26.
இரண்டு நாட்கள் அப்படியே நகர்ந்து விட , அன்று இரவு சாப்பிட்டு முடித்து வந்து கட்டிலில் சாய்ந்திருந்தாள் தேனுகா.
ரஷி இன்னும் வந்திருக்கவில்லை. இந்த இரண்டு நாட்களாக அதீதமான வேலைப் பளுவால் அவளுடன் பேசுவதற்கே நேரம் கிடைக்கவில்லை .அவளும் அப்படித்தான், அவளுக்கும் நிறையவே வேலையிருந்தது.
“அக்கா”
“வாடி , உன்னைத் தான் தேடிக்கிட்டு இருந்தேன் . சாப்பிட்டியா?”
“சாப்டேன்கா”
“எங்க போன இவ்ளோ நேரம்?”
“ஆகா, அதை நான் கேக்கணும். தலை குனிஞ்சு வடகறியை ஒரு கை பாத்துக்கிட்டே நிமிர்ந்து பாக்குறேன், பக்கத்துல உக்காந்து சாப்பிட்டுக்கிட்டு இருந்த உங்களைக் காணோம். அப்றம் தான் உத்து கவனிச்சா எங்க மாமுவையும் காணோம். நீங்க ரெண்டு பேர் தான்கா மேட் ஃபார் ஈச் அதர்”
“ஏய்ய்ய் வாயாடி , வாயை மூடு”
“அக்கா இதுல கூட எப்டிக்கா இரண்டு பேரும் ஒரே மாதிரி இருக்கீங்க? ரெண்டு பேரும் ஒரே நேரத்துல சட்டுனு மாயமா மறைஞ்சிட்டீங்க?”
” நான் சாப்பிட்டு முடிச்சுட்டு ஆயிஷா அம்மா ரூம்கு போனேன்டி. அப்பா நாளைக்கு காலையில வர்றாங்கன்னு சொன்னாங்க, அதான் கிளம்பிட்டாரான்னு கேக்கப் போனேன். அப்புறம் அம்மாவுக்கு மாத்திரை எடுத்து குடுத்துட்டு, கொஞ்ச நேரம் கூட உக்காந்து பேசிட்டு வந்தேன். உங்க மாமா எங்க போனார்னு நான் கவனிக்கவும் இல்ல , அதுக்கான அவசியமும் எனக்கு துளி கூட இல்ல”
“ப்ளீஸ் கா இந்த மாதிரிலாம் பேசாதீங்கக்கா , அப்புறம் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். சரி கேக்க மறந்துட்டேன்ன்ன்ன் ,முந்தா நாள் எங்க மாமு நம்பர் கேட்டு வாங்கி அவர் கிட்ட ஏதோ உதவி கேக்கப் போறதா சொன்னீங்களே? அது என்ன உதவின்னு நான் கேக்க மாட்டேன் , அதுக்கு மாமா ஓகே சொல்லிட்டாராக்கா?”அவள் மூக்கைப் பிடித்து திருகினாள் தேனுகா.
“நீ கேக்கலாம்டி . என் கிட்ட உனக்கு இல்லாத உரிமையா? அது என்னனா, ப்ரித்வியை வெட்டுன கேஸ்ல உங்க மாமுவை ஐ விட்னஸ் ஆக்கலாம்னு எங்க லாயர் சொன்னாரு. நீ அவர் கிட்ட பேசிப் பாருன்னு சொன்னார், அதான் அவரால சாட்சி சொல்ல முடியுமான்னு கேட்டேன், கொஞ்சம் கூட யோசிக்காம உடனே சரின்னு சொல்லிட்டார்”
“வாவ்வ்வ்!!!சூப்பர்ர்ர்ர் கா. அப்போ கூடிய சீக்கிரமே அந்த ரௌடி பயலுக்கு மரண தண்டனை கிடைக்கப் போகுதுன்னு சொல்லுங்க . இன் ஷா அல்லாஹ்ஹ்!!!!” ரஷிதாவுக்கு , தூங்கும் முன் பால் குடிப்பது ஒரு வழக்கமான பழக்கம். இன்று நான் போய் அவளுக்கு பால் டம்ளரை குடுத்துட்டு வர்றேன் என டம்ளரோடு வந்து, அறை வாசலில் நின்று கொண்டிருந்த நசீமா, உள்ளே நடந்த உரையாடலை அட்சரம் பிசகாமல் கேட்டு விட்டாள். தனக்குள்ளே சில முக்கியமான கணக்குகளைப் போட்டுக்கொண்டே அறைக் கதவை கோபமாக தட்டினாள். டொக் டொக் டொக்……. கதவைத் திறந்த ரஷிதா , “என்ன பாபி பால் கொண்டு வந்தியா? தாங்க் யூ. ஆனா அதுக்கு ஏன் கதவை இப்டி தட்டுற?”
“ஏய் வாயை மூடு. பல்லைப் பேத்துருவேன் . இந்தா , வாங்கிகிட்டு பேசாம உள்ள போ. வர்ற கோபத்துக்கு உன்னை கன்னம் கிழியிற மாதிரி அடிக்கப் போறேன் பாரு ”
“ஷப்பா,,,,, வாயா இது?” சொல்லிக் கொண்டே அறைக்குள் நுழைந்து, கதவை சாத்த முயல,
“நிறுத்துடி” என ஒரு கையால் கதவைப் பிடித்துக் கொண்டு ,அறைக்குள் நுழைந்தாள் நசீமா.
“நீங்க பேசிக்கிட்டு இருந்தது எல்லாத்தையும் நான் கேட்டுட்டேன். உனக்கு என்னடி வேணும்? என் தம்பியை எதுக்கு மென்மேலும் டார்ச்சர் பண்ணிக்கிட்டே இருக்க? உனக்கு அவன் என்ன பாவம் செஞ்சான் ? அனாதையா நின்ன உன்னை, பொண்டாட்டியா ஏத்துக்கிட்ட தங்கமான பையன் அவன். அவனை நீ மதிக்காட்டி கூட பரவாயில்ல, ஆனா அவன் உயிருக்கு உலை வைக்கப் பாக்குறியே? உனக்கே நல்லா இருக்கா?”
“பாபி? இப்ப எதுக்கு நீ தேவையில்லாம கத்திக்கிட்டு இருக்க? அப்போ நாங்க பேசுனதை ஒட்டு கேட்டுக்கிட்டு இருந்துருக்க , சரி தானே ? சொந்த வீட்டுக்குள்ளயே ஒட்டு கேக்குற. என்ன கேவலமான ஜென்மம் நீ?”
“நிறுத்து ரஷிதா. அப்படி நான் என்ன பேசுறீங்கன்னு நின்னு கேட்டதால தான், உங்க அக்கா அக்கானு ஒருத்திய கொஞ்சிக்கிட்டு திரியுறல்ல? அந்த கொக்காவைப் பத்தி முழுசா தெரிஞ்சுச்சு”
“இப்ப மாமு சாட்சி சொல்லப் போறதால உனக்கு என்ன ப்ராப்ளம்? சொல்லப் போனா , அப்டி அவர் சாட்சி சொன்னா அவருக்கு இருக்குற குற்ற உணர்வு குறையுமே”
“எனக்கு ப்ராப்ளம் இல்ல. சாட்சி சொன்னா அவனுக்கு தான் பிரச்சனை. அன்னிக்கு அந்த வீணாப் போன மாடசாமி இங்க வந்து பிரச்சனை செய்தப்ப, நீயும் தான பாத்த அவனைப் பாத்தா? ரொம்ப பயமா இருந்துச்சுனு சொன்னல ? அவனுக்கு எதிரா ஜூனைத் போய் சாட்சி சொன்னா என்ன ஆகும்? இவகூட ஊர் சுத்திக்கிட்டு திரிஞ்சவனை வெட்டிப்போட்ட மாதிரி , நம்ம ஜூனைத்தை வெட்டினா நம்ம என்னடி செய்வோம்? அதை நம்மால தாங்க முடியுமா?”
“பாபி உனக்கு வாய்ல நல்ல வார்த்தையே வராதா? உன்னைப் பாத்தா எனக்கு ரொம்ப எரிச்சலா இருக்கு. முதல்ல வெளில போ”
“சும்மா இரு ரஷி எதுக்கு அவங்களை இந்த மாதிரிலாம் பேசுற?” தேனுகா பதட்டமாய் உரையாடலில் நுழைய,
“அடடா!!!! நீ நல்லா நடி. இது எல்லாத்துக்கும் நீ தானடி காரணம்? அவ பிறந்ததுல இருந்து நாங்க பாத்துக்கிட்டு இருக்கோம், இப்ப வரையிலும் அவ யாரையும் இந்த மாதிரி தூக்கி எறிஞ்சி பேசினதில்ல.எப்ப உன் கூட சேர்ந்தாளோ அப்பல இருந்து தான் அவ ஒவ்வொரு கெட்ட பழக்கமா செய்துட்டு வர்றா. ஏய் ஒண்ட வந்த பிடாரி , இருடி உன்னை பாக்கவேண்டிய இடத்துல பாத்துக்குறேன்” கோபமாய் கத்திவிட்டு அவள் செல்ல,
“அக்கா, ஏன் என்னைத் தடுத்தீங்க? இன்னும் நல்லா திட்டிருப்பேன்”
“சும்மா இரு, இப்ப அவங்க கூட சண்டை போடுறது விஷயம் இல்ல. ஜூனைத், அவர் சாட்சி சொல்லப் போற விஷயத்தை வீட்ல பெரியவங்க யார் கிட்டயும் சொல்ல வேணாம், ரகசியமா இருக்கட்டும்னு சொன்னாரு . முக்கியமா இந்த லேடிக்கு தெரியக் கூடாதுன்னு சொன்னாரு. ஆனா இவங்க கிளம்புன வேகத்தைப் பாத்தா, நேரா தாத்தா ரூம்ல தான் போய் நிப்பாங்கன்னு தோணுது”
“ஐயோ அக்கா !! சாரிக்கா, நான் அந்த ஆங்கிள்ல யோசிக்கவே இல்ல. சாரி என்னை மன்னிச்சிடுங்க”
“மன்னிப்பு கேக்குற அளவுக்கு நீ பெரிய தப்பு ஒண்ணும் பண்ணிடல, விடு . ஆனா யார் கிட்டனாலும் உடனே சண்டைக்குப் போறதை நிறுத்து. இனிமே எல்லா ஆங்கிள்லயும் யோசிச்சுப் பழகு , என்ன புரியுதா?”
” புரியுதுக்கா. ரொம்ப ரொம்ப சாரி. தாத்தா ஏதாவது கேள்வி கேட்டா நாம என்ன செய்யுறது ? அதையும் இப்பவே யோசிச்சு வச்சுக்கலாம்கா”
” முதல்ல இதைப் பத்தி ஜூனைத் கிட்ட பேசணும். அப்போ தான் ரெண்டு பேரும் சேர்ந்து டிஸ்கஸ் பண்ணி, தாத்தா கேள்வி கேக்கும் போது ஒரே மாதிரியான பதில்களை சொல்ல முடியும். இல்லன்னா அது வேற இஷ்யூ ஆகிடும்”
“சூப்பர்ர்ர்ர்கா !!! இப்பவே மாமுவுக்கு கால் பண்ணுங்க”
” ம்ம்ம்”……சொன்னவள் வேகமாக எழுந்து சார்ஜ் ஏறிக் கொண்டிருந்த தன் மொபைலை எடுத்தாள்…….ஆனால், இவர்களின் கணிப்பை பொய்யாக்கி விட்டு, நசீமா போய் நின்ற இடம் மொட்டை மாடி. அங்கு ஜமால், ஷாரிக், முஸ்தஃபா மூவரும் அமர்ந்து, அந்த மாதத்திற்கான ஃபேக்டரியின் வரவு செலவு கணக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அது அவர்களின் மாதாந்திர பழக்கம் தான் . அவர்கள் முன்னால் புயல் போல வந்து நின்றாள் நசீமா. மூவரும் அவளை நிமிர்ந்து பார்த்தனர். “என்னாச்சு? ஏன் இப்டி மூச்சு வாங்குது? கீழ ஏதாவது பிரச்சனையா?” அவளது கணவன் ஜமால் கேட்க,
“வீட்ல ஒண்ணும் பிரச்சனையில்ல. நம்ம தலையில தான் கூடிய சீக்கிரம் இடி விழப் போகுது”
“அஸ்தஃபுல்லா!!! என்னமா? ஏன் இந்த மாதிரி வார்த்தைகள்லாம் பேசுற? அப்டி என்ன ஆச்சு இப்போ?”
“மாமா, அந்த ப்ரித்வியை மாடசாமி வெட்டுன கேஸ்ல ஜூனைத் கோர்ட்ல போய் மாடசாமிக்கு எதிரா சாட்சி சொல்லப் போறானாம்”
” நீ என்ன சொல்ற நசீமா? உனக்கு இந்த விஷயத்தை யார் சொன்னாங்க?”
” தேனுகாவும், ரஷிதாவும் பேசிக்கிட்டு இருந்தாங்க மாமா. நானே கேட்டேன்”
“எப்ப கேட்டீங்க பாபி?”
“இப்ப தான் . கேட்டுட்டு அப்டியே நேரா இங்க தான் வர்றேன்”
“சரி , இப்ப அதனால என்ன? போய் சாட்சி சொன்னா சொல்லட்டும்”
“ஷாரிக் , நீ என்ன லூசா? அப்டி அவன் சாட்சி சொல்லிட்டா , தேனுகாவுக்கு ஜூனைத் மேல இருக்குற கோபம் குறைய வாய்ப்பு இருக்கு . அப்டி கோபம் குறைஞ்சா , அவ இங்கயே தங்கிருவா. அப்டி அவ இந்த வீட்டு பொண்ணா இங்கயே காலம் முழுக்க இருந்துட்டா உனக்கு அது ஓகே வா? மாமா, அத்தை ஆயிஷா, ரஷி இவங்க நாலு பேர் மட்டும் தான் இப்போ வரைக்கும் அவ பின்னால இருக்காங்க. அவளுக்கு ஒண்ணுன்னா எதிர்த்து கேக்குறாங்க. இந்த நிலைமைல இருக்கும் போதே அவ யாரையும் மதிக்க மாட்டேங்குறா . நாளைக்கு ஜூனைத் கூட ராசியாகிட்டா வேற வினையே வேணாம். இப்ப நான் சொல்றது புரியுதா?” முஸ்தஃபா காட்டமாகக் கேட்டார். “புரியிது அத்தா, இப்ப நம்ம இதைத் தடுக்கணுமா? இல்ல நடந்து முடிஞ்சதுக்கு அப்புறம் பெரிய விஷயம் ஆக்கணுமா? என்ன ப்ளான்? அதை சொல்லுங்க”
“இந்த ரெண்டுமே இல்ல. நான் மாடசாமியை நேர்ல சந்திச்சு , இந்த விஷயத்தை வத்தி வைக்கப் போறேன். இதை வச்சு தேனுகாவுக்கு உயிர் பயத்தைக் காட்டப்போறேன்” முஸ்தஃபா குரூர புன்னகை சிந்தினார்.
No comments yet.