3.
“மாடியில ஏறி நேராப் போனா, லெஃப்ட் சைடு ஃபர்ஸ்ட் ரூம் என் ரூம் தான். உள்ளயே அட்டாச்ட் பாத்ரூம் இருக்கு, அதை யூஸ் பண்ணிக்க”
“நான் மட்டுமா? தனியா எப்டி போக முடியும்?” கேட்டாள் தேனுகா. அவள் சாதாரணமாக பேசுவதே பாடுவது போல் , அவ்வளவு இனிமையாக இருந்தது.
“ஆமா, தனியா நீ மட்டும் தான் போகணும். கொஞ்ச நேரத்துக்கு முன்ன நான் உன் கிட்ட என்ன சொன்னேன்? என் மனைவியானவள் நீ , எப்பவுமே தைரியமா இருக்கணும்னு சொன்னேன்ல?” அவன் நீ என் மனைவி என்று சொல்லும் போது, அவள் முகத்தில் இனம் புரியாத கோபமும், சோகமும், ஒன்று சேர பரவுவதை, கண்டு கொண்டாள் ப்ரியா.
” போ , ரெஸ்ட் ரூம் யூஸ் பண்ணிட்டு, அங்க கொஞ்ச நேரம் படுத்து ரிலாக்ஸ் பண்ணிக்க. நான் அப்றமா வர்றேன்” அவள் மாடிப்படியை நோக்கி நடக்க ஆரம்பிக்க, ரஷிதாவிடம் திரும்பினான் ஜூனைத் . “என்ன மாதிரியான கோர்ஸ் படிக்கணும்னு ஆசைப்படுற ரஷி? அதை சொல்லு. அப்போ தான் அதில எந்த காலேஜ் பெஸ்ட்னு பாத்து , அப்ளிகேஷன் வாங்க முடியும்”
“நான் பி.காம் படிக்க ஆசைப்படுறேன்”
“சரி , நான் நாளைக்கே என் ப்ரண்ட்ஸ் கிட்ட விசாரிச்சு , நல்ல காலேஜ்ல அப்ளிகேஷன் வாங்கிட்டு வந்திடறேன் . அப்புறம் ரஷி”…..
“சொல்லுங்க மாமு”
“என்னை மன்னிச்சுரும்மா. நீயாவது என்னோட திடீர் கல்யாணத்துக்கு என்ன காரணம்னு கொஞ்சம் கேளேன்”
“தேவையில்ல மாமு. வா ப்ரியா” அவள் கையைப் பற்றி வேகமாக இழுத்துக் கொண்டு , தன்னறைக்கு வந்தாள் ரஷிதா. வந்த வேகத்தில் கதவையும் அறைந்து சாத்தினாள். கட்டிலில் அமர்ந்து முழங்கால்களைக் கட்டிக்கொண்டு, அழ ஆரம்பித்தாள் . ஆறுதலாக அவள் தோள் மேல் கையை வைத்தாள் ப்ரியா.
“அழாத ரஷி …… எனக்கு உன் வேதனை புரியுது . ஆனா அழுதா மட்டும் என்ன ஆகிரும் சொல்லு? உனக்கான வாழ்க்கை இது இல்ல. உங்க மாமுவை கல்யாணம் பண்ணி , உன் உலகம் இந்த வீட்டுக்குள்ளயே சுருங்கக் கூடாது. அது தான் கடவுளோட விருப்பம்”
“என் மங்க்னா நின்னு போனது எங்க குடும்பத்துல எல்லாருக்குமே வருத்தம் . ஆனா உனக்கு மட்டும் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கும் , இல்லடி?” ப்ரியாவை நிமிர்ந்து பார்த்து , ஒரு விரக்தி சிரிப்புடன் கேட்டாள் ரஷிதா.
“அது அப்டி கிடையாது . எல்லாரும் ரொம்ப வருத்தமா இருக்குற இந்த டைம்ல நான் சந்தோஷமா இருக்கேன்னு என்னால சொல்ல முடியல . ஆனா என்னோட அறிவாளி ரஷிதா பேகம் இனி படிப்பா . அதை நினைக்கும் போது எனக்கு மனநிறைவா இருக்கு. அதைத் தாண்டி இன்னொரு விஷயத்தையும், என் மூளை உருகுற அளவுக்கு நான் ரொம்ப யோசிக்கிறேன்”
” என்ன விஷயம்? எதைப் பத்தி அவ்ளோ ஆழமா யோசிக்குற?”
“உங்க ஜூனைத் மாமாவோட சடன் கல்யாணத்தைப் பத்தி தான்”
…………….
“என்ன ரஷி அமைதியாகிட்ட?”
“அந்த விஷயத்துல ரொம்ப யோசிக்கிற அளவு என்ன இருக்கு? அவங்க ரெண்டு பேரும் ரொம்ப நாளா லவ்ல இருந்திருப்பாங்க. எப்படியாவது எங்க நன்னா – நன்னியை சமாதானப்படுத்தி, வீட்டு சம்மதத்தோட மேரேஜ் பண்ண நினைச்சிருப்பாங்க. ஆனா எதிர்பாராத ட்விஸ்டா எனக்கும், எங்க மாமுவுக்கும் இவ்ளோ சீக்கிரமா மங்க்னா ஃபிக்ஸ் பண்ணினதுனால, என்ன செய்யனு தெரியாம டக்குனு அந்த பொண்ணோட சொந்த மதத்தோட முறைப்படி தாலி கட்டி, இங்க கூட்டிட்டு வந்துட்டாரு . ரொம்ப ரொம்ப சிம்பிளான ப்ளாட் டி இது” ரொம்பவும் எள்ளலான தொனியில் பேசினாள் ரஷிதா பேகம்.
” நீ இப்ப ரொம்ப எமோஷனலான ஒரு மனநிலையில இருக்குறதால அடி முட்டாளாட்டம் பேசுற”
“என்னடி சொல்ற?”
“ஆமா, லூசுத்தனமா பேசுற உன்னை அடி முட்டாள்னு சொல்லாம, அதி புத்திசாலின்னா சொல்ல முடியும்? இதைக் கேளு, உங்க மாமாவை விட பத்து வருஷம் சின்னவ நீ . உனக்கே உங்க குடும்பம் , உங்க பழக்க வழக்கங்கள், எல்லாத்தையும் மீறாம ஃபாலோ பண்ணனும்னு தோணும் போது, உங்க மாமா நினைக்க மாட்டாங்களா? ஆனா அதுலாம் மீறி , இப்டி ஒரு சம்பவம் பண்ணிருக்காருன்னா நிச்சயமா ஒரு பலமான காரணம் இருக்கும் . அது மட்டுமில்லாம , அந்த பொண்ணு தேனுகா , அவங்க ப்ராமின் . உங்க வீட்ல எப்டி கெஞ்சினாலும் சம்மதம் கிடைக்காதுன்னு உங்க மாமாவுக்கு தெரியாதா?” ப்ரியா சொல்வதில் நியாயம் இருப்பதாகத் தோன்றியது ரஷிதாவிற்கு.
” இப்ப நீ என்னடி சொல்ல வர்ற?”
“உங்க மாமா தேனுகாவை கொஞ்சம் கூட லவ் பண்ணல . தேனுகாவும் அவரை லவ் பண்ணல. ஏதோ சிச்சுவேஷன்ல தான் கல்யாணம் நடந்துருக்கு”
“கேனைத்தனமா பேசாத ப்ரியா. லவ் இல்லாமலா அவங்களை நசீமா பாபி அடிச்சப்ப இயல்பை மீறி அவ்ளோ கோபப்பட்டார்? வீட்ல எல்லாரையும் எதிர்த்துப் பேசுவார்?”
“அதுக்குக் காரணம் காதல் இல்லடி. ஒரு வித ரெஸ்பான்சிபிளிட்டி. நீ உன் கோபமெல்லாம் குறைஞ்ச பிறகு, உங்க மாமாகிட்ட அவர் சொல்ல வர்ற விஷயம் என்னனு கேளு . அப்போ உனக்கே புரியும்” சற்றே யோசித்தவள்,
“சரி” என்றாள்
” ஓகே ரஷி , ரொம்ப நேரமாச்சு. அம்மா தேட ஆரம்பிச்சுருப்பாங்க . நான் சண்டே வர்றேன்டி, என்ன?” பாய்ந்து அவளை கட்டிக் கொண்டு , தேம்பினாள் ரஷிதா.
***************
கண்ணீர் வழிய , கட்டிலின் அருகே நின்று கொண்டிருந்தாள் தேனுகா. சற்று முன்னர் கன்னத்தில் வாங்கிய அறை வேறு எரிந்து கொண்டு இருக்,க பெரிதாய் இருந்த ட்ரஸ்சிங் டேபிள் கண்ணாடியில் தன் முகம் பார்த்தாள். வலது கன்னத்தில் லேசாய் இரண்டு விரல்களின் அச்சு பதிந்திருந்தது. அவமானமும் , ஆத்திரமும் ஒரு சேர பொங்கியது. அவள் யார் உன்னை அடிப்பதற்கு? நீ ஏன் தேனுகா திருப்பி அடிக்காம அழுதுட்டு இருந்த ?இது நீயே கிடையாதே? மனசாட்சி மாற்றி , மாற்றி ஒரே கேள்வியை கேட்டு குடைந்தது . ஆம், நான் தைரியமான பெண் தான். இதுவரை யாரைக் கண்டும் பயந்தது இல்லை. எனக்கு சரியென்று தோன்றுவதை மட்டுமே செய்து பழக்கப் பட்டவள் தான். கேரியர் வைஸ் பார்த்தாலும், ஒரு வெற்றிகரமான லாயர் தான் . தொழில் ரீதியாக எத்தனையோ கொலை மிரட்டல்களைக் கண்டவள். ஆனால் என் தைரியமெல்லாம் என் ப்ரித்வி என்னை விட்டு போன நொடியே மறைந்து போய் விட்டதே, அதை எங்கு போய் தேடுவேன்? அறைக் கதவு மெலிதாய் தட்டப்பட்டது.
“திறந்து தான் இருக்கு , உள்ள வாங்க” என குரல் கொடுத்தாள் . ஒரு நடுத்தர வயது பெண்மணி கதவைத் திறந்து உள்ளே வந்தார் . இரண்டு கைகளிலும், தேனுகாவின் பெரிய பெட்டிகள்.
“சின்னம்மா, உங்க சூட்கேஸ். காருல இருந்து ஐயா தான் எடுத்துட்டு வந்து, இங்க வைக்க சொன்னாரு”
“ஐயா வா?”
“சின்னய்யா , ஜூனைத் ஐயா , உங்க வீட்டுக்காரர் தான்” சொன்னவர்,பீரோவின் அருகில் அந்த பெட்டிகளை வைத்தார். கைகளை உதறி விட்டு கொண்டார்.
“ரொம்ப வெயிட்டா இருந்திருக்குமே? சாரிங்க நான் கூட வந்திருப்பேன். என்னையும் கூப்பிட்டுருக்கலாமே?”
“இதான என் வேலை? அதுக்குத் தான இங்க சம்பளம் வாங்குறேன்? இதெல்லாம் எனக்கு பழக்கமான வேலை தான்மா”
“சரிங்க, ரொம்ப தாங்க்ஸ்”
“உங்க கிட்ட ஒண்ணு சொல்லவா?”
” சொல்லுங்க”
“பத்து வருஷமா இந்த வீட்ல வேலை பாத்துட்டு இருக்கேன். அதுனால இந்த வீட்ல இருக்குற எல்லாரைப் பத்தியும் எனக்கு ரொம்ப நல்லா தெரியும். அந்த அடிப்படையில சொல்றேன் . இப்படி ஒரு குடும்பத்தில வாழுறதுக்கு நீங்க போன ஜென்மத்துல ஏதோ புண்ணியம் பண்ணிருக்கணும். இப்ப வேணா இவங்க எல்லாரும் உங்க மேல கோபமா இருக்கலாம், ஆனா கொஞ்ச நாள்ல எல்லாம் சரியா போயிடும். இப்ராஹிம் ஐயா மனசுல மட்டும் இடம் பிடிச்சுட்டீங்கன்னு வைங்க, அப்புறம் இங்க நீங்க தான் மகாராணி”
“ம்ம்ம்” ஒரு சம்பிரதாயத்துக்கு சிரித்து வைத்தாள் தேனுகா.
“சாப்பிட கூப்பிடறதுக்காக வர்றேன். நீங்க ரெஸ்ட் எடுங்க” சொல்லிவிட்டு அந்த அம்மாள் வெளியேற, ஜூனைத் உள்ளே வந்தான்.
“ஏதாவது குடிக்கிறியா?”
“பரவாயில்ல வேணாம்”
” காஃபி, கூல்டிரிங்க்ஸ் இந்த மாதிரி”
“ஒண்ணும் வேணாங்க, தாங்க்ஸ்” நேரே தன் சூட்கேசை நோக்கி நடந்தவள், அதன் முன் மண்டியிட்டு அமர்ந்து, முன் ஜிப்பைத் திறந்தாள். ஒரு பச்சை நிற கவரை எடுத்தாள்.
“நேக்கு ஒரு ஹெல்ப் வேணும்”
“சொல்லு தேனுகா”
” நேக்கு ஒரு கண்டெயினர் வேணும். இதைப் போட்டு வைக்க”
“பெரிசா வேணுமா? இல்ல சின்னதா?”
“மீடியம் சைஸ் போதும்”
“சரி , கொண்டு தர சொல்றேன். அதுல என்ன இருக்குன்னு நான் தெரிஞ்சிக்கலாமா? உனக்கு சொல்றதுல ப்ராப்ளம் இல்லன்னா சொல்லு”
” என் ப்ரித்வியோட அஸ்தி. இன்னும் ஏழு நாள்கு அப்புறம் கொண்டு போய் ஆத்துல கரைக்கணும்” சலனமே இல்லாமல் அவள் சொல்ல, அவளது பதில் ஜூனைத்தின் இதயத்தை சுருக்கென தைத்தது .வலியோடு அவளை உற்றுப் பார்த்தான். அந்த கவரை ஓரமாக வைத்தவள்,”கொஞ்சம் வெளிய இருக்கேளா? நான் ட்ரஸ் மாத்தணும்” என்றாள்.
“ம்ம்ம்ம்” கனத்த இதயத்துடன் அறையை விட்டு வெளியேறினான் ஜூனைத். அவனது முதுகுக்குப் பின்னால் கதவை அறைந்து சாத்தினாள் தேனுகா.
– தொடரும்.
No comments yet.