கும்   அட்வகேட்டுக்கும்   வாய்த்தகராறு   நடந்து, அந்த    இன்ஸ்பெக்டர்    அட்வகேட்டை   பிடிச்சு    கீழ   தள்ளி   விட்டுட்டாரு.   உடனே லாயர்   அசோஷியேஷன்ல   ஸ்ட்ரைக்  அனௌன்ஸ்   பண்ணி ,கோர்ட்  முன்னால    உக்கார  சொல்லிட்டாங்க. எங்க   பாத்தாலும்   பயங்கர   கூட்டம் .  அதுல     ரிப்போர்ட்டர்ஸ்,   வீடியோ   கவரேஜ்னு,   நிக்க   இடமில்லாம   அவ்ளோ   நெரிசல். நான்   அன்னிக்கு   காலையில  இருந்து  எதுவுமே   சாப்பிடாததால   மயங்கிட்டேன்.  அப்போ   அவன்   தான் ,  என்னை   அவ்ளோ   இடர்ப்பாடுகளையும் தாண்டி      ஹாஸ்பிட்டலுக்கு   கூட்டிட்டு   போனான். அப்போ   நான்   ஸ்டே   பண்ணியிருந்த   ஹாஸ்டல்ல   சாப்பாடு    ரொம்ப  ரொம்ப  கேவலமா  இருக்கும் .  அதனால   மேக்ஸிமம்  நான்  காலைல   சாப்பிடவே   மாட்டேன் . அதனால  எனக்கு   அல்சர்  அதிகமாகிருச்சுனு  சொல்லி,   பெட்ல   அட்மிட்   பண்ண  சொல்லிட்டாங்க . உங்க   வீட்டுக்கு   தகவல்  சொல்லுங்கனு    சொன்னான்.  நான்  மூர்த்தி   அண்ணன்னு   என்னோட   வெல்  விஷர்    ஒருத்தர்க்கு   பேசணும்னு   சொன்னேன் .  ஏன்  அம்மா   அப்பா  சென்னைல   இல்லயான்னு  கேட்டான்.   என்   நிலைமையை   சொன்னேன். சரி   நோ   வொரீஸ் ,  உங்க   கூட   ஹாஸ்பிட்டல்ல  இருக்கிறதுல   எனக்கு   ஒண்ணும்  ப்ராப்ளம்    இல்ல    நான்  உங்களை பாத்துக்குறேன்னு   சொன்னான் . எனக்கு   என்ன   சொல்லனு   தெரியல.   கொஞ்சம்  யோசிச்சுட்டு,   வேணாம்னு   சொல்லிட்டு  மூர்த்தி   அண்ணாவுக்கு   கால்   பண்ணேன்.  ஆனா   என்னோட   பேட்   டைம் ,  அன்னிக்கு  அந்த   அண்ணாவோட   மாமியார்   இறந்து   போனதால   ஃபேமிலியோட   அங்க  போயிட்டு    இருக்குறதா   சொன்னார். வேற   வழியே    இல்ல ,  அவன்   தான்  என்   கூட   ஹாஸ்பிட்டல்ல   இருக்க   வேண்டிய   கட்டாயம் .   கூட   இருந்தான்,   ரொம்ப  நல்லா   கவனிச்சுக்கிட்டான்.   அப்போ  தான்   என்னை   ரொம்ப   நாளா  பாத்துட்டு    இருக்கேன் ,  எனக்கு   உங்களை   ரொம்ப   பிடிக்கும்னு    சொன்னான்.   என்னை   எப்டி   அவனுக்கு   தெரிஞ்சதுனு  எனக்கு   ஒரே   ஷாக்!!!!!!   

                                                  –  தொடரும்….           

        

                       

           

            

         

    No comments yet.