36.
வாசல் பக்கமாய் போன சுல்தானா , டாக்டர் மாலாவை அழைத்துக் கொண்டு வந்தார்.
“தாத்தா வணக்கம், நல்லா இருக்கீங்களா ? மாத்திரைலாம் கரக்டா எடுத்துக்கிறீங்களா தாத்தா?”
” வணக்கம்மா…..நல்லா இருக்கேன். நீ எப்டி இருக்க ? உக்காருமா. ஏம்மா, பாப்பாவை எங்க?”
“நல்லா இருக்கேன் தாத்தா, அவளுக்கு கொஞ்சம் ஜூரம். அந்த பாவிப்பய கடத்திட்டு போனதால ரொம்ப பயந்துட்டா போல. அதான் தாத்தா டானிக் குடுத்து தூங்க வச்சிட்டு வந்துட்டேன், மன்னிச்சுக்கங்க தாத்தா”….
“அட பரவாயில்லமா, குழந்தையை நல்லபடியா பாத்துக்க. அதான் இப்ப ரொம்ப முக்கியம் .உன் வீட்டுக்காரர் கிட்ட போலீஸ் கம்ப்ளையண்ட் குடுக்குறது சம்மந்தமா கேக்க சொன்னேனே? பேசினியா ? என்னமா சொன்னார்?”
“அவர் நமக்கு எதுக்கு வம்பு அதான் குழந்தைக்கு எதுவும் ஆகலைல? நீயும் அவங்க வீட்ல உண்மையை சொல்லிட்டல? அப்புறம் என்ன, வேண்டாம்னு சொல்றார் தாத்தா. எனக்கும் அதான் சரியா படுது . அதனால நீங்க வேற ஏதாவது ஒரு வழில புகார் குடுங்க தாத்தா”
………………. தாத்தா மௌனம் காக்க, பாட்டி மோர் கொண்டு வந்து மாலாவிடம் கொடுத்தார். தேனுகாவிடம் திரும்பிய மாலா , சிறிது தயங்கிவிட்டு,
“மிஸஸ் ஜூனைத், என்னை நீங்க மன்னிக்கணும் ப்ளீஸ். ஒரு கட்டாயத்தின் பேர்ல தான் உங்க கிட்ட நான் அப்படி ஒரு பொய்யை சொல்ல வேண்டியதா போச்சு . என்னை தப்பா நினைக்காதீங்க. உங்க உடம்புல ஐயர்ன் சத்து ரொம்ப கம்மியா இருக்கு, ஹீமோக்ளோபினும் சராசரியா பொண்ணுங்களுக்கு இருக்க வேண்டிய அளவில இருந்து ரொம்ப கம்மியா தான் இருக்கு . அதனால டேட்ஸ், அத்திப்பழம் இந்த இரண்டையும் கட்டாயமா டெய்லி சாப்பிடுங்க. டூ மன்த்ஸ்கு அப்புறம் ஹாஸ்பிடலுக்கு வந்து என்னைப் பாருங்க”
“நோ நோ டாக்டர்ர்ர்ர்….. உங்க இடத்துல யார் இருந்தாலும் இதைத் தான் பண்ணிருப்பாங்க. அதனால ஒண்ணும் இல்ல விடுங்க, தாங்க் யூ டாக்டர் , நீங்க சொன்ன விஷயங்களை நான் கண்டிப்பா ஃபாலோ பண்றேன். நோ ஹார்ட் ஃபீலிங்ஸ் .மோர் குடிங்க”
“மாலா”
“சொல்லுங்க தாத்தா”
“உனக்கு பெர்ஸ்னலா நன்றி சொல்லி அனுப்பலாம்னு தான்மா உன்னை வர சொன்னேன், ரொம்ப ரொம்ப நன்றிமா”
“ஐயோ தாத்தா!…….என்ன இது ? உங்க குடும்பத்து மனுஷங்க மேல என்னால பொய்யா எப்டி ஒரு அவதூறு சொல்ல முடியும்? அதான் என் பொண்ணு வீட்டுக்கு வந்த உடனே மனசு கேக்காம எல்லா உண்மைகளையும் உங்க கிட்ட சொல்லிட்டேன். யார் இந்த வேலையை பண்ணினதுன்னு கூடிய சீக்கிரம் கண்டுபிடிங்க தாத்தா”
“கண்டிப்பா கண்ணு , நீ செஞ்சது மிகப் பெரிய விஷயம்… நன்றி” ……
“பாட்டி , சும்மா இருக்க மாட்டீங்களா?”
“இல்ல மாலா , தேனுகா எங்க” …..
“சுல்தானா , அமைதியா இரு . சரி மாலா, நீ கிளம்புமா . பாப்பாவை பத்திரமா பாத்துக்க , ஏதாவது உதவி வேணும்னா தயங்காம கேளு. பாப்பாவுக்கு ப்ரொக்டஷனுக்கு யாராவது வேணும்னா கூட சொல்லுமா நான் ஏற்பாடு பண்ணிடுறேன்”
” ஓகே தாத்தா…போயிட்டு வர்றேன். பாட்டி , போயிட்டு வர்றேன் . எல்லாருக்கும் போயிட்டு வர்றேங்க ” மாலா விடைபெற்று சென்றவுடன் , அதற்காகவே காத்துக் கொண்டிருந்தவன் போல , பொத் என அவர் கால்களில் விழுந்தான் ஜமால்.
“நன்னா , என்னை மன்னிச்சிருங்க. எல்லா தப்பும் என் மேல தான். டாக்டர் மாலாவோட குழந்தையை ஆள் வச்சு கடத்துனது நான் தான். அவங்களுக்கு கால் பண்ணி, இந்த பொண்ணு கர்ப்பம்னு பொய் சொல்ல சொன்னதும் நான் தான் மன்னிச்சிருங்க நன்னா” இப்ராஹிம் தாத்தாவை தவிர, அங்கு இருந்த அனைவரும் அதிர்ந்து போய் அசையாமல் நின்றனர். கொஞ்சம் முன்னால் வந்த முஸ்தஃபா, அவனை அப்படியே மேலே தூக்கி பளார் என ஒரு அறை கொடுத்தார்.
“ஏன்டா , இவ்ளோ கேவலமான வேலையை செய்ய உனக்கு வெக்கமா இல்ல ? உன்னை நான் என்ன இப்படியா வளர்த்தேன்? சே…..என்னோட பிள்ளையா நீ ? உன்னை பாக்க பாக்க எனக்கு ஆத்திரம் கொள்ளையா வருது” என மீண்டும் ஒரு அறை அறைந்தார்.
“மச்சான் , இருங்க இருங்க, அவன் ஏன் இந்த மாதிரி செஞ்சான்னு முதல்ல கேப்போம் . ஜமால், சொல்லு, இந்த அப்பாவி பொண்ணு மேல் ஏன் இப்படி ஒரு பழியை சுமத்த நினைச்ச?” கேள்வி கேட்ட ஜூனைத்தின் தந்தை ரஃபீக்கை, குற்ற உணர்வோடு நிமிர்ந்து பார்த்த ஜமால், மீண்டும் தலை குனிந்தான்.
” சொல்லு ஜமால் , அப்படி என்ன உனக்கு அந்த பொண்ணு மேல வஞ்சம்?”
“டேய்ய்ய்…..எங்க அண்ணன் தான் கேக்குறார்ல? சொல்லித் தொலை” நிஷா அழுதுகொண்டே தன் மகனை இரண்டு மொத்து மொத்த,
“மாமா…..எனக்கு அந்த பொண்ணு ஜூனைத்தை நிக்காஹ் பண்ணிக்கிட்டு, ரஷியோட இடத்துக்கு மாற்றா நம்ம வீட்டுக்கு வந்தது பிடிக்கல . அவளுக்கும் இங்க வாழ இஷ்டம் இல்ல, ஆனா ஜூனைத் அவளை போக விடாம அடம் பிடிச்சுட்டு இருந்தான். அதுக்கு நன்னா நன்னி வேற சப்போர்ட் . அதான் ஏதாவது செஞ்சு தேனுகா மேல நம்ம வீட்ல உள்ள எல்லாரும் கோபம் கொள்ள வைச்சு, அவளை துரத்தணும்னு ப்ளான் போட்டேன் . என்ன செய்யலாம்னு யோசிச்சுட்டே இருந்தப்ப தான், இன்னிக்கு காலையில இந்த பொண்ணு நன்னா ரூம்ல மயங்கி விழுந்தது தெரிய வந்தது. அதனால இந்த வாய்ப்பை நம்ம விடக் கூடாதுன்னு டக்குனு இந்த ப்ளான் போட்டேன்” தயங்கி தயங்கி அனைத்தையும் சொல்லி முடித்தான் ஜமால் . சுற்றி நின்று கொண்டிருந்த அனைவரும் அவனை முறைத்துக் கொண்டிருந்தனர். நிஷா ஓ என அழ ஆரம்பித்தார்
” அண்ணா , என்னைப் பத்தி நீ என்ன நினைக்கிற ? நீ இந்த மாதிரி கேடுகெட்டதனமா ப்ளான் போட்டு தேனுகா அக்காவை வீட்லருந்து துரத்தி விட்டுட்டா, நான் மாமுவை ஹஸ்பண்டா ஏத்துக்கிருவேனா? ஏற்கனவே கல்யாணம் ஆன பையனை என்னால எப்டி நிக்காஹ் பண்ண முடியும் ? சே”…….
“ரஷி , நீ சும்மா இரு, நன்னா எல்லாத்தையும் பேசிக்கிருவாரு” சுல்தானா அவளை சமாதானப்படுத்தினார்.
“என்ன நசீமா, உன் கணவன் இவ்ளோ பெரிய தப்பை செஞ்சிருக்கானே அவனை என்ன பண்ணலாம் ? அவளை நம்ம வீட்ல இருந்து விரட்டணும் ராதா? அவ மோசமானவ ராதா , அது இதுன்னு துடிச்சியே? இப்ப கல்லுகுண்டு மாதிரி நின்னுட்டு இருக்க”
…………..
“ஆப்பா, ராதா கேக்குறாங்கள்ல? பதில் சொல்லு . என் மனைவி மேல பொய்யா குற்றம் சுமத்துனதுக்கு ஜமால் மாமுவுக்கு என்ன பனிஷ்மெண்ட்?”
“ஜூனைத், அவ கிட்ட என்ன பேச்சு? மாமா , இனிமே நாங்க இங்க தங்க விரும்பல. எங்கள்ல நிறைய பேருக்கு ஜூனைத் அந்த பொண்ணை கூட்டிக்கிட்டு வந்தது பிடிக்கல தான். ஆனா அதுக்காக ஒரு சின்ன குழந்தையை கடத்தி? அது மூலமா அந்த பொண்ணு மேல களங்கம் சுமத்த முயற்சி செய்ய நினைச்சிருக்கானே? இந்த விஷயம் நாளைக்கு வெளிய தெரிஞ்சா, நம்ம குடும்பத்தைப் பத்தி என்ன நினைப்பாங்க?”…….
” மாப்பிள்ளை அது”…..
“நீங்க என்னை தடுக்க வேணாம் மாமா , என்ன செய்யல நீங்க எங்களுக்கு ?எவ்ளோ வசதியா இந்த வீட்ல வாழ்ந்துட்டு இருக்கோம் ? ஆபீஸ்ல ஒரு கௌரவமான வேலைனு நிம்மதியான வாழ்க்கை . அன்பு , ஒழுக்கம், பண்பு , கலாச்சாரம்னு எல்லா உன்னதமான பழக்க வழக்கங்களையுமே மாமியும் , ஆயிஷா மச்சியும் சொல்லி குடுத்து தான் வளர்த்துருக்காங்க . ஆனா இத்தனை நாள் கழிச்சு இவன் புத்தி இப்படி போயிருச்சே? ஜமால் மாதிரி ஒரு பையனை பெத்து வளர்த்த பாவத்துக்கு, நானும் நிஷாவும், கடைசி காலத்துல கஷ்டப்பட்டு தான் ஆகணும். நாங்க போறோம்”
“மாப்பிள்ளை இருங்க , ஒரேடியா பேசிட்டே போகாதீங்க. நானும் கொஞ்சம் பேசிக்கிறேன். நீங்க நல்லவர் தான், அதனால தான் ஜமால் தப்பு பண்ணிட்டான்னு தெரிஞ்சவுடனே நானும் என் பிள்ளை குட்டிகளும் வெளிய போறோம்னு கொஞ்சம் கூட யோசிக்காம சொல்லிட்டீங்க. வெளிய போறது தான் சரியான தண்டனை. ஆனா எல்லாரும் கிடையாது. ஜமால், நசீமா, ஹாலித், ஹஸ்மத் நாலு பேர் மட்டும் போகட்டும்”
“அய்யோ அத்தா ! என்ன சொல்றீங்க ? நீங்க பேசுறது எனக்கு கொஞ்சம் கூட நியாயமா படல .அவன் செஞ்சது தப்பு தான், அதுக்காக சின்ன சின்ன குழந்தைங்களையும் சேர்த்து தண்டிக்கணுமா சொல்லுங்க?”
” நீ சும்மா இரு சுல்தானா, நான் என்ன செய்யுறேன்னு எனக்கு தெரியும். உன்னை விட நியாயம் தெரிஞ்சவன் தான் நான். என் முடிவு இது தான். நாளைக்கு காலையில பத்து மணிக்குள்ள ஜமாலும், அவன் குடும்பமும் என்னோட வீட்டை விட்டு மொத்தமா கிளம்பிருக்கணும். அப்படி அவங்க போகாத பட்சத்தில , நான் இங்க இருக்க மாட்டேன்” அனைவரின் முகமும் களையிழந்து போக, நசீமா அழ ஆரம்பித்தாள். இது எல்லாமே தன்னால் தானே என யோசித்த தேனுகா,
“தாத்தா , என்னால தானே எல்லாம்? இங்க இருந்து யாரும் கிளம்ப வேணாம் , நான் சொன்ன மாதிரி.. நான்” என ஏதோ சொல்லப் போக,
“சும்மா இருமா…. என்னோட முடிவு தான் இங்க இறுதி . அதை யாரும் மறுத்து பேசமாட்டாங்க . நீயும் மறுத்து பேசக் கூடாது . ஜமால் முதல்ல கிளம்பட்டும், ஜூனைத் விஷயத்திலயும் சீக்கிரமா நான் ஒரு நல்ல முடிவுக்கு வர்றேன் . அது வரை நீயும் கொஞ்சம் பொறுமையா இரு”
– தொடரும்
No comments yet.