34.
“எ…..என்னது? தேனுகா கர்ப்பமா?” சுல்தானா பாட்டி ஜூனைத்தைப் பார்க்க, அவன் முகத்திலோ குழப்பம்.
” ஆமா. இது நிச்சயம் உங்களுக்கு சந்தோஷமான விஷயம் தான். ஆனா, அவங்களை கொஞ்சம் கேர் எடுத்துப் பாத்துக்கணும் . ரொம்ப ரொம்ப வீக்கா இருக்காங்க. ட்ரிப்ஸ் போட்டிருக்கேன், அதனால அது முழுசா இறங்கி முடிஞ்சதும் தான் கிளம்ப முடியும். சரி நீங்க போய் பேஷண்டைப் பாருங்க, எனக்கு வேற ஒரு கேஸ் வெயிட்டிங். அதை பாத்துட்டு வர்றேன்” விடைபெற்றுக் கொண்டார் மாலா.
“நான் உள்ள போய் அக்காவை பாத்திட்டு வர்றேன்” அறைக்குள் போக முயன்ற ரஷிதாவை தடுத்தாள் நசீமா.
“என்ன? எங்க போற?”
“அக்காவை பாக்க”
“யாரு உனக்கு அக்கா? அவ கூட இனிமே நீ பேசினன்னு வை நடக்குறதே வேற . அக்காவாம் அக்கா, சீசீசீ இப்படி ஒரு கேடுகெட்ட பிறவியை நான் பாத்ததே இல்லப்பா, கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாலயே ஒருத்தன் கூட அளவில்லாம சுத்தி… அதைக் கூட விடு, இப்ப நம்மளை எங்க கொண்டு வந்து நிறுத்திருக்கான்னு பாரு”
“ஏய்ய்ய்ய் !!!! அவ குழந்தை, அவ கிட்ட என்ன பேசுற ? அறிவு வேணாம்?” தாழ்ந்த குரலில் பேசிய சுல்தானா பாட்டி
பல்லைக் கடிக்க,
“ஆமா,,, எப்பப் பாத்தாலும் என்னையே குறை சொல்லுங்க, ஆனா ஒழுக்கம் கெட்டு திரியுறவளுங்களை தலையில தூக்கி வச்சு ஆடுங்க”
“அதானே , நல்லா கேளுக்கா. அப்பப்பாஆஆஆ பாக்க அமுக்குனி மாதிரி இருந்துக்கிட்டு , எவ்ளோ பெரிய வேலையப் பாத்திருக்கா? ஆனா பாவம் அவளை சொல்லியும் தப்பு இல்ல. அம்மா அப்பா இல்லாம வளர்ந்தவ இல்லயா? இந்த மாதிரி தறி கெட்டுப் போய் தான் திரிவா . நல்லவேளை நம்ம ராதா இவங்க ரெண்டு பேரையும் பிரிச்சு வச்சதால, இப்ப நமக்கு உண்மை தெரிஞ்சு போச்சு . இல்லன்னா யாரோட பிள்ளையைவோ நம்ம தம்பி பிள்ளைனு நினைச்சு, பாராட்டி சீராட்டி வளர்த்திருப்போம் . அல்லாஹ்ஹ்!!!! நினைச்சு பாக்கவே பயமா இருக்கு” அவர்கள் இருவரும் இது தான் சாக்கு என மாறி மாறி தேனுகாவை திட்ட ஆரம்பிக்க , பாட்டிக்கு தான் பொறுக்க முடியவில்லை . கண்கள் கலங்க ஜூனைத்தைப் பார்த்தார்.
“ஜூனைத்”
“ராதிம்மா”
“நான் உள்ள போய் அவளைப் பாக்கலாம்னு இருக்கேன் , நீயும் வா”
“ஏய் ராதி ! உனக்கென்ன புத்தி கித்தி கெட்டு போச்சா?” நசீமா கத்திக் கொண்டே இருக்க , அதை சிறிதும் சட்டையே செய்யாமல் , சுல்தானாவும், ஜூனைத்தும் உள்ளே சென்றனர். என்ன இருந்தாலும் இது பெரியவர்கள் சமாச்சாரம் என்பதால், ரஷிதா உடன் செல்லாமல் நின்று கொண்டாள்.
உள்ளே
கண்களை மூடி கட்டிலில் படுத்திருந்தாள் தேனுகா. இடது கையில் ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்தது . கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு கண்களைத் திறந்தாள் , ” பாட்டி”………என்றாள்.
” இப்போ பரவாயில்லயா?” அவள் கட்டிலை நெருங்கி நின்றார் சுல்தானா.
“கொஞ்சம் ஓகே பாட்டி. டாக்டர் என்ன சொன்னாங்க ?” பாட்டியும், ஜூனைத்தும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
” தேனுகா, நீ மாசமா இருக்கன்னு உனக்கு இன்னும் டாக்டர் சொல்லலயா?”
“பாட்டி…..என்ன சொல்றீங்க?” சரேல் என எழுந்தாள் தேனுகா. ட்ரிப்ஸ் பாட்டில் குலுங்கியது . “ஏய் பாத்து பாத்து” என அவள் தோள் மேல் கையை வைத்து தடுத்தான் ஜூனைத்.
“என்னை விடுங்க. பாட்டி என்ன சொல்றாங்க ?நான் கர்ப்பமா? இது எப்படி சாத்தியம்? நீங்க என்னங்க மண்ணு மாதிரி நின்னுக்கிட்டு இருக்கீங்க?”
“அம்மா….இரு , அவனை எதுவும் சொல்லாத . எங்களுக்கே ரொம்ப ரொம்ப குழப்பமா தான் இருக்கு. அந்த டாக்டர் பொண்ணு மாலா, நீ அறுபது நாள் கர்ப்பம்னு சொல்றா”
“பாட்டீஈஈஈஈ…….. இல்ல , அவங்க பொய் சொல்றாங்க . அதுக்கு வாய்ப்பே இல்ல” அலறினாள் தேனுகா.
“இல்ல ஹனி, அவங்க பொய் சொல்ல எந்த முகாந்திரமும் இல்ல. அவங்க நம்ம ஃபேமிலி டாக்டர், பரம்பரையா அவங்க எங்களுக்கு வைத்தியம் பாக்குறாங்க ”
“அப்போ நான் பொய் சொல்றேனா ஜூனைத்? சரி உங்க டாக்டருக்கு பொய் சொல்ல எந்த முகாந்திரமும் இல்ல, கரக்ட் தான். அப்போ எனக்கு மட்டும் பொய் சொல்ல என்ன ரீசன் இருந்துடப் போகுது ? சொல்லுங்க”
“தேனு…..தேனு கத்தாத. நீ வீக்கா இருக்கியாம் . என்ன நடந்ததுன்னு இப்ப வழக்காடு மன்றம் வச்சு பேச முடியாது. அப்டி அந்த பையன் ப்ரித்விக்கும், உனக்கும் இடையில என்ன நடந்து போயிருந்தாலும் அது தப்புன்னு பேச எங்க யாருக்கும் உரிமை இல்ல. ஏன்னா, நீயா ஒண்ணும் ஜூனைத்தை கட்டல, அவன் தான் மிரட்டி உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்திருக்கான். முழு தப்பும் அவன் மேல தான்”
“ராதி, நீங்க பேசுறதுல துளி கூட நியாயம் இல்ல” சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தாள் நஸ்ரின் . கூடவே நசீமாவும் , ரஷிதாவும்.
“அக்கா” தேனுகாவை நோக்கி ஓட முயன்ற ரஷிதாவின் ஜடையைப் பிடித்து நிறுத்தினாள் நசீமா.
“அவ கூட இனி நீ சேரக் கூடாது. சேர்ந்தா அவ புத்தி தான் உனக்கும் வரும். இங்கயே எங்க கூடவே நில்லு”
“என்னை யாரு செக் பண்ணினது? அந்த டாக்டரை கூப்பிடுங்க , நான் அவங்க கிட்ட பேசி இன்னொரு தரம் செக் பண்ண சொல்லணும்”
” அக்காஆஆஆஆ,,,,பாரேன் , வசமா மாட்டிக்கிட்ட பிறகும் நல்லா நடிக்குறா. என்னமா நடிக்குறா? இவ தைரியம் யாருக்கும் வராது”
“நஸ்ரின் ஆப்பா , கொஞ்சம் உன் வாயை மூடு . ராதி, நான் போய் டாக்டரை கூட்டிட்டு வர்றேன்”
“எங்கடா போற?” அவனை வழி மறிப்பது போல் நின்றாள் நசீமா.
” நகர்ந்து நில்லு”
“ஏய் ஜூனைத், உனக்குலாம் அறிவு கிறிவு இருக்கா இல்லையா? அவ காதலிச்ச பையனால கர்ப்பம் ஆகிருக்கானு தெள்ள தெளிவா தெரியுது . இப்ப டாக்டரை கூட்டிட்டு வந்து செகண்ட் ஒப்பீனியன் கேட்டா மட்டும் என்ன ஆகப் போகுது? அந்த நாராசமான விஷயத்தை மறுபடி நம்ம காதால கேக்கணுமா? வா ,முதல்ல வீட்டுக்குப் போலாம். அங்க போய் ராதா கிட்ட எல்லாம் சொல்லி , இவளை முதல்ல நம்ம வீட்டை விட்டு வெளியே துரத்தணும். சே! இவ தங்கியிருந்த ரூமை ஃபினாயில் வச்சு கழுவி விடணும், கருமம் . கருமம்”…….
“நான் அடிச்சு சொல்றேன், நான் கர்ப்பமா இல்ல . என்னதான் ப்ரித்வியை நான் லவ் பண்ணிருந்தாலும், என்னோட எல்லைகள் எனக்கு தெரியும். அப்படி ஏதும் ஆகிருந்தா கூட ஜூனைத் என்ன தான் சொல்லி இருந்தாலும், நான் அவரை கல்யாணம் பண்ணிருக்க மாட்டேன். எனக்கும் மனசாட்சி இருக்கு”
“ஓ…….இந்தாடி, நீ சொல்ற கதையை எல்லாம் நம்புறதுக்கு நான் ஒண்ணும் லூசு இல்ல . ஒருவேளை இந்த விஷயம் முன்னால உனக்கு தெரியாம இருந்திருக்கலாம், ஆனா இல்லவே இல்லனு சாதிக்காத”
“இல்ல , இதுக்கும் மேல என்னால பொறுமையா இருக்க முடியாது . நானே போய் டாக்டரை பாக்குறேன்” தன் கையில் ஏறிக் கொண்டிருந்த ட்ரிப்சை , பிய்த்து எறிந்துவிட்டு எழுந்தாள்.
“தேனுகா நில்லு:
“நோ……பாட்டி , டாக்டர் எங்க இருப்பாங்க ? எந்த ரூம்?”
“அக்கா சும்மா இருங்கக்கா, அவங்க முக்கியமா ஏதோ கேஸ் பாக்கணும்னு சொல்லிட்டு போனாங்க. பாத்துட்டு வரட்டும், இன்னொரு தரம் செக் பண்ணிப் பாத்துடலாம். யார் உங்களை நம்பினாலும் நம்பாட்டியும் நான் உங்களை நம்புறேன், இருங்க” ரஷிதாவை உற்றுப் பார்த்தாள் தேனுகா . அந்த பார்வையில் ஆயிரம் நன்றிகள். கண்ணீர் பெருகியது.
” நஸ்ரின் , நசீமா ரெண்டு பேரும் வீட்டுக்கு கிளம்புங்க”
…………..
” என்ன பாக்குறீங்க ? உங்களுக்கு தான் இவளை பிடிக்காதே , அப்புறம் எதுக்கு இவ விஷயத்தில மூக்கை நீட்டுறீங்க? நான் முன்னாடி சொன்ன மாதிரியே தான். உண்மையிலயே அவ மாசமா இருந்தாலும் , அது அவ பிரச்சனை . நம்ம யாருக்கும் அதுல தலையிட உரிமையில்ல”
“பாட்டீஈஈஈஈ”அவரை கட்டிக் கொண்டாள் தேனுகா.
” உங்க ஆறுதல் வார்த்தைகளுக்கு நன்றி பாட்டி . ஆனா நான் சொல்றது உண்மை , என்னை நம்புங்க. எங்கயோ, எங்கயோ தப்பு நடந்துருக்கு”
“எங்கயோ தப்பு நடக்கல, நீ தான் தப்பா நடந்திருக்க. என்ன ஜென்மம் நீ? இந்த மாதிரி ஒரு கேடுகெட்ட வாழ்க்கைலாம் வாழுறதுக்கு, எங்கயாவது ஆத்திலயோ குளத்துலயோ விழுந்து உயிரை விட்டுடலாம் . யாருக்கும் எந்த கஷ்டமும் இல்ல”
” ஏய்ய்ய் ரெண்டு பேரும் நீங்களா போறீங்களா ? இல்ல கழுத்தைப் பிடிச்சு நான் வெளிய தள்ளவா?” ஜூனைத் தொண்டை நரம்புகள் புடைக்க கத்திக் கொண்டிருந்த அதே நேரம், அந்த அறைக் கதவை திறந்துகொண்டு இப்ராஹிம் தாத்தா உள்ளே வந்தார்!
– தொடரும்
No comments yet.