32.
“அந்த பர்சை என்னோடதுன்னு சொல்லிட்டு முன்னால வந்தவன் தான், அன்னிக்கு நம்ம வீட்டுக்கு வந்து மாடசாமி கேங் பிராப்ளம் பண்ணப்ப கூட வந்தான். அதனால தான் அவனைப் பாத்து நான் ஷாக் ஆனேன் . அவன் கிட்ட இந்த ஃபோட்டோவை எதுக்கு நீ வச்சிருக்கன்னு கேட்டேன், அதுக்கு அவன் ப்ரித்வி என் ஃப்ரண்ட் தான்னு சொன்னான். நீ எப்பப் பாத்தாலும் ப்ரித்வி ப்ரித்வின்னு உருகி உருகி பேசுவியா, அதனால அவனோட குணநலன்களை பத்தி தெரிஞ்சுக்க எனக்கு ஒரு ஆர்வம் பிறந்துச்சு. அது மட்டும் இல்லாம அவன் ஏன் மாடசாமி கூட வந்தான் அப்டிங்குற கேள்வியும் எழுந்திச்சு . அதனால அவனை உங்க கூட கொஞ்சம் பேசணும்னு சொல்லி தனியா கூட்டிட்டுப் போனேன். ப்ரித்வி ஃப்ரண்டா இருந்துக்கிட்டு நீ ஏன் அவனை கொன்னவன் கூட சுத்துறன்னு கேட்டேன் . அவன் முகத்தில அப்படி ஒரு அதிர்ச்சி. .உண்மையிலயே தேனுகாவை நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களா இல்ல மாடசாமி கிட்ட இருந்து அவங்களை காப்பாத்துறதுக்காக பொய் சொன்னீங்களான்னு கேட்டான். எனக்கு அவ கூட கல்யாணம் ஆனது நிஜம்னு சொன்னேன். அந்த பொண்ணு உங்களை எப்டி கல்யாணம் பண்ணினாங்க ப்ரித்வியை அவ்ளோ லவ் பண்ணாங்களேன்னு கேட்டான். அந்த கேள்விக்கு என்ன பதில் சொல்லன்னு எனக்கு தெரியல , அமைதியா இருந்தேன். அவன் என்ன நினைச்சானோ? திடீர்னு என்னை கட்டி பிடிச்சு, சூப்பர் ப்ரோ நீங்க தேனுகா லைஃபை காப்பாத்திட்டீங்க. ப்ரித்விக்கு அவங்களை மேரேஜ் பண்ணனும்னு எண்ணம் இல்ல, அவன் அப்பாவும் தேனுகா அப்பாவும் ஒரு காலத்தில ஒண்ணா பிசினஸ் செஞ்சாங்களாம், ப்ரித்வியோட அப்பா மகாதேவன் கொஞ்ச நாள்க்கு அப்புறம் அந்த பார்ட்னர்ஷிப்ல இருந்து விலகி தனியா ஒரு கார்மெண்ட்ஸ் ஸ்டார்ட் பண்ணிட்டார் , அதனால அவருக்கு கொஞ்சம் கடன் ஆகி இருக்கு. நிறைய ஆர்டர் பிடிச்சு அதை எப்டியாவது சரி கட்டலாம்னு நினைச்சுட்டு இருந்தபோது , இவர் எதிர்பார்த்திருந்த நிறைய ஆர்டர்கள் தேனுகா அப்பாவுக்கு போக, கடன் கழுத்தை நெரிக்க , தன்மானத்தை விட்டுட்டு , மகாதேவன், எனக்காக விட்டு குடுன்னு எதிரி கிட்ட போய் கேட்டிருக்கார். தேனுகா அப்பா மறுக்க, அவமானம் தாங்காம வீட்டுக்கு வந்து தூக்குல தொங்கிட்டார். அப்பா இறந்த அதிர்ச்சியில அம்மாவும் ஹார்ட் அட்டாக்ல இறந்து போக , வீடு, கார்மென்ட்ஸ்னு எல்லாத்தையும் வித்து கடனை அடைச்சு , மிச்சம் இருந்த பணத்துல சொந்தத்துலயே அவங்க அக்காவுக்கு ஒரு மாப்பிள்ளையை பார்த்து கல்யாணத்தை முடிச்சு ஃபாரினுக்கு அனுப்பி , கடமையை முடிச்ச அப்றமும் ப்ரித்விக்கு தேனுகா குடும்பத்து மேல இருந்த கோபம் போகல. ஊர்ல யார் யாரையோ விசாரிச்சு , தேனுகா ஃபேமிலி பத்தியும், அவங்க கிட்ட மிச்சமா இருக்குற கோடி ரூபாய் பணத்தைப் பத்தியும் தெரிஞ்சுகிட்டான் . எதேச்சையா இங்க சென்னைல தேனுகா மேடமை பாத்தவனுக்கு வெறி கூடிப்போய், காதலன் வேஷத்துல அவங்களை நெருங்கி பழகி , அவங்க கிட்ட இருக்குற பணத்தை அபகரிச்சு எந்த ஊர்ல இருந்து வாழ்ந்த கெட்ட குடும்பம்ங்குற பேரோட ப்ரித்வி வெளியேறினானோ, அதே ஊர்ல மீண்டும் கார்மென்ட்ஸ் ஆரம்பிக்கணும்னு ஒரு ப்ளான் போட்டான் . இது எனக்கு தெரிய வந்தப்ப நான் ரொம்ப ஷாக் ஆனேன். ஏன்னா தேனுகா ரொம்ப நல்ல பொண்ணு , அவனை உண்மையா விரும்பினாங்க . இது தப்புன்னு எடுத்து சொன்னேன். ஆனா அவன் கேக்கவே இல்ல . தேனுகா கிட்ட கூட இதைப் பத்தி சொல்லலாம்னு ட்ரை பண்ணினேன் . ஆனா அவங்க நம்பலன்னா என்ன பண்றதுன்னு ஒரு யோசனை வரவே , அதை செய்யாம விட்டுட்டேன் . உங்க மனைவியோட பெர்சனல் விஷயங்களை உங்க கிட்ட சொல்லி உங்க மன அமைதியை குலைக்கணும்ங்குறது என் நோக்கம் இல்ல . ஒருவேளை அவங்க உங்களை இன்னும் அக்செப்ட் பண்ணிக்காம இருந்தாங்கன்னா , அது ப்ரித்வி மேல இருக்குற அன்பால தான். நீங்க ப்ரித்வியோட மோசமான திருவிளையாடல்களை அவங்களுக்கு சொல்லி புரிய வைங்கன்னு சொன்னான். அவனுக்கு மாடசாமியை யார்னே தெரியாது , மாடசாமி வந்த கார் பஞ்சர் ஆக , இவன் கிட்ட லிஃப்ட் கேட்டு கார்ல ஏறி நம்ம வீட்டு வாசல்ல இறங்கிருக்கான். இறங்கின அவசரத்துல அரிவாள் ஒண்ணை கார்ல விட்ருக்கான், அதை எடுத்து குடுக்க இவன் உள்ள வந்திருக்கான்” ஒருவழியாக சொல்லி முடித்தான் ஜூனைத். ஆடாமல் அசையாமல் அமர்ந்திருந்தாள் தேனுகா.
“என்ன? இன்னும் என்னை முழுசா நம்ப முடியலயா? வேணும்னா அவனை நாளைக்கு நேர்ல கூட்டிட்டு வந்து, என் கிட்ட சொன்ன எல்லாத்தையும் உன் கிட்டயும் சொல்ல சொல்லட்டுமா ?” நிமிர்ந்து அவனைப் பார்த்துவிட்டு, மறுப்பாய் தலை ஆட்டினாள். ஆனாலும் அவள் முகத்தில் ஏற்பட்டிருந்த குழப்பம் இன்னும் நீங்கவில்லை. அதை உணர்ந்து கொண்டான் ஜூனைத்.
“ம்ஹூம் ….உன்னை என்ன சொல்லி சரி பண்றதுன்னு எனக்கு தெரியல. ப்ரித்வி மேட்டர் தெரிஞ்ச பிறகு தான் நான் உனக்கு டிவோர்ஸ் தர மாட்டேன்னு சொன்னேன் . ஒரு தப்பான ஆளை நினைச்சுட்டு இருந்து , உன் லைஃபை நீயே கெடுத்துக்காத . ஆல்ரைட் ஹனி , இதை சொல்லத் தான் ரஷி கிட்ட சொல்லி உன்னை இங்க கூட்டிட்டு வர சொன்னேன். என் மிஷன் ஓவர். நீ கீழ போறதுன்னா, போ”
“நீங்க?”
” நான் வரல , கொஞ்ச நேரம் இங்கயே இருக்கேன் . நீ போய் தூங்கு குட் நைட் “
“தனியா உக்காந்து என்ன செய்யப் போறீங்க? வாங்க”
“இல்ல, ப்ளீஸ் நீ கிளம்பு. உன் மனசு நல்லா தெளிவானதுக்கு அப்புறம் ஒரு நல்ல முடிவு எடு”
“நல்ல முடிவுன்னா?”
“ஹனி, என்ன கேள்வி இது?”
“ஏன்? நல்ல கேள்வி தான். நல்ல முடிவுன்னு நீங்க எதை மீன் பண்றீங்க? உங்க கூட சேர்ந்து வாழுறதைத் தானே?”
“ஆமா, சந்தேகமென்ன?”
“இல்ல, உங்களைப் பொறுத்த வரைக்கும் தான் அது நல்ல முடிவு”
“ப்ச், இப்ப நீ என்ன தான் சொல்ல வர்ற ஹனி?”
“நான் அவ்ளோ நம்புன ப்ரித்வியே என்னை ஏமாத்திருக்கான் , அப்படி இருக்கும் போது நீங்க எம்மாத்திரம்?”
“என்ன சொன்ன?”……..பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டான் ஜூனைத்
“மூணு வருஷமா நான் அவன் கூட பழகிருக்கேன். எந்த நொடியிலயும் இவன் போலியா இருக்கானோன்னு எனக்கு தோணினது இல்ல . ஆனா அவனே என்னை ஏமாத்திட்டான்.
நான் உங்க கூட சேர்ந்து வாழ்ந்து, இப்ப நீங்க குடுக்குற நம்பிக்கையில திளைத்து , ஒருவேளை இன்னொரு சந்தர்ப்பத்தில நீங்களும் என்னை ஏமாத்திட்டா?” அவள் கேட்ட கேள்வியில் ஆத்திரம் மேலிட ,வார்த்தையை கொட்டி விடக் கூடாது என மௌனம் காத்தான் ஜூனைத்.
“நீங்க சிரிச்சாலும், கோபப்பட்டாலும் என் முடிவு இதான். எங்க அப்பாவுக்கு அடுத்து , மூர்த்தி அண்ணனுக்கு அடுத்து, நான் நம்புன ஒரே ஆண் ப்ரித்வி தான். கடைசியும் அவனாவே இருக்கட்டும். அவ்ளோ தான் , இனிமே நம்ம கல்யாணத்தைப் பத்தி பேச எதுவும் இல்ல. நான் கீழே போறேன், குட் நைட்” வேகமாக எழுந்து விடு விடுவென நடக்க ஆரம்பித்தாள் தேனுகா . கீழே இறங்குவதற்காக படிகளை நெருங்கி இறங்க ஆரம்பித்தபோது, பின்னால் நடை சத்தம். ஜூனைத் தான். ஃபோனின் டார்ச்சை ஆன் செய்து கொண்டு படியை நெருங்கியவன், கதவை அடைத்தான் . பூட்டைக் கொண்டு பூட்ட சிரமப்பட்டான்.
“குடுங்க, ஃபோனை நான் கையில வச்சுக்குறேன், நீங்க பூட்டுங்க”
…………..
“ஜூனைத் உங்களைத் தான்”
“கடவுள் எனக்கு இரண்டு கைகள் குடுத்துருக்கார். உதவணும்னு நினைச்ச உங்க நல்ல மனசுக்கு தேங்க்ஸ்” சொல்லிக்கொண்டே சாவியை சரியாகப் பொருத்த முயன்று அவன் தோற்க, சாவி நங்கென்ற சத்தத்துடன் படியில் விழுந்தது . ப்ச் என்றான்.
“இதுக்கு தான் நான் என்கிட்ட குடுக்க சொன்னேன், கேட்டா தான ? ரெண்டு கை இருக்கு ரெண்டு கால் இருக்குன்னு தேவையில்லாத டயலாக்லாம் பேசினா, இதான் கதி. தேடுங்க : கடு கடுவென பேசிவிட்டு, வேகமாய் படிகளில் இறங்க ஆரம்பித்தாள் . ரூமை அடைந்து அவள் கதவை சாத்தி தாழிட்ட சத்தத்தில் கண்களைத் திறந்த ரஷிதா , அக்கா என்றாள்.
” என்ன நீ இன்னும் தூங்கலயா?”
“இல்லக்கா , நீங்க வரணும்னு தான் நான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்”
“ம்ம்ம்ம்”
“அக்கா, என் மேல கோபமா?”
“எதுக்கு கேக்குற?” தேனுகா காட்டமாகவே கேட்டாள்.
“இல்லக்கா , அது என்னனா , உங்க கிட்ட எதுவுமே சொல்லாம கூட்டிட்டுப் போய் மாமு கிட்ட தனியா விட்டுட்டு வந்துட்டேன்ல , அதான்”
“அப்போ உனக்கே அது தப்புன்னு தெரியுது , அப்டி தானே? அப்புறம் ஏன் அதை செஞ்ச? ரஷி , நீ ஒண்ணும் கையில விரலை வச்சா கடிக்க தெரியாத பாப்பா இல்ல. யூ ஆர் ஓல்ட் இனஃப் டூ அண்டர்ஸ்டாண்ட் எனி திங். நான் உன் கிட்ட அழுத்தமா சொல்லிட்டேன். நான் உங்க மாமாவுக்கானவ இல்லன்னு. அதன்பின்னும் ஏன் இந்த மாதிரி காரியங்களை திருப்பி திருப்பி பண்ணி என்னை நோகடிக்கிற? போதும் , இதுக்கு மேல என்னால எதைக் கண்டும் பொறுமையா இருக்க முடியாது. நாளைக்கு விடியட்டும், தாத்தா கிட்ட சொல்லிட்டு , நான் இங்க இருந்து கிளம்புறேன்”
“அக்கா சாரிக்கா. இனி நான் இப்டி பண்ண மாட்டேன். இங்கயே இருங்க, தனியா எங்கக்கா போவீங்க ? சாரிக்கா” ரஷிதா பதறிப்போய் கெஞ்சினாள்.
“ப்ரித்வி என்னை ஏமாத்தி எனக்கு ஒரு நல்ல பாடம் குடுத்துட்டான் . இனி யாரையும் நான் நம்பத் தயாரில்லை, குட் நைட் ரஷிதா” சொல்லிவிட்டு ,வேறு புறம் திரும்பி படுத்துக் கொண்ட தேனுகா, உடைந்து போய் கதற ஆரம்பித்தாள்.
– தொடரும்
No comments yet.