37.
மறுநாள் காலை . விடியல் என்னமோ அழகாகத் தான் இருந்தது, ஆனால் மாஷா அல்லாஹ் என பெயரிடப்பட்டிருந்த வீட்டில் உள்ளவர்களுக்கு தான் அது மோசமான நாள். ஹாலில் நான்கு சூட்கேஸ்கள்? தட்டுமுட்டு சாமான்கள் அடங்கிய மூன்று கோணிப்பைகள் , என வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்க , வாக்கிங் முடித்துவிட்டு உள்ளே நுழைந்த இப்ராஹிம் தாத்தா ,அவற்றையெல்லாம் கண்டும் காணாதது போல் நேராக தன் அறைக்குள் செல்ல முயல,
“அத்தா” என அவரை நிறுத்தினார் சுல்தானா பாட்டி.
“என்ன?”
“இந்த வீட்டில இருந்து சமைக்கிறதுக்காக சில தட்டு முட்டு சாமான்களை ஜமால் எடுத்துட்டுப் போறான் , போலாமில்ல?”
“இது என்ன கேள்வி? தாராளமா எடுத்திட்டு போகட்டும். இந்த வீடு எல்லாருக்கும் பொதுவான ஒண்ணு. அவன் நம்ம கம்பெனியில நிறைய உழைச்சு கோடிக்கணக்கான லாபத்துக்கு உறுதுணையா இருக்கிறவன் ,அவனுக்கு இல்லாத உரிமையா ? ஜமாலை இங்க இருந்து துரத்துறேன்னு உங்க எல்லாருக்கும் என் மேல கோபம் இருக்கும், அது எனக்கு நல்லா தெரியும். பரவாயில்ல , அதைப் பத்தி எனக்கு கவலையுமில்ல. எனக்கு வேண்டியது ஒண்ணே ஒண்ணு தான் .அவன் செஞ்ச கேவலமான தப்புக்கு, தண்டனையை அவன் அனுபவிச்சே ஆகணும்”
“அத்தா, கை பிள்ளையை வச்சுக்கிட்டு இவன் எங்க போவான்? எனக்காக அவனை மன்னிச்சு விட்ருங்க. நான் அவனுக்கு புத்தி சொல்லி திருத்துறேன் . இனி அவன் எந்த தப்பு காரியமும் செய்ய மாட்டான்”…..நிஷா அழுகைக்குரலில் மன்றாட,
“நிஷா, மூடு வாயை. அவனுக்கு எதுக்கு நீ வக்காலத்து வாங்குற? எங்க வேணாலும் போகட்டும் , அதைப் பத்தி நீ பேசக் கூடாது . நமக்கு இனி ரெண்டே பிள்ளைங்க தான் ,ஷாரிக், ரஷிதா பேகம். அதை நீ நல்லா மனசில பதிச்சுக்க” முஸ்தஃபா கோபத்தில் துள்ளினார்.
“நிஷா, அவனை நான் அப்டிலாம் விட்டுட மாட்டேன் . நம்ம கம்பெனிக்கு சொந்தமான தனி வீடு ஒண்ணு ஆவடில இருக்குல்ல? அந்த வீடை மேனேஜர் கிட்ட ரெடி பண்ணி வைக்க சொல்லிட்டேன். ஜமால் இனி அங்க தான் தங்கப் போறான் . ஜமால் , நீ நேரா அங்க போ . வீட்டுக்கும் உனக்கும் தான் இனி சம்பந்தம் இல்லயே தவிர, ஃபேக்டரிக்கு நீ வர்றதுல எனக்கு ஆட்சேபணை கிடையாது, தாராளமா வரலாம்”
“இல்ல, இனிமேல் அவர் உங்க ஃபேக்ட்ரிக்கு வர மாட்டாரு”……காலை நேர அமைதியை தன் வீறிட்ட குரலால் இம்சித்தாள் நசீமா. அவ்வளவு நேரம் அறைக்குள் முடங்கியிருந்தவர்களும், அவள் அலறலில் பயந்து வேகமாக ஹாலுக்கு ஓடி வந்தனர். அதில் தேனுகாவும், ரஷிதாவும் கூட அடக்கம்.
“ஏய்ய் நசீமா…..என்ன பேசுற?”
“அம்மா, நீ சும்மா இரு. என் வீட்டுக்காரரை வேணாம்னு வீட்டை விட்டு துரத்துவாராம், ஆனா ஃபேக்ட்ரிக்கு மட்டும் இவர் வேணுமாம். என்ன லாஜிக் இது? உழைப்புக்கு மட்டும் இவர் வேணும், ஆனா கொஞ்சி குலாவுறது மகன் வயித்து பேரனை”
“அதிகமா பேசாத , ஜூனைத்தை இப்ப எதுக்கு தேவையில்லாம இழுக்குற?’
“ஆமா , அப்படித் தான் இழுப்பேன். என் வீட்டுக்காரர் உங்க மகளோட பையன். ஆனா ஜூனைத் உங்க மகனோட பையன், இந்த வீட்டு வாரிசு அவன் தானே ? அதனால அவன் தப்பே செஞ்சாலும் நீங்க கண்டுக்க மாட்டீங்க ”
“அடியே, அவன் உன் கூடப் பிறந்த தம்பி . எப்ப பாத்தாலும் ஏன் அவனை ஒரு விரோதியாவே பாக்குற? அது மட்டும் இல்லாம ,வீட்டை விட்டு துரத்துற அளவு அவன் என்ன செஞ்சிட்டான்?”
“ஆஹாஆஆஆ!! நஸ்ரினு , இங்க பாரு , ராதி என்ன கேக்குதுன்னு பாரு. நம்ம தம்பி தப்பே பண்ணலயாம்”அவள் குரலில் இருந்த கேலியை பொறுத்துக் கொள்ள முடியாமல் , அதுவரை அமைதியாய் இருந்த இப்ராஹிம் தாத்தா வெகுண்டார்.
“ஏய்ய்ய்ய்! உனக்குலாம் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்ல . நேரமாச்சு. இனிமே இங்க உனக்கு என்ன வேலை? கிளம்பு”……
“அத்தா எனக்காக…….அவன் பாவம், இனிமேல் அவன் எந்த தப்பும் செய்ய மாட்டான் , கொஞ்சம் கருணை காட்டுங்க”
“மாமி நிறுத்து , அவர் கிட்ட ஏன் கெஞ்சுற? வேற மதத்துப் பொண்ண கூட்டிட்டு வந்தது அவருக்கு தப்பா தெரியல, ஆனா ஜமால் செஞ்ச சின்ன தப்பு அவருக்கு பெரிசா தெரியுதுன்னா, அவர் கிட்ட நம்ம நியாயத்தை எதிர் பாக்க முடியாது. ஏய்ய்ய் தேனுகா! எங்களை வீட்டை விட்டு அனுப்பிட்டோம்னு ரொம்ப சந்தோஷமா இருக்கியா? உன் சந்தோஷம் ரொம்ப நாளைக்கு நிலைக்காதுடி…. நான் எப்டி கண்ணீரோட இந்த வீட்டை விட்டு போறேனோ, அதே மாதிரி நீயும் போவ.. அது நடக்குதா இல்லயானு பாரு… ஏங்க , வாங்க போலாம் ” ஆளுக்கொரு பிள்ளையை அவர்கள் இருவரும் தூக்கிக் கொண்டனர் . ஷாரிக்கும், நஸ்ரினும் பெட்டிகளை தூக்கிக் கொள்ள, நிஷா கண்ணீரோடு பின் தொடர்ந்தார். ஒரு பத்து நிமிடம் வீடே நிசப்தத்தில் மூழ்கியது . எல்லோர் மனதிலும் ஏதேதோ சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தது.
” கதீஜா”
“மாமா”
“உன் பொண்ணை வீட்டை விட்டு அனுப்பிட்டேன்னு உனக்கு கோபமா?”
“இல்ல மாமா . தேனுகாவும் ஒரு பொண்ணு தான? ஜமால் மாப்பிள்ளை அவளுக்கு செய்ய நினைச்ச பாவத்துக்கு இது தான் மாமா சரியான தண்டனை. எனக்கு எந்த வருத்தமும் இல்ல”…..
“அம்மா, நீ தான் உண்மையிலயே அக்காவை பெத்தியா ? இல்ல எங்க இருந்தாவது வாடகைக்கு வாங்கிட்டு வந்தியா? உனக்கும் உன் மகன் தானே பெரிசா போயிட்டான்? நல்லது, இப்ப காத்து அவன் பக்கம் வீசுதுல்ல?”
” தேவையில்லாம பேசாத நசீமா, போ உள்ள. ஷாரிக் , அவளை உள்ள கூட்டிட்டு போ. மாமா, நான் ஃபேக்டரி கிளம்புறேன். நிஷா, காலை சாப்பாடு ஷாரிக் வரும் போது அவன் கிட்ட குடுத்தனுப்பு” முஸ்தஃபா சொல்லிவிட்டு கிளம்பினார் .
“ம்ம்ம்ம்…..சரித்தா”…..அவர் சென்று விட , எல்லோரும் அவரவர் வேலையைப் பார்க்க கிளம்பினர்.
ரஷிதாவின் அறை,
“அக்கா, நாளைக்கு தான் காலேஜ்ல என்னோட ஃபர்ஸ்ட் நாள் . இந்த டாப் தான் போடப் போறேன், நல்லா இருக்கா?”
” சூப்பரா இருக்கு ரஷி, அப்புறம் நான் உன் கிட்ட ஒண்ணு கேப்பேன். நீ கோவிக்காம பதில் சொல்லணும் சரியா?’
“சரி கேளுங்க”
“தாத்தா உங்க அண்ணனை வீட்ட விட்டு போக சொன்னது உனக்கு கஷ்டமா இல்லயா?”
” இல்லக்கா”
“என்னடி இவ்ளோ அசால்ட்டா சொல்ற ? எங்கிருந்தோ வந்தவ நான், அக்கா அக்கானு என் மேலயே இவ்ளோ பாசமா இருக்க? ஆனா கூட பிறந்த அண்ணன் மேலயும் , சின்ன வயசுல இருந்து ஒண்ணு மண்ணா திரிஞ்சுட்டு இருந்த அண்ணிகள் மேலயும் எப்டி உன்னால ஒட்டுதல் இல்லாம இருக்க முடியுது ரஷி?”
“அக்கா, ஒண்ணு சொல்லவா? அவங்க யாருக்குமே என் மேல உண்மையான பாசம்லாம் கிடையாது. அது நிறைய தடவை எனக்கே எவிடென்ட்டா ப்ரூவ் ஆகிருக்கு. இப்ப உங்களை திட்டுறதுக்கும்,எதிர்க்குறதுக்கும் தான் என்னை யூஸ் பண்றாங்க”
“சே……உன் அண்ணிகளை விடு, உங்க அண்ணன்களால கூட பிறந்த ஒருத்தியை எப்டி கண்டுக்காம இருக்க முடியுது ? ஆனா, தாத்தா , பாட்டி கதீஜாம்மா, ஆயிஷாமானு எல்லாருக்கும் உன் மேல ரொம்ப பாசம். அதுமட்டுமில்லாம, ஜூனைத்கு உன் மேல எப்பவும் அக்கறை அதிகம்.” அவள் அலாதியான உணர்வுடன் சொல்ல, நிமிர்ந்து பார்த்தாள் ரஷிதா.
“என்னக்கா , எங்க மாமுவைப் பத்தி ரொம்ப தெரிஞ்ச மாதிரி சொல்றீங்க?” கேலியாய் கேட்டாள்.
“அது…..அப்டியெல்லாம் ஒண்ணும் இல்ல , தோணுச்சு சொன்னேன். சரி காலேஜ் பேக்லாம் வச்சிருக்கியா?”
“அப்டியே பேச்சை மாத்தாதீங்ககா. எங்க மாமா ரொம்ப தங்கமானவரு, அவரை நீங்க லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணிட்டீங்கன்னு வைங்களேன் , நீங்க ரொம்ப ரொம்ப ப்ளெஸ்ட்” அவள் சொல்லி முடிக்க, லேசாய் சிரித்துக் கொண்டாள் தேனுகா.
“இப்டி சிரிச்சா என்ன அர்த்தம்? என்னால புரிஞ்சுக்க முடியலக்கா. நான் இதைப் பத்திலாம் உங்க கிட்ட பேச முடியாது தான். ஆனா எனக்கு வேற வழி தெரியல . என்னால கேக்காம இருக்கவும் முடியல . மாமு நேத்து தோட்டத்துல வச்சு , என் கிட்ட அந்த ப்ரித்வி பத்தி எல்லாமே சொன்னார். உங்க சாய்ஸ் தப்பா இருந்துருக்கு, அதனால தான் எங்க மாமுவை அல்லாஹ்வோ, இல்ல நீங்க கும்பிடுற சாமியோ அனுப்பி வச்சதா நினைச்சு புதுசா ஒரு வாழ்க்கையை ஆரம்பிச்சா உங்களுக்கு என்னதான்கா பிரச்சனை? நேத்து கூட நீங்க ப்ரக்னன்ட்னு மாலா டாக்டர் சொன்னப்ப , மாமு அவங்களை நம்பலைய? உங்க பக்கம் தான நின்னாரு ? இதை விட அவரை நல்ல பையன்னு புரிஞ்சுக்க வேற என்ன சந்தர்ப்பத்தைத் தான் நீங்க எதிர்பார்க்குறீங்க? அவர் பாவம்கா, ஒரு அளவு தாண்டி ரொம்ப சோதிக்காதீங்க”
“இதை விட நல்லவனா என் கிட்ட நடந்துகிட்ட ஒருத்தன் தான் ப்ரித்வி. என்னால அவன் என்னை அவ்ளோ லவ் பண்ணினது , என்னை மகாராணி மாதிரி பாத்துக்கிட்டதுன்னு எதையுமே என்னால மறக்க முடியல. எல்லாமே பொய் தான். ஆனா என்னால மறக்க முடியலயே , என்ன செய்யுறது? அவன் செஞ்சதெல்லாம் யார் கிட்டயாவது சொல்லி சொல்லி கதறி அழணும் போல இருக்கு. ஈசியா வெளிய இருந்து என்ன வேணாலும் பேசலாம், என் வேதனை எனக்கு தான் தெரியும்” தேனுகா அழ ஆரம்பிக்க , ஆறுதலாய் அவள் தோளில் கை வைத்தாள் ரஷிதா.
“என் கிட்ட சொல்லுங்கக்கா. நான் இருக்கேன் , நீங்க என்ன சொல்ல நினைச்சாலும் சொல்லுங்க”
– தொடரும்…
No comments yet.