கல்யாணம் முதல் காதல் வரை – 30

Shanmuha Sethuramachandran | 05 Feb 2026 | Share

                               30.

         ” என்ன   சொன்னீங்க?   ப்ரித்வி,  என்  ப்ரித்வி    தப்பானவனா?   என்ன  தைரியத்தில   ஜூனைத்   இதை   நீங்க  என்கிட்டயே    சொல்றீங்க ?  அவனைப்  பத்தி   பேச   உங்களுக்கு   என்ன   ரைட்ஸ்  அது  கூட   செகண்டரி ,  ப்ரித்வி   பத்தி  பேச  உங்களுக்கு   என்ன   தகுதி   இருக்கு?”  

          “அவனை   விட   நான்   யோக்கியன்,  அந்த   தகுதி   ஒண்ணே  போதும்”

          “ஏய்”……அவனை   எரிப்பது  போல்  பார்த்தாள்   தேனுகா.   “வேணாம் ,  என்   பொறுமையை   நீங்க   ரொம்ப  சோதிக்கிறீங்க .  ப்ரித்வியைப்  பத்தி  தப்பா  இன்னும்   ஒரு   வார்த்தை   கூட  நீங்க     பேசக்   கூடாது . பேசினா”

         “பேசினா   என்ன   பண்ணுவ?”

       “அறைஞ்சிருவேன்டா  ராஸ்கல்” அவள்  கோபத்தில்  அலற  , சத்தமாக  சிரித்தான்.  

         “நீ   என்னை   அடிப்பேன்னு   சொல்ற. நியாயமா   இதைக்   கேட்டு   எனக்கு  கோபம்   தான்   வரணும் .  ஆனா  உன்னை  நினைச்சா   எனக்கு   பாவமா  தான்   இருக்கு .  உன்னோட   இத்தனை  ஆழமான  காதலுக்கு   அவன்  தகுதியானவன்   இல்ல  ஹனி”   தன்   காதுகள்   இரண்டையும்  பொத்திக்   கொண்டாள்   தேனுகா.

          “ஜூனைத்   வேணாம்  பேசாதீங்க.  உங்களை   இங்க   இருந்து   கீழ   தள்ளி  விடணும்  போல  ஆத்திரமா  வருது.    என்னை  கொலைகாரியாக்காதீங்க” 

         “ஹனி…ஒரு  நிமிஷம்  ஒரே  நிமிஷம்  என்னைப்   பாரு,    நான்   சொல்றதைக்  கேளு”……தன்   பேண்ட்   பாக்கெட்டுக்குள்   இருந்து   ஃபோனை  எடுத்த   ஜூனைத்,   கேலரியில்   ஒரு   இமேஜை  பெரிதாக்கி  அவள்   முன்னால்   நீட்டினான்.  

        “பாரு ,  இந்த  ஃபோட்டோவைப்  பாரு”  

        “ஃ போனை   கையிலயே  வச்சுகிட்டு  என்   கிட்ட    இல்லன்னு   பொய்  சொல்லிருக்கீங்க  . இப்டி   சின்ன  சின்ன விஷயத்துல   கூட   உண்மையா   இருக்க  முடியாத    நீங்க   என்  ப்ரித்வி   சரி  இல்லன்னு   சொல்றீங்க,    இதை   நான்  நம்பணுமா?  லுக்,  நீங்க  காட்டுற  எதையும்  என்னால   பாக்க   முடியாது . நீங்க  சொல்ற  எதையும்   என்னால   கேக்க  முடியாது ” வேகமாக   அவள்  கையைப்  பிடித்து  முறுக்கினான் . “ஆ…….வலிக்குது  விடுங்க,   கையை   விடுங்க”  என  அவள்  அலற, “இதைப்   பாரு”   அவள்   முகத்துக்கு  முன்னால்   ஃபோனை   நீட்ட,  அதைப்  பார்த்த   தேனுகா   அதிர்ந்து  போய்  இமைக்க  மறந்தாள்.  ஏனெனில்  அது   ஒரு   ஃபேமிலி   ஃபோட்டோ .   இவங்க   தான்  என்   அம்மா   அப்பா   என   ப்ரித்வி  அவளுக்கு  காட்டிய   புகைப்படத்தில்   இருந்தவர்கள்   இவர்கள்   இல்லை.  அந்த  ஃபோட்டோவில்   ப்ரித்வி   வாய்   நிறைய   பல்லாக சிரித்துக்கொண்டு ,  ஒரு குடும்பத்துடன்   நின்றிருந்தான்.  

         “என்ன?  யார்    இந்த   ஃபேமிலின்னு   பாக்குறியா ?  முகத்தைப்   பாத்தா   யாருனு  தெரியாது ,  ஆனா   பேரை   சொன்னா   உன்னால   ஈசியா   கண்டுபிடிக்க  முடியும்.   சொல்லட்டுமா ?   மகாதேவன் . முழுசா  சொல்லப்   போனா   குன்னக்குடி  மகாதேவன் ,  ஞாபகத்துக்கு   வருதா?”   

          ” ஆம்….குன்னக்குடி   மகாதேவன்!  அப்பாவின்   பிசினஸ்   பார்ட்னர்,  நெருங்கிய   தோழரும்  கூட .  ஆனால்  அப்பா   இறப்பதற்கு   முன்னர்  கணக்கு  வழக்கு   குளறுபடியினால்    ஏற்பட்ட  தகராறால்   பார்ட்னர்ஷிப்பில்  இருந்து  விலகிக்   கொண்டார் .  அதன்  பின்னர்   தனியாக   கார்மென்ட்ஸ்   பிசினஸ்  ஆரம்பித்து,அது   நஷ்டமாகி   ஏதோ  கடன்   பிரச்சனையால்   தற்கொலை   செய்து  கொண்டதாக ,  முதலாமாண்டு  கல்லூரி   விடுமுறைக்காக   ஊருக்கு   சென்றிருந்த  போது   அம்மா   சொல்லியிருந்தா.ர்     

           “ஹனி….. என்ன   நியாபகம்  வந்துருச்சா ? இந்த   ப்ரித்வி  அவர்  பையன்  தான் .  அவங்க   அப்பாவோட  தற்கொலைக்கு   மிஸ்டர்   விஸ்வநாதன்,  அதான்   என்   மாமனார் , அவர்  தான்  காரணம்னு   உன்னைப்   பழி  வாங்கத்  தான்  அவன்   உன்   லைஃப்குள்ள   நுழைஞ்சிருக்கான்.   உன்னை  கல்யாணம்  பண்ணிக்கிறதா   சொல்லி   பழகி  , உன்  பேங்க்   அக்கவுண்ட்ல   இருக்கே  க்ரோர்  கணக்கில   பணம் ,  அதை   சுருட்டுறது  தான்   அவன்  எய்ம் .   நீ    அவனோட   நதிமூலம்   ரிஷிமூலம்   பாக்காம  ரொம்ப  முட்டாளா   இருந்து   அவன்   சொன்னது  எல்லாத்தையுமே   நம்பிட்டு   இருந்திருக்க?   அப்டி   இருக்கப்   போய்   தான்   அவன்  உன்னை    ஏமாத்திட்டே   இருந்திருக்கான். நான்  சொன்னது   உண்மை  தான்னு   இப்பவாவது   நம்புறியா   இல்ல ?” 

         “எ….எனக்கு   ஒண்ணுமே   புரியல”   தலையைப்   பிடித்துக்  கொண்டாள்  தேனுகா .  மகாதேவனையும்  அவரது  மனைவியையும்  அவள்   இரண்டொரு   முறை   பார்த்திருக்கிறாள் .  ஆனால்  அதிகமாக   ஹாஸ்டலிலேயே   தங்கி  படித்திருந்ததாலும்,   அது   மட்டுமன்றி   இவளுக்கு   விபரம்   புரியும்   முன்பே  மகாதேவன்   அப்பாவுடன்   சண்டையிட்டு  பிரிந்திருந்ததாலும்,  அவருக்கு   எத்தனை  பிள்ளைகள்   என்றோ  ,அந்த  குடும்பத்தின்   பிண்ணனியோ   எதுவும்    அவளுக்கு   அவ்வளவாக   தெரியாது .  ஆனால்  இந்த  ஃபோட்டோவில்   ஜாடையை   வைத்துப்   பார்க்கும்போது   அப்பட்டமாக   ப்ரித்வி  அவர்  மகன்   தான்   என   புரிகிறது. 

        “ஹனி ,அவங்க  அப்பா  சாவுக்கு   பழி   வாங்கத்தான்   அவன்    உன்னைத்   தேடி”….

         “சரி…….போதும்.   இதெல்லாம்   உங்களுக்கு   எப்படி   தெரிஞ்சது?… அவங்க  அப்பா  மகாதேவன்   சார்ங்குறதால  மட்டும்,  அவன்   என்னை   பழி   வாங்கத்  தான்  வந்திருப்பான்னு   எப்டி   டிசைட்   பண்ண  முடியும்?”   அப்போதும் ,  ப்ரித்வியை  அவள்  விட்டுக்  கொடுக்காமல்  தான்  பேசினாள்.   

         “சொல்றேன் ,  எல்லாமே   சொல்றேன்.  இது    எல்லாமே   எனக்கு   தற்செயலா  தான்   தெரிய   வந்துச்சு .  நம்ம  ரெண்டு  பேரும்   டின்னர்   போனோமே?   அன்னிக்கு  தான்   தெரிஞ்சுச்சு.   ப்ரித்வியோட  பெஸ்ட்  ஃப்ரண்ட்    ஒருத்தன்  தான்   சொன்னான். அதுவும்  எப்டினு   நான்   சொல்றேன்”  ஜூனைத்   சொல்லிக்  கொண்டிருக்கும்  போதே,   மொட்டை  மாடி  கதவின்   பூட்டை  யாரோ   திறக்கும்   சத்தம்.

        ” யா….யாரு?”  தேனுகா  பதட்டமானாள்.

           “யாரா   இருந்தா   என்ன?  நீ எதுக்கு    இவ்ளோ   டென்ஷன்   ஆகுற?   இரு” 

           “மாமு , அக்கா”.அழைத்துக்கொண்டே  வந்தாள்   ரஷிதா.  

            “ரஷி  ,  இங்க   இருக்கோம் . டேங்க்  கிட்ட   வா”   ஜூனைத்   பதில்   குரல்  கொடுக்க   ,வேகமாக   அங்கே   வந்தவள்,

           “அக்கா   இந்தாங்க,   உங்க   ஃபோன்  ஓயாம   அடிச்சுட்டே   இருக்கு”  

           …………..

           “அக்கா   என்னாச்சு?   ஏன்   இப்டி   இருக்கீங்க ?   சொல்லாம   கொள்ளாம  விட்டுட்டுப்   போயிட்டேன்னு   என்  மேல  கோபமாக்கா ?  சாரிக்கா”  

           “ரஷி   அது   ஒண்ணுமில்ல,   அவ  வேற    ஒரு   விஷயத்தைப்   பத்தி  யோசிச்சுகிட்டு  இருக்கா . யார்  ஃபோன்ல?   நீ    பாத்தியா?”  

            “பூமிகா   அக்கா”…..  சரேலென  நிமிர்ந்து,   அவளிடம்   இருந்து   ஃபோனை  பறிக்காத   குறையாக   வாங்கினாள். 

           “அது   யாரு?” 

          “ப்ரித்வியோட    அக்கா”  

           “ஓ ! அந்த   பொம்பளை   ஃப்ராடா?”

          “என்ன   மாமு   சொல்றீங்க ?  அவங்க   ஃப்ராடா ?   ஏன்   அப்டி   சொல்றீங்க?”

          “நீ    கீழ   போ  ரஷி,  நாங்க   இன்னும்  கொஞ்சம்   பேச   வேண்டி   இருக்கு.   இவ வந்து    உன்    கிட்ட    எல்லாத்தையும்  சொல்லுவா,   சாவியை   இங்க  குடு”  அவர்கள்   இருவரையும்   குழப்பமாய்   ஒரு   முறை   பார்த்துவிட்டு , “சரி  மாமு ,  நான்   கீழ   போறேன்.  அக்கா  பாய்” அவள்  விலகி  நடக்க   ஆரம்பித்தாள். 

         “சொல்லுங்க,   ப்ரித்வியோட   அந்த   ஃப்ரண்ட்   யாரு ?” 

         “அன்னிக்கு   நானும்   என்   பெஸ்ட்  ப்ரண்ட்   கவினும்,   எங்க   ஆஃபீஸ்    கேன்டீன்ல   டீ   குடிக்கப்   போயிருந்தோம்.   அவன்   கிட்ட    நான்   எதையும்   மறைக்க  மாட்டேன்  .  எல்லாத்தையுமே   ஷேர்  பண்ணுவேன் . அப்டி  அவன்   கிட்ட   நம்ம   வீட்ல   நடக்குற   ப்ராப்ளம்ஸ்   பத்திலாம்  சொல்லிட்டு   இருந்தேன் .  அப்போ  என்னைக்   கடந்து    கூட்டமா   ஒரு   அஞ்சு   பேர்   போனாங்க.  அவங்க   யாருமே  எங்க  ஆஃபீஸ்   எம்ப்ளாயீஸ்   கிடையாது .  அந்த   கூட்டத்துல   ஒருத்தனோட   பர்ஸ்   கீழ  விழுந்துச்சு,  நான்   அதை   கையில   எடுத்தேன்  . அந்த   அஞ்சு  பேர்ல   அது   யாரோட   பர்ஸ்னு   தெரிஞ்சிக்கிறதுக்காக   ஓபன்  பண்ணேன்.  அதுல  ப்ரித்வியோட  ஃபோட்டோ   இருந்தது  . அவங்களைக்   கூப்பிட்டு,   இது   யார்  பர்ஸ்னு   கேட்டப்ப   என்னோடதுன்னு  சொல்லிக்கிட்டு    ஒருத்தன்   முன்னால  வந்தான்.  அவனைப்  பாத்ததும்   எனக்கு   பயங்கர   ஷாக்”… கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்   என  தேனுகாவின்   மொபைல்  வைப்ரேஷனில்   அதிர்ந்தது.  

           “ப்ச்….. யாரு?” 

           “அவங்க   தான்”

           “அவங்க    தான்னா,   யாரு?”

           “பூமிகாக்கா”  

           “அட்டெண்ட்   பண்ணி   என்னனு”…

          ” தேவையில்ல , இப்ப   நான்   ஒரு   குழப்பமான   மனநிலையில   இருக்கேன்.  ஸோ   என்னால   சரியா   பேச  முடியாது” மீண்டும்   கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்  என   ஃபோன்  அதிர்ந்தது . “சை……என்னனு   தான்   கேட்டு  தொலையேன் ,  இல்லன்னா   மறுபடி   மறுபடி   கால்   பண்ணிட்டே   இருப்பாங்க”   மனசே   இல்லாமல்   அட்டெண்ட்   செய்தாள்.

          “ஹலோ”

         “ஏய்    தேனு , என்னடி ? எத்தனை  தடவை   கால்  பண்ணிட்டே    இருக்கேன்?”

         “சாரிக்கா , நான்   தூங்கிட்டேன்”  ஏதோ  சொல்லி   சமாளிக்க   முனைந்தாள்.

        “தூங்கிட்டியா? சரி  அதை  விடு,  வாய்ஸ்  ஏன்  ஒருமாதிரி  டல்லா  இருக்கு?”   

        “இல்லக்கா,   என்ன   விஷயம்   சொல்லுங்க?   ஏன்   இந்த   நேரத்துல  கால்  பண்ணிருக்கீங்க?

         “ப்ரித்வி   எங்க   தேனு”…..

         “அ…அக்கா  அது   அது ” பரிதவித்தாள்  தேனுகா….  “நான்..  நான்  அக்கா   அதான்  சொன்னேனே ?  கேஸ்   விஷயமா” 

         “பொய்   சொல்லாத ,  உனக்கும்  அவனுக்கும்   ஏதோ   சண்டை.   அதனால  தான்   உன்   கிட்ட   சொல்லாம   கொள்ளாம,   இங்க   அமெரிக்காவுக்கு  வந்து  என்   முன்னால   உக்காந்திருக்கான்”

                                                    –  தொடரும்   

              

                

  

      

    

         

    

  

     

                       

             

       

    No comments yet.