20.
” என்ன நசீமா?”
“அங்க சாப்பிட வரலயே, உன்னைக் காணோம்னு வீடு ஃபுல்லா எல்லாரும் தேடிட்டு இருக்காங்க. நீ என்னடான்னா இங்க வந்து உக்காந்துகிட்டு , இவளை கொஞ்சிக்கிட்டு திரியுறியா?” சொல்லிக் கொண்டே ஊஞ்சலை நெருங்கினாள்.
“அம்மா, தலையை கோதுங்க. ஏன் நிறுத்திட்டீங்க?” ஆயிஷா கையை மீண்டும் தன் தலை மேல் வைத்துக்கொண்டாள் தேனுகா . அந்த கையைத் தட்டி விட்டாள் நசீமா. “அம்மாவா? யாரு யாருக்கு அம்மா? இனிமே இவங்களை அம்மான்னு கூப்டன்னு வை, வாய கிழிச்சுருவேன். ஆயிஷாம்மா வா சாப்பிடலாம்”
“எனக்கு வேணாம் நசீமா”
“ஏன்?”
” பசிக்கல”
“பொய் சொல்லாதமா, அது எப்டி பசிக்காம இருக்கும்? சாயங்காலம் பயறு அவிச்சு சாப்டப்போவும் நீ சாப்பிட வரல. வா, வந்து சாப்பிடு”
“அம்மா; என்னம்மா நீங்க? சாப்டாமயா இவ்ளோ நேரம் உக்காந்திருந்தீங்க? போங்க, சாப்பிடுங்க” அவர் மடியில் இருந்து எழுந்தாள் தேனுகா.
“இல்ல தேனு வேணாம்”
” நான் சொல்றேன்ல ? எனக்காக சாப்பிடுங்க. ப்ளீஸ்மா , ப்ளீஸ்மா”…….
“சரி, வா நீயும்”
“நான் சாப்பிட்டேன்”
“பொய் சொல்லாத, வா இரண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம் “ஆயிஷா எழுந்து நின்று , தேனுகாவையும் கை பிடித்து எழுப்பினாள்.
“ஐயோ ஆயிஷாம்மா! என்ன? அவ எதுக்கு உன்னை அம்மா அம்மான்னு கூப்டுறா? கேட்கவே பிடிக்கல எனக்கு” நசீமா கத்த கத்த, இருவரும் அதை கண்டு கொள்ளாமல் மெல்ல நடக்கத் துவங்கினர். முன்னால் போய்க் கொண்டிருந்த தேனுகாவை முறைத்தாள். உன்னை என்ன செய்யுறேன் பாரு நினைத்துக் கொண்டே வேகமாக நடந்து அவர்களை முந்திக் கொண்டு, முன்னே சென்றாள்.
“அவ என்ன இவ்ளோ வேகமா போறா? அவ போற வேகத்தைப் பாத்தா உள்ள போய் ஏதோ பிரச்சனை பண்ணுவா போலருக்கு”
“அவங்க பாட்டுக்கு போகட்டும்மா, நீங்க கண்டுக்காதீங்க , சரியா?”
” என்னமோ, ஆனா உனக்கு அவளைப் பத்தி சரியா தெரியாது. ரொம்ப ரொம்ப அடம் . மூத்த பிள்ளைனு அவ என்ன சொன்னாலும் கதீஜா செய்வா. நான் அப்போலருந்தே சொல்லிக்கிட்டே இருப்பேன் , ரொம்ப ரொம்ப தப்புனு. ஆனா அதை யாருமே கேக்கல. ஹூம்ம்ம்” பேசிக்கொண்டே மெல்ல மெல்ல நடந்து, இருவரும் வீட்டுக்குள் நுழைந்து டைனிங் டேபிளை அடைந்தனர்.
“என்ன ஆயிஷா சாப்பிடாம போய் தோட்டத்துல உக்காந்துகிட்ட? மனசு சரியில்லனு சாப்பிடாம இருந்தா எல்லாம் சரி ஆகிடுமா ? போ , போய் சாப்பிடு . தேனுகா, நீயும் சாப்பிடு. உங்களுக்காகத் தான் தூங்காம காத்திட்டு இருந்தேன்” என்றார் சுல்தானா பாட்டி.
” ஆயிஷாம்மா இந்தாங்க தோசை இதுல இருக்கு ,சாம்பார் இருக்கு, மட்டன் சுக்கா இருக்கு, சாப்பிடுங்க” ஹாட்பாக்சை நகர்த்தினாள் நஸ்ரின்.
“என்ன நாலு தோசை தான் இருக்கு?”
” இல்லயே, தேனுகாவுக்கு நான் தோசை போட்டு வச்சேனே ? உள்ள இருக்குன்னு நினைக்கிறேன்”
“இல்ல ராதிம்மா , மொத்தமாவே நாலு தோசை தான் இருக்கு”
” இல்லயே , தோசை இருந்துச்சு. எக்ஸ்ட்ராவா நாலு இருந்துச்சு. சரி சாப்பாடை எதுக்கு கீழ கொட்டணும்னு நினைச்சு , நான் இப்போ தான் அந்த நாலையும் எடுத்து பூனைக்கு வச்சு , பால் ஊத்திப் போட்டுட்டு வந்தேன். பாவம் பல நாள் பட்டினியா இருந்த பூனை போல, வேகமா சாப்பிட்டுக்கிட்டு இருக்கு” அங்கு வந்த நசீமா சொன்னாள்.
“அறிவே இல்லயா உனக்கு? அவ சாப்பிட இருந்ததை பூனைக்கு எடுத்து போட்டு விட்டுருக்க? வேணும்னே தான இந்த காரியத்தை செஞ்ச ? நசீமா, நீ ரொம்ப ஆடற. இது எல்லாத்தையும் அல்லாஹ் பாத்துட்டே தான் இருப்பான்”
” ராதி, சும்மா எப்பப் பாத்தாலும் என்னையே திட்டாதீங்க. இவ சாப்பிடலயா? அதெல்லாம் எனக்கு தெரியாது. யார் சாப்பிடல யார் சாப்பிட்டுட்டாங்கன்னு பாக்குறது தான் என் வேலையா ? ஏன் தோசை ஊத்தும் போதே வந்து சாப்பிடலாம்ல? அதுக்கு என்ன கஷ்டமாம்? இந்த வீட்ல திங்குறது ஒண்ணைத் தவிர இவளுக்கு என்ன வேலை ?சும்மா மகாராணி மாதிரி எப்பப் பாத்தாலும் படுத்து கிடந்தா எப்டி ? இவ பாட்டுக்கு ரூம்லயே இருப்பா, நானும் என் தங்கச்சி நஸ்ரினும் இவளுக்கு பணிவிடை செய்துட்டே இருக்கணுமாக்கும். அதுக்கு தான் எங்க அம்மா எங்களைப் பெத்து இவ்ளோ நாளா வளர்த்து வச்சிருக்கா?”
” இரக்கமே இல்லாம பொய் பேசாத நசீமா. தோட்டத்துல நாங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டதை நீ அங்கயே நின்னு கேட்டுக்கிட்டு தான இருந்த? தேனுகா இன்னும் சாப்பிடலன்னு சொல்லித் தான நான் அவளைக் கூட்டிக்கிட்டே வந்தேன்? பாவி , பாவி”
“ஆயிஷா இரு இரு, இவ கூட சண்டை போடுறதுக்கு இது நேரம் இல்ல . முதல்ல இருக்கிற நாலு தோசையை ஆளுக்கு ரெண்டா வச்சு நீயும் தேனுகாவும் சாப்பிடுங்க, அடுத்து”…..
“ராதீம்மா, என்னை தோசை போட சொல்லாதீங்க. என்னாலலாம் முடியாது” நஸ்ரின் சொல்ல,
“அம்மா உன்னை நான் எதுவுமே செய்ய சொல்லலயே, நீயும் உங்க அக்காவும் இங்க இருந்து கிளம்பினாலே எனக்கு போதும். நானே தோசை ஊத்திக்கிறேன், போங்க”
“அக்கா வா போலாம்”
” இருடி. அவ எப்டி சாப்பிடுறான்னு பாத்துட்டு போலாம் . உள்ள அவ போனாலும் அவளால ஒண்ணுமே சமைக்க முடியாது. அப்படி ஒரு ஏற்பாடு செய்திருக்கேன். கொஞ்சம் பொறு” திமிராக தேனுகாவை பார்த்து சிரித்துக்கொண்டே , அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில் முணுமுணுத்தாள் நசீமா . அதை சேலஞ்சாக எடுத்துக் கொண்டாள் தேனுகா.
“பாட்டி நானே எனக்கு ஊத்திக்கிறேன். தோசை ஊத்துறது என்ன அவ்ளோ கஷ்டமான வேலையா? நீங்க இருங்க .அம்மா, நீங்க சாப்பிடுங்க”
“நீயும் வா , சேர்ந்து சாப்பிடலாம்”
“ஏற்கனவே லேட்டாச்சுமா. மாத்திரை வேற போடணும்ல? நீங்க சாப்பிடுங்க”
“ஓ…….தோசை ஊத்தப் போறாளாம், மாவு காலி, எதை வச்சு ஊத்துவ?”
“அப்டியா? சரி மாவு காலி ஆனா என்ன? பாட்டி , கோதுமை மாவு இருக்கா?”
” இருக்குமா?”
“ம்ம்ம்ம்” சொல்லிவிட்டு கிச்சனுக்குள் நுழைந்தவள் ,அதிர்ந்தாள் . தோசைக் கல், கரண்டி , வடசட்டி, என எதையுமே காணோம் . துடைத்து வைத்த மாதிரி இருந்தது கிச்சன். தான் சாப்பிடக் கூடாது என, அங்கு இருந்த பெரிய கப்போர்டில் எல்லா பாத்திரங்களும் திணிக்கப்பட்டு நெரிசலாய்த் தெரிந்தது. அந்த கப்போர்டை திறக்க முயன்றாள், முடியவில்லை . சாவி கொண்டு பூட்டப் பட்டிருந்தது . இது எல்லாமே நசீமா செய்த கைங்கரியம் தான். மனதுக்குள் நினைத்துக் கொண்டவள், என்ன இவ்ளோ கீழ்த்தரமா யோசிக்கிறா? நான் இன்னிக்கு எப்டியாவது சாப்பிடணும். இவளை ஜெயிக்க விடக் கூடாது, என்ன செய்யலாம்? யோசித்தவள் ,ப்ரிட்ஜைத் திறந்தாள். உள்ளே ஆரஞ்சு பழங்கள் இருந்தது , அதை வெளியே எடுத்தாள். மூன்று பால் பாக்கெட்டுகளும் இருந்தது. நேற்று ரஷிதா அவளுக்கு வாங்கி வந்து குடுத்த இரண்டு டைரி மில்க் சாக்லேட்டுகளும் இருந்தது . ஓகே !! ஒரு ஆரஞ்சும், சாக்லேட் மில்க் ஷேக்கும் குடிச்சுக்கலாம். நல்ல டின்னர் இன்னிக்கு நமக்கு .ஒரு பால் பாக்கெட்டை எடுத்து வெளியே வைத்தாள். இரண்டு ஆரஞ்சு பழங்களைக் கழுவி , வேக வேகமாக உரிக்க ஆரம்பித்தாள்.
“அம்மா தேனுகா, கோதுமை மாவுல என்னடா பண்ணப் போற?” கேட்டபடியே சுல்தானா பாட்டி உள்ளே நுழைந்து, சுற்றும் முற்றும் பார்த்தாள்.
“என்ன தோசைக் கல்லு, கரண்டி எதையுமே காணோமே ? எல்லாத்தையும் கப்போர்ட்ல எடுத்து வச்சி பூட்டிருக்காங்க. சாவி எங்க ? எல்லாம் அவ வேலையா தான் இருக்கும். அவளை இன்னிக்கு என்ன செய்யுறேன்னு பாரு. ஏய் நசீமா” கோபமாய் வெளியேற முயன்றவரை, இழுத்துப் பிடித்து நிறுத்தினாள் தேனுகா.
“பாட்டி இருங்க, அவங்க இது எல்லாத்தையுமே வேணும்னே தான் பண்றாங்க. நான் சாப்பிடக் கூடாதுன்னு தான் இதையெல்லாம் செய்யுறாங்க . இப்ப நம்ம சண்டை போடக் கூடாது. அவங்க கண்ணு முன்னாலயே வயிறார சாப்பிட்டு , மூக்கை உடைக்கணும் “
” எந்த பாத்திரமுமே இல்லாம எப்டி சமைப்ப? நீ எப்பப் பாத்தாலும் இந்த மாதிரி அமைதியா போயிட்டு இருக்காத, அவ என்னிக்கும் திருந்த மாட்டா. தாத்தாவை எழுப்பி”……
“வேணாம் பாட்டி , ஆரஞ்சு இருக்கு, அதை இரண்டை உரிச்சு எடுத்துக்கிட்டேன். பால்ல டைரி மில்க் சாக்லேட்டை உடைச்சுப் போட்டு , ஜீனி சேர்த்து, அரைச்சு எடுத்துக்கலாம். எனக்கு ரொம்ப பிடிச்ச சாக்லேட் மில்க் ஷேக் ரெடி. அவ்ளோ தான் பாட்டி . இங்க வந்ததுல இருந்து இன்னிக்குத் தான் எனக்குப் பிடிச்ச மாதிரி சாப்பிடப் போறேன். நசீமா புண்ணியத்துல” சிரித்தாள் தேனுகா. அவள் கையைப் பிடித்துக் கொண்டாள் சுல்தானா பாட்டி.
“மன்னிச்சிரு தேனுகா, அவளால உனக்கு ரொம்ப கஷ்டம்ல ?”
“பாட்டி அதுலாம் ஒண்ணும் இல்ல. இதை விட பல கஷ்டங்களைப் பாத்து பாத்து வளர்ந்தவ நான். நீங்க என்னை நினைச்சு வருத்தப்படாதீங்க”
“அக்கா” கூப்பிட்ட படியே உள்ளே வந்தாள் ரஷிதா . கையில் இரண்டு பப்பாளிப் பழங்கள். “இந்தாங்கக்கா, ஆரஞ்சோட இதையும் சேர்த்துக்கங்க. ப்ரூட் சாலட் மாதிரி பண்ணிடுங்க. வாசல்ல நின்னு நீங்க பேசினதைக் கேட்டேன் . அதான் ஓடிப் போய் தோட்டத்துல பறிச்சுட்டு வந்துட்டேன். வெட்டித் தரவாக்கா?”
“தாங்க்யூ டி” அவள் கன்னத்தைத் தட்டினாள் தேனுகா.
“பாட்டி… இவ, நீங்க, தாத்தா நீங்க மூணு பேரும் என் மேல காட்டுற அக்கறைக்கு, நான் என்ன கைம்மாறு செய்யப் போறேனோ?”
“காலம் முழுக்க எங்க வீட்ல இருங்க போதும் வேற எதுவும் வேணாம்” பட்டென சொல்லிவிட்டாள் ரஷிதா. அவள் பதிலால் தேனுகாவின் முகம் வாடியது.
No comments yet.