35.
” அத்தா , என்ன நீங்க இங்க வந்துட்டீங்க ? உங்களுக்குத் தான் உடம்பு சரி இல்லயே . தேனுக்கு ஒண்ணும் இல்ல , இப்ப வீட்டுக்கு வந்திருவோம். நீ….நீங்க கிளம்புங்க.” சுல்தானா பாட்டி பேசிக் கொண்டிருக்கும் போதே, முன்னே வந்தாள் நசீமா.
” என்ன ராதிம்மா? ராதாக்கு தெரியாம எல்லா விஷயத்தையும் மூடி மறைச்சிரலாம்னு நினைக்கிறியா? சீசீ…இன்னும் கூட நீ அவளை காப்பாத்த தான் நினைக்கிற, அப்டி தான ராதா? இந்த வீணாப்போன தேனுகா மாசமா இருக்காளாம், எத்தனை மாசம்னு நினைக்கிறீங்க? கிட்டத்தட்ட ரெண்டு மாசம் , நினைக்க நினைக்க என்னால சகிச்சுக்கவே முடியல. அவளை வீட்டை விட்டு இன்னிக்கே துரத்துங்க ராதா.” அவள் கத்திக் கொண்டே இருக்க , இப்ராஹிம் தாத்தா நேராக தேனுகாவை பார்த்தார். அவர் என்ன நினைக்கிறார் என அந்த பார்வையில் அவளால் கண்டுகொள்ள முடியவில்லை . வறண்டு போன தொண்டையில் இருந்து காற்று போன்ற குரலில் ,
“தாத்தா , நான் எந்த தப்பும் செய்யல , என்னை நம்புங்க. இந்த ஹாஸ்பிட்டல்ல தான் ஏதோ தப்பு. எனக்கு நம்பிக்கை இருக்கு, நீங்க என்னை நம்புவீங்க அப்டி தான தாத்தா?”
“நீ பேசினதெல்லாம் போதும்மா, போதும் . கொஞ்சம் சும்மா இரு, ட்ரிப்ஸ் ஏறிட்டு இருக்கிறதை எதுக்கு எடுத்து விட்டிருக்க? ரஷி , போ போய் நர்சை கூட்டிட்டு வா . வந்து ட்ரிப்பை மறுபடி போட சொல்லு. அவ கொஞ்ச நேரம் ரெஸ்ட்ல இருக்கட்டும். வாங்க, நம்ம எல்லாரும் வெளிய போலாம்”
” ராதா…. என்ன நீங்க?”
“நசீமா , நான் தான் சொல்றேன்ல? வெளிய போய் பேசிக்கலாம் வா”
“தாத்தா…… தாத்தா……ப்ளீஸ். நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க, டாக்டரை வர சொல்லி என்னை இன்னொரு தரம் செக் பண்ண சொல்லுங்க தாத்தா” ……தேனுகா கத்திக் கொண்டே இருக்க, அதை காதில் வாங்கி கொள்ளாமல் அவர் வெளியேறினார் . அவரை எதிர்த்து பேசி அங்கு யாருக்குமே பழக்கம் இல்லை என்பதால், அனைவரும் வெளியேற, சுல்தானா மட்டும் கண்ணீரோடு இவளை திரும்பி திரும்பி பார்த்தபடியே சென்றார் . வெளியே ஆயிஷா அமைதியாக, ஆனால் எதைப்பற்றியோ தீவிரமாக சிந்தித்தபடி அறையை ஒட்டி போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தார் . அவர் உள்ளே போய் தேனுகாவை பார்க்கவுமில்லை, அவளோடு பேசவும் இல்லை.
“ஜூனைத் , நீ ஏன்டா வெளிய வந்த? உள்ள போ போய் தேனு கூட இருந்து பாத்துக்க . ட்ரிப்ஸ் முடிஞ்சதும் கூட்டிட்டு வா”
“ராதா , இன்னும் நீங்க திருந்த மாட்டீங்களா ? இப்ப எதுக்கு?”….
“வாயை மூடு , உன் தங்கச்சியை கூட்டிக்கிட்டு வீட்டுக்குப் போ”
“ராதா…….. தம்பி வாழ்க்கையே குழப்பமாகி இருக்கு, என்ன இவ்ளோ அசால்ட்டா பேசிட்டு இருக்கீங்க?”
“நஸ்ரின் , என்ன உளறுற? உன் தம்பி வாழ்க்கையில அப்டி என்ன குழப்பம் வந்துருக்கு ? அந்த பொண்ணு தான் ஏற்கனவே ஜூனைத்தைப் பிரிஞ்சு போறேன், விவாகரத்து பண்றேன்னு சொல்லிருச்சுல ? இப்ப என்ன தான் உங்க ப்ரச்சனை ? வாயை அடக்கிகிட்டு போ. சுல்தானா வா, போய் ஹாஸ்பிட்டல் பில்லை கட்டிட்டு நம்மளும் கிளம்பலாம்”
” அ….அ..அத்தா”
“என்ன?”
“அ…அது தேனு”….
“என்ன சுல்தானா , எதுக்கு திணறுற? நான் என்ன ஷைத்தானா? என்னைப் பாத்து எதுக்கு பயப்படுற? என்ன சொல்லணுமோ சொல்லு”
” அவ தனியா எப்டி இருப்பா?”
“ஜூனைத்தும், ரஷிதாவும் தான் கூட இருப்பாங்களே ? அது மட்டும் இல்லாம அவ பாசமா அம்மா அம்மானு கூப்பிடுற ஆயிஷாவும் இங்க தான இருக்கா ? அவங்க பாத்து எல்லாம் முடிஞ்சதும் வீட்டுக்கு கூட்டிட்டு வரட்டும். நீ வா, நம்ம போலாம்”
“ராதா , ஒரு நிமிஷம்”
“என்ன நசீமா? ஒரு தடவை சொன்னா புரியாதா உனக்கு? சும்மா எதையாவது சொல்லிக்கிட்டே இருக்க”
“ஹாஸ்பிட்டல் பில்லை நம்ம வீட்டு காசுல எதுக்கு கட்டணும்? அதெல்லாம் செய்யக் கூடாது. அந்த கேடுகெட்டவளை இத்தனை நாள் நம்ம வீட்ல தங்க வச்சதே தப்பு . இதுல அந்த மகாராணி எவனோடவோ பிள்ளைக்கு வைத்தியம் பாக்குறதுக்கும், நம்ம குடும்ப பணத்தை தண்டம் அழுகணுமா?”
“சுல்தானா, நீ வா” வேகமாக அவ்விடம் விட்டு சென்றார் இப்ராஹிம். நசீமா பேசிய எதையுமே அவர் காதில் வாங்கிக் கொண்டதாக தெரியவில்லை.
“சே……இந்த ராதா ஏன் இந்த மாதிரிலாம் நடந்துக்குறாரோ எனக்கு சுத்தமா தெரியல. டேய் தம்பி, அவ உனக்கு சரியானவ இல்லன்னு இப்பவாவது புரிஞ்சுக்க டா, அந்த ஷைத்தானை விட்டொழி. வீட்டுக்குப் போனதும் , முதல் காரியமா அவ பெட்டி படுக்கை எல்லாத்தையும் எடுத்து வெளிய போட்டு , தலை முழுகிரு . ஆறு மாசம் போகட்டும். லட்டு மாதிரி நம்ம ரஷி இருக்கா, அவளை கட்டிக்க”
“அல்லாஹ்ஹ் உன்னைலாம் ஊமையா படைச்சிருக்கணும். யார் மனசும் புண்படாமலாவது இருக்கும்” கோபமாக சொல்லிவிட்டு, “அத்தை நீங்க வாங்க உள்ள” என ஆயிஷாவையும் அழைத்துக் கொண்டு , தேனுகா இருந்த அறைக்குள் போய்விட்டான் ஜூனைத்.
“ஆப்பா , இவங்க எல்லாரும் என்ன நினைச்சுட்டு இருக்காங்க?”
“அதான் நஸ்ரினு எனக்கும் ஒண்ணும் புரியல. ஆனா ஒண்ணு மட்டும் சொல்றேன் , ராதாவும் ராதியும் இதுக்கு மேலயும் அந்த தேனுகாவை வீட்டுக்குள்ள விட்டாங்கன்னு வை, நான் மனுஷியா இருக்க மாட்டேன், வா வீட்டுக்குப் போலாம்”……..
**************
மதியம் மூன்று மணி. காலையில் ஹாஸ்பிட்டலில் இருந்து வந்தவுடன், தேனுகா ஹாஸ்பிட்டல்ல இருந்து வந்ததும் எனக்கு தெரியப்படுத்துங்க என சொல்லி விட்டு , அறைக்குள் நுழைந்து கொண்ட இப்ராஹிம் வெளியே வரவேயில்லை . சாப்பாடு கூட அறைக்குள்ளேயே முடித்துக் கொண்டார். தேனுகாவின் கர்ப்ப விஷயத்தை, ஹாஸ்பிட்டலில் இருக்கும் போதே நசீமா ஃபோனில் ஒளிபரப்பி இருந்ததால், யாரும் எங்கும் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே இருந்தனர். வீட்டின் தலைவர் என்ன செய்வார்? என சிலரும், தேனுகா வீட்டை விட்டு வெளியேறும் கண் கொள்ளா காட்சியை காண வேண்டும் என சிலரும் , ஆர்வமாய் காத்துக் கொண்டிருந்தனர் . வாசலில் ஜூனைத்தின் ஹோண்டா சிட்டி வந்து நிற்க , வேகமாய் ஓடி இப்ராஹிமின் அறைக் கதவைத் தட்டினாள் நஸ்ரின்.
“ராதா, ஜூனைத் வந்துட்டான். வாங்க வாங்க” அவர் மெல்ல கதவை திறக்க , மாடியில் இருந்து ஜமால், ஷாரிக், முஸ்தஃபா மூவரும் இறங்கி வந்தனர் . டைனிங் டேபிள் சேரில் அமர்ந்திருந்த ரஃபீக், ஃபஹீம் , கதீஜா, நிஷா நால்வரும் பரபரப்பாக எழுந்து நின்றனர். ஜூனைத், ரஷிதா , ஆயிஷா, தேனுகா நால்வரும் உள்ளே வந்தனர்.
” ஏம்மா……என்னமா நீ? ஜூனைத் என்னைத் தான் நீ கல்யாணம் பண்ணிக்கணும், இல்லனா நான் செத்துப் போயிருவேன்னு சொன்னப்ப, நீ என்ன வேணா செய் எனக்கென்னனு சொல்லிட்டு போயிருந்துருக்கலாமே? அதை விட்டுட்டு இப்டி பண்ணிட்டியே?இனிமே நீயே இங்க இருக்கேன் எங்க பையன் கூட வாழுறேன்னு சொன்னாலும் உன்னை எப்படி எங்களால ஏத்துக்க முடியும்? தேவையில்லாம அவனை நிக்காஹ் பண்ணி, என் மக ரஷிதா வாழ்க்கையையும் கெடுத்துட்டியே?”
“நிஷா சும்மா இரு. தேனுகா இங்க வாம்மா , இப்படி வந்து உக்காரு” ஹால் சோபாவில் அமர்ந்தார் இப்ராஹிம்.
“தாத்தா”……
“வாம்மா, முதல்ல வந்து உக்காரு. முகத்தைப் பாத்தாலே ரொம்ப சோர்வா இருக்கனு தெரியுது”
“மாமா போதும், உங்களை எதிர்த்து பேசக் கூடாதுன்னு நாங்க எல்லாரும் பொறுமையா இருக்கிறதை நீங்க மிஸ்யூஸ் பண்ணாதீங்க. அந்த பொண்ணை இத்தனை நாள் வீட்ல தங்க விட்டிருந்தீங்க அதுல கூட ஒரு நியாயம் இருக்கு. ஆனா இப்ப இவ்ளோ பெரிசா ஒண்ணு நடந்துருக்கு அப்புறமும் நீங்க”
“சார் ஒரு நிமிஷம். நான் இங்க தங்குறேன்னு எப்பவுமே சொன்னது இல்ல . நான் போகத் தான் போறேன். ஆனா என் மேல வைக்கப்பட்டிருக்கிற குற்றசாட்டுக்கு பதில் சொல்லாம நான் இங்க இருந்து போக மாட்டேன்”
“இதோ பார், நான் என்னோட மாமனார் கிட்ட பேசிட்டு இருக்கேன். நீ தேவையில்லாம குறுக்க வராத”
“ரைட் . இப்ப எல்லாருக்கும் என்ன தெரியணும்? கல்யாணத்துக்கு முன்னாடியே கர்ப்பம் ஆகிட்ட தேனுகா எப்ப நம்ம வீட்டை விட்டு கிளம்பப் போறா அதான ? இருங்க” என்றவர் தன் ஜிப்பாவின் பாக்கெட்டில் இருந்து, ஃபோனை எடுத்தார். ஒரு ஆடியோவை ப்ளே செய்தார்.
தாத்தா வணக்கம் உங்க வீட்டு மருமக தேனுகா இங்க வந்து அட்மிட் ஆன உடனே எனக்கு ஒரு அனானிமஸ் கால் வந்தது என் பொண்ணை கடத்தி வச்சிருக்கிறதா சொன்னாங்க உன் பொண்ணை நாங்க பத்திரமா உன் கிட்ட சேர்க்கணும்னா அங்க அட்மிட் ஆகிருக்கிற தேனுகா கர்ப்பம்னு அந்த வீட்டு மனுஷங்க கிட்ட பொய் சொல்லணும்னு சொன்னாங்க எனக்கு பதட்டத்துல என்ன செய்யனு தெரியல ஸ்கூலுக்கு கால் பண்ணினா உங்க பொண்ணு இன்னிக்கு வரலன்னு சொல்லிட்டாங்க. ஸோ, பயத்துல அவங்க சொன்னபடி சொல்லிட்டேன் அப்புறம் கொஞ்ச நேரத்துல என் பொண்ணு பத்திரமா வீட்டுக்கு வந்துட்டா ஆனா மனசு தாங்கலை தாத்தா அதான் உங்க கிட்ட சொல்லிட்டேன் ஐ அம் சாரி அதைக் கேட்டதும் சுல்தானா , ஆயிஷா, ரஷிதா மூவர் முகத்திலும் பிரகாசம். அதற்காக அவர்கள் தேனுகாவை தவறாக நினைத்துக் கொண்டனர் என அர்த்தம் இல்லை. அவர்கள் நம்பிய ஒரு உண்மை ஆதாரப்பூர்வமாக நிரூபணம் ஆகிவிட்டதால் வந்த மகிழ்ச்சி.
“என்ன ? இது யார் குரல்னு தெரியலயா? நம்ம ஃபேமிலி டாக்டர் மாலா, அவங்க குரல் தான் இது. எனக்கு வாட்ஸப்ல வந்த மெசேஜ் இது . இதை கேட்டுட்டு தான் நான் ஹாஸ்பிட்டலுக்கு வந்தேன். தேனு நீ எந்த தப்பும் இல்லாதவன்னு உன்னை தப்பா பேசின எல்லார் முன்னாலயும் ப்ரூவ் பண்ணியாச்சு , சந்தோஷமா?”
“எஸ் தாத்தா , ரொம்ப தாங்க்ஸ்”
“ஜூனைத்”
“ராதா”
“தேனுகா மேல யாருக்கு என்ன கோபமோ இந்த மாதிரி செஞ்சிட்டாங்க. அது யாரா இருக்கும் ? உனக்கு யார் மேலயாவது சந்தேகமா இருக்கா ?”
“சந்தேகம் இல்ல ராதா, ஆனா மாலா அக்காவோட குழந்தையைப் பத்தி, அவ எந்த நேரம் ஸ்கூலுக்குப் போவாங்குற அளவுலாம் தெரிஞ்சி செஞ்சிருக்காங்கன்னா, அவங்களையும் சரி , நம்ம ஃபேமிலியையும் சரி , நல்லா தெரிஞ்சவங்களா தான் இருக்கும். அது மட்டும் இல்லாம , தேனுகாவை அங்க போய் அட்மிட் பண்ணின உடனே துரிதகதியில செயல்பட்டிருக்காங்கன்னா, நம்ம பக்கத்தில இருக்குற யாரோதான்னு”
” கரக்ட்……. அதே தான் நானும் நினைச்சேன்” இப்ராஹிம் பேசிக் கொண்டிருக்கும் போதே , காலிங்பெல் அடித்தது . “சுல்தானா போய் கதவைத் திற , அது மாலா தான். குழந்தையை கூட்டிட்டு வந்துருப்பாங்க. தன்னை கடத்தினது யாருன்னு பாப்பா அடையாளம் காட்டட்டும்”
“அத்தா, என்ன பேசுறீங்க? நம்ம வீட்ல யாரும் அப்டி செய்யக் கூடிய ஆள் இல்லை”
“இரு சுல்தானா, முதல்ல போ போய் அவங்களை கூட்டிட்டு வா கொஞ்சம் பொறுமையா இரு .குழந்தை பொய் சொல்லாது” இப்ராஹிம் தாத்தாவின் பார்வை , முஸ்தஃபாவின் மேல் நிலை குத்தியது. மிகவும் கூர்மையான பார்வை.
– தொடரும்…
No comments yet.