கல்யாணம் முதல் காதல் வரை – 24

Shanmuha Sethuramachandran | 01 Feb 2026 | Share

                               24.

           காலிங்பெல்லை  அடித்துவிட்டு  கதவு  திறக்கப்பட   காத்திருந்தாள்   தேனுகா. கதவைத்   திறந்து,

           “தேனு, வா  வா  உள்ள  வா,எப்டிம்மா   இருக்க?”   ஆசையாய்   கையைப்  பிடித்து  வீட்டினுள்   அழைத்துப்  போனாள்  தாரணி.  கோவிந்தன்   சாரின்   மகள்.  

         “நல்லா இருக்கேன்கா. நீங்க  எப்டி  இருக்கீங்க?’ கேட்டுக்கொண்டே  சோபாவில்  உரிமையாய்  அமர்ந்தாள்  தேனுகா . அந்த  வீடோ,  இல்லை அந்த   வீட்டில்  வசிக்கும் மனிதர்களோ   அவளுக்கு   புதிதானவர்கள்  இல்லை . அந்த   குடும்பத்தோடு  அவளுக்கு  மூன்று  வருடப்  பழக்கம் . கோவிந்தன், அவர்  மனைவி  அலமேலு , தாரணி அக்கா  என மூவருமே   தேனுகாவின்  மனதுக்கு   மிகவும்   நெருக்கமானவர்கள்  தான்.

         “நான்   நல்லா   இருக்கேன்   தேனு.  அம்மா   அப்பா  நான்   எல்லாரும்  நீ   எப்ப  வருவ   எப்ப  வருவன்னு   வெயிட்  பண்ணிட்டே   இருந்தோம் . அப்புறம்  அப்பா  ஒரு   சின்ன   வேலை   இருக்குன்னு  வெளிய   கிளம்பி   போயிருக்கார்.  கிட்ட  தான் , டென்   மினிட்ஸ்ல   வந்திருவார். அப்புறம்ம்ம்ம் …  அப்பா  நேத்து  ராத்திரி   உன்   கிட்ட   பேசினதைப்  பத்தி  காலையில  தான்  என்   கிட்ட   சொன்னாரு.  லிட்ரலி   ரொம்ப  நொந்து  போயிட்டேன் , ஐ  அம்  சாரி  தேனு”அவள்  பெருகி  வரும்   கண்ணீர்  வெள்ளத்தோடு பேசிக்கொண்டு  இருக்கும்  போதே,  

          “தேனு   வந்துட்டியா?  வா  வா”   சொல்லிக்   கொண்டே   உள்ளறையில்   இருந்து   வெளியே   வந்தார்   அலமேலு.

         ” மேடம் ” சோபாவில்   இருந்து  எழுந்து  நின்ற   தேனுகா,  அவரை   நெருங்கி  கால்களில்   விழுந்தாள்.  

         “நல்லா  இரு . ப்ரித்வியை  கட்டிக்கிட்டு விருந்துக்கு   இங்க   வருவ , உங்க  ரெண்டு  பேரையும்  சேர்த்து   ஆசீர்வாதம்  செய்யப்  போறேன்னு   கனவு   கண்டிக்கிட்டு  இருந்தேனே , இப்ப  எல்லாமே   போச்சே”  அவளைக்   கட்டிக்கொண்டு   கதறி அழ   ஆரம்பித்தாள்  அலமேலு.   

          “மேடம்ம்ம்ம்ம்”…….

          “அவன்  இப்ப   எங்க?…..எங்கடி  அவன்  பொணத்தை   வச்சிருக்க?   எப்ப   உன்   கூட வந்தாலும்   என்   கூட   ஒரு   ஃப்ரண்ட்   மாதிரி   பேசுவான்.   என்   சமையலை  அவ்ளோ  ரசிச்சு   ருசிச்சு   சாப்பிடுவான். கடைசியா   அவன்   முகத்தைக்  கூட  என்னால   பாக்க    முடியலயே”……..

         “அவனை  நானே  மார்ச்சுவரி  வேன்ல  கொண்டு   போய்   எலக்ட்ரிக்  சுடுகாட்டுல  வச்சு   எரிச்சுட்டேன்   மேடம்.   நாளைக்கு   அந்த  அஸ்தியை மருந்தீஸ்வரர்  கோயில்ல   கரைக்கணும்’அழுகையை  நிறுத்தி ,  திக்கி  திக்கி   பேசினாள்  தேனுகா. 

         “அம்மா,   அம்மா   அவளை  விடும்மா.  முதல்ல   உக்காரு,  அவளுக்கு   ஆறுதல்   சொல்லி   அவளைத்   தேத்தணும்னு  தான் அப்பா  அவளை   இங்க   வரச்  சொன்னாரு.  நீயே  அவ   கூட   சேர்ந்து   அழுதா  என்ன   நியாயம் ?  சொல்லு”  தண்ணீர்   ஜக்கோடு  வந்த   தாரணி ,  இருவருக்கும்   தண்ணீர்  குடுத்து   ஆசுவாசம்  அடைய   செய்தாள்.  

          “வாம்மா,  எப்ப   வந்த?”  கேட்டுக்  கொண்டே   உள்ளே   வந்தார்   கோவிந்தன். 

          “இப்ப   தான்  சார்  வந்தேன்” 

          “காஃபி   குடிச்சியா?”

          “அப்பா , அவ   வந்து   ஒரு   பத்து  நிமிஷம்   கூட  இருக்காதுப்பா .அதுக்குள்ள  அம்மா   தான்   ப்ரித்வி   பத்தி   பேசி  அவளை   ரொம்ப   அழ   விட்டுட்டாங்க.    இனி  தான்  காஃபி   குடுக்கணும்”  

          “சரி   சரி  , எனக்கும்   சேர்த்து   ஒண்ணு   கொண்டு  வா”  சோபாவில்  அமர்ந்த  கோவிந்தன் ,  தேனுகாவின்   முகத்தை  உற்றுப்   பார்த்தார்.    

         “சொல்லுமா,  என்ன   தான்  நடந்தது? ஏன்  இவ்ளோ   பெரிய   விஷயத்தை  எங்க   யார்   கிட்டயும்   சொல்லிக்காம   நீயே  தனியா   ஃபேஸ்   பண்ணிட்டு   இருக்க?” 

      ”  லைஃப்ல  எல்லாத்தையுமே  தனியாவே  ஃபேஸ்   பண்ணி   பழகிட்டேன்   சார்  , அதான்.   சார்……எனக்கு   இனிமே  என்  வாழ்க்கையில   எந்த   வித   பிடிப்பும்  இல்ல . ஆனா  என்  ப்ரித்வியைக்  கொன்ன அந்த   மாடசாமியை  தூக்குக்கு  கொண்டு  போகாம   நான்   ஓயக்கூடாது.  அந்த  ஒரே   ஒரு   விஷயத்தை  மட்டும்  கண்டிப்பா   எப்பாடுபட்டாவது   செஞ்சிடணும்னு   ஒரு  வெறி  ஏறுறது   என்   தலைக்குள்ள.  அதுக்கு  உங்க  உதவி   தேவை   சார்”

        ” அந்த   பொறுப்பை  என்   கையில  ஒப்படைச்சிரு    தேனுகா.   அந்த   கவலை  உனக்கு    இனி   வேண்டாம் . இனிமே  எக்காரணம்  கொண்டும்   நீ   அவனுக்கு  எக்ஸ்போஸ்  ஆக   வேணாம் .  அவனால  நம்ம   பெரிய   இழப்பை   சந்திச்சாச்சு,  உன்னையும்   இழக்க   நான்   தயாரா  இல்ல.   யார்  நம்ம  மேல   கேஸ்   போடுறாங்க,   நம்மை   சுத்தி   என்ன   நடக்குதுன்னு  அவன்  யோசிச்சு,   அதுக்கான  ரெமடீசை செய்யலாம்னு   ஆரம்பிக்கும்  போதே,  நம்ம  போட்ட   கேஸ்ல   நாம   வெற்றியை  ருசிச்சிடணும்.    எனக்கு   தெரிஞ்ச  பெரிய  தலைகள்  கிட்ட   பேசி ,  இந்த   மேட்டரை  நான்   ஈசியா   கச்சிதமா  முடிச்சுடறேன்” 

       ” சார்  நான்  அவன்  மேல  என்னென்ன  கேஸ்   போடலாம்னு   லிஸ்ட்லாம்  ரெடி   பண்ணிட்டேன்.   எனக்கு   ஒரு   சில  ஐபிசி  மென்ஷன்   பண்ற   இடங்கள்ல  டவ்ட்  வருது.   அதுல   மட்டும்   நீங்க  என்னை  கைட்   பண்ணுங்க   சார்   போதும்.  என்னால  பாவம்  உங்களுக்கு  எதுக்கு   வீண்  சிரமம்?” 

        “என்னமா   என்னை   மூணாவது  மனுஷன்   மாதிரி   ட்ரீட்   பண்ற?  நான்  உனக்கு   செய்யாம   யாருக்கு  செய்யப்  போறேன் ?  தாரணி   மாதிரி  நீயும்  எனக்கு  ஒரு   பொண்ணு   தானே?   அதை  நான்  அடிக்கடி   உன்   கிட்டயும்  சொல்லிருக்கேன். அப்போ   நான்   சும்மா  பேச்சுக்கு  தான் அப்டி   சொல்லிட்டு   இருக்கேன்னு   நீ  நினைக்கிறியா   தேனுகா?”  

          “சார்…..சே  அப்டிலாம்  இல்ல  சார். உங்களையும்,   மூர்த்தி   அண்ணனையும்  விட்டா   உறவுன்னு   சொல்லிக்க  எனக்கு  வேற   யாரு   சார்    இருக்காங்க?   சரி  சார்,   இனிமே   அந்த   மாடசாமி   கேஸ்  உங்க பொறுப்பு. நான்  அதுல  எந்த  விதத்துலயும்  தலையிட   மாட்டேன்”  

         “இந்தாங்க   காஃபி   குடிங்க,  அப்புறம்  டிஸ்கஸ்   பண்ணலாம்”   சொல்லிக்  கொண்டே,   மூன்று   காஃபி   கப்களை  டீபாயில்   வைத்தாள்   தாரணி. 

        ” நீ    குடிக்கலயாடி?”

       “வேணாம்மா,அதான்  இன்னும் கொஞ்ச நேரத்துல  லஞ்ச்  சாப்ட  போறோமே?  சரி  தேனு,   அந்த   மாடசாமி   விஷயத்தை  விடு. நம்ம   அவனை   சட்டத்துக்கு   முன்னால  இழுத்துட்டு  போய்  நல்ல பனிஷ்மெண்ட்டா   வாங்கிக்   குடுத்துரலாம்   ஓகேவா?  இப்ப  உன்னோட  பர்சனல்  மேட்டர்க்கு  வருவோம். எப்படி   இந்த  திடீர்  கல்யாணம் ? அந்த   பையன்  யாரு ?  உனக்கு   அவனை  முன்னாலயே   தெரியுமா ?”  தாரணி  அவளை  நோக்கி  கேள்விக்கணைகளை  வரிசையாக வீசினாள்.  வேறு  யாராவது  அவளிடம்  இப்படி   பேசியிருந்தால் ,  என்   வாழ்க்கைல  என்ன   நடக்குதுன்னு   தெரிஞ்சுக்க  உனக்கு   அப்படி   என்ன  ஆர்வம்?  என  கேட்டிருப்பாள்.  ஆனால்  இது அவளின்   தாரணி  அக்கா.  

         “அக்கா   அவர்   யாருன்னு  எனக்கு   தெரியாது  .ஏதோ  ஒரு   கம்பெனில  வேலை   செய்யுறாருன்னு   நினைக்கிறேன்  ஆனா   எங்க   வேலை   செய்யுறாருன்னு  சரியா  தெரியாது.  அவங்க  ரொம்ப  பெரிய  குடும்பம்  , பாரீஸ்ல  வீடு,   அவர்  பேர்  ஜூனைத்   கான்ன்னு   நினைக்கிறேன்.  ஜூனைத்னு   தெரியும்,   பின்னாடி  என்ன  பேர்   வரும்னு   தெரியல”   தேனுகா  சொல்லி   முடிக்க,   மூவரும்   அதிர்ச்சியில்  அவளையே   இமைக்காமல்   பார்த்தனர்.

         ” ஏய் !!!  என்னடி   இப்டி   பண்ணிட்ட?  அவனைப்   பத்தி   ஒரு   விபரமுமே  தெரியலன்னா   அப்புறம்  எதுக்கு  அவனை  கல்யாணம்  பண்ணிக்கிட்ட?  அதுவும்  அவன்   முஸ்லிம்  பையன்  வேற.   தப்பா  சொல்ல  வரலை ,  உன்   கல்ச்சரும்  அந்த  பையன்  கல்ச்சரும்   ரொம்ப  மாறுபட்டது.  உன்னால  அதையெல்லாம்   மேனேஜ்  பண்ணி  , அமைதியான   முறையில  வாழ்க்கை  நடத்திர  முடியுமா?   சரி , அது   எல்லாத்தையும்  கூட   விடு .  ப்ரித்வியை   உன்னால  எப்டி  சீக்கிரமா  மறக்க  முடியும்?  அது  ரொம்ப கஷ்டமில்லயா?   இவ்ளோ  சிக்கல்கள்  இருக்கே,   எப்டி   யோசிக்காம  இதை   செஞ்ச  நீ?” 

         “மேடம்,   உங்க   ஆதங்கம்   எனக்குப்  புரியுது  . ஆனா  அப்போ  எனக்கு  வேற  வழி  தெரியல,நான்  இருந்த  சிச்சுவேஷன்  அந்த  மாதிரி, ப்ரித்வி   வெட்டப்பட்டு  இறந்து   போனதுக்கு  ஜூனைத்தும்  ஒரு  வகையில   காரணம்”  என்றவள் ,  நமக்கு   முன்னமே   தெரிந்த  அந்த   சம்பவத்தை  அவர்களிடம்  விரிவாக  சொல்லி   முடித்தாள் . அழுகை  பீறிக்  கொண்டு  வர, அதை   நிறுத்துவதற்காக வேகமாக   ஒரு   காஃபி  கப்பை  எடுத்து,  இரண்டு   சிப்கள்    பருகினாள்.  பின்  மீண்டும்   சொல்ல  ஆரம்பித்தாள் .  “ப்ரித்வி   ஃபோன்ல   இருக்குற  எமர்ஜென்சி   காண்டாக்ட்ஸ்ல  என்   நம்பர்  எடுத்து,   எனக்கு   கால்   பண்ணி  விஷயத்த  சொன்னதே   அவர்  தான்.  எங்க  கல்யாண  ஏற்பாடுகள்   ப்ரித்வி   பாக்கெட்டுல  இருந்து   எடுக்கப்பட்ட  தாலி,   இதெல்லாம்  பாத்து  பாத்து   அவர்   மனசாட்சி   விதவிதமா  கேள்வி   கேட்டு   அவரை   கொன்னுருக்கும்  போல . அதுனால  தான்  அவர்   என்னைக்  கல்யாணம்   பண்ணிக்க  நினைச்சாரு,

 நான்   முடியாதுன்னு  வீம்பா  நின்னப்ப    நீ   என்னை   கல்யாணம்  பண்ணிக்காட்டி   நான்  தற்கொலை  பண்ணிக்குவேன்னு   மிரட்டினார் . எனக்கு  அப்போ   ஒரே   ஒரு   யோசனை  தான்  வந்துச்சு . மரணம்   ரொம்ப   கொடுமையானது , என்னால   யாருக்கும்  அது  வர   வேணாம்னு   யோசிச்சு,  அடுத்து  ஒண்ணும்  பேசாம   நின்னுட்டேன்.   அவரும்  தாலி  கட்டிட்டார்,   அவ்ளோ   தான்”

         “என்னமா,  உன்   வாழ்க்கைல  மட்டும்  ஏன்   எப்பப்   பாத்தாலும்   அதிர்ச்சிகரமான  சம்பவங்களும்  துக்கமான  சம்பவங்களுமே  நடந்திட்டு  இருக்கு?  உஸ்ஸ்… கடவுள்  தான்  உன்னை  காப்பாத்தணும். இனியாவது  உன்   வாழ்க்கை   நல்லா   இருக்கட்டும்”. அலமேலு  சொல்ல ,”ஆமாடி  தேனுகா, எனக்கென்னமோ  உன்  ஹஸ்பெண்ட்   உனக்கு   நல்ல  துணையா  இருப்பார்னு  தோணுது” தாரணி  ஆதரவாக   அவள்  தோளைப்  பற்றினாள். 

          “ஆனா   இன்னும்   கொஞ்ச  நாள்ல  நான்   டிவோர்ஸ்   அப்ளை  பண்ணலாம்னு  இருக்கேன்   அக்கா .  என்னால   அந்த  வீட்டோட   பொருந்திப்   போக  முடியல,  என்  மேல    அந்த   ஆள்   இரக்கப்பட்டு   தாலி  கட்டிருக்கார்   அது   எனக்கு   பிடிக்கல,  அவர்  தற்கொலை  பண்ணிக்குவேன்னு  மிரட்டின விஷயத்தை   அவங்க   வீட்லயும்  சொல்லி  விட்டுட்டேன் . நாளைக்கு   டிவோர்ஸ்னு  நான்   போய்   நின்னா, அவர்  என்னை  மறுபடியும்  செத்துப்போயிருவேன் அப்டின்னு   மிரட்டினா   கூட,   அவங்க  வீட்ல   அதை  ஈசியா   ஹேண்டில்   செய்துக்குவாங்க.  ஆனா   இதுல   பெரிய  சிக்கல்  என்னனா,   அவர்   எனக்கு   டிவோர்ஸ்   தர  மாட்டேன்னு  சொல்றார். அதான்   எனக்கு”…

        “இல்லமா,   இந்த   பேச்சையெல்லாம்  விடு  .விவாகரத்தைப்   பத்திலாம்  நம்ம  அப்புறமா   யோசிக்கலாம்.   ஜூனைத்  கண்  முன்னாடியே   கொலை   நடந்துருக்குறது  நமக்கு   சாதகமான  விஷயம்.  மாடசாமி   ப்ரித்வியை  வெட்டி  கொன்ன   கேஸ்ல  அவனை  ஐ   விட்னஸ் ஸா  போட்டோம்னு  வை , நமக்கு  ஆயிரம்  மடங்கு  நன்மை.   நீ   அவன்  கிட்ட   பேசிப்  பாரு , அவன்   செஞ்ச  பாவத்துக்கு   ஒரு  பிரயாசித்தம்   தானே?”  

          

          

          

          

        

    No comments yet.