19.
“நான் திருச்சி பக்கத்துல ஸ்ரீரங்கம்ல பிறந்தேன் .அப்பா கார்மென்ட்ஸ் பிசினஸ் பண்ணிட்டு இருந்தாரு, அம்மா ஹவுஸ் ஒய்ஃப் , எனக்கு அப்புறம் ஒரு தங்கச்சி, பேர் ப்ரியலேகா.எனக்கு என் தங்கச்சினா அவ்ளோ பிடிக்கும். அவளுக்கும் என் மேல ப்ரியம் ஜாஸ்தி. வாழ்க்கை ரொம்ப அழகா போயிண்டிருந்த காலகட்டம் அது. கவர்ன்மென்ட் லா காலேஜ்ல சீட் கிடைச்சு சென்னை வந்தேன். புது ஊரு, புது மனுஷங்க, எந்த மாதிரி இருக்குமோனு பயந்திட்டே வந்தேன் ஆயிஷாம்மா. ஆனா நான் நினைச்சதை விட சென்னை என்னை அன்பா பாத்துக்கிருச்சு. இரண்டு வருஷம் நல்லா இருந்துச்சு. அப்போ தான் ஒரு நாள் எங்கப்பா கால் பண்ணினார் என தொடங்கி , அவர்கள் கேரளா சென்றது வரை சொல்லி முடித்தாள். கண்ணைக் கூட சிமிட்டாமல் அவ்வளவு சிரத்தையாய் கேட்டுக்கொண்டிருந்தாள் ஆயிஷா.
” காலையில சீக்கிரமே போன் வந்துச்சு , எங்க வீட்ல ட்ரைவரா இருந்த மூர்த்தி அண்ணன் தான் கால் பண்ணி என் அம்மா, அப்பா, தங்கை ,மூணு பேரும் ஆக்சிடெண்ட்ல இறந்த விஷயத்தை சொன்னாரு . யோசிச்சுப் பாருங்கம்மா, என் நிலை எப்டி இருந்துருக்கும்? அப்புறம் மூர்த்தி அண்ணன் நிறைய உதவினார். மெயின்டெயின் பண்றதுக்கு ஆள் இல்லன்னு சொத்து எல்லாம் விக்கற வேலையில என் தாய் மாமா இறங்கினார். சொத்தை எல்லாம் ஒவ்வொண்ணா கையெழுத்துப் போட்டு வித்தேன். அந்த மன அழுத்தத்துல என்னால காலேஜ் சரியா போக முடியல. அட்டெண்டன்ஸ் போச்சு, அதுனால எக்சாம் எழுத முடியல, அடுத்த வருஷம் சின்ன பசங்க கூட சேர்ந்து எழுதுனேன். ராத்திரி படுத்தவுடனே என்னால தூங்க முடியாதும்மா. எங்க அம்மா, அப்பா , தங்கை மூணு பேரும் ஆக்சிடெண்ட் ஆன அந்த நொடி என்ன நினைச்சிருப்பாங்க? எவ்ளோ வலி அனுபவிச்சுருப்பாங்கன்னே நினைச்சு நினைச்சு, ஒரு வருஷம் முழுக்க தூக்கத்தை தொலைச்சேன். பெரிய டிப்ரஷன்குள்ள சிக்கிட்டேன். வாரத்துக்கு ஒரு தடவை சைக்யாட்ரிஸ்ட் கிட்ட கவுன்சிலிங் போக வேண்டிய அவசியம் ஏற்பட்டுச்சு . அந்த கால கட்டங்கள்ல லாம், மாமா மட்டும் தான் எனக்கு ஆறுதல். நான் தனியா என்னத்தையாவது யோசிப்பேன் வருத்தப்படுவேன்னு பயந்து, அவர் என்னை தன்னோட வீட்டுக்குக் கூட்டிட்டு போய் பாத்துக்கிட்டார்”
” அன்னிக்கு ப்ரித்வின்னு ஒரு பையனை பத்தி சொன்னியே ? அவர் உங்க மாமா பையன் தானா? அவரைத் தான் நீ நிக்காஹ் பண்ணிக்க நினைச்சியா?” ஆயிஷா குறுக்கிட்டு கேட்க புன்னகைத்தாள் தேனுகா.
“இல்லமா. எங்க மாமாவுக்கு குழந்தை இல்ல, அத்தையும் முன்னாலயே இறந்து போனதால என்னையும் லேகாவையும் தான் அவர் உயிரா வளர்த்தார். எனக்கு நம்பிக்கை தந்து , என்னை ஊக்கப் படுத்தி , எக்ஸாம்ஸ்கு படிக்கும் போது என் கூடவே உக்காந்துன்னு, எல்லாம் எனக்காகப் பாத்து பாத்து செஞ்சார்”
“பரவாயில்ல , ரொம்ப நல்ல மனுஷன். இப்ப அவர் எங்க? எப்டி இருக்காரு?”
“சொர்க்கத்துல……ஆமாம்மா, நான் கடைசி பரீட்சை எழுதிட்டு வந்த அன்னிக்கு தான் அவர் இறந்தார். நார்மலான மரணம் தான், ஹார்ட் அட்டாக். ஆனா என்னைப் பொறுத்த வரைக்கும் அது ரொம்ப அப்நார்மல். சரி நமக்கு அப்பா அம்மா இல்லனாலும் மாமா இருக்காங்கன்னு கொஞ்சம் கொஞ்சமா தெளிவாயிட்டு துக்கத்தை மீறி மேல வந்துட்டு இருந்தேன். அவர் இல்லாம போனதும் திருப்பியும் ஒரு பெரிய இருட்டுக்குள்ள விழுந்துட்டேன். நம்ம கூட யாருமே இல்லாம தனியா ஒரு வீட்ல வாழுறதுலாம் ரொம்ப நரகம். தனிமை ரொம்ப ரொம்ப கொடுமை. நாங்க டூர் போயிட்டு வந்துட்டு இருக்கும் போதே அந்த விபத்து நேர்ந்திருந்தா, நானும் அவங்க கூடவே போயிருப்பேன்னு புலம்பி புலம்பியே நொந்து போனேன். அப்புறம் தான் நமக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்குன்னு புரிஞ்சு,தேங்கியே நின்னுடக் கூடாதுன்னு முடிவெடுத்தேன். நாயா பேயா அலைஞ்சு, ஒரு நல்ல லாயர் கிட்ட ஜூனியரா சேர்ந்தேன்.என் தொழிலைப் பத்தி எல்லாமே தெரிஞ்சுக்கிட்டேன் . தனியா ஆபீஸ் போட்டேன் . சொத்துக்களை வித்து வந்த அமவுன்டை என் பேர்ல மாமா போட்டு வச்சிருந்தார் . அதுனால அந்த ரீதியில எந்த ப்ராபளமும் வரல. கேசை டீல் செய்ய தொடங்குனேன். கொஞ்ச கொஞ்சமா நிறைய க்ளையண்ட்ஸ் வர ஆரம்பிச்சாங்க. கடவுள் அருளால பேஸ்மெண்ட் சரியா அமைஞ்சிருச்சு , எல்லாம் செட் ஆகிருச்சு. ஒரு உறவுன்னு மூர்த்தி அண்ணன் இருக்காரு, அவ்ளோ தான். அம்மா அப்பா கூடப் பிறந்தவங்கன்னு ஒரு அழகான குடும்பத்துல வாழுற பாக்கியத்தை கடவுள் எனக்கு இந்த ஜென்மத்துல குடுக்கலன்னு மனசுல ஆழாம பதிச்சுக்கிட்டு , இனி வேலை தான் எல்லாமேனு நினைச்சுட்டு ஒரு பாதையில போயிட்டு இருந்தப்ப தான், ப்ரித்வி என் வாழ்க்கையில வந்தாரு. பட்டுப்போன மரமா இருந்த எனக்கு, கடவுள் குடுத்த வசந்த காலம். என் குடும்பம் இறந்தப்ப நான் தொலைச்ச சந்தோஷத்தையும் , சிரிப்பையும் ஒட்டு மொத்தமா எனக்கு திருப்பி தந்தாரு. அவரோட குடும்பத்துக்குள்ள என்னையும் இழுத்துக்கணும்னு அவ்ளோ முனைப்பு ப்ரித்விக்கு. எனக்கும் அவங்க வீட்ல எல்லாரையுமே பிடிக்கும். அவருக்கு அப்பா அம்மா இல்ல , கோவிட்ல இறந்து போயிட்டாங்க. ஒரு அக்கா, அவங்க ஃபாரின்ல இருக்காங்க. ரொம்ப அளவான, அழகான , குடும்பம். ஆனா அவங்க அக்கா மாமா எல்லாரும் என் கூட ரொம்ப ரொம்ப க்ளோஸ். நான் ஒரு தடவை அவர் கிட்ட என்ன தான் நீங்க என்னை உருகி உருகி லவ் பண்ணினாலும், கல்யாணம்னு ஒரு விஷயம் நடக்குற வரைக்கும் நான் முழுக்க உங்க வீட்டு மனுஷியா ஆகிட முடியாது , நான் அனாதை தான்னு சொன்னேன். ப்ராக்டிக்கலா பேசறதா நினைச்சு, ஒரு பேச்சுக்கு தான் சொன்னேன் , அதை பொறுக்க முடியாம என் கூட சண்டை போட்டு, அவசர அவசரமா கல்யாண ஏற்பாடுகள் செஞ்சாரு . ஆனா எனக்கு எந்த குறையும் இல்லாம செஞ்சார் . தாலி, இதோ கட்டிக்கிட்டு இருக்கேனே? இதே தாலி தான், புடவைன்னு ஒவ்வொண்ணும் பாத்து பாத்து வாங்குனோம். என் முகத்தில திருப்தியை உணரணும் உணரணும்னு, என்னை கடை கடையா கூட்டிட்டுப் போனார் . நான் வாழ்க்கைல
சந்தோஷமா இருந்த நாட்கள்ல அந்த நாட்களும் அடக்கம். இனி நமக்கு கஷ்டமே இல்ல தனிமையே இல்லன்னு நிம்மதியா, ஆனந்தமா இருந்தேன். ஆனா என்ன ஆச்சு? நான் நினைச்சது எதுவுமே நடக்காம போயிருச்சு. சரி அது கூட பரவாயில்ல, அவர் சாகுறதுக்கு காரணமா இருந்த ஜூனைத்தை கல்யாணம் பண்ணி, ரஷிதா லைஃபை கெடுத்துட்டேன்னு எல்லார் கிட்டயும் திட்டு வாங்கிகிட்டு நான் இங்க வந்து உக்காந்திருக்கேன். என் ப்ரித்வியோட ஆத்மா என்னை மன்னிக்குமா? இல்ல எனக்கு இனி எப்பவுமே மன்னிப்பு கிடையாது. சில காரணங்களுக்காக ப்ரித்வி இறந்த விஷயத்தையும், நான் உங்க ஜூனைத்தை கல்யாணம் செஞ்சுக்கிட்ட விஷயத்தையும் , அவங்க அக்கா கிட்ட கூட இன்னும் சொல்லல. நாளைக்கு அந்த விஷயம் தெரிய வரும்போது என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க? இவ காதல் எவ்ளோ கேவலமான காதல்னு காறித் துப்புவாங்க. மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி அப்டிங்குற மாதிரி, எனக்கு ரெண்டு சைடும் கெட்ட பேர் . உஸ்ஸ்ஸ் இப்ப சொல்லுங்க . உங்க நிலைமையை விட என் நிலைமை மோசம் தானேம்மா ?” அவள் கண்களில் கண்ணீர் நிறைந்து, பார்வையை மறைத்தது.
” நம்மை விட மோசமான நிலைமைல இறைவன் நிறைய பேரை வச்சிருப்பான். ஏன் தெரியுமா ? அவங்களைப் பாத்து நம்ம வாழ்க்கையை தைரியமா எதிர்கொள்ளறது எப்டின்னு நாம கத்துக்கிறதுக்கு. நீங்க என்னைப் பாத்து கத்துங்கம்மா . சத்தியமா இதை நான் பெருமைக்கு சொல்லல. நானே இன்னும் வாழுறேன் , நீங்க ரொம்ப நல்லவங்க, அழாதீங்கம்மா. போய் நிம்மதியா படுத்து தூங்குங்க , குட் நைட்” அவள் எழ முற்பட, “ஒரு நிமிஷம்மா” என அவளைத் தடுத்தார் ஆயிஷா,
“எல்லாமே சொன்ன சரி , உனக்கும் ஜூனைத்கும் எப்டி கல்யாணம் ஆச்சு? அதை மட்டும் சொல்லலயே , ஏன்மா?”
“அம்மா நான் எப்பவுமே ஒருத்தர் ஒரு இடத்துல இல்லாதப்போ அவங்களைப் பத்தி யார் கிட்டயும் பேச மாட்டேன். ஆனா ஒண்ணு மட்டும் சொல்றேன் , அவர் என்னை மிரட்டி கல்யாணம் பண்ணினார் . அது ஏன்னு அவர் தரப்பு நியாயங்களை நீங்க அவர்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கங்க. உங்களை மோட்டிவேட் பண்றதுக்காகத் தான் நான் என்னோட கதையை சொன்னேன் . அதுலயே ரொம்ப நேரம் ஆச்சு . சாரிம்மா, நீங்க போங்க. நான் இன்னும் கொஞ்ச நேரம் இப்டி உக்காந்திட்டு வர்றேன்”…. சிரித்த முகத்தோடு சொன்னவளைப் பார்க்க பார்க்க , இதயம் மிகவும் வலிப்பது போல் இருந்தது ஆயிஷாவிற்கு. இவள் போல அடக்கமாய் , பொறுப்பாய், அறிவாய் இருக்கும் பெண்ணை விட்டு அவள் தாய் தகப்பனை இறைவன் பிரிச்சுட்டானே? வெம்பிய மனதோடு,
“தேனு”……என அழைத்தார்
“அம்மா ப்ரித்வியும் என்னை தேனுன்னு தான் கூப்பிடுவார்” என சொல்லியபடியே , அவர் மடியில் விழுந்து கதறினாள் தேனுகா . பாவம் அவளும் எவ்வளவு நேரம் தான் அழுகையை அடக்கிக் கொண்டே இருப்பாள்? அவள் அழ அழ, ஆயிஷாவிற்கும் கண்ணீர் பெருகிக் கொண்டிருந்தது . மெல்லமாய் அவள் தலையை வருடி விட்டுக்கொண்டே இருந்தார் . இருவரும் எதுவுமே பேசிக் கொள்ளவில்லை .ஆனால் அந்த மௌனம் கசக்கவில்லை, இதமாய் இருந்தது. நீண்ட நேர மௌனத்திற்குப் பின் ,
“தேனு…….. இனி நீ இந்த மாதிரி அழவே கூடாது. நீ அன்னிக்கு உன்னை கொல்ல வந்தவனை தைரியமா நின்னு எதிர்த்தியாமே? ரஷிதா ரொம்ப ரொம்ப சிலாகிச்சா . அந்த மாதிரி தான் எப்பவும் தைரியமா இருக்கணும். உனக்கு எந்த கஷ்டம்னாலும் என் கிட்ட வந்து சொல்லு. இனி நான் தான் உனக்கு அம்மா மாதிரி, எங்க வீட்டுக்காரர் உனக்கு அப்பா மாதிரி, ரஷி தான் உன் தங்கை சரியா? நாங்க இருக்கோம், அழாத” சொல்லிவிட்டு அவள் கையை இறுக்கமாகப் பிடித்தார் ஆயிஷா. அதே நேரம் பின்னால் இருந்து ஆயிஷாம்ம்ம்ம்ம்மாஆஆஆ என்ற அலறல் சத்தம் கேட்டது . திரும்பிப் பார்த்தார். நசீமா திகுதிகுவென தீ ஜூவாலை போல் கோபத்தில் எரியும் கண்களால் முறைத்தபடி நின்றிருந்தாள்.
– தொடரும்
No comments yet.