கல்யாணம் முதல் காதல் வரை – 17

Shanmuha Sethuramachandran | 29 Jan 2026 | Share

                             17.

           “நிஷா…………என்ன  வார்த்தைடி  சொன்ன  ? அவளைப்   பாத்து  என்ன  பேசிட்ட?   உன்   மூணு  பிள்ளைங்களையும்  குளிக்க   வச்சப்ப ,  சோறு  ஊட்டுனப்ப,  அதுங்களுக்கு   காய்ச்சல்   ஏதாவது  வரும்  போது   அவ   ராத்திரி   பூரா  தூங்காம  பாத்திக்கிட்டப்ப,   அதுங்களுக்கு  துணி  துவைச்சுப்   போட்டப்பலாம்   அது  அவ  பிள்ளைங்க   இல்லன்னு   உனக்கு  தெரியலயா? எல்லாத்துக்கும்  மேலா,  இப்ப  ஜமால்  ஷாரிக்  பிள்ளைங்களைக்   கூட   அவ  தான  பாத்துக்குறா?  மூணு   குழந்தைகளை   பெத்தது  மட்டும்  தான்  நீ . வளர்த்தது   எல்லாமே  அவ   தான்.  ஒரு  தாயோட   எல்லா   கடமையையும்   அவ  செஞ்சப்பலாம்   நீ   அவளை  எதுவும்  சொல்லல,   அக்கா  வேணாம்  நான்  பாத்துக்குறேன்னு   தடுக்கல.  ஆனா  ஆயிஷா  கேள்வி  கேட்டா  மட்டும்  உனக்கு   உரிமை   பொத்துக்கிட்டு  வருது , நம்ம  பிள்ளைகளை  அடிக்காத  நிஷான்னு  சொன்னா   அது   என்   பிள்ளைகள்னு  பிரிச்சு   பேசுற . எங்க   இருந்து  வந்துச்சு  உனக்கு   இந்த   கேவலமான   புத்தி?  சை… நீ   நினைச்ச  ஒரு  விஷயம்  நடக்கலங்குறதால,  நீ   எத்தனை   பேரை   நோகடிக்குற ? சின்ன  பொண்ணை   துடைப்பத்தால  அடிக்குற,   இந்த   வீட்ல   உள்ள  எல்லாருக்கும்  பிடிச்ச  மாதிரி  வளர்ந்த   ஜூனைத்தை   வரம்பை   மீறி   மோசமா   பேசுற,   எல்லாத்துக்கும்  மேலா   என்   மூத்த   மகளை……..அந்த  வாயில்லா   பூச்சியை.”……

        “அம்மா    போதும்.   சும்மா   இருங்க.  என்னால   நம்ம   வீட்ல    சண்டை   வர்றதை நான்   விரும்பல” சொல்லிவிட்டு , வேகமாக  தன்னறையை  நோக்கி   நடந்தார்  ஆயிஷா. அவருக்கு  அதிர்ச்சியில்  மனது  கனமாகிப் போனதே   தவிர   அழுகை  வரவில்லை. 

      “ஆயிஷா கொஞ்சம்  நில்லுமா”  தாத்தா  அழைத்துக்  கொண்டே   இருக்க , பதிலே  சொல்லாமல்   அறைக்குள்   நுழைந்து   கதவை  தாழ்  போட்டுக்  கொண்டார்.

       ” நம்ம   வேணும்னா  ஒரு  குழந்தையை  தத்தெடுத்துக்கலாமா  ஆயிஷா?” 

        “எதுக்கு?”

        “இல்ல   நமக்கே   நமக்குன்னு  ஒரு  குழந்தை   இருந்தா  தான்  அது   நல்லா  இருக்கும்னு   தோணுது . என்ன   தான்  நீ   ஜூனைத், நசீமா,  நஸ்ரின், ஜமால், ஷாரிக்,  ரஷின்னு , ஆறு  பிள்ளைகளை  நல்ல  விதமா   வளர்த்தாலும்,  நாளைக்கு  இதுங்க அம்மான்னு   உன்னை  சொல்லாதுங்கமா”

       “இந்த   மாதிரிலாம்   பேசி  என்   மனசை    நோகடிக்காதீங்க . குழந்தைங்க நிஷா  கதீஜாவை  விட  என்   கிட்ட   தான்   ரொம்ப   ஒட்டுதலா  பழகுறாங்க.   என்னை   எப்டி   விட்டு  கொடுப்பாங்க ?  தத்து   குழந்தைலாம்  வேணாங்க.   நான்  புதுசா  வர்ற  குழந்தைய  அக்கறை   எடுத்து   கவனிச்சா,   என்  பிள்ளைங்க   மனசு   நொந்து   போயிருங்க  .இனிமேல்   தயவு   செய்து  இந்த   பேச்சை  என்   கிட்ட   எடுக்காதீங்க”  கணவனுடன்  எப்போதோ   நிகழ்ந்த   உரையாடல்  நினைவுக்கு   வர,  சோர்ந்து   போய்  கட்டிலில்   அமர்ந்தார்   ஆயிஷா. 

        உள்ளே   வந்து   நடு   ஹாலில்  நின்ற  தேனுகாவுக்கு   அங்கு   ஏதோ   ஒரு  அசாதரணமான  சூழ்நிலை  நிலவுகிறது  என   புரிந்தது .  ரஷிதாவின்  சிவந்த  கன்னத்தையும்  , கீழே   சிதறிக்   கிடந்த  இரண்டு  விளக்குமாற்று  குச்சிகளையும் கண்டாள் .

         ” ரஷி”…….. மெல்ல  அவளைத்   திரும்பிப்  பார்த்த   ரஷிதா,   ஓடி  வந்து   அவளைக்  கட்டிக்   கொண்டாள்.  தற்காலிகமாய்  நிறுத்தி   வைத்திருந்த  அழுகையை  மீண்டும்   தொடர   ஆரம்பித்தாள்.  

       “என்னாச்சுடி?  ஏன்  இப்டி  அழற?” தான்  சொன்ன   வார்த்தைகள்  ஆயிஷாவின்  இதயத்தை   வேதனைப்படுத்தி   இருக்கும்  என்று   உணர்ந்து   கொண்டு , அதுவரை  கண்ணீருடன்   தலை  குனிந்து  நின்றிருந்த   நிஷா,  தேனுகாவின்   குரலைக்  கேட்டதும்  சட்டென  நிமிர்ந்தாள்.

        “வாடி ,எல்லாம்   உன்னால  தான்.   நீ  பண்ணின   கூத்தால  தான்.   நீ   எப்ப   இந்த   வீட்டை   விட்டு   வெளியேறுறியோ  அப்ப  தான்   எங்க   வீடு  பழைய  மாதிரி  மாறும் .எங்க   இருந்து  வந்தியோ , எங்க  மன  நிம்மதியை   குலைக்க.   ஏதோ  நீ  கட்டிக்க  போனவன்   செத்துப்   போயிட்டான்னு,  என்  மக  வாழ்க்கையை   கெடுத்து   கீழ  வழியில  விட்ருக்கியே?  உன்னை  என்னனு  திட்டுறது? எதை  வச்சு  அடிக்கிறது?”  

        “நிஷா…….வாயை   மூடு.   ஏற்கனவே   நஞ்சு   தடவின   உன்   நாக்கால,  ஆயிஷா  மனசை   நொறுக்கிட்ட .  இப்ப  அடுத்து  அந்த   பொண்ணை  ஏச  போயிட்டியா? அப்புறம்  நான்  மனுஷனா  இருக்க  மாட்டேன்.   கழுத்தைப்   பிடிச்சு   வெளிய  தள்ளிருவேன்.  எனக்கு  என்   வீடு  அமைதியா   பூந்தோட்டம்   மாதிரி   இருக்கணும்.   அதோட  அமைதியை  குலைக்கிற   விதமா  யார்   நடந்தாலும், என்னால   சும்மா   இருக்க   முடியாது” 

        “ஓ……அப்டியா  ராதா?  அப்ப  இவ்ளோ  மோசமான   விஷயங்கள்   நம்ம   வீட்ல  இதுக்கு   முன்னாடி   எப்ப  நடந்திருக்கு  சொல்லுங்க?   நிறைய   கூட   வேணாம்,  ஏதாவது   ஒண்ணே   ஒண்ணு  மட்டும்  சொல்லுங்க.   உங்களால   சொல்ல  முடியாது   ராதா ,  ஏன்னா  அப்டி  எதுவுமே   நம்ம   வீட்ல   இந்த  தேனுகா  வர்றதுக்கு  முன்னால     நடக்கல .  அதனால  நீங்க  சொல்ற   நியாயப்படி  பாத்தா,  இவளைத்   தான   வீட்டை   விட்டு  துரத்தணும் ? நிஷா  மாமியை   எதுக்காக  துரத்தணும்?” இது   தான்  சாக்கு  என ,  கிடைத்த   இடத்தில்  தேனுகாவின்  மேல்  வன்மத்தைக்   கக்கினாள்   நசீமா.

       “தாத்தா ,என்ன  நடந்துச்சு?” நசீமாவின்  பேச்சை   சட்டையே   செய்யாமல்  கேட்டாள் தேனுகா . அவர்   நடந்த  அனைத்தையும்  கூற  , மௌனமாய்   ஜூனைத்தையும்  ரஷிதாவையும்  பார்த்தாள்.

         ” ரஷி”

         “அக்கா”

        ” எதுக்கு   அழற?”

        “என்னக்கா  இப்டி  கேக்குறீங்க ? என்ன  பிரச்சனைன்னு  நன்னா  உங்க  கிட்ட  சொன்னாரு  தான?  நான்  தப்பா   எதுவுமே  பண்ணலயே ,  அப்புறம்  எதுக்கு  அம்மா”.. 

         “வாயை   மூடு.  அதான்   நீ   தப்பு  பண்ணலன்னு   உனக்கே   தெரியுதுல்ல ? அப்புறம்   என்ன ? கண்ணைத்   தொட, மனசாட்சிக்கு   மட்டும்   பயப்படு .  அது  மட்டும்  தான்   உன்னை   மிகச்  சரியான  பாதையில  வழி   நடத்தும். ஏங்க  ஜூனைத்,  நீங்க   எதுக்கு  ஏதோ  மாதிரி   இருக்கீங்க?”

       “இல்ல…..அது  வந்து …..நான்   அவ  கிட்ட   ரொம்ப   சாதாரணமா  தான்   பேசிட்டு  இருந்தேன் . ஆனா  அதைப்  புரிஞ்சுக்காத மாமி,   சின்ன  பொண்ணுனு  கூட  பாக்காம  அவளை  ரொம்ப  காயப்படுத்திட்டாங்க”

       “நான்   ஒரே   ஒரு   கேள்வியை  மட்டும்  உங்க  கிட்ட    கேக்க   விரும்புறேன்”  

       “கேளு “

       “என்னையும்   கல்யாணம்  பண்ணி  இங்க  கூட்டிட்டு   வந்துட்டு ,  ரஷிதாவையும்  ஏமாத்தி  கல்யாணம்  பண்ணிக்கலாம்னு  நீங்க   ப்ளான்   பண்ணிருக்கீங்களா?”

      ” தேனுகா……….திடீர்னு   உன்னைக்   கல்யாணம்   பண்ணிக்கிட்டாங்குற  ஒரே  ஒரு   காரணத்துக்காக ,  என்   மகனை  நீ   இந்த   மாதிரிலாம்  பேசக்  கூடாது” கோபத்தில்   கதீஜா   பொங்கி   எழ,

      “அத்தை , நான்   அவரை   ஒரு   கேள்வி  கேட்டதுக்கே   உங்களுக்கு   இவ்ளோ  கோவம்   வருதே ,  கொஞ்ச   நேரம்  முன்னாடி   ரஷிதா  அம்மா  உங்க  பையனை  கண்டபடி  பேசும்  போது  ஏன்  சும்மா   இருந்தீங்க?”   

       ” அதுக்குன்னு  , ஒருத்தங்க   கோபமா  கத்திக்கிட்டு    இருக்கும்   போது   கூடக்  கூட   பேசி   கத்த   சொல்றியா?” 

        “கத்த   சொல்லல  அத்த,   ஒரு  வகை  தொகை   இல்லாம   ஒரு   பேச்சு  வரும்  போது ,  கத்தாம , அதே  சமயத்துல  அப்டி  பேசுற   ஜென்மங்களுக்கு   உரைக்கிற  மாதிரியும்   நியாயத்தை  பேசிடணும்.  ஒரு   நிமிஷம்   அத்தை. ஜூனைத்,  நான்   கேட்ட  கேள்விக்கு   நீங்க   இன்னும்  பதில்  சொல்லலயே”

        ” எனக்கு   அப்டி   ஒரு   எண்ணம்   இல்ல”   இறுகிய   முகத்துடன்   பதில்   சொன்னான்.

       “ம்ம்ம்ம் . அவ்ளோ  தான் . இது  ரொம்ப  ரொம்ப   சின்ன   விஷயம்.   எப்பப்  பாத்தாலும்   அவன்   இப்படி  பேசிட்டான் , இவன்   அப்படி   பேசிட்டான்னு  யோசிக்க  ஆரம்பிச்சா ,  நம்ம   சுயத்தை   நாம   இழந்துருவோம்.   ஊர்ல  நம்மைப்  பத்தி  பேசுற   யாருமே   ஒழுக்கம்  கிடையாது.  அவங்க   வைக்கிற   விமர்சனங்களை   நினைச்சு   நம்ம   ஏன்   வருந்தணும் ?  நீங்க  வருத்தப்படாதீங்க   ஜூனைத்” 

       “ஆஹாஹாஹா!!!!! என்ன  ஒரு  அக்கறை ? என்ன   ஒரு   அக்கறை?   ஒரு   மாசத்துல  பிச்சுக்கிட்டு   ஓடிருவேன்னு   அன்னிக்கு  சொல்லிட்டல?  டிவோர்ஸ்  பண்ணிருவேன்  அப்டின்னும்   சொல்லிட்டல? அப்ப  எதுக்குடி  எங்க  வீட்டுல  என்ன   பிரச்சனை வந்தாலும்   மூக்கை   நுழைக்குற ?  எங்க  மாமி   எங்க   ஜூனைத்தை  அடிப்பாங்க  மிதிப்பாங்க,  அதை   நீ   எதுக்கு   கேக்குற?  நீ   யாரு  கேக்க?”   நஸ்ரினின்  கேள்வியில்   இருந்த   நியாயம்   முகத்தில்   அறைய,   கசப்பாய்  புன்னகைத்த    தேனுகா.  

         “நீங்க   கேக்குறது   ரொம்ப   நியாயமான   கேள்வி ,  ஆல்ரைட்.  இனி  உங்க   குடும்ப   விஷயம்   எதிலயுமே  நான்  தலையிட   மாட்டேன்”   என்றாள்.

         “தேனுகாக்கா , என்ன   இப்டிலாம்  பேசுறீங்க ?  அப்போ   இந்த   வீட்ல   உங்களுக்கு   உரிமை   இல்லயா?”

        “ரஷி , நான்   தான்  அன்னிக்கே  சொன்னேன்ல?  எனக்கு   தாத்தா  பாட்டிங்க மேல   சின்ன   வயசுல   இருந்தே   பெரிய  மரியாதை    உண்டு.   அதனால   ஒரு   மாசம்  இருன்னு   தாத்தா  சொன்னதுனால  மட்டும்  தான்  நான்   இங்க   இருக்கேன்னு.   இப்போ  என்ன   நீ   புதுசா  கேக்குற?  உங்க  மாமுவே   எனக்கானவர்   இல்ல,  எனக்கு  என்னடி   உரிமை   இந்த   வீட்ல?”

        “ஏம்மா , நான்   உன்னை   ஒண்ணு   கேக்குறேன்.  இவ்ளோ  தெளிவா  ஜூனைத்  என்    புருஷனாக   முடியாதுன்னு   சொல்றியே  ? அப்புறம்  ஏன்மா  அவனை  நிக்காஹ்    பண்ணிக்கிட்ட?  குற்ற  உணர்ச்சியின்   காரணமாக   அவன்  உன்னை   ஏத்துக்க   நினைச்சான்னா,  நீ   என்னால   முடியவே  முடியாதுன்னு   சாதிச்சுருக்கலாமே?”   சரி  அதையும்  விடு.  உன்னால  கொஞ்சம்   கூட   பொருந்திப்  போக   முடியாத   குடும்பத்தை   சேர்ந்த  ஆட்களான   நானும் ,  இவரும்  சொன்னோம்னு  ஏன்மா   இங்க    இருக்கணும்?”  

        “சுல்தானா,   இது   அந்த   பொண்ணு   கிட்ட   நம்ம   தனியா   பேசணும்னு   நினைச்சு   வச்சிருந்த   ஒரு   விஷயம். அதைப்   போய்   இப்ப   ஏன்   கேட்ட?”    இப்ராஹிம்   தாத்தா   பதறினார்.  

        ” இல்லங்க ,  இதை   இப்ப  கேட்டு  தான்  ஆகணும்.   இங்க   ஒரு   மாசத்துக்கு  மேல  என்னால   இருக்கவே  முடியாதுன்னு  எவ்ளோ   உறுதியா  சொன்னான்னு  பாத்தீங்களா ?  இந்த   உறுதி   ஏன்   ஜூனைத்   தாலி   கட்டும்போது  இல்ல?” தேனுகா  பதில்   ஏதும்   சொல்லாமல்  இருக்க ,  பெருமூச்சு   விட்ட   ஜூனைத்,  

       ” ராதிம்மா,  அதுக்கு   காரணமும்   நான்  தான் .  என்னைக்   கல்யாணம்  பண்ணிக்க,  இல்லன்னா  தற்கொலை செஞ்சுக்குவேன்னு  நான்   தான்  அவளை  மிரட்டினேன்.  அவ   பாவம்,  ரொம்ப  பாவம்.  இதுக்கு   மேல   அவளை   யாரும்  எந்த   கேள்வியும்   கேக்காதீங்க”  என்றான்.   கலங்கிய   கண்களுடன்  அனைவரும்  அதிர்ந்து   போய்   தேனுகாவைப்  பார்க்க, பொங்கி  வந்த   விம்மலை  அடக்கிக்  கொண்டு,   வேகமாக  ரஷிதாவின்  அறையை   நோக்கி   ஓடினாள்

                                             – தொடரும்.  

     

    

          

  

         

        

        

    No comments yet.