கல்யாணம் முதல் காதல் வரை – 27

Shanmuha Sethuramachandran | 03 Feb 2026 | Share

                               27.

         “அத்தா ,  வாங்க   வாங்க   சீக்கிரம்  வாங்க.  உங்களுக்காகத்   தான்   நானும்,   ஜமாலும்    இவ்ளோ   நேரம்   காத்துக்கிட்டு   இருந்தோம்.  போன   காரியம்  என்னாச்சு?” அறைக்குள்  வந்த   முஸ்தஃபா,  மகன்  ஷாரிக்   கேட்ட   கேள்விக்கு   எந்த   பதிலும்   சொல்லாமல்   புன்னகைத்து   விட்டு,  அந்த   சுழல்  நாற்காலியில்   சாய்ந்து  அமர்ந்து,  இன்ட்டர்காம் எடுத்து  ஒரு  லெமன்  ஜூசை   ஆர்டர்   கொடுத்துவிட்டு  வைத்தார்.

           “அத்தா ,   என்னத்தா?”

           “என்னடா?” 

           “நாங்க   கேட்ட   கேள்விக்கு   நீங்க   ஒண்ணுமே   சொல்லாம   இருக்கீங்களே,  போன   காரியம்  என்னாச்சு?”

           “என்   முகத்தைப்   பாத்தாலே   தெரியலயா?   நான்   போன  காரியம்  எந்த   தடங்கலும்   இல்லாம   நல்ல  விதமா  முடிஞ்சிருச்சு .  அந்த  மாடசாமியைப்   பாத்து   எல்லா  விவரத்தையும்  சொல்லிட்டேன்.அந்த தேனுகாவை   நான்   ஆஃப்  பண்ணிக்கிறேன்னு  சொல்லிட்டான்”

           “சூப்பர்ர் …  இப்ப  தான்  எனக்கு   ரொம்ப   ரொம்ப   நிம்மதியா இருக்கு.   சூப்பர்ப்பா . ஆமா…..அந்த  மாடசாமியை   உங்களுக்கு   முன்னாலயே  தெரியுமாத்தா?” ஜமால்  முகத்தில்  உற்சாகம் வழிய, ஷாரிக்   ஏனோ   அமைதி   காத்தான் .

           “இல்லடா   இன்னிக்கு  தான்  முதல்   முதலா   நேர்ல   பாத்தேன்”

            “ம்ம்ம்ம்ம்”

           “ஷாரிக் , என்ன   உன்   முகம்  ஒரு  மாதிரி   இருக்கு  , என்னாச்சு?” 

          “இல்லத்தா ,தேனுகாவை   அந்த  ஆள்  ஆஃப்    பண்றேன்னு   சொன்னான்ல?” 

            “ஆமா” 

           “ஒருவேளை   அந்த   பொண்ணை  அவன்   கொலை   பண்ணிருவானோ?”

           “ஏன்   அதைப்   பத்தி   உனக்கென்ன? அவ   என்ன   உன்   தங்கச்சியா?” ஜமால்  கோபமாகக்   கேட்டான்.

           “இல்ல ,  நான்   அந்த   மாதிரி   சொல்ல   வரல .  இதெல்லாம்   நமக்கு  தேவையில்லாத   வேலை   இல்லயா?  அந்த   பொண்ணு   ஒரு   கெட்டவனை   தான  தூக்குல  போடணும்னு  நினைக்குது. மாடசாமி   செஞ்சது   தப்பு   தானே?”

          “அவ   நம்ம  தங்கச்சி   இடத்துல  வந்து  உக்காந்துகிட்டு  வீட்ல  எல்லாரையும்  அதிகாரம்   பண்ணிக்கிட்டு  திரியுறா,என்   பொண்டாட்டிய   கை   நீட்டி  அறைஞ்சு  அவமானப்படுத்திருக்கா.  அது   உனக்கு   தப்பா  தெரியலயா ? இப்ப   நீ   என்ன   சொல்ல   வர்ற ?  அவளை  முழு  மனசோட   நாம   ஏத்துக்கணும் , நம்ம   வீட்டுலயே  அவ  காலம்  ஃபுல்லா சந்தோஷமா  இருக்கட்டும்,  அப்டின்னு   சொல்ல   வர்றியா?”

            “அண்ணே   நான்   சொல்றது  உனக்கு   புரியல .  அவளை   வீட்டை  விட்டு  அனுப்புறது   நல்ல  விஷயம்.  அதுக்காக  நாம   என்ன   வேணாலும்  செய்யலாம் அது  தப்பு  இல்ல. ஆனா  அவ  சாகணும்னு   நினைக்கிறது   தப்பு . அதைத்   தான்  நான்   சொல்றேன்.   ரஷியே   எல்லாத்தையும்  மறந்துட்டு  , அக்கா  அக்கானு   அந்த   பொண்ணு   மேல  உயிரா   இருக்கு . அப்புறமும்   ரஷி   பேரை   சொல்லிக்கிட்டு  நாம  தேனுகாவை  சாகணும்னு நினைச்சா , அல்லாஹ்  நம்மளை மன்னிக்கமாட்டாரே?”   

         “போதும்   நிறுத்து.  அல்லாஹ்  யாரை  மன்னிப்பான்னு   உன்னை  விட  எனக்கு   நல்லா   தெரியும்.   இப்ப   என்ன  ? நீ  இந்த  விஷயத்தை   இப்ராஹிம்  மாமா  கிட்ட  போய்   சொல்லப்   போற,   அதான?” 

         “இல்ல  அத்தா ,  என்னனாலும்  உங்க  ரெண்டு   பேரையும்   நான்   விட்டுக்  கொடுக்க   மாட்டேன்”

          “நல்லது.  இந்தா,   இந்த  ஃபைலைப்  போய்   மேனேஜர்   கிட்ட   குடுத்துட்டு  வா” ஒரு  ஃபைலை   அவனை   நோக்கி   நகர்த்தினார்   முஸ்தஃபா.  அந்த   பைலை  கையில்  எடுத்துக்  கொண்டு,  ஷாரிக் ஒன்றும் பேசாமல்  அறையை  விட்டு  வெளியேறினான்.

          “இவன்   என்ன   திடீர்னு   இந்த   மாதிரிலாம்   பேசிட்டுப்   போறான்?”  

         “விடு   ஜமால் , அவனால  நமக்கு  எந்த    பிரச்சனையும்   வரப்   போறதில்ல.  அப்புறம்  எதுக்கு   தேவையில்லாம   அதைப்   பத்தி  பேசி   டயத்தை   வேஸ்ட்   பண்ணனும்? வேலையைப்   பாப்போம்  வா”.

                      ************

         அன்று   மாலை  ஆறு   மணி . எலக்ட்ரிக்   ட்ரெயினில்   இருந்து   இறங்கி,  ஜூனைத்  வீட்டுக்கு நடந்து  சென்று   கொண்டிருந்தாள்   தேனுகா.அந்த   சாலை, சென்னையின்  மற்ற   சாலைகள்   போல்   பரபரப்பாக   இல்லாமல்  ,  கீய்ய்ங்க்க்   கீய்ங்க்க்  போன்ற  ஹாரன்   சத்தம்   இல்லாமல்,   மிகவும்  அமைதியாக   இருப்பதால்   அதில்  நடந்து  செல்ல  அவளுக்கு   எப்போதும்   பிடிக்கும். அன்று வழக்கத்துக்கு  மாறாக  மிகவும்  இருட்டிப்  போயிருந்தது.  எதையோ  யோசித்துக்  கொண்டே   வந்தவளின்   பின்னால்,  ஒரு  பத்தடி   இடைவெளி  விட்டு அவன்  பின்  தொடர்ந்து   கொண்டிருந்தான் .  கையில்   பளபளக்கும்   அரையடி   நீள   கத்தி . அந்த   தெருவின்   திருப்பத்தில்,   ஒரு   முட்டு   சந்து   வரும்.   அந்த   குறுகலான   சந்தில்  வைத்து , கத்தியை   தேனுகாவின்   வயிற்றில்  சொருகக்   காத்திருந்தான். அவ்வளவு   நேரம்   அமைதியாய்   இருந்த   தெருவில்,  திடீரென    டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்   என   ஒரு  பைக்  சத்தம். கூடவே  ஹெட்லைட்டின்  வெளிச்சம்.  தேனுகாவை   கடந்த   போது,  அந்த   பைக்  வேகம்   குறைந்து   நின்றது. 

           “தேனுகா”….கரகரப்பாய்  ஒரு  ஆண்   குரல்  . நம்மளை   யார்   கூப்பிடுவது?  என  ஆச்சரியத்துடன்   திரும்பினாள்   தேனுகா.  பகீம் ,  ஆயிஷாவின்   கணவர்.

           “அப்பா”…….

          “பைக்கில   ஏறு,   வீட்டுக்குத்   தான  போற? நான்  போய்   இறக்கி  விட்டுடறேன்”

            “அது   இல்லப்பா,   நீங்க   ஏதோ  வேலையா   போறீங்க ,  அது  என்னால  கெட்டுப்   போக   வேணாம்  . இன்னும்  ரெண்டு   நிமிஷம்   நடந்தா  வீட்டுக்குப்   போயிருவேன்  . தாங்க்  யூ  பா” 

             “நீ   ஏறுமா  வா ”  அவர்   மீண்டும்  அழைக்க ,  தட்ட   முடியாமல்   பைக்கில்   ஏறி  அமர்ந்தாள்.அவளைப்  பின்தொடர்ந்து   வந்தவன் ,  பைக்கின்   ஹெட்லைட்   வெளிச்சம்   தன்   மேல்  விழாதபடி   மறைந்து   நின்று  கொண்டான்.  அவன்   முகத்தில் ,  திட்டம்   சொதப்பிய  கோபமும்   ஆத்திரமும் .  “இனிமே   இந்த   பாதையில   வராதம்மா  , பொம்பளைப்  பிள்ள   தனியா   வர்றது   சரிப்பட்டு  வராது”

           “சரிங்கப்பா”  வந்த   பாதையிலேயே  வண்டியை   திருப்பி , வீட்டின்  வாலில்   இரண்டே   நிமிடங்களில்   அவளை  இறக்கி  விட்டார்.    “ரொம்ப   தேங்க்ஸ்பா”

         ” நான்   தான்   உனக்கு   தேங்க்ஸ்  சொல்லணும்.   நான்   ஊர்ல   இல்லாத   நேரத்துல ,  ஆயிஷாவை  நீ   ரொம்ப  நல்லா  பாத்துக்கிட்டன்னு  அவ   சொன்னா,  ரொம்ப  ரொம்ப   நன்றிமா” 

         “அட   அப்டிலாம்  ஒண்ணுமில்லப்பா,   அம்மா  தான்   என்னைய   பாத்துப்பாங்க” 

          “சரிம்மா,   நீ   உள்ள  போ.  எனக்கு  வேலை   இருக்கு   நான்   கிளம்புறேன்”

          ” ம்ம்ம்   சரிப்பா.   பாத்து   போயிட்டு  வாங்கப்பா,   பாய்”   அவர்   பைக்கை  ஸ்டார்ட்   செய்து   கிளம்பினார். வீட்டுக்குள்  நுழைந்தாள்   தேனுகா.  நேராக   தன்  அறைக்குள்   நுழைந்தாள்.

         “ஃபார்ட்டி   சிக்ஸ் …  ஃபார்ட்டி  செவன்”  தீவிரமாய்   வியர்வை   வழிய,  ஸ்கிப்பிங்   ஆடிக்   கொண்டிருந்தாள்  ரஷிதா.

           “ஹாய்க்கா”

          “ஹாய்   டி ,  என்னடி ?  ஏன்   இந்த   நேரத்துல   போய்   ஸ்கிப்பிங்  ஆடுற?”

          “வளரப்   போறேன்கா”  

          “இனி  மேலா?”  

          “போங்கக்கா”

           “சரிடி ,  எனக்கு   ரொம்ப    பசிக்குது,   டிஃபன்  செய்யலாம்னு  இருக்கேன் . உனக்கு   என்ன   வேணும்னு   சொல்லு”

         “ப்ரட்   சில்லி   செய்யலாமா  கா ? செஞ்சு  தர்றீங்களா?   ப்ளீஸ் …. எனக்கு   சாப்பிடணும்   போல   இருக்கு. மதியம்   நான்   நல்லாவே   சாப்பிடலக்கா” 

          “தாராளமா செஞ்சு   தர்றேன், எதுக்கு  ப்ளீஸ்லாம் ? வீட்ல   ப்ரெட்   இருக்கில்ல?” 

          “இருக்கு  கா . நன்னி   அடிக்கடி  ஷாய்  துக்ரா  செய்வாங்க , அதனால  எப்பவுமே   இங்க   இருக்கும் ”

           “சரி  அப்ப  நீ   போய்   கிச்சன்ல  இரு.  ப்ரெட்  , தக்காளி  , வெங்காயம்   எல்லாம்  எடுத்து  வை.   நான்   ட்ரெஸ்    சேஞ்ச்  பண்ணிட்டு   வர்றேன்” 

            “ஓகே  கா”   ஸ்கிப்பிங்  கயிறை  ஒரு   மூலையில்  எறிந்துவிட்டு ,  வேகமாக  வெளியே   ஓடினாள்   ரஷி.

          ” ஏன்டி ,  கையில   இருக்கிறதை   இப்டியா  போட்டுட்டுப்  போவாங்க ?எருமை” அவளைத்   திட்டிக்  கொண்டே , ஸ்கிப்பிங்  கயிறை   சுருட்டி  வைத்து  விட்டு ,  கதவை  அடைத்து   தாழ்   போட்டாள்.  

           “ரஷி   என்னடி   செய்ற? எதுக்கு   ப்ரட்  எடுத்துட்டு   இருக்க ?  பசிக்குதா?   என்ன  வேணும்   சொல்லு ,  நான்   செஞ்சு   தர்றேன்”   நஸ்ரின்  சொல்ல,

           “வேணாம்   பாபி .  தேனு   அக்கா  எனக்கு   ப்ரட்   சில்லி   செஞ்சு  தர்றதா  சொன்னாங்க .  அதான்   அதுக்கு   தேவையான   எல்லா   பொருள்களையும்  எடுத்து   வச்சிட்டு    இருக்கேன்”

          “அவ   கிட்ட   ஏன்   கேக்குற?   ஏன்   நாங்கள்லாம்    இல்லையா ? அப்ப  இனிமே  எங்க  கிட்ட   இனி   நீ   உரிமையா  எதுவும்  கேக்க   மாட்ட ,   அதானா ?”

          “அது  அப்டி  இல்ல .அக்கா பசிக்குது  ஸ்நாக்ஸ்   ஏதாவது   ரெடி  செய்யலாம்னு  இருக்கேன்,   உனக்கு  என்ன  வேணும்னு   கேட்டாங்க. நான்  ப்ரட்  சில்லி  செய்ங்க  சொன்னேன், ஓகேன்னு  சொன்னாங்க.   அவ்ளோ  தான்   ரொம்ப  சின்ன   விஷயம்.   இதுக்கு  ஏன்   நீ   உரிமை   இல்ல , அது   இதுன்னு  பேசுற?”

            “ஓ…….அப்போ   உனக்கு   மூணு  வேளை  சாப்பாட்டையும்   இனி  அவளையே   செஞ்சு   தர   சொல்லு.   வித   விதமா  ஸ்நாக்ஸ்   செய்யறவளுக்கு   சோறு  ஆக்குறதா   கஷ்டம்  ?” பாத்திரம்  கழுவிக்  கொண்டிருந்த  நசீமா  வெடுக்கென சொல்ல ,  “சரி   சொல்றேன்.   எங்க  அக்கா  எனக்கு   செஞ்சு   தருவாங்க” ரஷிதாவும் சளைக்காமல்  பதில்  கூறினாள்.

           “இப்ப   செஞ்சு   தருவா.   அவளே   இன்னும்   கொஞ்ச   நாள்ல   பிச்சுக்கிட்டு   ஓடிப்போயிருவா ,அப்புறம்  என்ன  செய்வ?”

          “அக்கா  விடு.அவ  சின்ன பொண்ணு  தான ?  அவ  கூட   ஏன்   மல்லுக்கட்டுற?$

         “சும்மா   இருடி,  அவ  சின்னவன்னா  சின்னவ   மாதிரி   நடந்துக்கணும் .  ஏய்  ரஷிதா , சொல்லு , உங்க  அக்கா   நம்ம   வீட்டை   விட்டு  போயிட்டான்னா , அப்போ  சோறுக்கு   என்ன   செய்வ?  நான்   சமைச்சதை   தின்னுட்டு,   என்   கிட்டயே  வாய்   ஆடுறியா? இதோ  பார்  என்னைக்கா  இருந்தாலும்,  நீ   எங்ககிட்ட  தான்   வந்து   நிக்கணும்  மறந்துடாத” 

          “ஏய்ய்ய்  நசீமா, மூடு வாயை”  கத்திக்   கொண்டே , அவள்   முன்னால்   வந்து   நின்றாள்   தேனுகா. 

          “உனக்கு   இருக்கிறதென்ன  நாக்கா?  இல்ல   தேள்   கொடுக்கா?  அவ   இடத்துல நான்   வந்துட்டேன்னு   தான   என்னை  உனக்கு   பிடிக்கல?   இப்ப   என்னமோ  அவளையே   நான்   சமைச்சதைத்  தான்   திங்குறன்னு   சொல்லி   கேவலமா  பேசிட்டு  இருக்க?உனக்கு  வெக்கமாயில்ல, பொம்பள   தான  நீ ?”

          ” ஏய்ய்   தேனுகா!!! வாயை  அடக்கு.  என்னைப்   பத்தி   உனக்கு   தெரியாது” 

         ” உன்னைப்  பத்தி   எனக்கு  எல்லாம்   தெரியும் . நான்   போட்ட   சோறுல  தான்  நீ   இப்டி   வளர்ந்து   நிக்குறன்னு   பாட்டி, ஆயிஷா அம்மா, நிஷா  அம்மா , யாராவது   சொன்னா   உனக்கு  எப்டி  இருக்கும்?   சும்மா  ரஷி  மேல  நான்  உயிரையே   வச்சிருக்கேன்னு   பேச்சுல  சொல்லிட்டே   இருந்தா  ஆச்சா? இங்க  பாரு , இது   தான்   உனக்கு   லாஸ்ட்  வார்னிங் .  இனிமே   ரஷிதான்னு   இல்ல,  யார்  கிட்டயுமே    நீ    இந்த   மாதிரி   பேசக்  கூடாது”  கிச்சன்   வாசலில்   நின்று  தேனுகா   பேசியதைக்   கேட்டுக்  கொண்டிருந்த   நிஷாவுக்கு  கண்ணீர்   பெருகி   வழிந்தது
 

 

    

               

        

        

   

      

    No comments yet.