கல்யாணம் முதல் காதல் வரை – 2

Shanmuha Sethuramachandran | 22 Nov 2025 | Share

                            2.

       அந்த   பெரிய   ஹாலில்,  இப்ராஹிம்  தாத்தாவின்  குடும்ப   உறுப்பினர்கள்   அனைவரும்  இருண்ட    முகத்துடன்   குழுமியிருந்தனர்.   நடு   நாயகமாக   ஜூனைத்   நின்று  கொண்டிருந்தான்.   அவனருகில்  தலை  குனிந்த  படி  நெருப்பில்   நிற்பது   போல்   ஒரு   உணர்வில்   தேனுகா.  இப்ராஹிம்  தளர்வாய்   சோபாவில்  சாய்ந்திருந்தார்.   அவர்   அருகில்  சிவந்து, வீங்கிப்   போன   முகத்துடன்  சுல்தானா.  மங்க்னாவுக்காக  வந்திருந்த   சொந்தங்கள்  எல்லாரும்  ஜுனைத்தின்   திடீர்   திருமணம்   பற்றி   கேட்டவுடன்,  வந்த  வழியே  திரும்பி  சென்று  விட்டனர் .  தான்  கண்ட   காட்சி   அதிர்வாய்  மாறி   தொண்டையை அடைத்துக்   கொள்ள,  பேச்சற்று போய்   ஒரு  ஓரமாக  ப்ரியாவின்  மடியில்  தலை   சாய்த்து    படுத்திருந்தாள்  ரஷிதா . தன்  மகளைப்   பார்க்க   பார்க்க  வெறியும்,  ஆவேசமும்   பற்றிக்  கொண்டு   வந்தது  முஸ்தஃபாவிற்கு .  ஆனாலும்  மாமனாரின்  மேல்   கொண்டுள்ள   மரியாதையினால்  பொறுமை   காத்தார் .  கால்   மணி  நேரமாக    அப்படியே   நின்று  கொண்டு  இருந்ததால் ,  லேசாகப்   பொறுமை  இழந்தான்  ஜூனைத் . தன்  தொண்டையை  செருமிக்   கொண்டான். 

      ” ராதா” ( அப்பாவின்  அப்பாவை  இப்படி  தான்   அழைப்பர்) 

       …………  அவனின்  அழைப்புக்கு  தாத்தா  இப்ராஹிம்   அசரவே   இல்லை.

        “ராதிம்மா ,  நீங்க   எல்லாரும்   என்   மேல    ரொம்ப   கோபமா   இருப்பீங்க.  உங்க  கோபம்   ரொம்ப   நியாயமானது   தான்  நான்   அதை   தப்புன்னு   சொல்லக்  கூடாது  , சொல்லவும்    மாட்டேன்.   ஆனா   நான்   ஏன்  இப்படி   ஒரு   முடிவு   எடுத்தேன்னு   நீங்க  தெரிஞ்சுக்கணும்.   சொல்லட்டுமா?”

       “போதும்   நிறுத்து,   நீ   எதையும்  பேசாத   .எங்க   எல்லார்   தலையிலயும்   மண்ணை  அள்ளிப்  போடற   மாதிரி   ஒரு  காரியத்தை , மனசாட்சியில்லாம  ஒரு  பயம் இல்லாம செய்துட்டு, என்ன  தைரியம் இருந்தா  எங்க  கிட்ட   விளக்கம்   சொல்ல   முன்வருவ? உன்னை   என்ன   செய்யுறேன்  பாரு”   ரபீக்   பாய்ந்து   சென்று,   அவன்   சட்டையைப்  பிடித்து    இழுத்தார்.   அவர்    இழுத்த   இழுப்பில்,  அவன்   சட்டையின்   இரண்டு  பட்டன்கள் தெறித்து   எகிறியது. 

        “ரபீக் ,  அவனை   விடு”

       “இல்லப்பா   இவன்”

       “நான்    பேசிக்கிறேன்   சும்மா   இரு”   தான்   அமர்ந்திருந்த   சோபாவில்   இருந்து   எழுந்து ,  மெல்ல   நடந்து   ஜுனைத்தை   நோக்கி   வந்தார்  இப்ராஹிம்.   அவனை  உற்றுப்   பார்க்க ,  அவர்   பார்வையின்  வீரியம்   தாங்காமல்   அவர்   கால்களில்   விழுந்தான்   ஜூனைத்.

      “ராதா,   என்னை   மன்னிச்சிருங்க.  நான்   பண்ணினது   தப்பு   தான்.   ஆனா  ஏன்   பண்ணினேன்னு   கேளுங்க” 

       “காலை   விடு,   விட்டுட்டு   எந்திரி” 

        “ராதா”

        “என்  காலை   விடுன்னு   சொன்னேன்,  முதல்ல   எந்திரி”   அவர்  கோபத்தில்  கத்த,   அவர்   கால்களைப்  பற்றியிருந்த  தன்   கையை  எடுத்துக்   கொண்டான். 

      “செய்யுறதையும்   செஞ்சிட்டு   என்  கிட்ட   வந்து   நாடகமா   போடுற?  எங்களைப்  பத்தி   யோசிச்சுருந்தா, மங்க்னாவும்   அதுவுமா  நீ   இப்படி   ஒரு   வேலையை  செஞ்சிருப்பியா?” 

      ” மாமா,  அவன்   கிட்ட   என்ன   பேச்சு?  இப்படி   ஒரு   மகனை   பெத்ததையே  நான்  பாவம்னு    நினைக்கிறேன்.  அவனையும்,  அவன்  ஒருத்தியைக்   கூட்டிட்டு  வந்து  நடு  வீட்ல   நிறுத்திருக்கானே  அவளையும்,  வெளிய   அனுப்புங்க .  இனி  அவன்  இங்க  இருக்கக்   கூடாது” 

       “கதீஜா,   மாமா   தான்  பேசுறாரில்ல?  நீ   சும்மா   இரு,  அவர்   பாத்துக்கிருவாரு”  மருமகளின்  தோள்  மீது   கையை  வைத்து,  அவளைத்   தேற்றினார்   சுல்தானா  பாட்டி.

    “அம்மா , உன்  பேரென்ன?” இப்ராஹிமை  நிமிர்ந்து   பார்த்தாள்   அவள். 

     “உன்னைத்   தான்   கேக்குறேன்”

     “அ….அது… என்   பேர்”  வேகமாய்  அவளை   நெருங்கிய   நசீமா ,  கண்   இமைக்கும்   நேரத்தில்  அவளை  பளாரென  அறைந்து  விட்டாள் .  அனைவரும்  அவள்  செயலில்  அதிர்ந்து   போயினர்.  

     ” நசீமா,  என்ன    செய்யுற  நீ ?” தீ  போல  அவளை   முறைத்தார்    தாத்தா. 

    “ராதா, சும்மா இருங்க. செய்யுறதெல்லாம்  செஞ்சிட்டு,   நீங்க   கேள்வி   கேட்ட   உடனே பயந்தவ   மாதிரி   நடிச்சுட்டு   இருக்கா.  அவளை   பாக்க   பாக்க   எனக்கு  வயிறு  எரியுது   ராதா .  அங்க   பாவமா  படுத்து  கிடக்காளே   ரஷிதா,  அவளைப்   பாருங்க.  உங்களுக்கும்  கூட   இவ   மேல   அடக்க  முடியாத   அளவு   கோபம்   வரும்.  ஆளைப்  பாரு ,  முழியைப்   பாரு”.

       “ஆப்பா”……….(அக்கா)   இடி  முழக்கம்   போல்   கர்ஜித்தான்   ஜூனைத்.

        “என்னடா?”

        “அவளை   அடிக்கிறதுக்கு   நீ   யார்?”

         “ஏய்….நான்” 

      “வாயை  மூடு”  தன்னருகில் கன்னத்தைப் பிடித்துக்கொண்டு,   மௌனமாய்  அழுது  கொண்டிருந்தவளைப்  பார்த்தவன்,

        “என்   மனைவியை  அடிக்க   நீ   யார்?   உன்னோட   தம்பி   நான் . என்னை  கொலை   செய்யக்   கூட   உனக்கு  உரிமை இருக்கு  . ஆனா   தேனுகாவை   எதுவும்  திட்டவோ,   இல்லை   அடிக்கவோ  உனக்கு  மட்டுமில்ல ,  இங்க   இருக்குற  யாருக்குமே  உரிமை   இல்ல  . மீறி   இவளை  நீங்க   யாராவது   துன்புறுத்த   நினைச்சா,  வேற  ஒரு   ஜூனைத்தை   நீங்க   பாக்க   வேண்டி    இருக்கும்.  அதுக்கு   நீங்க   தயாரா  இருக்கீங்களா?  இருந்தா,   இன்னொரு  தரம்   இவ  மேல  கைவைங்க”  வீட்டினுள்  குண்டூசி   விழுந்தால்   கூட,   இடிச்  சத்தமாய்   கேட்கும்  அளவு   மயான  அமைதி.  நம்  ஜூனைத்தா  இது?   கோபம்   என்றால்  என்னவென்றே   தெரியாதவன்,  எப்போதும்  சிரித்த   முகமாய்   வளைய   வருபவன் ,வீட்டில்   யார்   என்ன   சொன்னாலும்  அதை  புன்னகையோடு   ஏற்றுக்   கொள்பவன். “என்  காலத்துக்கு  அப்புறம்  இந்த குடும்பத்தோட ஒற்றுமைக்கு  பங்கம்   வராம   என்  பேரன்  ஜூனைத்   பாத்துக்குவான்.  இனி  எனக்கு  கவலையே   இல்ல” என  இப்ராஹிம்  தாத்தா   அடிக்கடி    சொல்வதுண்டு.  அப்படிப்   பேர்   வாங்கியவன்   இன்று  எரிமலை  போல்  வெடித்து , பட்டாசாய்  வார்த்தைகளை பேசி  விட்டான் .  அவன்   போட்ட   போடில்   நசீமாவின்   கண்கள்   கலங்கியது . அழுது கொண்டிருந்தவளின்   தாடையில்  கை  வைத்து   நிமிர்த்தினான் . 

       “உன்னை   யாராவது   அடிக்க   வந்தா  நீ   திருப்பி   அடி.   இங்க   எல்லாரும்   சமம்  தான்  . யாருக்கும்   யாரும்  மட்டமில்ல. கடவுளைத்   தவிர   யாரும்   உன்னை  விட  உயர்ந்தவங்க   இல்ல.   என்ன,  புரிஞ்சுதா?”

        ………… 

        “தேனுகா,  உன்னைத்   தான்.   நான்   சொல்றது    புரியுதா?” 

       ” ம்ம்ம்”  மெல்ல   தலையசைத்தாள்.

        “நீ    ஜூனைத்   பொண்டாட்டி,   தைரியமா    இருக்கணும்”  

         “ம்ம்ம்ம்” 

        “ஜூனைத்   சார்”   மூத்த   மாமா  பகீம்  அழைக்க,   அவரை   நிமிர்ந்து   பார்த்தான்.  

        “என்ன   மாமா?”

        “உங்க   இஷ்டத்துக்கு   நீங்க   ஆட்டம்  போடுவீங்க,   ஆனா   அந்த   ஆட்டத்துக்கு   தாளம்    போட   இந்த   வீட்ல   யாருக்கும்  தெம்பு    இல்ல .  அதனால   இனிமே   இந்த   வீட்ல   உங்களுக்கு   இடமில்லை.  சீக்கிரம்  வேற  வீடு  பாத்து  , உங்க  பொண்டாட்டியை அங்க   கூட்டிட்டுப்   போய்   வச்சுக்கங்க”

        “ஓ  ! சந்தோஷம்   மாமா.   நான்  இங்க  இல்லாட்டி   நீங்க   எல்லாரும்   நிம்மதியா  இருப்பீங்கன்னா   நான்   தாராளமா  போறேன் .  தேனுகா   உங்க   யாரையும்  நம்பி  இங்க   வரல,   முழுக்க   முழுக்க  என்னை   நம்பி  வந்துருக்கா.   நீங்க  போகச்   சொல்றதால   எனக்கு   பெரிய   நட்டம்  இல்ல.   அல்லா   புண்ணியத்துல  எனக்கு   நல்ல   வேலை   இருக்கு,   நல்ல  சம்பளம்   வருது.   நான்  உங்க  யாருக்கும்  தொந்தரவு   இல்லாம   போயிடுறேன்.  ஒரு  வாரம் ,  ஒரே   ஒரு   வாரம்   மட்டும்  அவகாசம்    குடுங்க”

     “நல்லது .  இப்ராஹிம்   வீட்டில  ஆளுக்கு  ஆள்   முடிவெடுத்து   பேச ஆரம்பிச்சாச்சுல? நல்லா   இருக்கு , ரொம்ப   நல்லா   இருக்கு”

     “மாமா,  என்னை   மன்னிக்கணும்  நீங்க.  உங்களை   மீறி   எதுவும்   செய்யுற  தைரியம்   எங்க   யாருக்குமே   இல்ல.  முதலும்   கடைசியுமா  உங்க   வார்த்தையை  மீறின   இந்த   ஜூனைத் ,  இந்த   வீட்டுல இருக்கக்  கூடாது . இவனை   இங்க  இருக்க  விட்டா,  ஹாலித்  , ஜமால் , ஹஸ்மத்  கூட   கெட்டுப்   போக   வாய்ப்பிருக்கு” 

      “என்னனாலும்    இன்னும்   இரண்டு  நாள்ல    சொல்றேன் . அது   வரைக்கும்  யாரும்   இதைப்   பத்தி   பேசக்   கூடாது. எல்லாரும்  போய்  அவங்கவங்க வேலையைப்   பாருங்க.  சுல்தானா,  எனக்கு  சூடா   ஏலக்காய்   டீயும்  , அந்த   பிரஷர்  மாத்திரையையும்   எடுத்துட்டு  வா”  வேக  வேகமாக   ஹாலின்   மூலையில்  இருந்த  தன்னறைக்கு   விரைந்தார் .  ஜூனைத்தை  முறைத்தபடியே   அனைவரும்   மெல்ல  மெல்ல   கலைய ,  அவன்   நேரே  ரஷிதா பேகத்தின்   எதிரே   சென்று   நின்றான். 

      “என்னை   மன்னிச்சுரு  ரஷி,   உன்  துக்கத்துக்கு   நான்   தான்  காரணம்”  ப்ரியாவின்   மடியில்   படுத்திருந்தவள், மெல்ல   எழுந்து   அமர்ந்தாள். 

      “நான்   காலேஜ்ல   சேரணும்.   நல்ல காலேஜா   பாத்து   அப்ளிகேஷன்  வாங்கித்  தாங்க   மாமு ”  அவன்   முகம்   பார்க்காமல்  மெல்லிய   குரலில்   சொன்னாள்.  அவளை  அதிசயமாய்   பார்த்துக்   கொண்டிருந்த  ஜூனைத்தை   நெருங்கி  வந்து  நின்றாள்  தேனுகா . அவளைத்   திரும்பி  பார்த்தவன், 

      “என்ன?” 

      “நேக்கு   ரெஸ்ட்  ரூம்   போகணும்”  என்றாள்   தேன்   போன்ற   குரலில்……..

                                                  –  தொடரும்  

        

      

       

    No comments yet.