கல்யாணம் முதல் காதல் வரை – 18

Shanmuha Sethuramachandran | 29 Jan 2026 | Share

                             18.

       கண்ணீரோடு   கட்டிலில்  குப்புறப்  படுத்திருந்தாள்   தேனுகா.  ரஷிதா  பேகம்  மிகவும்  வற்புறுத்தி  சாப்பிட  அழைத்தும்  இவள்   போகவில்லை . என்ன  ஒரு  கேவலமான  வாழ்க்கை   எனக்கு?  அப்பா  அம்மா   இருந்த  வரை  ஒரு  கஷ்டமும்  இல்லை,  எதற்கும்   கவலையும்  இல்லை.  அவர்கள்   இறந்த   பிறகும்  கூட  தனியாய்  இருப்பது   மட்டும்   தான்  கஷ்டமாக   இருந்ததே   தவிர,  வாழ்வை  இவ்வளவு  வெறுத்ததில்லை  . அந்த   தனிமையும்  ப்ரித்வி   வந்தவுடன்  சரியாய்ப்  போனது.  அவனுக்கு   என்   முகம்  ஒரு   நொடி  கூட  வாடிப்  போகக்  கூடாது.   எனக்கு   இது  தான்   தேவை  என   என்  கண்களை  பார்த்தே   அறிந்து   கொள்வான்.  இந்த   ஜென்மத்தில்  மட்டுமில்லை,  இன்னும் எத்தனை   ஜென்மங்கள்  எடுத்தாலும்  அவன்  தான்  என்   துணை   என்று  அவள்  எண்ணியிருக்க,   அவனோ  இப்போது  அவளது  சூட்கேஸில்  ஒரு   பிடி  சாம்பலாய். தேனுகா   விஷயத்தைப்  பொறுத்தவரை    அந்த   இறைவனின்   கணக்கு   என்ன  என்பதை  அவளால்   புரிந்து  கொள்ளவே முடிய  வில்லை.  அவளது   யோசனையை கலைக்கும்   விதமாக   மொபைல்  அழைத்தது.  யார்   என   பார்த்தாள்.  சீனியர் லாயர்   கோவிந்தன்   சார்.

           “ஹலோ   சார்”

          “தேனுகா ,  தூங்கிட்டியாம்மா?” 

          “இல்ல சார்.  சொல்லுங்க,  எப்டி  இருக்கீங்க?  வீட்ல   மேடம்  எப்டி  இருக்காங்க? தாரணி   அக்கா  எப்டி  இருக்காங்க?”

        “எங்களுக்கு  என்னமா?  எல்லாரும்  நல்லா    இருக்கோம்  . ரொம்ப  சாரிமா.  வாட்ஸப்ல   என்னால   சரியா  மெசேஜ்  அனுப்ப   முடியல .  கடவுள்   உனக்கு  துணை  இருப்பார்   தேனுகா.  நான்   நாளைக்கு  சென்னை   வந்துருவேன்.  மேடம்  உன்னைப்   பார்க்கணும்னு   சொன்னா. நீ  மதியம்   லஞ்சுக்கு   நம்ம   வீட்டுக்கு  வந்துரு.   அங்க   வச்சு  அந்த  மாடசாமி  விஷயத்தை   நாம   டிஸ்கஸ்  பண்ணி  ஒரு  முடிவுக்கு  வருவோம்.  தளர்ந்து  போயிடாதம்மா,  உனக்கு  நாங்க   எல்லாரும்   இருக்கோம்”  அவர்  சொல்ல   சொல்ல , பொங்கி  வந்த  அழுகையை   அடக்கிக்கொண்டாள்.

          “சரிங்க   சார்” 

         “அ..அப்ர்..நீ..எ..மா..இரு..க்..க”..

         “சார் ,உங்க   வாய்ஸ்  ப்ரேக்  ஆகுது  சார் .  இருங்க, நான்   கட்  பண்ணிட்டு  கால் பண்றேன் ”  சொல்லிவிட்டு  லைனை  கட்  செய்தாள் .  அந்த  வீட்டிற்கு   அவள்  வந்து  ஐந்து   நாட்கள்   ஆகிவிட்டிருந்தது.  ஆனாலும்   இன்னும்  தோட்டத்தைப்  போய்  பார்த்ததில்லை.   அங்கு   போய்  பேசலாம்  என   நினைத்து,  அறையை  விட்டு  வெளியே   நடந்து  வீட்டின்   பிரதான    வாசல்   வழியாக  தோட்டத்தை  அடைந்தாள். பெரிய  ஊஞ்சல் ,ஆங்காங்கே  ஸ்டோன்   பெஞ்ச் , வெளிச்சத்துக்காக   நிறைய  விளக்குகள் ,  நல்ல  பராமரிப்பு,  என  பார்ப்பதற்கே  அழகாய்   இருந்தது  அந்த  தோட்டம் .  சற்று   உள்ளே  நடந்து  ஒரு  ஸ்டோன்   பெஞ்சில்   அமர்ந்தாள்.  கோவிந்தன்  சாருக்கு  போன்  செய்தாள்.

         “ஹலோ”

        “ஹலோ   சார்” 

        ” என்னமா,   இப்ப   கேக்குதா?”

         “எஸ்   சார்”   

       ”  நீ    இப்ப   எங்கமா  இருக்க   ஹாஸ்டல்லயா ?  தனியா  ஏன்  மா  அங்க  இருக்க ?  தாரணி  படிப்பை  முடிச்சுட்டு  வந்துட்டா   இனி   கொஞ்ச  நாள்  நம்ம  வீட்ல   தான்   இருப்பா.  நம்ம   வீட்டுக்கு  வந்து   அவ  கூட   கொஞ்ச  நாள்  இரு”

         “சார்ர்ர்….அது   வந்து”

        “என்னமா   தயங்குற?”

       ” சார்   எனக்கு….கல்யாணம் ….எனக்கு  கல்யாணம்   ஆகிருச்சு.  இப்ப  அவர்  வீட்ல  தான்   இருக்கேன்”   எதிர்முனையில்,  அவர்  அதிர்ந்து   போனார்.

         “என்னமா   சொல்ற?   கல்யாணம்  ஆகிருச்சா?  யார்   அந்த  பையன்?  உனக்கு  தெரிஞ்சவனா?   நல்லவனா ? உன்னைப்  பத்தி   எல்லாம்   தெரிஞ்சவனா?” அவர்  தேனுகாவின்   மேல்   உள்ள  அக்கறையில் கேள்விகளாக  அடுக்கினார்.

        ” சார்,   நான்   நாளைக்கு  வீட்டுக்கு  வரும்போது    நேர்ல  சொல்றேன்  சார்.  ப்ளீஸ்,   இதுக்கு   மேல  எதுவும்  என்கிட்ட  ஃபோன்ல   அதுவும்  கேக்காதீங்க” மிகுந்த  மன  வேதனையோடு  அவள்  சொல்ல,  

        “சரிம்மா   நாளைக்கு  கண்டிப்பா  வா….குட்   நைட் “

        ” ஓகே  சார்   குட்   நைட்”   ஃபோனை வைத்தவள்  பக்கவாட்டில்   திரும்ப  ,திடுக்  என   அதிர்ந்து   பின்   சுதாரித்தாள் . பெரிய  ஊஞ்சலில்   யாரோ  அமர்ந்திருந்தனர்.  தோற்றத்தைப்   பார்த்தால்   நிஷா  போல்  இருந்தது .  வீட்டுக்குள்ள  அவ்ளோ  பேர்  இருக்கிறச்சே   இங்க  வந்து  ஏன்  தனியா  உக்காந்துருக்காங்க ?  என்ன   ஏதுன்னு  கேப்போமா?  உடனே  அந்த  எண்ணத்தை மாற்றிக்   கொண்டாள்.   வேணாம் , போய்  என்ன   ஏதுன்னு   விசாரிச்சா  எல்லாம்  உன்னால  தான்னு   என்னைத்   தான்  திட்டுவாங்க,   நமக்கு  என்ன?  பேசாம  கடந்து   உள்ள   போயிடலாம்.   நினைத்துக்  கொண்டே   நடக்க   ஆரம்பித்தாள்.  ஊஞ்சலில்   அமர்ந்திருந்த  அந்த  உருவம்  ஃபோனில்  பேசிக்  கொண்டிருந்தது.  அது    நிஷா   இல்லை,  ஆயிஷா.

        “நீங்க   எப்பத்தா   வருவீங்க?”   

        ………..

       “எனக்கு   மனசே   சரியில்ல,  எத்தனையோ   தடவை   சொல்லிருக்கீங்க?  நம்ம   ஒரு   குழந்தையை   தத்தெடுத்து  வளர்க்கலாம்னு .அப்பலாம்  உங்க  பேச்சை  நான்   கேட்கல ,  அது   எவ்ளோ   பெரிய  தப்புன்னு   இப்ப   உணருறேன்.   ஆனா  இப்ப   உணர்ந்து  என்ன   பிரயோஜனம்?  காலம்   கடந்து   போச்சே”  உடைந்து  அழ  ஆரம்பித்தார் . பேசாமல்  நடந்து   போய்க்   கொண்டிருந்த   தேனுகாவை , அவரது  அழுகை   தடுத்தது . ஊஞ்சலின்  பின்னால்   ஒரு   ஓரமாக   நின்றாள் .  அவள்  அங்கு  வந்ததோ  அங்கு   நிற்பதோ  தெரியாமல்,  தனிமையில்   இருப்பதாக   நினைத்து  அவ்வளவு   நேரம்   அடக்கி   வைத்திருந்த  அழுகையை   ஆயிஷா   அழுது   தீர்த்தார். 

       ”  ஆயிஷா  ……ஆயிஷா  இப்ப  என்ன  ஆச்சு?   ஏன்   இப்படி  அழுகுற ?  அந்த  பொண்ணு   நிஷாவுக்கு,  அவ  மகளை  ஜூனைத்   கட்டிக்கலன்னு   கோவம்.  அதை வாய்ப்பு   கிடைக்கும்   போதுலாம்  காட்டிடுது .  ஆனா   இன்னிக்கு   அந்த  கோவம்   உன்   மேல   திரும்பி,  கொஞ்சம்  அதிகமா  வார்த்தைகளை   விட்ருச்சு , அந்த  பொண்ணு   அவ்ளோ   தான்  விடு.  நீ  வருந்தாத,   நான்   வேலை  விஷயமா   பெங்களூர்   வந்திருக்கேன் .  இந்த   நேரத்துல  நீ   இப்டி  அழுதுகிட்டு   இருந்தா,   என்னால  நிம்மதியா  வேலை  பாக்க   முடியுமா   சொல்லு?”

       ” வாழ்க்கையில  ஒரு   வெறுமையை  பாக்குறேன்  , கஷ்டமா   இருக்கு.  என்  கவலையை  வார்த்தைகளால  என்னால  வெளிப்படுத்த   முடியல  . சரி  விடுங்க,  எல்லாம்   சரியா   போயிரும்”  

      ” ஜூனைத்   பேசலையா  உன்   கிட்ட?  அவன்  உன்னை   தனியா  விட  மாட்டானே?”

         “இல்லத்தா , அவன்   என்  கிட்ட  பேச,  என்னை   ஆறுதல்   படுத்தன்னு , சாயங்காலத்தில   இருந்து   நிறைய  முயற்சிகள்   செய்யுறான் . நான்   தான்  பேசல   பாவம்”…..

         ” ஏன் மா?”

         “கூடப்பிறந்தவளே   என்னைப்  பாத்து   இப்டி   ஒரு   வார்த்தை   கேட்டுட்டா .  என்ன  தான்   நல்லா   பழகுனாலும்,  கதீஜா  என்   நாத்தனார்   தான ? நாளைக்கு   என்   மகன்  கிட்ட   இவ்ளோ   உரிமை  எடுத்துக்குறியே  நீயா அவனைப்  பெத்தனு  கேட்டுட்டானு  வைங்களேன்,   என்னால   அதைத்   தாங்கவே   முடியாதுங்க .  உங்களுக்கே  தெரியும் , மத்த   எல்லாரையும்  விட  ஜூனைத்   எனக்கு   ஒரு  படி   மேல  தான். அவங்க   அம்மா  அப்டி  ஒரு   வார்த்தை  சொல்லிட்டா ,  என்னால   அவன்   மேல  பழைய   மாதிரி   அன்பா   இருக்க  முடியாது. அப்டி   ஒரு   விஷயத்தை   என்னால  யோசிக்க   முடியல.  அதனால   தான்  நான்   அவன்கிட்ட   எதுவும்   பேசல”  அவர்  அழுது  கொண்டே    இருக்க,   பகீமிற்கு  வருத்தமாய்ப்   போனது. 

         “சரி   சரி   மணி   பத்தாச்சு .  போ, போய்த்    தூங்கு”  

         “சரிங்க ,  நீங்களும்   போய்த்   தூங்கி  எந்திரிங்க.   நாளைக்கு  காலையில   வேலை   இருக்குல்ல?”  

        “ம்ம்ம்ம்   சரிம்மா”   ஃபோனை  கட்  செய்து   விட்டு ,  ஊஞ்சலில்   சாய்ந்து  கொண்டார் . விசும்பல்   சத்தம்  நிற்காமல்  கேட்டுக்   கொண்டே   இருந்தது .  அவருக்கு  ஆறுதல்  சொல்ல  வேண்டும்  என  மனதுக்குள்   ஏதோ  ஒன்று  சொல்ல,  வருவது   வரட்டும்  என்று   நினைத்தபடி  அவரை    நெருங்கினாள்.

         ” அம்மா”……

          ………..

         “ஆயிஷாம்மா”  அவள்  அழைக்க  திரும்பிப்  பார்த்தவர்   தேனுகாவை  அங்கு  எதிர்பாராததால்   ஆச்சரியமானார்.  

           “என்னமா?”  

          “நான்   இங்க   வந்ததுல   இருந்து   உங்க   கூட   பேசினதே   இல்ல  . அதான்  இப்ப    பேசலாம்னு   வந்தேன்.  வீட்ல  அவ்ளோ   பேர்   இருக்காங்களே , ஏன்  இங்க  வந்து  தனியா  உக்காந்திருக்கீங்க?”

         ” இப்ப   நான்   யார்   கிட்டயும்  பேசுற நிலைமைல    இல்லமா.   நீயே   எப்பப்  பாத்தாலும்   சோக   முகமாவே   இருக்க,   நானும்   உன்னை   ஏதாவது   திட்டிருவேன். போம்மா,  போய்  உன்   வேலையை  கவனி” 

         “அம்மா   ஏன்   இப்ப   இவ்ளோ  கண்ணீர்?”   அவளருகில்   இயல்பாக  அமர்ந்தாள்   தேனுகா.  

         …………………

         “குழந்தை   இல்லன்னு   இவ்ளோ  அழறீங்க .  எனக்கு   புரியுது.    ஆனா  எல்லாம்   இருந்தும்,   ஒரு   விபத்துல  எல்லாரையும்   இழந்து  அனாதையா  நின்னு ,  அதுக்கு   அப்றமும்  அங்க   இங்கன்னு  சுத்தி   , இப்ப   காலம்  என்னை   இங்க  வந்து  நிறுத்தி  வச்சுருக்கே? அப்போ  நான் லாம்   என்ன  அழுகை  அழணும்?”  

        “உனக்கு  என்  வலி  புரியாது” 

       “ஆமாம்மா ,  புரியாது .  ஆனா  நான்  அனுபவிச்சுக்கிட்டு  வலியைக்  காட்டிலும்  உங்க   வலி   சின்னது  தான்மா.  அதை  மட்டும்   நான்   உறுதியா  சொல்லுவேன்.  இத்தனை  வருஷத்தில ,  முதல்  முறையா  உங்க   தங்கச்சி   உங்களை  காயப்படுத்தி  பேசிட்டாங்க.  பேசிட்டு   அவங்க   உள்ள  அழுதுட்டு   இருப்பாங்க .  தாத்தாவும்  பாட்டியும்   வேதனையில   இருப்பாங்க,  இந்த   வீட்ல   இருக்கிற   எல்லாரும்   உங்க  கண்ணீர்   முகத்தை   நினைச்சு  சோகமா  இருக்காங்க .  காயம்   செய்தாலும்,  உங்களைப்   பத்தி   வருத்தப்பட   ஒரு   கூட்டமே   இருக்கு .  ஆனா   எனக்கு   திட்டவோ ,அடிக்கவோ , சண்டை போடவோ,  அக்கறை   காட்டவோ , யாருமே   இல்ல.   அப்போ  உங்க  வலி  பெரிசா  என்   வலி   பெரிசா?”….. அவள்  பேசப்   பேச   அவள்   முகத்தையே   உற்றுப்  பார்த்தார்   ஆயிஷா.  அவர்   கண்களில்  இப்போது   கண்ணீர்   இல்லை.  “என்   கதையை   இந்த  வீட்ல  நான்   யாருக்கும்  சொன்னது   இல்ல. ஆனா  இப்ப  உங்க  கிட்ட  சொல்லணும்னு   தோணுது.  சொல்லட்டுமாம்மா?  நீங்க  கேக்குற   மூட்ல   இருக்கீங்களா?” அவள்  கேட்கும்   தொனியும்,   தேன்   போன்ற  அவள்  குரலும்   ஆயிஷாவை  வசீகரிக்க,

        “கேக்குறேன்மா,  சொல்லு”   என்றார்.

                                                     –   தொடரும்

       

   

   

       

             

        

         

    No comments yet.