33.
மறுநாள் காலை ஏழு மணி. இப்ராஹிம் தாத்தாவின் அறை. அவர் கட்டிலில் அமர்ந்திருக்க , அவருக்கு எதிரே கை கட்டி நின்றிருந்தாள் தேனுகா . அருகில் சுல்தானா பாட்டி நின்றிருக்க , ஒரு ஓரமாக சுவற்றில் சாய்ந்துகொண்டு இருண்ட முகத்தோடு ரஷிதா. அவள் மனதில் ப்ரார்த்தனை, யா அல்லாஹ்ஹ்ஹ்!!! என் அக்காவை எப்டியாவது இங்க தங்க வச்சிரு.
” நீ என்னமா சொல்ற ? இங்க இருந்து இப்டி திடுக்குனு கிளம்பினா, எங்கமா போய் தங்குவ?”
“தாத்தா , நான் நல்லா யோசிச்சு தான் இந்த முடிவுக்கு வந்தேன். என்னால இனிமேலும் இந்த வீட்ல இருக்க முடியாது தாத்தா . நான் கிளம்புறேன் . நீங்க சொல்றது சரி தான், நான் இன்னும் எங்க தங்குறதுன்னு கூட யோசிக்கல. நல்ல ஹாஸ்டல்ல இடம் கிடைக்குற வரைக்கும் என் ஆபீஸ்லயே தங்கலாம்னு இருக்கேன் , அங்க எனக்கு சௌகர்யமா இருக்கும்” அவள் தோள் மேல் கையை வைத்தார் சுல்தானா.
“என்னடி பட்டுன்னு இப்டி ஒரு முடிவுக்கு வந்திட்ட? உனக்கு எங்க வீடு பிடித்தமானதா இல்லயா? எங்க கூட இருக்குறதுக்கு உனக்கு பிடிக்கலயா?”
“ச்சே, அப்படி சொன்னா அது ரொம்ப தப்பு பாட்டி . என்னை ஜூனைத் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்தது உங்க யாருக்குமே பிடிக்கல , ஆனாலும் என்னை வெளிய போன்னு விரட்டாம எனக்கு தங்க இடம் கொடுத்தவங்க நீங்க .உங்களையும், தாத்தாவையும் நான் ரொம்ப ரொம்ப மதிக்கிறேன் . அந்த மதிப்பு எப்பவும் போகாது”
“எங்களை மதிக்குறேன்னு சொல்ற சரி தான் , ஆனா மதிக்குறதுனா எங்க உத்தரவு படி நடந்துக்குறதும் தானே? அதை நீ மீறுறியே?”
” தாத்தா……… அது”
“இரும்மா தேனுகா, நான் இன்னும் முழுசா பேசி முடிக்கல . உன்னைப் பத்தி எனக்கு பெரிசா எதுவும் தெரியாதுமா. ஆனா நீ ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு. அது மட்டும் எனக்கு உறுதியா தெரியும் .ஏதோ விதி வசத்தால நீ விரும்பின பையனை உன்னால கல்யாணம் பண்ணிக்க முடியாம போயிருச்சு, ஜூனைத்தை கல்யாணம் பண்ணிக்க வேண்டியதா போயிருச்சு. உங்க நிக்காஹ் நூறு சதவிகிதம் மனப் பொருத்தம் இல்லாம நடந்தது தான். அதுக்காக வாழ்க்கையை வாழாம அப்டியே உதறிவிட்டுடுறது நல்ல முடிவா? காலத்துக்கு பெரிய சக்தி இருக்கு, ஜூனைத்தும் நீயும் தான் கணவன் மனைவிங்குறது இறைவன் போட்ட முடிச்சு . ஆரம்பத்துல ஏத்துக்க கஷ்டமா இருந்தாலும், போகப் போக எல்லாம் சரியா போயிரும்னு நம்பி தான் நானும் சுல்தானாவும் ஒரு மாசத்துக்கு உன்னை இங்க தங்க சொன்னோம். நீ வந்த இரண்டு நாள்ல இங்க நிறைய பிரச்சனைகள் வந்துச்சு . ஆனா நாட்கள் செல்ல செல்ல அது குறைய ஆரம்பிச்சு, இப்போலாம் நின்னே போச்சு . கோபமே மாறும்போது , பாசம் உருவாகாதா? நீயும் எனக்கு ரஷிதா மாதிரி ஒரு பேத்தி தான். உன் மண வாழ்க்கை சிறப்பா அமையணும்னு தான் நான் தினமும் துஆ செய்றேன். ஜூனைத் ரொம்ப நல்லவன்மா, சொக்கத் தங்கம். அவன் உன்னை நிக்காஹ் செஞ்சுக்கிட்ட முறை வேணா தப்பா இருக்கலாம் . ஆனா, காரணம் கண்டிப்பா சிறந்த காரணமா தான் இருக்கும் . நீ வேணும்னா அவன் கிட்ட பேசிப் பாரு , அவனை புரிஞ்சுக்க கொஞ்சம் முயற்சி செஞ்சு பாரு, இன்னியோட நீ எங்க குடும்பத்துல வந்து சேர்ந்து பதினாறு நாள் ஆச்சு. இன்னும் பதினைஞ்சே நாள் மட்டும் இங்க தங்கி பாரு. தயவு செய்து நான் உன்னை கட்டாயப்படுத்துறேன்னு நினைக்காத , என்னோட தரப்பு நியாயத்தை நான் சொல்றேன். அப்புறம் உன் இஷ்டம். ஏன்னா இது உன் வாழ்க்கை, ஆயிரம் பேர் அறிவுரை சொல்லலாம் . ஆனா முடிவு நீ தான், நீ மட்டும் தான் எடுக்கணும் ” தாத்தா பேசி முடிக்க , அவர் சொன்ன விஷயங்கள் நியாயம் தான் என தேனுகாவிற்கு உரைத்தாலும் , இன்னொரு தரம் தான் இப்படி ஏமாந்து போய் நின்று கொண்டிருக்கக் கூடாது என உறுதியாய் நினைத்துக் கொண்டாள் . உடன் ப்ரித்வியின் முகம் மனக் கண்ணில் தோன்ற , அழுகை வந்தது . ஆனால் நேற்று இரவு வரைக்கும் அவனை நினைத்து அழுது கொண்டிருந்த அழுகைக்கும் , இப்போது அழும் அழுகைக்கும் வித்யாசம் இருந்தது. முந்தையது பிரிவுத் துயரத்தினால். பிந்தையது கோபத்தின் வெளிப்பாடு.
“மா…….ஏன் கண்ணு அழற?” சுல்தானா அவளைத் தேற்ற,
“அக்கா என்னால தான் இந்த வீட்டை விட்டு போறேன்னு சொல்றாங்க” விம்மிக் கொண்டே சொன்னாள் ரஷிதா.
“ரஷி , நீ என்ன சொல்ற?”
“நன்னா , அக்காவும் மாமுவும் மனசு விட்டுப் பேசி சீக்கிரம் சந்தோஷமா சேரணும்னு நான் தான் சில விஷயங்கள்ல அக்காவை டார்ச்சர் பண்ணுனேன் . அதான் இங்க இருக்கப் பிடிக்காம கிளம்புறேன்னு சொல்றாங்க. இனி நான் எதையும் பேச மாட்டேன்னு சொல்லுங்க . நான் அவங்க கிட்ட பேசாமலே கூட இருந்துக்குறேன் என்னால அவங்களுக்கு எந்த துன்பமும் வராது நன்னா . தனியா கிளம்பிப் போய் அவங்க கஷ்டப்பட வேணாம், அதை மட்டும் சொல்லுங்க” அவள் அழ ஆரம்பித்துவிட, அவளை அதட்டினார் சுல்தானா பாட்டி.
” ஏய் , எல்லாம் உன் வேலை தானா? சின்ன பிள்ளையா லட்சணமா இருக்க வேண்டியது தான ? உன்னை இந்த வீட்டுக்கு கடைக்குட்டி பொண்ணுனு அதீத செல்லம் குடுத்து, நானும் உங்க நன்னாவும் கெடுத்து வளர்த்துட்டோம்”
“இல்….இல்ல நன்னி , அது அப்டி எல்லாம் இல்ல. என்னை மன்னிச்சுருங்க . எனக்கு தேனு அக்கா நம்ம எல்லார் கூடவும் ஒண்ணா இருக்கணும்னு ஆசை. அதனால தான் வயசுக்கு மீறி கொஞ்சம் அதிகப்பிரசங்கித் தனமான சில காரியங்கள் செய்திட்டேன். இனிமே கவனமா இருக்கேன் . அக்கா தனியா போய் தங்குனா, அந்த மாடசாமியால ஏதாவது ஆபத்து வரலாம். இங்க அவங்களுக்கு எந்த த்ரெட்டும் இல்ல. அவங்க மாமுவை டிவோர்ஸ் பண்றதா இருந்தாலும் சரி, சேர்ந்து வாழுறதா இருந்தாலும் சரி , அது அவங்க முடிவு . நான் தலையிட மாட்டேன் நன்னா” அவளது அழுகையும், அந்த அன்பும் தேனுகாவின் இதயத்தை உருக்கின. ஆனாலும் அவள், மனதை மாற்றிக் கொள்ள தயாராய் இல்லை.
“தாத்தா.. நீங்க , பாட்டி , ரஷி, ஆயிஷா அம்மா, எல்லாரும் என் மேல ரொம்ப ரொம்ப ப்ரியமா இருக்கீங்க. அந்த தூய்மையான அன்பு ஒண்ணே போதும். நான் இந்த வீட்ல தங்குறதுக்கு . ஆனா எனக்கு இனி அன்பே வேணாம்ங்குற முடிவுக்கு நான் வந்துட்டேன்”
” நீ என்னமா சொல்ற ? எனக்கு ஒண்ணுமே புரியல. உன்னால அந்த பையனை மறக்கவே முடியாதுன்னு நினைக்கிறியா? முயற்சி செஞ்சா முடியாததுன்னு ஒண்ணு இல்லவே இல்ல தேனுகா”
” தாத்தா, என் மனசுல ஆயிரம் விஷயங்கள் இருக்கு . அதை எல்லாம் நான் வெளிப்படையா சொன்னா உங்களுக்கு கஷ்டம் , எனக்கும் வேதனை. என்னை விடுங்க , நான் போறேன்”
” என்ன சுல்தானா? அவ இப்டி விட்டேத்தியா பேசுறா, நீயும் எதுவும் பேசாம அமைதியா இருக்க?”
“அவளுக்கு நல்லது கெட்டது எடுத்து சொல்ல நம்ம யாருத்தா? அவ வாழ்க்கை, அவ இஷ்டப்படி தான் இருக்கணும் , போகட்டும் விடுங்க”
“பாட்டி , நீங்க என் மேல கோபமா இருக்கீங்க , எனக்கு அது நல்லாவே தெரியுது . நான் செய்யுறது இப்ப வேணா உங்களுக்கு தப்பா தெரியலாம் ஆனா ஃப்யூச்சர்ல”………….
“வேணாம்மா, நீ எதுவும் சொல்ல வேணாம். நான் மனசு மாறி உன்னை தடுத்து நிறுத்துறதுக்குள்ள நீ கிளம்பி போயிரு” காரணம் தெரியாமல் தேனுகாவுக்கு கண்ணீர் வந்தது. நேராகக் கட்டிலின் முன்னால் சென்று, இப்ராஹிம் தாத்தாவின் காலை தொட்டு கும்பிட்டாள் . “ஆசீர்வாதம் பண்ணுங்க தாத்தா” அவள் தலையைத் தொட்டு, இறைவன் உனக்கு துணையிருப்பான் என்றார். மெல்ல எழுந்து பாட்டியை நோக்கிப் போனவளுக்கு , சட்டென கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. தலையும் சுற்றியது…..தேனுகா…………. என பாட்டி அருகில் ஓடி வர, கண்கள் தானாக மூடிக் கொண்டது.
****************
ஹாஸ்பிட்டல்……… தேனுகாவுக்கு உள்ளே சிகிச்சை நடந்து கொண்டிருக்க, வெளியே கவலையான முகங்களோடு ஆயிஷா, ரஷிதா, சுல்தானா, மற்றும் ஜூனைத் நால்வரும் அமர்ந்திருந்தனர்.
“என்னடா ? அவளுக்கு என்னாச்சு? நம்ம வந்து எவ்ளோ நேரமாச்சு? இன்னும் தேனுகா பத்தி ஒண்ணுமே சொல்ல மாட்டேங்குறாங்களே?”
” ராதி , ஏன் பயப்படறீங்க ? ரஷி தான் சொல்றாளே, அவ நம்ம வீட்டுக்கு வந்ததுல இருந்தே சரியா சாப்பிடலன்னு சொல்லி. அதனால வந்த மயக்கமா தான் இருக்கும். நம்ம பல வருஷங்களா வர்ற ஹாஸ்பிட்டல் தானே ? நல்லா வைத்தியம் பாப்பாங்க, நீங்க கவலைப்படாதீங்க ராதி” அதே நேரம் வாசலில் வந்து நின்ற ஆட்டோவில் இருந்து இறங்கி, நசீமாவும் , நஸ்ரினும் உள்ளே வந்தனர்.
“ஏய்ய் !!!! என்னடி , தேனுகாவை பாக்கவா வந்தீங்க ? ஒரே ஆச்சரியமா இருக்கே?” ஆயிஷா கேட்க,
“நாங்க எங்க வந்தோம்? உங்க யார் ஃபோனும் எடுக்க மாட்டேங்குதாம், அதான் என்ன ஏதுன்னு தெரிஞ்சிட்டு வாங்கன்னு நன்னா வற்புறுத்தி அனுப்பினார் . என்னவாம் அந்த வாயாடி கழுதைக்கு , சொன்னாங்களா?”
“வம்பு செய்யாத நசீமா…. அப்டி வம்புக்கு தான் வந்திருந்தன்னா தயவு செய்து போயிரு. நாங்களே என்னனு தெரியலன்னு முழிச்சுட்டு இருக்கோம்”
“ஓ!…..அப்ப இன்னும் ஒண்ணுமே சொல்லலயா? நீங்க இங்க வந்து அரை மணி நேரம் ஆச்சே”…… அவள் பேசிக் கொண்டிருக்க கதவைத் திறந்துகொண்டு, அவர்களின் குடும்ப டாக்டர் மாலா வெளியே வந்தார்.
“அக்கா , அவளுக்கு என்னாச்சு?”
“ஏன்டா ஜூனைத் , ஃவைஃப் ப்ரக்னன்ட்டா இருக்கும் போது கூட நீ வேலை வேலைன்னு தான் ஓடுவியா?” உரிமையாக அவனைத் திட்ட ஆரம்பிக்க, அனைவரும் குழம்பினர்.
“அக்கா, என்ன சொல்றீங்க? தேனுகா கர்ப்பமா?”
“ஆமா , அறுபது நாள் கர்ப்பம்” அங்கு இருந்த அனைவருமே அதிர்ந்து போக , நசீமா முகத்தில் சொல்ல முடியாத அளவுக்கு ஒரு அசூயை!!!!!!!
– தொடரும்….
No comments yet.