21.
” என்னக்கா, நான் பேசிட்டு இருக்கேன் நீங்க அமைதியா இருக்கீங்க. ப்ளீஸ்க்கா, உங்களுக்கும் மாமுக்கும் நடுவுல என்ன ப்ரச்சனைன்னு எனக்கு தெரியல . தெரிஞ்சுக்கவும் இஷ்டமில்ல. ஆனா எதுவா இருந்தாலும் அது ஒரு நாள் கண்டிப்பா சரி ஆகும் . அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. எங்க வீட்டுக்கு ஒரு பெஸ்ட் மருமகளா நீங்க கிடைச்சிருக்கீங்க . உங்களை நான் மிஸ் பண்ண விரும்பலை கொஞ்சம் யோசிங்க”.
“பேசி முடிச்சுட்டியா? இந்தா கத்தி, பப்பாளியை நீட்டா கட் பண்ணு, மறக்காம தோல் சீவிரு”
“என்னமா அவ எவ்ளோ முக்கியமா ஒரு விஷயம் பேசுறா, நீ அதை சட்டையே செய்யாம வேற பேசுறியே?”
” பாட்டி எண்ணையும் தண்ணியும் ஒண்ணு சேருமா?”
“அது எப்டிமா சேரும்?”
” சேராதுல்ல? அதே மாதிரி தான் நானும் ஜூனைத்தும் . எங்க ரெண்டு பேராலயும் சேர்ந்து வாழவே முடியாது. இது நாங்க ரெண்டு பேரும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவங்கங்குறதால நான் சொல்லல. உங்க வீடு என்னை எப்பவும் ஏத்துக்காது , என் மனசும் ஜூனைத்தை எப்பவும் என் கணவரா ஏத்துக்காது. அவர் நீ என்னை கல்யாணம் பண்ணாட்டி நான் தற்கொலை பண்ணிக்குவேன்னு மிரட்டினாரு. ஜூனைத் என்னால சாகக் கூடாதுன்னு தான் அன்னிக்கு நான் அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இப்ப கொஞ்சம் கொஞ்சமா என் பிடிவாதத்தையும் , ப்ரித்வி மேல நான் கொண்டிருக்கிற காதலையும் அவர் உணர ஆரம்பிச்சிருப்பார் . ஸோ இதுக்கு மேலயும் என்னை அவர் கம்பெல் பண்ண அவர் மனசாட்சி இடம் கொடுக்காது. அது மட்டும் இல்லாம, நாங்க பிரியுறது என்னை விட உங்க குடும்பத்துக்கு ரொம்ப நிம்மதியைக் குடுக்கும் . வேற ஒரு நல்ல பொண்ணை உங்க வீட்டு செல்லப் பையனுக்கு கட்டி வைங்க. நல்லா இருப்பாங்க . கேக்க உங்களுக்கு கஷ்டமா இருந்தாலும், இதான் நிதர்சனம். நான் நீங்க சொல்றதை கேட்டுக்கிட்டு இங்கயே காலம் பூரா வாழ்ந்துருவேன்னு நினைச்சுராதீங்க பாட்டி . அப்புறம் நீங்க பெரிய ஏமாற்றத்தை சந்திப்பீங்க”
“அக்கா அது”
“ரஷி , நீ சும்மா இரு , அவ தெளிவா இருக்கா. நீ அது இதுன்னு பேசி அவளைக் குழப்பாத. பாவம் அவ நிறைய உடைஞ்சு போயிருக்கா. காலம் தான் அவளைத் தேத்தணும், தேத்தும்”
“சரி நன்னி”….. பின் அவர்கள் மூவரும் ஜாலியாக பொதுவான விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டு, சிரித்துக் கொண்டு வேலை செய்தனர். நடுவில் சாப்பிட்டு முடித்து வந்த ஆயிஷா, தன்னறைக்குப் போய் மாத்திரை போட்டுக் கொண்டு தூங்கப் போவதாய் மூவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பினார். சரியாய் கால் மணி நேரத்தில், தேனுகாவின் டின்னர் ரெடி ஆகி விட்டது. மிக்சியில் இருந்த ஆரஞ்ச் ஜூசை தம்ளரில் ஊற்றினாள் தேனுகா.
“அக்கா , அவ ஒண்ணும் சமைக்க முடியாதுன்னு சொன்ன? உள்ள போனவளை இன்னும் காணோமே?”
“அதான் நஸ்ரின் எனக்கும் ஒண்ணும் புரியல. நான் எல்லா பாத்திரத்தையும் எடுத்து கப்போர்ட்ல ஒளிச்சு வச்சேன். சாவியையும் நான் தான் கையில வச்சுருக்கேன், அப்புறம் அவ என்ன செய்ய முடியும்? மிக்சிலாம் போட்டு ஏதோ பண்றா?”
” அக்கா , ப்ரிட்ஜ்ல தேங்காய் இருந்துச்சே? ஒரு வேளை அதை எடுத்து தேங்காய்ப்பால் மாதிரி எதையாவது செய்யப் போறாளோ?”
“அதுக்கு அடுப்பைப் பத்த வைக்கணும் இல்லயா ? லைட்டரையும் நான் ஒளிச்சு வச்சுட்டேன். இவர்கள் பேசிக்கொண்டிருந்த போதே , ஒரு ட்ரேயில் ஆரஞ்ச் ஜூசையும் , மில்க் ஷேக்கையும் , பொடிப் பொடியாய் நறுக்கிய பப்பாளி துண்டுகளையும் எடுத்துக் கொண்டு , கிச்சனில் இருந்து வெளியே வந்தாள் தேனுகா . அவள் வரும் அரவம் கேட்டவுடன், நஸ்ரினின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு தூணின் பின்னால் மறைந்து நின்று கொண்டாள் நசீமா . டேபிளில் வைத்தாள் . பெரும் சத்தத்துடன் இடி இடித்து சோவென மழை பெய்ய தொடங்கியது.
“ரஷி, சாயங்காலம் காஞ்ச துணியெல்லாம் மேல கிடக்குதுடி”
“நான் போய் எடுக்குறேன் நன்னி” என ரஷிதா வேகமாக மாடிக்கு ஓடினாள்.
“நானும் போறேன் பாட்டி”
” மணி பத்தரையாச்சு , பேசாம சாப்பிடு . அவ பாத்திக்குருவா”
” இல்ல பாட்டி”
“உன்னை சாப்பிடுன்னு சொன்னேன். நான் போய் அவருக்கு தர வேண்டிய இருமல் டானிக்கை குடுத்துட்டு வர்றேன்”
“ம்ம்ம்ம்” தேனுகா சேரில் அமர்ந்தாள். ஒரு துண்டு பப்பாளியை எடுத்து வாயில் வைத்தாள். நல்லா சுவையா இருக்கே!!!! நினைத்துக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தாள் . உள்ளே அவளது ஃபோன் அழைத்தது. ஒரு வேளை கோவிந்தன் சாரா இருக்குமோ ? வேகமாக எழுந்து, உள்ளே அறைக்குள் ஓடினாள் தேனுகா.
“வா…. இதையும் அவளால சாப்பிட முடியாம பண்ணலாம்”
“அக்கா வேணாம் விடு, நமக்கு எதுக்கு இந்த வேலை? நம்ம தோசைக்கு தொட்டுக்கிறதுக்காக சாம்பார் சட்னின்னு செஞ்ச சமையலை, அவ சாப்பிடக் கூடாதுன்னு நினைச்ச . அதனால ராதி அவளுக்கு ஊத்துன தோசையை எடுத்து பூனைக்கு போட்ட. அது கூட சரி தான். சமைக்கக் கூடாதுன்னு எல்லா பொருளையும் ஒளிச்சு வச்ச அதுவும் சரி தான். ஆனா இப்ப அவளா ஏதோ வீட்ல இருக்கிற பொருளை வச்சு சாப்பிட நினைக்கிறா . அதை ஏன் கெடுக்கணும்? சாப்டட்டும் நம்ம தூங்கப் போலாம், வா”
“ஓ!….சரிங்கம்மா. நீங்க போங்க, நான் தான அவ கிட்ட அறை வாங்கி மானம் கெட்டு நின்னேன்? அதைப் பத்தி நீங்க ஏன் கவலைப்படணும்? அவளால நான் மட்டும் தான கஷ்டப்படுறேன்? உங்களுக்கு என்ன? நீங்க நல்லவங்க, நான் தான் கெட்டவ. போங்க, போய்த் தூங்குங்க” கண்ணீர் வராத தன் கண்களைத் துடைத்தாள் நசீமா.
“ஆப்பா, என்ன நீ இந்த மாதிரிலாம் பேசுற ? உனக்கு ஒரு அவமானம்னா அது எனக்கும் தானக்கா? அழாத. சரி சொல்லு, இப்ப என்ன செய்யலாம்?”
” வேணாம் விடு”
“சொல்லுக்கா”
“இரு” என்றவள் நேரே வாசலுக்கு சென்றாள் . கதவைத் திறந்தாள் . அங்கு பால் தோசையை சாப்பிட்டுக் கொண்டிருந்த அந்த பழுப்பு நிறப் பூனை, சட்டென திரும்பி அவளைப் பார்த்தது மியாவ் என்றது.
” வாடி தங்கம் . தோசை இங்க தான் இருக்கும், வந்து சாப்பிடு. உனக்கொரு முக்கியமான வேலை இருக்கு” என்று அதைத் தூக்கிக்கொண்டு உள்ளே வந்தாள் . நேராக டேபிளுக்கு சென்று, டேபிள் மேல் அதை இறக்கி விட்டாள்.
“இப்பப் பாரு நசீமா வேடிக்கையை” என லேசாக பூனையின் வாலை திருகினாள். உடனே அது கிளர்ந்து எழுந்து, திடு திடுவென டேபிள் மேல் ஓடியது . மில்க் ஷேக்கும் , ஜூசும், கொட்டி வீணானது . அதைப் பார்த்து திருப்தியாய் சிரித்தாள் நசீமா.
“இப்ப அவ எப்டி சாப்பிடுறான்னு பாக்கிறேன். என்னையா அடிக்கிறா ? இனி தினம் தினம் சாப்பாடுற நேரம் அவளுக்கு நரகம் தான் . இந்த வீட்ல இன்னும் இருபத்தி நாலு நாள் எப்டி தாக்குப் பிடிக்கிறான்னு பாப்போம்” நஸ்ரினிடம் சொல்லிக்கொண்டிருந்த போதே ஃபோன் பேசி முடித்துவிட்டு ரூமை விட்டு வெளியே வந்த தேனுகா, அந்த காட்சியைக் கண்டு உறைந்தாள். வயிறு அதீத பசியில் கொர்ர்ர் என கத்தியது. சே! என்ன மனுஷி இவள்? நான் இவளை என்ன செய்தேன்? கோபத்திலும் ,ஆற்றாமையிலும் கண்ணீர் திரண்டு வரத் தயாராய் இருந்தது. போயும் போயும் நசீமா முன்னால் அழுது விடக் கூடாது என சிரமப்பட்டு அழுகையை அடக்கினாள்.
“ஏய்ய்ய்……கண்ட இடத்துல ஓடிக்கிட்டு இருக்க , சொன்ன பேச்சை கேக்க மாட்டியா? சாப்பாடை இப்டி கொட்டி விட்டுட்டியே , வா”…. போலியாய் பதறிக் கொண்டு , அந்த பூனையைத் தூக்கினாள் நசீமா . அருகில் பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு நஸ்ரின்.
” பாபி என்ன இது? உன் பூனை எப்படி இங்க வந்துச்சு?” மாடியில் இருந்து வந்திருந்த ரஷிதா , கேட்டாள்
“தெரியலடி ,அது எல்லாத்தையும் தள்ளி விட்டு கீழ விழுந்த சத்தம் கேட்டுத் தான், நாங்க ரெண்டு பேரும் ஓடி வந்தோம், ஜூசை எல்லாம் கொட்டி… கடவுளே ! இனி இதையெல்லாம் வேற சுத்தம் செய்யணும்”
“அது ரெண்டாவது, இப்ப உன்னோட ஆட்டக்கார பூனை தேனுக்காக்கா சாப்பிட வச்சிருந்த எல்லாத்தையும் தட்டி விட்டு நாசம் பண்ணிருச்சே? அக்கா இப்ப எப்டி சாப்பிடுவாங்க? அக்கா சீக்கிரமா ஸ்விக்கில ஏதாவது ஆர்டர் பண்ணுங்க”
“எப்டி ரஷி ? பத்து மணியோட எல்லா ஹோட்டல்ஸும் ஆர்டர் க்ளோஸ் பண்ணிருவாங்க , எங்க போய் ஆர்டர் பண்றது ? அவ்ளோ தான்”
“இன்னும் சாப்பிடலயா நீ?” கேட்டுக் கொண்டே வந்த சுல்தானா பாட்டி, எல்லாம் சிந்திக் கிடப்பதைப் பார்த்து அதிர்ந்தார். “நசீமா, இதுவும் உன் வேலை தானா ? என்ன பிறவி நீ?”
“நான் ஒண்ணும் பண்ணல ராதி”
“ஓ !! வாசல்ல சாப்டுக்கிட்டு இருந்த பூனை இங்க அதுவா உள்ள வந்து ….. சை , உன் கிட்டலாம் பேசுறதுக்கு என்னால முடியாது . தேனுகா உனக்கு தான் இங்க இருக்குற ஆட்களைப் பத்தி தெரியுமே? ஃபோன் பேசும்போது ரூமுக்கே எடுத்திட்டு போய் சாப்பிட்டுருக்கலாமே?”
“என் தப்பு தான் பாட்டி”
“சரி விடு , ஜூனைத் ரூம்ல கரண்ட் அடுப்பு இருக்கு. நான் போய் அதை வாங்கி, பாலைக் காய்ச்சி டேட்ஸ் போட்டு, ஒரு இனிப்பு பதார்த்தம் செய்யுறேன். நீ உக்காரு தேனுகா: அதே நேரம் கரண்ட் ஆஃப் ஆனது. தன் மொபைல் டார்ச்சை அடித்து, வெளிச்சம் ஏற்படுத்திக் கொண்டு, மாடியில் இருந்து இறங்கி வந்தான் ஜூனைத். தேனுகாவை நெருங்கினான்.
“தேனுகா, நான் நடந்தது எல்லாம் பாத்துக்கிட்டு தான் இருந்தேன். வா, வெளிய போய் சாப்பிடலாம்”
No comments yet.